PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, July 4, 2014

7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.

  


கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று.  அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும்.  இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு  எடுத்தபடமே இந்த 7 BOXES என்கிற பராகுவேப் படம். ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பரவலாக பேசப்பட்டு வசூலை வாரிக்குவித்த படம்.  இதன் திரைக்கதை படத்தின் ஆரம்பம் முதலே பர பரவென்று பற்றி எரிந்து க்ளைமேக்ஸ் வரை கொஞ்சமும் சூடு குறையாமல் அமைக்கப்பட்ட சிறந்த திரைக்கதை கொண்ட படங்களில் இதுவும் ஒன்று.

பராகுவேயின் அச்சினான் நகரத்தில் உள்ள சூபர்மார்க்கட்டே படத்தின் பின்புலம்.  அங்கு மூன்று சக்கர தள்ளுவண்டியில் பொருட்கள் டெலிவரி செய்யும் விக்டர் என்பவனே கதாநாயகன்.  அவனுக்கு என்றாவது ஒரு நாள் தனது முகமும் டிவியில் வரும்படி பெரிய நடிகனாக வேண்டும்  என்பது ஆசை.  அதற்கு வீடியோ எடுக்கக்கூடிய ஒரு செகண்ட்ஹாண்ட் செல்போனாவது வாங்கியாகவேண்டும்.  அதற்கு ஐம்பது டாலராவது வேண்டும்.  தனது சகோதரியின் நண்பி தனது பிரசவ செலவுக்காக தனது பாய்பிரண்ட் கொடுத்திருந்த விலை உயர்ந்த செல்போனை வாங்க முடிவெடுக்கிறான்.  அதற்கு தோதாக அவனுக்கு ஒரு டெலிவரி வேலை கிடைக்கிறது.

அந்த மார்க்கெட்டில் இருக்கிற ஒரு கசப்புகடைக்காரன் வழக்கமாக வருகிற ஒரு மொட்டை டெலிவரி ஆள் வராததால்   விக்டருக்கு அந்த வாய்ப்பபை வழங்குகிறான்.  ஏழு பெட்டிகளை எடுத்துச் செல்லவேண்டும்.  எங்கு டெலிவரி செய்யவேண்டும் என்பதை பின்னர் சொல்வான்.  அவர்கள் பேசிக்கொள்ள ஒரு செல்போனும் தரப்படுகிறது.  கூலியாக நூறு டாலர் நோட்டு பாதியாக கிழிக்கப்பட்டு ஆளுக்கொரு  பாதியை வைத்துக்கொள்கிறார்கள்.  டெலிவரி செய்தவுடன் மீதியை தருவதாக சொல்கிறான்.  அவனும் அதை நம்பி வண்டியை உருட்டிக்கொண்டு மார்க்கட்டுக்குள் செல்கிறான்.  அதற்குள் அவனது காதலி லிசியும் அவனோடு சேர்ந்துகொள்ள கொஞ்ச நேரத்தில் போலீஸ் பரிசோதனையில் மாட்டிக்கொள்கிறான்.

அதற்குள் ரெகுலர்  மொட்டை டெலிவரி  ஆள் வந்துவிட அவனையே அந்த வண்டியை தேடிப்பிடித்து சரக்கை வாங்கிக்கொள்ளுமாறு க.கடை ஆள் சொல்லிவிடுகிறான்.      வண்டியை தேடி போகும் மொட்டை, வண்டி போலீஸ் பரிசோதனையில்  இருப்பதைப் பார்த்து செய்தியை க.கடை ஆளிடம் வந்து சொல்ல அவனும் அவன் முதலாளியும் பதறுகிறார்கள்.  அவர்கள் பேசுவதை அரைகுறையாக கேட்ட மொட்டையனுக்கு அந்த ஏழு பெட்டிகளில் 250000 டாலர்கள் இருப்பது தெரிகிறது.  உடனே அவன் ஒரு க்ரூப் சேர்த்துக்கொண்டு அந்த வண்டியை தேடுகிறான்.


