PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, October 7, 2013

தீண்டத்தகாதவள்...!



                           
ன்பு நண்பர்களே...

    இப்போ நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்.  அதிர்ச்சியடையாதீங்க..இப்ப நான் தற்கொலை பண்ணிக்கத்தான் போறேன்.  ஏன், எதற்கு, எப்படி?  இப்படி பல கேள்விகள் உங்க மனசுக்குள் வர்றது எனக்கு கேட்குது.  அதை சொல்லப் போறேன்.  சொல்லாம செத்தா என்னை வெறும் ரெண்டாயிரம் ரூபா செலவுல மின்மயானத்துல எரிச்சுட்டு அடுத்த அரைமணி நேரத்துல பேஸ்புக்குல ஸ்டேடஸ் போட போயிருவீங்க. அதுக்குத்தான் இப்போ நான் பேசப்போறதை ரெக்கார்ட் பண்ணப்போறேன்.

  நான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும்.  காரணம் யாரு.  நீங்கதான்.  பொதுமக்களாகிய நீங்கதான்.  இந்த சமுதாயத்துல இருக்குற ஒவ்வொருத்தரும்தான்  இப்ப நான் தற்கொலை பண்ணிக்க காரணம். அதுக்கு நான் என் சொந்தக்கதைய சொல்லி ஆகணும்.

   நான் என்ன ராஜராஜன் சோழன் வம்சமா? நீண்ட நெடிய வரலாறு கொண்டவளா? ராமசாமி என்கிற லாரி டிரைவருக்கும் சரஸ்வதி என்கிற அப்பாவி பொண்ணுக்கும் பொறந்த அனாதைப் பொண்ணுதான் நான்.  எஸ்.. நான் ஒரு அநாதை. எப்படி அநாதையானேன்.  நான் பிறந்து பத்துவயசு (இப்போ எனக்கு வயசு பதினைந்து..பத்தாவது படிக்கிறேன்) வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.  குட்டி இளவரசி மாதிரிதான் வளர்ந்தேன்.  என்னோட கூடப் பிறந்தவங்க யாரும் கிடையாது.  அதனால ரொம்ப செல்லம் கொடுத்துதான் வளர்த்தாங்க. 

   எங்கப்பா அப்பப்ப வெளியூரு லாரி லோட் அடிக்கப் போயிருவாரு.  ஒரு தடவை போனாருன்னா பத்து பதினைந்து நாளு வீட்டுக்கே வரமாட்டாரு.  திடீருன்னு வருவாரு. ஒரு வாரம் வீட்டுல இருப்பாரு.. அப்புறம் மீண்டும் கிளம்பிப் போயிருவாரு. அவர் போகும்போது எனக்கும் அம்மாவுக்கும்  என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துவிடுவேன்.  வரும்போது நான் என்னென்ன கேட்டேனோ அதெல்லாம் வாங்கி வந்துருவாரு.  ஒருநாள் நான் கேட்காததும் வாங்கி வந்தாரு.  அதுதான் எய்ட்ஸ் என்னும் அருமை  வியாதி.  அதை எனக்கு கொடுக்கலை.  ஆனா எங்க அம்மாவுக்கு அன்புப் பரிசா கொடுத்தாரு.  இதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. 

    தெரியும்போது எங்கப்பாவுக்கு நோய் முத்தி இருந்தது.  எந்த சிகிச்சை எடுதுக்கவும் வழியில்லாம கொஞ்ச நாள்லயே செத்துப்போயிட்டாரு.  ஆனா இது ஊருக்குள்ள தெரிஞ்சு என்னையும் என் அம்மாவையும் ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க.  எங்களுக்கு சோறுபோடவோ, வேலை தரவோ யாரும் முன்வரலை.  எங்க தாத்தா பாட்டி சொந்தகாரங்க கூட யாரும் எங்க கூட பேசலை.  ஏன்னா இந்த நோய் அவங்களுக்கும் ஒட்டிக்குமாம்.

  என்னையும் பள்ளிக்கூடத்துல யாரும் மதிக்கலை.  என்னை தனியாவே உட்கார வெச்சாங்க.  ஒரு பயலும் என்கூட பேசக்கூட மாட்டேங்குறாங்க. விளையாட சேத்துக்க மாட்டாங்க.  நான் நல்லா கபடி விளையாடுவேன்.  ஆனா நான் இல்லாமயே கபடி விளையாண்டாங்க.  அதையும் மீறி யாராவது என்னோட விளையாண்டாங்கன்னா அவங்க அப்பா வந்து அவளை  அடிச்சு கூட்டிப் போயிடுவாரு.  கிளாஸ்ல முதல் மார்க் எடுப்பேன்.  ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்த முடியலை. 

