PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, January 30, 2012

புத்தகக் கண்காட்சியில் குறும்படங்கள்

நேற்றைய புத்தகக் கண்காட்சியில் கூட்டம் அம்மியது.  இதைப் போலவே மற்ற நாட்களும் இருந்தால் திருப்பூரில் ஒரு அறிவுப் புரட்சி வெடித்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.

நேற்று மாலை உலககப்பட அரங்கில் சினிமாவைப் பற்றிய டாகுமெண்டரி போட்டார்களாம்.  அதை நான் தவறவிட்டுவிட்டேன்.  நான் போகும்போது துக்கம் என்கிற ஒரு குறும்படம் ஓடிக்கொண்டு இருந்தது.

ஜாதி இல்லைன்னு யார் சொன்னது.  இன்னும் கிராமங்களில் போய்ப் பாருங்க..ஜாதி பிரமாதமா வளர்ந்துட்டு இருக்குன்னு சொல்லும் படம்.  ஒரு தலித் வீட்டில் சாவு விழுந்து விடுகிறது.   அந்த சாவை விசாரிக்க வரும் கிராமத்துப் பஞ்சாயத்து தலைவர் சாவு வீட்டுக்குள் வராமல் தெருவில் நின்று கொண்டிருக்கிறார்.  சம்பந்தப்பட்ட சாவு வீட்டுப் பெண்மணி வீதி வரை வந்து ஊர்ப் பெரியவரின் காலில் விழுந்து அவரது ஆறுதலை ஏற்கிறார்.  ஆனால் அந்தப் பெரியவரோ(?) அந்தப் பெண்மணி காலில் விழும்போது சட்டென்று ஓரடி பின்நகர்கிறார்.  தவறியும் கூட அந்தப் பெண்மணியின் கை அவரது காலில் பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார்.  பெரும்பான்மையான கிராமங்களில் இந்த நிலைதான் இருக்கிறது என்று பொட்டில் அடித்தமாதிரி சொல்லியிருக்கிறார் இந்த டைரக்டர் சிவா.

இந்தப் படத்தைப் பற்றி இந்த வார ஆனந்தவிகடனில் விமர்சனம் வந்திருக்கிறது.

அந்த டைரக்டர் பேசும்போது தனது சொந்த அனுபவம் என்று அவர் அதை விவரித்த விதம் அருமையாக இருந்தது.  இந்தப் படத்தை ஒரு வக்கீல் அருமையாக விமர்சனம் செய்தார்.  என்னிடம் மைக் வந்த போது 'துக்கம் தொண்டையை அடைக்கிறது' என்று ஒற்றை வரியில் விமர்சனம் செய்தேன்.

அடுத்ததாக சுபாஷ் எனும் புதுமுக டைரக்டரின் படம்.  இன்சூரன்ஸ் பணத்துக்காக தன சொந்த அண்ணனையே கொலை செய்து பெண்கள் பின்னாடி சுற்ற பைக் வாங்க திட்டமிடும் தம்பியின் கதை.  இன்னும் தெளிவாகச் செய்திருந்தால் அருமையாக வந்திருக்க வேண்டிய படம்.  அவரின் கன்னி முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.  இவர் இன்னும் முயற்சி செய்தால் நிச்சயம் உயரங்களை எட்டுவார்.

அடுத்ததாக காசு என்கிற குறும்படம்.  அவினாசி சிவா என்று ஒருத்தர் நடித்து டைரக்ட் பண்ணி இருந்தார்.  செருப்பு தைப்பவர்.  காலையில் வந்து கடையை விரிக்கிறார்.  மாலை வரை யாரும் வருவாரில்லை.  அர்ஜுனனின் பார்வை வீழ்த்தப்படும் பொருளின் மீதே இருப்பது மாதிரி   அவருடைய பார்வை கால்களின் மீதே இருக்கிறது.  பிய்ந்து போன செருப்பை ஒருவன் வீசி எறிந்து விட்டுப் போவது மனதை உருக்குகிறது.  சரி இனி ஒன்றும் ஆவப்போவதில்லை என்று முடிவு செய்து பொருள்களை எடுத்து பையில் போடுகிறார். கடைசியில் ஒரு ஈயத் தட்டில் இருந்த தண்ணீரை கொட்டிவிட்டு தட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது தட்டில் பிச்சைக்காசுகள் வந்து விழுகிறது.  ஒருவன் உழைக்கத் தயாராய் இருக்கும்போது ஆதரிக்காத உலகம் அவன் தட்டை தெரியாத்தனமாக ஏந்தும்போது ஆதரிக்கிறது..  அருமையாக இருந்தது.  வெல்டன் சிவா.

