PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, October 31, 2011

பொம்பள மனசு (வம்சி சிறுகதைப் போட்டி-2011)




படம் உரியவருக்கு நன்றி....

ங்க இந்த பீரோவுல வெச்சிருந்த வளையலும் மோதிரத்தையும் பார்த்தீங்களா ?”-என்று ஜானகி கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
       “ஏன் காணாம போச்சா?”-என்று கேட்டேன்.  இப்படித்தான் எதையாவது எங்காவது வைத்துவிட்டு வீட்டையே இரண்டு படுத்தி விடுவாள்.
       கடந்த ஒரு வாரமாக என்னுடைய அக்கா தனது இரண்டு பெண்களுடன் வந்து தங்கியிருந்தாள்.
இப்போதான் கொஞ்ச நேரம் முன்பு அவள் தன பிறந்த வீடு விஜயத்தை முடித்துவிட்டு கிளம்பிப்போயிருந்தாள்.
       இன்று காலை ஜானகியின் தங்கை சுசீலாவையும்  தனது இரண்டு வாண்டுகளோடு ஈரோடு பஸ் ஏற்றிவிட்டு வந்திருந்தேன்.   கடந்த வாரம் முழுவதும் ஒரே கலவர வாரம்தான். எனது இரண்டு மகன்களும் இன்று காலையிலிருந்து எதையோ பறிகொடுத்தது போல உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். விளையாட ஆள் இல்லாமல் டி.வி.யை நோண்டியபடி சுவராஸ்யமில்லாமல் இருக்கிறார்கள்.
       இப்போதுதான் ‘காணவில்லை’ பிரச்சினை பரபரப்பை பற்றிவிட்டது.
       “எங்கயாவது கை மறதியா வெச்சிருப்பே....  நல்லா தேடித் பாரு.”- என்று அதட்டினேன்.
       “இல்லீங்க இங்கதான் வெச்சேன்..... காலையில கூட பார்த்தேனே...”
       அவள் உறுதியாக சொன்னபோது நிஜமாகவே அதிர்ந்தேன். நானும் அவளோடு சேர்ந்து பீரோவில் உள்ளதை  வெளியே இழுத்துப்போட்டு தேடினேன்.  ஆனால் அந்த வளையலும் மோதிரமும் மட்டும் அகப்படவேயில்லை. வேறு எங்காவது வைதிருக்க்கலாமென்று அலமாரி,ஜன்னல், டி பாய், ட்ரெஸ்ஸிங் டேபிள் என்று இரண்டு மணி நேரம் வீடு இரண்டு பட்டது. ஆனால் தேடியது மட்டும் கிடைக்கவில்லை.
       சில நேரங்களில் காணாமல் போவது பாத்ரூமில் கிடைக்கும். குளிக்கும்போது கழற்றி வைத்துவிட்டு வீடெல்லாம் தேடுவாள். அங்கும் இல்லை என்றதும் ஜானகி ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் முகத்தை பார்த்தாள்....
       நான்,”இத பாரு  நல்லா தேடிப் பார்த்துட்டு எதா இருந்தாலும் ஒரு முடிவுக்கு வா..”-என்றேன்.  ராமனைப் பார்த்து சீதை சந்தேகப் படுவதாவது....
       “எனக்கென்னவோ இதை யாரோ திருடிட்டு போன மாதிரித்தான் தெரியுது. காலைல நான் பீரோவை திறந்தபோது இருந்தது...  ரெண்டு மணி நேரத்தில யாரு திருடியிருக்கப் போறா....?”
       முதல் கட்ட விசாரணை  தொடங்கினாள்......  பசங்க கொஞ்சம் சுவாரஸ்யம் வந்தவர்களாய் டி. வி –யை அணைத்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்.
       நான் கற்ப்பூரம் அடித்து சத்தியம் பண்ணாத குறையாய் மன்றாடி என் மீதிருந்த சந்தேக நிழலைப் போக்கினேன். 
       அடுத்த அம்பு அக்காவின் மேல் பாய்ந்தது...
       “காலையில் அடிக்கடி பேட்ரூமுக்குள்ள உங்க அக்கா வந்துட்டு போயிட்டு இருந்தாங்க....”
       எனது ஒரே ரத்தம் (சேம் ப்ளட்) என்னை அறியாமலே கொதித்து எழுந்தது..  தானாட விட்டாலும் தன் சதை, எலும்பு, நரம்பு எல்லாம் ஆடுமல்லவா?  ஆடியது...
       அக்காவுக்கு கஷ்ட ஜீவன்ம்தான், புருசன் ஒரு தண்ணி மாஸ்டர்தான். பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டர் வேலை.  நல்ல வருமானம்.. இருந்தபோதிலும் முக்கால்வாசி டாஸ்மாக் எனும் முதல் மனைவிக்கே போனது போக மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே வீடு வந்து சேரும். அக்காதான் சுயமாக மாவு ஆட்டி திருப்பூர் அவசரத்தை பயன்படுத்தி விற்று தனது இரண்டு பெண்களையும் படிக்கவைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள். பெரியவள் பிளஸ் டூ போகிறாள்.  சின்னவள் ஒன்பதாவது போகிறாள்.என்னதான் வறுமை இருந்தாலும் திருடும் அளவுக்கு போகிற குணம் இருப்பவளில்லை. எனவே எனது கோபம் எகிறியது.