  என்னை எந்தப் பொண்ணும் தொட்டுப் பேசமாட்டாங்க.  ஏன் என்னோட பேசவே மாட்டாங்க.  ரெண்டடி தள்ளி நின்னுதான் எதுவா இருந்தாலும் பேசுவாங்க.  ஏண்டி என்கூட பெசமாட்டேங்கறீங்கன்னு கதறிக் கேட்டேன். உன்கூட பேசுனா எங்களுக்கும் எய்ட்ஸ் வந்துரும்னு சொன்னாங்க.  அட எனக்கு எய்ட்ஸ் இல்லடின்னு கதறிச் சொன்னேன்.  அதெப்படி உங்க அப்பாவுக்கு இருக்கு. உங்க அம்மாவுக்கு இருக்கு உனக்கு மட்டும் இல்லாம போயிடும்னு கேட்டாங்க.  எனக்கு அப்பவே செத்துப் போகலாம்னு ஆயிடுச்சு. 

  எனக்கு எங்கம்மாவும் எங்கம்மாவுக்கு நானும் வாழ்ந்துட்டு இருந்தோம்.  எங்கம்மா ஊரைவிட்டு ஒதுக்குப் புறமா இருந்த ஒரு குடிசை வீட்டுல குடி இருந்தோம்.  எங்கம்மாவுக்கு எந்த வேலையும் கிடைக்கல.  யாரும் வேலை கொடுக்க தயாரில்லை.  டவுனுக்குப் போயி  கக்கூசு கழுவி கிடைக்கிற காசில எனக்கு சோறு போட்டா.  அந்த சோத்துல என்ன இருந்ததோ இல்லையோ  எங்கம்மாவோட சுத்தமான அன்பு இருந்தது.  ஒவ்வொரு நாளும் என் அம்மாவும் நானும் கண்ணீரில் எங்கள் கவலையையும் வயிற்றையும் கழுவிகொண்டோம். 
    
   கொஞ்ச நாள்ல எங்கம்மாவும் என்னை விட்டுப் போயிட்டா.  அவ போனது கூட எனக்கு துக்கமாயில்லை. அவ பொணத்தை பொதைக்கக் கூட யாரும் வரலை.  தனியொருத்தியா  என் அம்மாவின் பிணத்தை குழி தோண்டி புதைத்து குழிமேட்டில் உட்கார்ந்து அழுதபோது இந்தக் குழியில் நாமும் படுதுடலாமானு தோணுச்சு.  இருந்தாலும் என்னை அவமானப் படுத்தியவங்க முன்னால வாழ்ந்துகாட்டனும்னு தோணுச்சு.

  பிறகு என்னை பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க.  ஏன்னு கேட்டேன்.  அது அப்படித்தான் என்றார்கள்.  யாரும் என்னோடு பேசுவதில்லை.  நான் அனாதையாக வேற ஊருக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.  கால்நடையாகவே புறப்பட்டுப் போனேன்.  முதல்நாள் ஒரு கோவில் திண்ணையில்தான் படுத்திருந்தேன்,  தூக்கம் வரவில்லை.  அம்மா நினைவு வந்து கண்ணுக்குள் நின்றது.  அன்பா யாராவது என் கையை எடுத்து அவங்க மடியில வெச்சுக்க மாட்டாங்களானு ஏக்கமா இருந்துச்சு.  யாராவது அன்போடு என் தலையைத் தடவி  நெஞ்சோடு அணைத்துக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்கினேன். நினைக்க நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வாய்விட்டு அழுதேன். 

