PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, November 26, 2015

கர்த்தரே...முருகா....!!! - குறும்படம்.

ந்த வருட தீபாவளி நாள்....காலை எண்ணை குளியல்...நண்பர் பரிசல்காரன் குடும்ப வருகை...மதியம் தூங்காவனம் படம் என்று ஓடியது.  இரவு எழு மணிக்கு மேட்டுபாளையம் அம்மாயி வீட்டுக்கு குடும்பத்துடன் காரில் பயணம்.

எங்களின் கார் பயணம் எப்போதுமே ஜாலியானதாக இருக்கும்.  சூர்யா கார் ஓட்ட  நான் அருகில் இருக்க, பின் சீட்டில் யுகாவும் தங்கமணியும் எப்போதும் சண்டையிட்டபடி வருவார்கள்.

நாங்கள் வழக்கம் போல ஒரு ஒன் லைன் சொல்லி அதை கதையாக விரித்து அழகு பார்ப்போம்.  எப்போதும் நான்தான் ஒன்லைன் கொடுப்பேன்.  இந்த முறை சூர்யா கொடுத்தான்.

"ஒரு பாதிரியார் - ஒரு திருடன் - ஒரு ரயில்  பயணம்"

  கொஞ்சநேரம் மூவரும் சிந்தித்தோம்.  முதலில் யுகா ஒரு கதை சொன்னான்...அடுத்து நான் சொன்னேன்.  நான் சொன்ன கதையை கொஞ்சம் டிங்கரிங் பார்த்து  சூர்யா தெளிவாக்கினான்.

"கர்த்தரே...முருகா..!!!" கதை ரெடியாகிவிட்டது.

எங்களின் மேட்டுப்பாளையம் பயணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் இதை படம் எடுக்க ஆயதங்கள் நடந்தது.  சூர்யா திரைக்கதை எழுதினான்.  அவன் எழுதிய திரைக்கதையில் சில வசனங்கள் மட்டும் நான் எழுதினேன்.

எல்லாம் ரெடி... பாதிரியார் அங்கி கிடைக்கவில்லை.  எங்கெங்கோ தேடினோம்..   சில மேக்கப் சென்டர்களில் தேடினோம்..கிடைத்த பாடில்லை.  கடைசியில் எங்களின் தோழமை உதவி மையத்தின் உதவி மூலமாக   பாதர் ஜார்ஜ் வர்கீஸ் தந்து உதவினார்.

எல்லோரும் மாலை எட்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் சென்றுவிட்டனர். எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் நான் செல்ல முடியவில்லை. இருந்தபோதும் எனது வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு நானும் ஸ்டேஷன் சென்றுவிட்டேன்.  அதுவரை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் சில காட்சிகளை எடுத்துகொண்டு இருந்தனர்.

பரிசல் வேறு ஒரிஜினல் பாதர் போலவே கையில் பைபிள் வைத்துக்கொண்டு  ஆழ்ந்து படித்தபடி கேரக்டராகவே மாறி இருந்தார்.  சிலர் அவரை மிகுந்த மரியாதையாக பார்த்தபடி சென்றார்கள்.

பிறகு பாலக்காடு வரை ஏழு டிக்கட்கள் எடுத்துக்கொண்டு கேரளா  செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். வந்த ரயில்களில் எல்லாம் கூட்டம் வழிந்தது.  கோவை வரை செல்லும் இண்டர்சிட்டிதான் கொஞ்சம் கூட்டம் குறைவாக வந்தது.  'கர்த்தர்' மேல் பாரத்தை போட்டுவிட்டு  ஏறிவிட்டோம்.   உடனே காட்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.  பொதுமக்கள் குறுக்கீடு கொஞ்சம் கூட இல்லை.  நாங்கள் என்னவோ போட்டோ பிடித்து விளையாடுகிறோம் என்று எண்ணிக்கொண்டார்கள்.