அடுத்ததாக அமளி துமளி என்கிற படம்.  இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தமையால் அதைப் பற்றி இங்கே வேண்டாம். இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினர் நமது நண்பர்கள் தாண்டவக்கோனும் ரவிக்குமார் அவர்களும்.

பிறகு நானும் எனது மகன்களும் புத்தகக் கண்காட்சியில் புகுந்தோம்.  அங்கே காணக் கிடைத்த காட்சிகள்.....

எங்கேயும் எப்போதும் ஹீரோவாக இருப்பவர் நம்ம சுஜாதாதான்....
இறந்தும் வாழ்கிறார் இவர்.  இரந்தும் வாழ்கிறார் சிலர்.


அகம் புறம் அந்தப்புரம் எனும் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு புத்தகம்.  கிழக்குப் பதிப்பகம்.  விலை ரொம்ப அதிகமில்லை ஐநூறு என்று நினைக்கிறேன்.  வரலாறு முக்கியம்னு சொல்றவங்களுக்கு விலையெல்லாம் பெருசா?



புத்தகம் தேடும் குழைந்தைகள்....


கலைஞரின் குடும்ப புகைப்படம்.  ஆனந்தவிகடன் பதிப்பகத்தாரின் கலைஞரின் அபூர்வப் புகைப்படங்கள் நூலிலிருந்து...

குடும்பப் புகைப்படம் போட்டு ஆட்சியை தூக்கினது ஆனந்தவிகடன்தான்.
 தலைவரின் மாஸ்டர் பீஸ்..
 இது எந்தக் குழந்தை...

"அருகிலேயே இருந்தாலும்
கை வர மறுக்கிறது
அடுத்த நொடியின் ரகசியம்"

சிந்தனின் அருமையான கவிதை...
கமலின் அபூர்வப் புகைப்படம்.  புத்த பிட்சுவாய்.. மணா எழுதிய கமல் பற்றிய  நூலில் இருந்து...
கலைஞரும் எம்.ஜி.ஆரும்..



 

Wednesday, January 25, 2012

'அமளி துமளி' குறும்பட விமர்சனம்



நேற்று திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தில் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள்.  திருப்பூர் கிருஷ்ணன் முக்கிய விருந்தாளியாக வந்திருந்தார்.  ஆனால் கூட்டம் குறைவாகவே வந்திருந்தது.  அதை ஈடு கட்ட தங்களது சொந்த பள்ளியிலிருந்து மாணவ மாணவிகளை அழைத்துவந்து உட்கார வைத்து இருந்தார்கள்.  பள்ளி மாணவர்களை எதற்கெல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள் பாருங்கள்.  அவர்களும் இது ஓர் பாடவகுப்பாய் பாவித்து வழக்கம் போல சல சலவென அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.  யார் உச்சஸ்தாயியில் பேசினாலும் கை தட்டிக் கொண்டிருந்தனர்.

கே.பி.கே. செல்வராஜ் பேசும்போது "மழைவர என்ன ராகம் வாசிக்க வேண்டும்"- என கேட்டார்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் "அமிர்தவர்ஷினி" என்று சொன்னார்.

"சரி.  புயல் வர என்ன ராகம் பாடவேண்டும்?"

 எல்லோரும் விழித்தனர்.

"வொய் திஸ் கொலைவெறி பாடினால் புயல் வந்து ஒரு தட்டு தட்டிவிடும்" என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது.  என்னே ஒரு டைமிங்?