       “வார்த்தைய சிந்தினா அள்ள முடியாது.. பல்லு மேல நாக்க போட்டு பேசாத....”  - பதட்டத்தில் வாய் குழறியது...  என் குடும்பத்தின் மீது மாபெரும் கறை விழுந்து விடாமல் இருக்க மகாபாரதப் போரே நடத்த வேண்டி இருக்கும் போலிருந்தது.
       “ நாங்கெல்லாம் அப்படி வளர்க்கப்படலை.....எங்கம்மா சோத்துக்கு இல்லாட்டியும் திருடக்கூடாது அப்படின்னு சொல்லித்தான் வளர்த்தாங்க...”
       கடந்த கால வரலாறுகளை சாண்டில்யன் கணக்காக சொல்ல வேண்டியிருந்தது.
       “ஒரு வார்த்தை சொன்னதுக்காக ஏன் டிங்கு டிங்குனு ஆடறீங்க....”
       மீண்டும் தூங்கிட்டிருந்த என் தன்மானத்தை தட்டி அல்ல உதைத்து எழுப்பினாள்.... நான் நிலை குலைந்து ஒருமாதிரி எழுந்து நின்று எனது அம்பை விட்டேன்.
       “எதுக்கும் உன் தங்கச்சி சுசிலாவை கேட்டுப்பாரேன், கை மறதியா எடுத்திருக்கலாமில்ல....
                        அவ்வளவுதான் ஜானகி – பத்ரகாளி அவதாரம் எடுத்து ஒரு ஆட்டம் ஆடினாளே பார்க்கனும். மானாட மயிலாட கலாக்கா மட்டும் பார்த்திருந்தால் பத்துக்கு பத்து மார்க் போட்டிருப்பார்கள்.
       “ம்ம்ம் ....என் குடும்பத்தைப் பற்றி தப்பா சொல்லிட்டிங்களா?  எங்க அப்பா கேட்டிருக்கனும் இதை.. நாண்டுகிட்டு செய்திருப்பார்... “”
       “அம்மா விடுங்கம்மா... அப்பா கை மறதியா எடுத்திருக்கலாமில்லன்னுதானே சொன்னாரு...”-என்று பெரியவன் வெள்ளை கொடி ஏந்தி சமாதானம் பேச வந்தான்.  
       நான் எரியும் தீயில் எண்ணை விடுவது போல மேலும்....
       “பையனுக்கு ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வேணும்னு கேட்டா, நான்தான் இப்ப இல்லை-னு சொல்லிட்டேன்... அந்த கோபத்துல ஏதாவது எடுத்துட்டு போயிட்டாளோ என்னவோ? ”-என்றேன்.
       கேட்டதும் முகமெல்லாம் சிவந்தன... நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல உதடுகள் துடித்தன....ஒரு முடிவுக்கு வந்தவளாய்...
       “ஸ்கூலுக்கு பீஸ் கட்டனும்னா அவ புருசனைக் கேட்க வேண்டியதுதானே ... ஏன் என் புருசனைக் கேக்கணும்? என் போன் எங்கடா... எடு அதை.....”-என்றாள்....
 எதையுமே சிரமப்பட்டு தேடியும் எடுக்காத சின்னவன் ஓடிப்போய் தேடாமலே செல் போனை எடுத்து டயல் செய்து, ஸ்பீக்கரையும்  ஆன் செய்து கொடுத்தான்.  அவனது “குறிப்பறிந்து நடக்கும்” குணத்தை நினைத்து புல்லரித்தது.  எதையும் ஊதி பெரிசாக்குவதில் எங்க குடும்பத்தில் ஆர்வம அதிகம்.
       சுசீலா தன் பயண விபரத்தைதான் விசாரிக்கிறாள் என்று நினைத்தபடி-“ அக்கா சொல்லுக்கா.. இப்பதான் பஸ் ஈரோடு பஸ்ஸ்டான்ட் வந்து சேர்ந்திருக்கு...ரொம்ப ஸ்லோவா ஒட்டறாங்க... ” என்றாள்.
       “நல்லா ஒட்டுனாங்க போ... ஏண்டி பணம் வேணும்னா எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே...எதுக்கு பீரோவுல ......”
       அவள் பேசி முடிக்குமுன் நான் போனை பிடுங்கி அணைத்தேன்.
       ‘ஏன் இப்படி சீன் போடறே... நல்ல தேடி பார்த்துட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வா.... எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவுபண்ணாத ......”-  விடாமல் மேலும் ....
       “எங்க அக்காவெல்லாம் எடுத்திருக்க மாட்டா... திருட்டு புத்தி எல்லாம் அவளுக்கு கெடையாது. எதா இருந்தாலும் கேட்டு வாங்கிக்குவா. இல்லைன்னாலும் கோச்சுக்கமாட்டா. என்ன வறுமைதான்... புருசன் சரியில்லைதான்... அதுக்காக திருடற அளவுக்கெல்லாம் இறங்கமாட்டா..” “ என்று உறுதியோடு சொன்னேன்.
       “பின்ன... சுசீலா மட்டும் எடுத்திருப்பாளா என்ன? அவளும் நல்லாதானே இருந்தா... புருசன் தொழில் கடன் ஆகிப்போச்சு... என்ன பண்ணுவா... அதுக்காக அவளைப் போயி திருடின்னு சொல்லிட்டீங்களே...”
       ஜானகி புலம்பல் ஆரம்பித்தது... இனி இது எப்போது நிற்கும் என்று வானிலை நிலவரம் எல்லாம்  சொல்ல முடியாது. ஆனால் ஒரு வாரத்துக்கு இதே புலம்பலாக இருந்தது. அந்த மோதிரமும் கிடைக்கவில்லை... வளையலும் கிடைக்கவில்லை. அவளது புலம்பலும் நின்றபாடில்லை. அவள் சாப்பாடு போடும்போதும், காப்பி டம்ளரை வைக்கும்போதும், ‘ணங்’-என்பதில்  அது நன்றாகவே தெரிந்தது.