சில காட்சிகளை எடுப்பதற்குள் கோவை வந்துவிட்டது.  அங்கே ரயில் ஹால்ட் என்று சொன்னார்கள்  ஒருவர் வந்து ஜன்னல் எல்லாம் அடைத்துவிட்டு லைட்டை அணைக்க போனார்.  கொஞ்சநேரம் லைட்டை அணைக்கவேண்டாம் என்று சொன்னோம்  பாதரை வித்தியாசமாக பார்த்துவிட்டு "ஓகே சீக்கிரம் முடிச்சுடுங்க... வண்டி க்ளீனிங் எடுத்துடுவாங்க.." என்று சொல்லியபடி போனார்.

வெளியே ஒரு ரயில்வே போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்தியபடி இருந்தார்.  நாங்கள் அவரை பார்த்ததும் வண்டியைவிட்டு இறங்கி விட்டோம்.  காமிரா பைக்குள் போய்விட்டது.  கொஞ்ச நேரத்தில் அந்த போலீஸ்காரர் போய்விட்டார்.

உடனே காமிராவை எடுத்து நிற்கும் ரயிலுக்குள்  படம் பிடிக்க தொடங்கினோம்.  நானும் சுரேனும் வெளியே காவலுக்கு நின்றுகொண்டோம்.  அந்த போலீஸ்காரர் அங்கேயேதான் உலவிக்கொண்டிருந்தார்.  இன்னொரு போலீஸ் மப்டியில்... வரும் போகும் பயணிகளை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டிருந்தார்.  அவருக்கு யாரை பிடிக்கிறதோ அவரை நிறுத்தி துகில் உரித்துகொண்டிருந்தார்.

முதலில் பயமுறுத்திய போலீஸ் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருந்தார்.  ஒருவழியாக ரயிலுக்குள் எடுக்கவேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்டனர்.  இனி ரயிலுக்கு வெளியே ஜன்னலோரத்தில் எடுக்கவேண்டிய காட்சிதான் இருக்கிறது.

வெளியே பார்த்தால் அந்த போலீஸ் நின்றுகொண்டிருந்தார்.  கொஞ்ச நேரம் காத்திருந்தோம்.  அவர் கொஞ்சம் நகர்ந்தார்.  உடனே அந்த காட்சியை எடுக்க சொன்னோம்.  சரசரவென்று ஏற்பாடுகள் நடந்தன.  அந்த காட்சியை எடுத்துகொண்டிருந்த போது எங்கிருந்தோ அந்த போலீஸ்காரர் 'நிறுத்து..நிறுத்து' என்று  வந்துவிட்டார்.

எங்களுக்கு பக் என்று நவதுவாரங்களும் அடைத்துக்கொண்டது.  சூர்யா சடாரென்று காமிராவை பைக்குள் போட்டுவிட்டு தள்ளி நின்றுகொண்டான்.  அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கெஞ்சி பார்த்தும் பெர்மிசன் இல்லாமல் எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டார்.  முன்னாடி போய் ஆபீசில் அனுமதி வாங்கிவரும்படி சொல்லிவிட்டார்.  நல்லவேளை காமிராவை கேட்கவில்லை. 'சார்... ஒரே சீன்தான்... யாருக்கும் டிஸ்டர்ப் இல்லாம எடுத்துக்குறோம்..' என்று சொல்லிப் பார்த்தோம்.  'என் வேலைக்கு உலை வெச்சிராதீங்க..' என்று மிரட்டினார்.

"சரி போய் பர்மிசன் வாங்கிட்டு வருவோம் .." என்று எல்லோரும் ஆபீஸ் நோக்கி போனோம்.
சூர்யா..."அப்பா எல்லாம் எடுத்தாச்சு... கடைசி சீன்தான் திருப்பூர்லயே எடுத்துக்குவோம்... இங்க ரிஸ்க் வேண்டாம்..." என்றான்.