திருப்பூர் கிருஷ்ணன் கொஞ்சம் நா.பா பற்றியும் மு.வ பற்றியும் மலரும் நினைவுகளாகப் பேசினார். இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்திருந்தால் நன்றாகப் பெசஈருப்பாரோ என்னவோ?

அடுத்து மூன்று குறும்படங்கள் போட்டுக் காட்டினார்கள்.

நமது நாளைய இயக்குனர் ரவிக்குமாருடைய ஜீரோ கிலோ மீட்டர், பசி படங்களும்,  தாண்டவக்கோனின் அமளி துமளியும் திரையிட்டார்கள்.

ரவிக்குமாரின் பசியும், ஜீரோ கி.மீ. இரண்டு படங்களும் கலைஞர் டி.வியில் பார்த்து பல தடவை பரவசப் பட்டுவிட்டதால் அமளி துமளி படம் என்னை வசீகரித்தது.


இன்றைய நிலையில் விவாகத்துக்கு பெண் கிடைப்பதுதான் மிகக் கஷ்டமாய் இருக்கிறது.  ஆனால் விவாகரத்து ஈசியாக கிடைத்துவிடுகிறது.  விவாகரத்து பெருகிவரும் இந்த கால கட்டத்தில் அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் அற்பமாக இருக்கும்.

போனவார ஆனந்தவிகடனின் என்விகடனில் வெளியான வக்கீல்களின் பேட்டியைப் படித்தால் பகீர் என்கிறது.  காலையில் ரெஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம்.  வெளியே வந்து மதிய உணவு.  என்ன சாப்பிடுவது- வெஜ் அல்லது நான் வெஜ்ஜா என்று பிரச்சினை.  நண்பர்கள் எல்லோரும் நான் வெஜ் கேட்டதால் மாப்புவும் நான் வெஜ் என்று உறுதியாக நின்றார்.  பெண்ணோ நல்ல நாள் அதுவுமா நான் வெஜ் கூடாது என்று சொல்ல பிரச்சினை முற்றியது.  இது செட் ஆவாது என்று முடிவு செய்து உடனே எதிரில் கண்ட வக்கீல ஆபீசுக்குப் போய் பரஸ்பர விவாகரத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டு பிரிந்துவிட்டனராம்.

என்ன காதல் செய்தனரோ? என்ன கன்றாவியோ?  இப்படியும் இருக்கிறார்கள் மனிதர்கள்.

இந்தப் படமும் அதைப் பற்றியதுதான்.

உப்புச் சப்பில்லாத காரணத்துக்காக கணவனும் மனைவியும் அவர்களுடைய ஒரே பையன் முன்னிலையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.   கணவன் அவளுடைய செல்போனை போட்டு உடைத்துவிட்டு ஆபீஸ் போய் விடுகிறான்.

மனைவி பையனை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் அடுப்பில் கையை சுட்டுக்கொள்கிறாள்.  பையன் பள்ளிக்கு போக முடியவில்லை.  அந்த நேரம் பார்த்து அப்பாவின் போன் வருகிறது.  மகள் அழுதபடியே போனை எடுக்கிறாள்.  அப்பா பதறிப் போய் என்ன ஏதுவென்று விசாரிக்க மகளும் சண்டையை மேம்போக்காக சொல்லிவிடுகிறாள்.

ஆத்திரம் அடைந்த அப்பா உடனே அவருடைய மனைவிக்கு கான்பிரன்ஸ் காலில் அழைத்து மகளை விசாரிக்கச் சொல்ல தாயோ பதறுகிறார்.   கோபம் தலைக்கேற அதே லைனில் வக்கீலை பிடித்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார்.  அவரோ உடனே விவாகரத்துக்கு அப்ளை பண்ணிடவேண்டியதுதான் என்கிறார்.

இதையெல்லாம் அந்த பையன் பதட்டத்தோடு பார்த்துகொண்டிருக்கிறான்.
எங்கே அப்பா அம்மா பிரிந்துவிடுவார்களோ என்கிற பயம் முகத்தில் தெரிகிறது.  சைக்கிளை எடுத்துக்கொண்டு அப்பாவின் ஆபீஸ் போய்ப் பார்க்கிறான்.