       டுத்த வாரத்தில் ஒருநாள் நான் ஆபீஸ்-ல் இருந்தபோது ஜானகியிடமிருந்து போன்.
       “எங்க நான் உங்க அக்கா வீட்லயிருந்து பேசறேன் ..” –என்றாள்.  எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
       “எப்ப போனே... எதுக்கு போனே...?”
       “எங்க சித்தப்பா வந்திருந்தாரு.. பையனுக்கு கல்யாணமாம். பத்திரிக்கை வச்சாங்க.  அப்புறம் அக்காவுக்கும் வைக்கனும் வா, அட்ரெஸ் தெரியதுன்னாங்க. அதன் நானும் கூட வந்தேன்..இப்ப அக்கா வீட்லதான் இருக்கேன்....”-என்றவள் அடுத்து சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...மெலிசான குரலில் “ஏங்க.. அன்னிக்கு காணாம போன வளையல் உங்க அக்கா கையில போட்டிருக்கா...”-என்றாள்.
       ஜானகி சொன்னதும் எனக்கு திக்கென்று இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.
       “நல்லா பாரு... அது உன்னோடதுதானா.....?”
       “அது என்னோடதேதானுங்க... லேசா வளைஞ்சு நெளிஞ்சு இருக்கும்..இத்தனை நாளா போட்டிருந்த எனக்கு தெரியாதா?”
       உறுதியாய் இருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  என் நம்பிக்கையின் மீது இது பேரிடியாய் இருந்தது.
       “சரி நான் வெச்சிடரனுங்க... வீட்டுக்கு வாங்க பேசிக்கிடலாம்....”
       ஆபீஸ் முடியும் வரை மனசு சரியில்லாமலே இருந்தது. ஜானகி வேறு ஏதாவது குதர்க்கமாய் பேசி பிரச்சினை பண்ணிவிடுவாளோ என்று பயமாய் இருந்தது.  என்ன இருந்தாலும் அக்கா  இப்படி செய்யக்கூடாது, என்னிடம் கேட்டிருந்தால் எதுவும் செய்திருக்கலாமே என்று தோன்றியது.
       சுசீலாவின் மேல் சந்தேகப்பட்டது எவ்வளவு தவறு.  ரெண்டு பையன்களை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறாள். 
சுசீலாவின்  பெயருக்கு ரூபாய் ரெண்டாயிரம் மணி ஆர்டர் பண்ணிவிட்டு நேரே வீட்டுக்கு போனேன்.
       ஜானகி எல்லா வேலையையும் முடித்துவிட்டு ஹாலில் உட்கார்ந்து இருந்தாள்.  அவள் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.  அவள் உள்ளே எழுந்து சென்று டீ போட்டு வந்தாள்.  சிறிது நேரம் கழித்து மௌனத்தை உடைக்கும் விதமாக...
       “ஏங்க.... அக்காதான் மோதிரமும் வளையலும் எடுத்திருக்கு.  கைல போட்டிருந்துச்சு... ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துச்சு.. கைய கைய முந்தானைக்குள்ள மறைச்சு வெச்சுகிச்சு....”
       “நீ என்ன பண்ணினே..?”
       “நான் ஒன்னும் கேக்கலை... “
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...
“ஏண்டி ஒண்ணும் கேட்கலை..?”
“ஏங்க.. அது வெறும் கவரிங் நகைதான்....போனா போயிட்டு போகுது விடுங்க....    
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் இருந்தது.....
“அடிப்பாவி.. இதுக்குதான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுனியா...?”
“அக்காவ பார்த்ததும் மனசுக்கு சங்கடமா போயிட்டுது.. பெரியவ வேலைக்கு போறாளாம்..ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லைன்னு சொல்லி பனியன் கம்பெனிக்கு அனுப்பீட்டாங்களாம்....நானும் பணம் ஒண்ணும் கொண்டு போகலை.. கைல இருந்த வளையல கழட்டி கொடுத்துட்டு வந்தேன்.. முதல்ல புள்ளைய ஸ்கூலுக்கு அனுப்புங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.  ஏங்க நான் பண்ணுனது தப்புங்களா?..” அவள் சாவகாசமாய் கேட்டபோது... நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை......