அதுவும் சரிதான் என்று திருப்பூர் திரும்ப டிக்கட் எடுத்து ரயிலுக்காக காத்திருந்தோம். 11:45 க்கு வரவேண்டிய ரயில் தாமதமானது.  அங்கேயே எல்லோரும் டீ குடித்தோம்.  எந்த ரயிலும் வரவில்லை.  எல்லோரும் சாப்பிட்டோம்....இன்னும் எந்த ரயிலும் வரவில்லை.  இரண்டு  மணிக்கு திருவனந்தபுரம் மெயில் வந்தது.  அப்பாடா என்று ஏறி அமர்ந்தோம்.

ரயில் நகர்ந்ததும்தான் எனக்கு  இந்த ரயில் திருப்பூர் நிற்குமா என்று ஒரு சந்தேகம் வந்தது.  அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன்.. யாருக்கும் தெரியவில்லை.  உடனே நெட்டில் செக் செய்தால்  திருப்பூரில் நிற்பது மாதிரி தெரியவில்லை.  படியருகே நவீனையும் விக்னேசையும் கையில் கார் சாவி  மற்றும் டோக்கனையும் கொடுத்து நிற்க வைத்தேன்.  வண்டி ஸ்லோ ஆச்சுனா டக்குனு இறங்கி கார் எடுத்துட்டு ஈரோடு வந்துடு என்று சொன்னேன்.  ஆனால் அந்த இரும்பு பாம்பு கொஞ்சம் கூட வேகம் குறையாமல் திருப்பூருக்கு சாவகாசமாக டாட்டா காட்டியபடி கடந்தது.  கொஞ்ச நேரத்தில் ஈரோடு வந்துதான் நின்றது.

இறங்கி அடுத்த ரயில் எதிர் பிளாட்பாரத்தில் ஐந்து நிமிடத்தில் வந்தது. ஆனால் பயங்கர கூட்டம்.  வேறு வழியே இல்லை.  ஏறிவிட்டோம்.   தூக்கம் டாய்லெட் மணத்தில் கரைந்து கொட்ட கொட்ட விழித்தபடி பயணம் செய்தோம்.   நாப்பது நிமிடம் நாப்பது நாள் போல கடந்தது.  திருப்பூர் வந்து சேர்ந்தபோது விடிகாலை நான்கு மணி.  

அடுத்தநாள் மீண்டும் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மிச்ச காட்சியை எடுத்தார்கள்....

இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை முடித்து பார்த்தபோது திருப்தியாக வந்தது...

என்னதான் கஷ்டப்பட்டு எடுத்தாலும் மார்க் போடவேண்டியவர்கள் நீங்கள்தான்.  இந்தப் படத்தை  நீங்களும் பார்த்து குறைகளையும் நிறைகளையும் சொல்வீர்களானால் உங்களுக்கு ராம்ராஜ் வேஷ்டிகள் துண்டுகள் வழங்கும் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும்.  கோ ஸ்பான்சர்டு பை....நண்டு  மார்க் லுங்கிகள் மற்றும் முருகன் மார்க் கோவணங்கள்.




https://www.youtube.com/watch?v=w3J4tgZprHg

Friday, November 6, 2015

இளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை!!!

வெளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை.  கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான்.  தன் கையை வெட்டிக்கொண்டு சாகப் போகிறான்.  அப்போது அவன் வீட்டிலிருக்கும் ரேடியோ திடீரென பாடுகிறது.

'என்ன காயம் ஆனபோதும் எந்தன் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது பொன்மானே'

இளையராஜாவின் பாடல் அவனுக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல்.  சரி சாவதற்கு முன் இந்தப் பாடலை கேட்டுவிட்டு செத்துவிடுவோம் என்று எழுந்து சென்று அந்தப் பாடலை கேட்கிறான்.