அங்கே அப்பாவின் ஆபீசில் நண்பர்களுடன் ஆலோசனை.  ஆளாளுக்கு மனைவியை ஒதுக்கிவிட ஐடியா கொடுக்கிறார்கள்.  நமக்குத்தான் பிரச்சினை பெரிசாக்குனாத்தானே திருப்தி.

இந்த சமயத்தில் அந்தப் பையன் உடைந்த செல்போனை சரி செய்து அப்பாவுக்கு ஸாரி என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறான்.  அவ்வளவுதான் எல்லாப் பிரச்சினைகளும் தீர்கிறது.

ஒரு இரண்டெழுத்து வார்த்தையில் தீர்க்கிற பிரச்சினையை மற்றவர்கள் எல்லோரும் எப்படி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்.
இந்த படத்தை பார்க்க இங்கே  செல்லுங்கள்.

இவருடைய 'பூங்கா', 'இப்படிக்கு பேராண்டி' என்கிற முந்தைய படங்களை பார்த்திருக்கிறேன்.  அதில் லென்த்தியான ஷாட்களும் வசனங்களும் சோர்வைத் தந்தன.  ஆனால் இந்தப் படத்தில் எடிட்டிங் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள்.

நடித்த நடிகர்களும் சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்கள்.

தாண்டவக்கோனின் மெச்சூர்டான இயக்கத்தை பார்க்கிறேன்.  வெல்டன் சார்.  இதே மாதிரியான சிறப்பான படங்களை எடுத்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

என்னுடைய பசங்களுக்கும் என் தங்கமணிக்கும் இவருடைய படங்கள் மிகவும் பிடிக்கும்.  எங்கள் வீட்டில் அடிக்கடி இவருடைய குறுந்தகடுகள் ஓடிச் சலித்துவிட்டன.

இவருடைய எல்லாப் படங்களின் குறுந்தகடு இன்று தொடங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் இவருடைய ஸ்டாலில் கிடைக்கும்.  இவை மட்டுமில்லாமல் இன்னொரு ஸ்டாலில் எல்லாவகையான உலக சினிமாக்களும் கிடைக்கும்.  ஆகையால் நண்பர்களே உங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்து வாருங்கள்.




 

Monday, January 23, 2012

திருப்பூர் புத்தகத் திருவிழா ஒரு முன்னோட்டம்.

திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 9வது புத்தகக் கண்காட்சி வருகிற ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற இருக்கிறது.

தினசரி மாலை குறும்படங்களும், கருத்தரங்கமும், பட்டிமன்றமும், கலை நிகழ்ச்சிகளும், பாட்டுமன்றமும், வழக்காடுமன்றமும் நடைபெற இருக்கிறது.  இலக்கிய ஆர்வலர்களுக்கு தினமும் ராஜபோஜனம்தான்.   ஜமாய்ங்க திருப்பூர் மக்களே!

இந்த புத்தக 'விழா'வை - ஒரு திருவிழாவாக கொண்டாடி திருப்பூர் மக்கள் மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.  அதற்க்கு ஒரு முன்னோட்டமாக ஒரு திருவிழாவை நேற்றுப் பார்த்தேன்.

இந்த புத்தக விழாவை ஒட்டி திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே கலை திறனாய்வுப் போட்டி ஒன்று நேற்று நடத்தப் பட்டது.  ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும், கவிதைப் போட்டியும் திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி ஆகிய இடங்களில் நடத்தப் பட்டது.



நான் போட்டி நடந்த திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்குப் போயிருந்தேன்.  ஒரே திருவிழாக் கோலமாய் இருந்தது.  ரோட்டில் இருபுறமும் வண்டிகள் நிறுத்தி இருந்தது. புதிதாய் வருபவர்களுக்கு நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி சென்றிருந்தார்கள்.  சிலர் ஆர்.டி.ஓ. வீட்டின் முன்பு அவர் வெளியே வரமுடியாதபடி நிறுத்திவிட்டுச் சென்றதால் போலீசார் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தனர்.