6 comments :

  1. கதை நன்றாக இருக்குங்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. ஒரு குடும்ப சூழலை அப்படியே கதையில கொண்டுவந்திருக்கீங்க! நல்லாருக்கு

    ReplyDelete
  3. //எதையுமே சிரமப்பட்டு தேடியும் எடுக்காத சின்னவன் ஓடிப்போய் தேடாமலே செல் போனை எடுத்து டயல் செய்து, ஸ்பீக்கரையும் ஆன் செய்து கொடுத்தான். அவனது “குறிப்பறிந்து நடக்கும்” குணத்தை” நினைத்து புல்லரித்தது. எதையும் ஊதி பெரிசாக்குவதில் எங்க குடும்பத்தில் ஆர்வம அதிகம்.//

    சட்டென சிரித்து விட்டேன். கலவரத்திலயும் ஒரு காமெடி.

    வம்சிக்கான எனது கதை..
    http://vaazhveperaanantham.blogspot.com/2011/10/blog-post_30.html

    ReplyDelete
  4. வாவ்.. அருமையான நடை.. நல்ல கதை

    ReplyDelete
  5. வெண் புரவி ஊட்டி ரேஸ் குதிரையாக மாறி தினவெடுத்து ஓடத்துவங்கி விட்டதென்றே கருதுகிறேன்... வருடிக் கொடுப்பதற்காகவெல்லாம் அது தோள் கொடுப்பதாகத் தெரியவில்லை.. ரொம்ப சிலிர்க்க வைத்து விட்டேனோ ?

    ReplyDelete
  6. மிகவும் அருமை. பெண் மனசு புரியாத புதிர். அவர்களுக்கே அதற்குள் என்ன இருக்கு என்று தெரியுமோ தெரியவில்லை. நயமான எழுத்து நடை. தமிழ்மணம் ஓட்டுப் போட்டுவிட்டேன்.
    இந்த சிறுகதைப் போட்டியை தவற விட்டுட்டேனே என்று கவலைப் பட்டேன். ஆனால் அது உங்கள் கதையைப் பார்த்தவுடன் போய் விட்டது. இந்தக் கதையோடெல்லாம் நாங்கள் போட்டியிட்டு ஜெயிக்கமுடுயுமா?

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......