அவனுக்காக போட்ட பாடல் மாதிரியே தெரிகிறது.  கையை வெட்டிக்கொள்ள வேண்டாம்,  உந்தன் மேனி தாங்காது என்று தடவுகிறது அந்த தேன் குரல்.

அந்த பாடல் முடிந்ததும் RJ ரேடியோவில் பேசுகிறாள்.  அது சன்பிளவர் FM, பேசுவது தென்றல்,   'கண்மணி அன்போடு காதலன்' என்கிற நிகழ்ச்சி.  இன்று நாம் கேட்கப்போகும் காதல் கதையை சொல்லப்போகும் லக்கி காலர் யாரு என்று டயல் செய்கிறாள்.  அது  விரக்தியில் இருக்கும் நம் கதாநாயகனுக்கு வருகிறது.  அவனிடம் பேசுவதன் மூலம் அவன் விரக்தியை உணர்கிறாள்..  'உங்க கேர்ல் பிரண்டோட சண்டையா?' என கேட்கிறாள்.  'செம்ம லவ் போல..' என்று அவனது 'சோகத்துக்கு மருந்து தடவ இளையராஜா பாடி வெச்சிருக்காரு...'என்று ஒரு சோகப் பாடல் போடுகிறாள்.

'ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்... மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்லவேணும்.. கொட்டுமழைக் காலம் உப்பு விக்கப் போனேன்.. காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்.. தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே...'  

அவன் சோகம் இளையராஜாவின் கானத்தில் கொஞ்சம் கரைகிறது...தப்புக்கணக்கை போட்டுவிட்டாய் என்று சொல்கிறது.  மற்றவரை குற்றம் சொல்ல வேண்டாம் என்கிறது.

பாடல் முடிந்ததும் அவள் லைனுக்கு வருகிறாள்.  'சொல்லுங்க என்ன சோகம்?' என்கிறாள்.

'அவளோடு காலையில் இருந்து பேசவில்லை.... அவளோட பேசாத...அவளோடு இல்லாத இந்த நாள்...' என்று சோக கீதம் பாடுகிறான்.  தென்றல் அவனை ரிலாக்ஸ் ஆக்க முயற்சிக்கிறாள்.

'வெளியே ஜோரான மழை.  மழையோட   ஒவ்வொரு துளியும் மண்ல ஊடுருவற மாதிரி ராஜா சார் இசை நம்  ஒவ்வொரு செல்லிலயும் ஊடுருவி இருக்கு.  இப்ப ஒரு காபி மட்டும் இருந்தா... மழை..காபி...ராஜா சார்....'   


அந்தக் குரல் அவனுக்கு ஆணையிடுவது போல்  இருக்கிறது.  போ போய் ஒரு காபி போட்டு இந்த மழையையும் இளையராஜாவையும் அனுபவி...என்பது போல் இருக்கிறது.

'ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது...நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் எதோ செய்யுது... தென்றல் வந்து தீண்டும்போது....என்ன வண்ணமோ.. மனசுல.."

பாட்டை கேட்ட படி அவன் காபி போடுகிறான்.  அங்கே எறும்புகள் கூட்டமாக போய்க்கொண்டிருக்கின்றன. ஒன்றின் அடிச்சுவட்டை பற்றி அடுத்த எறும்பு சென்றபடி இருந்தன.  அது அவன் தனிமையை விரட்டி கூட்டமாக இருக்கச் சொல்கிறது.  அவன் மனசு மாதிரியே காபியும் கொதிக்கிறது.  காபியோடு வெளியே வருகிறான்.  பாட்டைக் கேட்டபடி மழையை மனசுக்குள் உள்வாங்கியபடி பால் கலக்காத கசப்புக் காப்பி தொண்டையில் இறங்குகிறது.  அவனுக்கும்  வாழ்க்கை கசப்பெல்லாம் விழுங்கிவிட்ட உணர்வு வருகிறது.  ஒரு செடியை மழை முழுதாக நனைத்த மாதிரி மழை அவன் மனசை முழுதாக குளிர்வித்திருந்தது.  மனதில் இருள் விலகி ஒரு ஒளி பிறக்கிறது.