உள்ளே போய்ப் பார்க்கையில் திருப்பூரே அங்குதான் இருக்கும் போலிருக்கிறது. எல்லாப் பள்ளிகளிருந்தும் வந்திருக்கிறார்கள் போலிருந்தது.  போன வருடம் இருந்த அளவை விட இருமடங்கு இருக்கும்.

ஓவியப் போட்டிகளில் சிறிய குழந்தை முதல் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் வரை திரளாக வந்து கலந்துகொண்டதைப் பார்க்கும்போது புத்தக விழா நிச்சயம் புத்தகத் திருவிழாவாக பரிணமித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்பூரில் மட்டும் ஐயாயிரம் பேரும் இதர இடங்களில் சேர்ந்து ஐயாயிரம் பேரும் மொத்தமாக பத்தாயிரம் பேர் கலந்துகொண்டார்கள் என கண்காட்சி வரவேற்புக் குழுவினர் தெரிவித்தார்கள்.   பத்தாயிரம் என்பது சாதாரணமல்ல, இதன் பின்னணியில் எத்தனை உழைப்பு இருக்கிறது என்று எண்ணி மலைத்துவிட்டேன்.



இதில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளும் தனது பெற்றோர்களை கண்காட்சிக்கு இழுத்து வருவார்களேயானால் கண்காட்சி எத்தனை பிரமாண்டமாய் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

பரிசுபெற்ற மற்றும் பரிசு பெறாத சிறந்த ஓவியம், கவிதை, கட்டுரைகளையும் கண்காட்சி நடைபெறும் பனிரெண்டு நாட்களும் காட்சிக்கு வைப்பார்களேயானால் நிச்சயம் குழந்தைகள் தனது பெற்றோர்களோடு புத்தகவிழாவுக்கு வருவார்கள்.  குழந்தைகளுக்கென்று சிறப்புத் தள்ளுபடி எதுவும் அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கலந்து கொள்ளும் குழந்தைகளின் பெயர்களை குலுக்கல் மூலம் பத்துப் பேரை தேர்ந்தெடுத்து ஐநூறு ரூபாய் அளவில் புத்தகங்கள் இலவசமாக வழங்குகிறார்கள் என்று தெரிய வருகிறது.

சேர்தளம் சார்பாக கண்காட்சியில் எங்கள் பங்கும் இருக்கும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண நிகழ்ச்சியை குழந்தைகள் திருவிழாவாக்கி காட்டியிருக்கிறார்கள்.  நாம் என்ன செய்யப் போகிறோம்?
 

Sunday, January 1, 2012

DAM 999 விமர்சனம்.


ஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம்,  முல்லைபெரியார் அணையைப் பற்றிய படம் என்று படம் காட்டிய படம், எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்துவிடலாமே என்று பார்த்தேன்.

படத்தில் நாலைந்து கதைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு போகிறது.  வினய்(ஜெயம்கொண்டான்)-விமலா ராமன் காதல் கதை, வினய்-யின் மனைவி டாகுமெண்டரி பண்ணி சாகசங்கள் செய்யும் கதை,  இவர்களின் குட்டிப்பபையன் சர்க்கரை நோய் நோயாளி, பிரெட்ரிக்-ரசியா நேவியில் பணிபுரியும் ஜோடிகளின் காதல் கதை.  இவங்க தாத்தாதான் அணையைக் கட்டினாராம். ஆஷிஸ் வித்யார்த்தி வில்லன்-அது ஒரு தனி ட்ராக்.

