PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, January 23, 2012

திருப்பூர் புத்தகத் திருவிழா ஒரு முன்னோட்டம்.

திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 9வது புத்தகக் கண்காட்சி வருகிற ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற இருக்கிறது.

தினசரி மாலை குறும்படங்களும், கருத்தரங்கமும், பட்டிமன்றமும், கலை நிகழ்ச்சிகளும், பாட்டுமன்றமும், வழக்காடுமன்றமும் நடைபெற இருக்கிறது.  இலக்கிய ஆர்வலர்களுக்கு தினமும் ராஜபோஜனம்தான்.   ஜமாய்ங்க திருப்பூர் மக்களே!

இந்த புத்தக 'விழா'வை - ஒரு திருவிழாவாக கொண்டாடி திருப்பூர் மக்கள் மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.  அதற்க்கு ஒரு முன்னோட்டமாக ஒரு திருவிழாவை நேற்றுப் பார்த்தேன்.

இந்த புத்தக விழாவை ஒட்டி திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே கலை திறனாய்வுப் போட்டி ஒன்று நேற்று நடத்தப் பட்டது.  ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும், கவிதைப் போட்டியும் திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி ஆகிய இடங்களில் நடத்தப் பட்டது.



நான் போட்டி நடந்த திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்குப் போயிருந்தேன்.  ஒரே திருவிழாக் கோலமாய் இருந்தது.  ரோட்டில் இருபுறமும் வண்டிகள் நிறுத்தி இருந்தது. புதிதாய் வருபவர்களுக்கு நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி சென்றிருந்தார்கள்.  சிலர் ஆர்.டி.ஓ. வீட்டின் முன்பு அவர் வெளியே வரமுடியாதபடி நிறுத்திவிட்டுச் சென்றதால் போலீசார் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தனர்.

உள்ளே போய்ப் பார்க்கையில் திருப்பூரே அங்குதான் இருக்கும் போலிருக்கிறது. எல்லாப் பள்ளிகளிருந்தும் வந்திருக்கிறார்கள் போலிருந்தது.  போன வருடம் இருந்த அளவை விட இருமடங்கு இருக்கும்.

ஓவியப் போட்டிகளில் சிறிய குழந்தை முதல் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் வரை திரளாக வந்து கலந்துகொண்டதைப் பார்க்கும்போது புத்தக விழா நிச்சயம் புத்தகத் திருவிழாவாக பரிணமித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்பூரில் மட்டும் ஐயாயிரம் பேரும் இதர இடங்களில் சேர்ந்து ஐயாயிரம் பேரும் மொத்தமாக பத்தாயிரம் பேர் கலந்துகொண்டார்கள் என கண்காட்சி வரவேற்புக் குழுவினர் தெரிவித்தார்கள்.   பத்தாயிரம் என்பது சாதாரணமல்ல, இதன் பின்னணியில் எத்தனை உழைப்பு இருக்கிறது என்று எண்ணி மலைத்துவிட்டேன்.



இதில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளும் தனது பெற்றோர்களை கண்காட்சிக்கு இழுத்து வருவார்களேயானால் கண்காட்சி எத்தனை பிரமாண்டமாய் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

பரிசுபெற்ற மற்றும் பரிசு பெறாத சிறந்த ஓவியம், கவிதை, கட்டுரைகளையும் கண்காட்சி நடைபெறும் பனிரெண்டு நாட்களும் காட்சிக்கு வைப்பார்களேயானால் நிச்சயம் குழந்தைகள் தனது பெற்றோர்களோடு புத்தகவிழாவுக்கு வருவார்கள்.  குழந்தைகளுக்கென்று சிறப்புத் தள்ளுபடி எதுவும் அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கலந்து கொள்ளும் குழந்தைகளின் பெயர்களை குலுக்கல் மூலம் பத்துப் பேரை தேர்ந்தெடுத்து ஐநூறு ரூபாய் அளவில் புத்தகங்கள் இலவசமாக வழங்குகிறார்கள் என்று தெரிய வருகிறது.

சேர்தளம் சார்பாக கண்காட்சியில் எங்கள் பங்கும் இருக்கும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாதாரண நிகழ்ச்சியை குழந்தைகள் திருவிழாவாக்கி காட்டியிருக்கிறார்கள்.  நாம் என்ன செய்யப் போகிறோம்?
 

2 comments :

  1. நல்ல முன்னோட்டம் சார். தொடர்ந்து பங்களிப்போம்

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......