போலீசிடமிருந்து சமயோசிதமாக தப்பித்த விக்டர் வண்டியை தள்ளிக்கொண்டு போகும்போது ஒரு பெட்டியை ஒரு திருடன் திருடிக்கொண்டு ஓடிவிடுகிறான்.  மொட்டையனும் அவன் ஆட்களும் இவர்களை துரத்துகிறார்கள்.  அப்படி என்னதான் அந்த பெட்டிக்குள் இருக்கிறது என்று விக்டர் ஒதுக்குபுறமாக ஒரு பழைய அறையில் வண்டியை நிறுத்தி திறந்து பார்க்கிறான்.  அதில் ஒரு பெண்ணின் தலை மட்டும் இருக்கிறது.  ஏழு பெட்டிகளிலும் அந்த உடலின் பாகங்கள் இருப்பது தெரிந்து தலை தெறிக்க ஓடுகிறான்.  ஓடி ஒரு வீடியோ ஷாப்பில்  நிற்கிறான்.  அங்கு இருக்கும் டிவிக்களில்  அந்த கடையின் காமிராவில் பட்டு அவன் முகம் தெரிகிறது.  அவனது முகம்  டிவியில் வரவேண்டும் என்கிற கனவு நினைவு வர  திரும்பி வண்டியை நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தால் அந்த இடம் தீ பிடித்து எரிந்துகொண்டு இருக்கிறது.

அப்போது செல்போனில் கசாப்புகடைக்கரன் சரக்கை கொண்டு வருமாறு சொல்ல வேறு வழியில்லாமல் வெறும் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறான்.  இதற்குள் கசாப்பு கடைக்காரனின் ஆட்கள்  துரத்த வெறும் பெட்டியை அவர்களிடம் விட்டுவிட்டு தப்பிக்கிறான்.   ஆனால் அவர்களில் ஒருவனை சுட்டு ஒருவனை போலீஸ் பிடித்துவிடுகிறது.

இப்போது அந்த பிணத்தின் கதையை கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.  ஒரு துணிக்கடை வைத்திருக்கும் பேராசை பிடித்த ஜார்ஜ், அவனுக்கு ஒரு பணக்கார மனைவி. ஜார்ஜ் மாமனாரிடம் இருந்து பணத்தை அபகரிக்க அவனது நண்பனை நாடுகிறான். அவன்தான்  கசப்பு கடைக்காரன்.  அவன் தனது கடை ஊழியன் டாரியாவின் துணையோடு ஜார்ஜின் மனைவியை கடத்தி தனது வீட்டில் வைக்கிறான்.  ஜார்ஜின் மாமனாரிடம் டீல் பேசி  250000 டாலர்கள் பெறுகிறார்கள்.

கடத்தல் செய்யும் இந்த மூவருக்குள் ஒரு கோட்வேர்ட் இருக்கிறது.  தக்காளி எனில் ஜார்ஜின் மனைவி, முட்டைக்கோஸ் எனில் பணம்.  முட்டைக்கோஸ் வந்துவிட  ஜார்ஜ் போன் செய்து டாரியாவிடம் கோட்வேர்ட்ல் தக்காளியை 7 பாகமாக பிரித்து மார்கெட்டுக்கு அனுப்பிவிடு என்று தவறுதலாக சொல்லிவிடுகிறான்.  அவனும் தக்காளி போன்ற ஜார்ஜின் மனைவியை ஏழு கூறாக போட்டு ஏழு பெட்டிகளில் அடைத்துவிடுகிறான்.  அதைத்தான் விக்டரிடம் கொடுத்து மார்க்கட்டுக்குள் அனுப்புகிறான்.

இப்போது விகடரிடம் அந்த நிஜ ஏழு பெட்டிகளும் காதலி லிசி உதவியால் மீண்டும் அவன் கைக்கே கிடைக்கிறது.  ஆனால் மொடையனும் அவனது ஆட்களும் இவனை துரத்த விக்டர் ஓடுகிறான்.  இதற்கிடையில் போலீசும் விஷயம் தெரிந்து இவனை துரத்துகிறார்கள்.  கசப்பு கடைக்காரனும் டாரியாவும்  இவனை துரத்துகிறார்கள்.  அந்த பிணமும் ஏழு பெட்டிகளும் என்னவாயின என்பதுதான் மீதிக்கதை.