   அப்போது அருகில் படுத்திருந்த பிச்சைக்காரர் எழுந்து என்னம்மானு கேட்டார்.  தலையோடு போர்வையால் குளிருக்கு போர்த்தியிருந்தார். யாரிடமாவது என் மனசில் இருப்பவற்றை கொட்டினால்தான் மனசு ஆறும் போல தோன்றியது. எல்லாத்தையும் சொன்னேன்.  எனக்கும் இப்படிதாம்மா என்னையும் ஊரு ஒதுக்கி வெச்சுருச்சு. எனக்கும் உனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லி நெஞ்சை தடவி தரமாட்டாங்களானு இருக்குன்னு சொல்லிட்டு போர்த்தியிருந்த போர்வையை விலக்கிகாட்டினார்.  முகமெல்லாம் தழும்பாய் இருந்தது.  கை காலெல்லாம் கட்டுப் போட்டிருந்தார்.  நான் புரிந்துகொண்டேன்.  அவர் ஒரு தொழு நோயாளி. 

  அவரைப் பார்த்த மாத்திரத்தில் எந்த யோசனையும் பண்ணாது அவரை மார்போடு கட்டித் தழுவினேன்.  அவரது கை என் தலையைத் தடவியபடி இருந்தது. என் கன்னத்தில் ஒரு முத்தமிட்டார்.  நான் அவரது முதுகைத் தடவிக்கொடுத்தேன். என் கண்ணில் இருந்தும் அவர் கண்ணில் இருந்தும் கண்ணீர் ஆறாக ஓடியது.

  பிறகு அவரோடு கொஞ்ச நாள் இருந்தேன். என்னை பெத்த மக போலவே பாத்துக்கிட்டார். ஆனா இந்த சமூகத்தின் புறக்கணிப்பு அப்பவும் இருக்கத்தான் செய்தது.  எய்ட்ஸ் நோயாளியா பார்த்த என்னை இப்போ தொழு நோயாளியா பார்த்தாங்க. ஆனா எனக்கு யாரோ ஒருத்தராவது இப்போ பாசமா இருக்கார்னு ஆறுதலா இருந்துச்சு. கொஞ்ச நாள்தான் அவரும் இறந்து விட்டார். பிறகு  எனக்கு பிச்சை எடுக்க பிடிக்கலை.  ஒரு பக்கம் வேலைக்குப் போனேன்.  அவருக்கு எப்படியோ எனது பின்கதை தெரிந்துவிட்டது.  என்னை விரட்டிவிட்டார்.  இப்படியே பல இடங்களில் போய் சலித்துவிட்டேன்.

   சொல்லுங்கள் நான் என்ன தவறு செய்துவிட்டேன்.  நான் என்ன எய்ட்ஸ் நோயாளியா?  அப்படியே எனக்கு எய்ட்ஸ் இருந்தாலும் இந்த சமுதாயத்தில் நான் புறக்கணிக்கப் படவேண்டியவளா?  எல்லோர் மாதிரியும் என்னால் சாதாரணமாக வாழ முடியாதா?  நான் தீண்டத்தகாதவளா'?  என் அப்பன் பண்ணிய தவறுக்கு நானும் என் அம்மாவும் ஏன் தண்டனை அனுபவிக்கவேண்டும்.  என் கனவுகளை எல்லாம் அழிக்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது.  இந்தக் காட்சியைப் பார்த்தபிறகாவது எந்த எய்ட்ஸ் நோயாளியையும் புறக்கணிக்காதீர்கள்.  எய்ட்ஸ் ஒன்றும் தொற்றுவியாதி இல்லை.  இந்த நோய் வந்தவர்களை யாரும் ஒதுக்கி வைக்காதீர்கள்.  அவர்களும் உங்களைப்போல எலும்பும் சதையும் முக்கியமாக இதயமும் உள்ள மனிதர்கள்தான்.

  என்னை புறக்கணித்தவர்களே இதோ இங்கே எனக்கு அருகில் ஒரு டெஸ்ட் ரிப்போர்ட் இருக்கிறது. இதில் எனக்கு எய்ட்ஸ் மற்றும் தொழுநோய் இல்லையென்று உறுதி செய்திருக்கிறார்கள்.  நான் செத்தபிறகு என் பிணத்தை என் அம்மா புதைக்கப்பட்டிருக்கும் மயானத்தில் புதையுங்கள்.  அதற்குமுன் எல்லோரும் என் பிணத்திற்கு வாய்க்கரிசி போடுவதற்கு பதிலாக என் தலையை ஒரு முறை அன்போடு நீவி விட்டு செல்லுங்கள்.  

இப்படிக்கு

உங்களால் புறக்கணிக்கப்பட்டு இரக்கமில்லாதவர்களால் இறக்கவைக்கப்பட்டவள்.