 வினய்-யின் அப்பா ஒரு ஆயுர்வேதிக் மற்றும் ஜோசியர்.  அவர் கணிப்பது எல்லாம் சரியாக நடக்கிறது.   தனது மகனுக்கும் மகள் போல வளர்க்கும் விமலா ராமனுக்கும் காதல். ஆனால் ஜாதகத்தில் ஒத்து வராது என்று காதலைப் பிரித்து, மகன் வேறொரு வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்து, சர்க்கரை நோயாளி மகனை பெற்று, அவனது மனைவியோஅசைன்மென்ட் அசைன்மென்ட் என்று சுற்றிகொண்டிருப்பதால் வெறுத்து தன் பழைய காதலியை சந்தித்து காதல் பண்ணலாம் என்று சொல்லும்போது பழைய மனைவி வந்து நானே இருந்துக்கிறேன், ஒரே ஒரு அசைன்மென்ட் கடைசியா முடிச்சுட்டு வரேன்னு சொல்ல தட்டுத் தடுமாறும் வினய்-யும் மண்டையை பிச்சுக்கும் நாமும் கடந்த காலத்தில் எத்தனை தமிழ்ப் படங்களை பார்த்து பாதியில் எழுந்து வந்தோமோ எத்தனை டைரக்டர்கள் சாபம் விட்டார்களோ தெரியவில்லை.  அப்படி படுத்தி எடுக்கிறார்கள்.

நல்லவேளை நம்ம அம்மா ஜெ செய்த ஒரே நல்ல காரியம் இந்த படத்தை தடை பண்ணியதுதான். அநேகமாக படத்தை பார்த்துத்தான் தடையே பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இதில் டேம் எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா? அதைத்தான் படம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன்.  கடைசியில் பத்து நிமிடங்களுக்கு நம்ம சின்னப் பசங்கள் வீடியோ கேம் விளையாட்டில் வருமே அதுமாதிரி செட்போட்டு டேம் உடைகிறமாதிரி காட்டுகிறார்கள்.  மலையாளிகளே காறித்துப்பும் அளவுக்கு இருக்கிறது காட்சிகள்.  பிணம் விழும் காட்சியெல்லாம் பார்த்து இது ஒரு ஹாலிவுட் படம் என்று நம்பமுடியவில்லை.  நம்ம ராமநாராயணனை விட்டிருந்தால் பட்டாசு கிளப்பி இருப்பார்.


எதை நம்பி வார்னர் பிரதர்ஸ் பணத்தைப் போட்டார்கள் எனத் தெரியவில்லை.   டேம் உடைவதும் அதன் பலமின்மையால் உடைவதாகக் காட்டவில்லை.  நிலநடுக்கம் ஏற்படுவதாலும், அரசியல்வாதிகளின் ஊழலால் கட்டப்பட்ட அணை என்பதாலும் உடைகிறது.  அதில் மெரைன் சிட்டி எனும் ஊர் அழிவதாக் காட்டி கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் (ஜோதிடரைத் தவிர) பிழைத்துக்கொள்கிறார்கள்.  பிறகு பார்த்தால் அந்த மெரைன் சிட்டி-யில்தான் புத்தக வெளியீடு நடக்கிறது.  வெள்ளம் வந்ததற்கான அறிகுறியே காணவில்லை.  அட தேவுடா?

முல்லைப் பெரியாறு பிரச்சினையைக் காட்டி இந்த படத்துக்கு மார்க்கெட்டிங் பண்ணி போணி பண்ணிவிடலாம் என்று திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள்.  இந்தப் படத்தின் இசை வேண்டுமானால் கொஞ்சம் தேறலாம்.  அதுவும் ஆஸ்கார் செல்லும் அளவுக்கெல்லாம் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.

என்னைப் பொருத்தவரை இந்தப் படத்தை தடை நீக்கி மக்களிடையே கொண்டு வரவேண்டும்.  நிச்சயம் மக்களே புறக்கணிப்பார்கள்.  அப்படி ஒரு மொக்கைப் படம்.  ஆகவே மக்களே ஒரு வேளை தடை நீங்கி வந்தால் தியேட்டர் பக்கம் போய் விடாதீர்கள்.  அப்படிப் போகணும்னா சொல்லுங்க இருநூறு நாட்களைத் தாண்டி வெற்றி நடை போட்டுகொண்டிருக்கும் பவர் ஸ்டாரின் லத்திகா படத்துக்கு டிக்கெட் எடுத்து தர்ரேன்.