ஒரு கதையை சுவராசியப் படுத்த எடிட்டிங் எவ்வளவு உதவுகிறது என்பதை இந்தப் படத்தை வைத்து பாடம் நடத்தலாம்.  நான் லீனியராக கதையை சொல்வதால் படத்தின் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது.
பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை REVEAL செய்யும் காட்சியும் அதன் கட்ஸுகளும் அட்டகாசம்.  அதே போல டாரியாவின் வீடும் அங்கு கடத்தப்பட்ட பெண் தப்பிப்பதை சொல்லும் காட்சியும் அந்த  காட்சி எடிட்டிங்கும் டாப் கிளாஸ்.

படத்தின் லொகேஷன் ஒரு படத்திற்கு எவ்வளவு வலு சேர்க்கும் என்பது இப்படம் ஒரு சிறந்த உதாரணம்.     ஒரு சூப்பர் மார்க்கெட்டின் நான்கு தெருக்களே படத்தின் லொக்கேஷன்.   டெலிவரி போர்ட்டர் என்கிற தொழிலும் இங்கு சுவராசியப் படுத்துகிறது.  அவன் டெலிவரி செய்வது ஒரு பிணம் என்பதே கதையின் மையக் கரு.  இதுவே படத்தை கட்டி இழுக்கிறது.
                               
படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் பலவீனங்களே கதையை பரபரப்பாக்குகிறது. விக்டர் செல்போன் ஆசை உள்ள இளந்தாரி.  அவன் முகம் எப்படியாவது டிவியில் தெரியவேண்டும் என்கிற வேட்கையே பிணம் கடத்தும் வேலையை துணிந்து செய்யவைக்கிறது.  பணத்தை கிழித்தால் அது செல்லாது என்கிற சிறிய அறிவு கூட இல்லாத இளங்கன்று அவன்.  அவ்வப்போது அவனை வழிநடத்தும் அவன் காதலி லிசி.

குழந்தைக்கு மருந்து வாங்க கூட காசு இல்லாத மொட்டையன்.  அதற்காகவே விக்டரை துரத்தவேண்டிய கட்டாயம் அவனுக்கு வருகிறது.  பிரசவ செலவுக்காக செல்போனை விற்கும் கர்ப்பிணிப் பெண்.  அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் இளம்பெண் விக்டரின் சகோதரி.  அவள் வேலை செய்யும் ஓட்டல் முதலாளியின் கண்டிப்பு,  முதலாளியின் மகனின் CALF LOVE.  அவனோடு டாரியாவின் வீட்டை கண்டுபிடித்து போலீசிடம் சிக்கி தம்பியை வெகுளித்தனமாக காட்டிகொடுப்பது என்று அத்தனை அழகாக முடிச்சுகள் மேல் முடிச்சுகளாக போடுகிறார்கள்.

இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்கள்- Juan Carlos Maneglia and Tana Schémbori இருவரும் தம்பதிகள்.  அந்த மார்க்கட்டைப் பற்றி நன்றாக ஸ்டடி செய்து இப்படத்தை நேடிவிட்டியுடன் எடுத்திருக்கும் விதத்தை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.  இவர்களும், ஒளிப்பதிவாளர் குழுவும், கூட்டம் அம்மும் சூப்பர் மார்க்கட்டுக்குள் படம் எடுத்திருக்கும் இவர்களின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.

மிகவும் குறைவான படங்களே அதுவும் கலைப்படங்களே எடுக்கும் பராகுவேயின் அரிதான கமர்சியல் படம் இது.  மிகவும் வசூலை குவித்த படம்.  கமர்சியல் டிரென்ட் செட்டை உருவாக்கிய படம், வெளிநாடுகளில் பராகுவேயின் மதிப்பை உயர்த்திய படம் என்று பல சிறப்புகளை பெற்று இந்தப் படம் சிறந்து விளங்குகிறது.  கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டிய படம் இது.



 

No comments :

Post a Comment

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......