பாடல் முடிந்ததும் தென்றல் லைனுக்கு வருகிறாள்.

 'ஹல்லோ சார் இப்போ எப்படி FEEL பண்றீங்க?'

'இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கு தென்றல்'

 அவனின் காதல் கதையை கேட்கிறாள்.   வீட்டை எதிர்த்து கல்யாணம் முடிந்த கதையைச் சொல்கிறான்.

'அப்புறம் என்ன சண்டை?' என்று கேட்கிறாள்.

'அவளுக்கு இளையராஜா பாட்டுன்னா உயிர்.  காலையில் அவ கேட்டுட்டு இருந்த ராஜா சார் சாங்க நிறுத்திட்டேன்.  அப்ப ஆரம்பிச்ச சண்ட பெருசாயி அவள லேசாத்தான் தள்ளி விட்டேன்.  கட்டில்ல அடிச்சு விழுந்துட்டா.. அப்புறம் போயிட்டா...'

அருகில் இருக்கும் பெட்ரூம் திரைசீலை காற்றுக்கு மெதுவாக ஆடுகிறது.  அங்கே யாரோ இருப்பது போல தெரிகிறது...

'போயிட்டான்னா.....'  என்று தென்றல் கேட்கும்போது ஒரு பீதி தெரிகிறது.

கட்...கட்...முழு கதையையும் நானே சொல்லிட்டா..எப்படி? ...மீதிய கீழே இருக்கும் லிங்கில் பாருங்க.

கொஞ்சம் காபி...கொஞ்சும் மழை.. குறும்படம்.

இந்த குறும்படத்தில் அந்த பாடல்கள் அவனது சிச்சுவேசனுக்கு தகுந்த மாதிரி தேர்ந்தெடுத்து போட்டிருப்பது அழகு.  ஷூட்டிங் நடத்தும் இடத்தில் கிடைக்கும் பொருள்களை படத்துக்கு பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவது அழகு.

அந்த வீடு பழமையும் புதுமையும் கலந்த வீடு.  பெண்டுலம் ஆடும் பழைய மாடலில் புதிய கடிகாரம், பழைய மாடவிளக்கு அதில் புதுமையாக மெழுகுவர்த்தி வைத்து இருக்கும்,  பழைய மாடல் ரேடியோவில் மாற்றம் செய்யப்பட்டு FM கேட்கும் மாதிரி செய்யப்பட ரேடியோ.  பழைய காதலர்கள் சிலை புதுமையாக பளிங்குக் கல்லில்.  இதை உணர்த்தவே பழைய கருப்பு வெள்ளையில் புதிய காதல் கதையோ?

கருப்பு வெள்ளை கலர் அவனோட சோகத்தை சொல்லுகிறது.  அவன் காதல் கதை வரும்போது கலராகிறது.

வசனங்கள் எழுதி இருப்பவர் பிரபல எழுத்தாளர்  'பரிசல்காரன்' கே.பி.கிருஷ்ணகுமார்.    படத்துக்கு தேவையான க்யூட்டான வசனங்கள் படத்துக்கு ஒரு வண்ணத்தை தருகின்றன.

தனிமை தவிர்க்க எறும்புகள் கூட்டமாக  நகர்வதும்,  மனசு கொதிப்பது போல் காபி கொதிப்பது,  அவன் மனசு குரங்கு மாதிரி பாய்வதை குரங்கு பொம்மையை காட்டியும்,  மனசு குளிர்வதை செடியை மழை நனைப்பதையும்,
இப்படி கிடைக்கும் இடங்களில் எடிட்டர் சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் அவனை பார்த்து கண் சிமிட்டுவது, மழையை பார்த்தவாறு ஈசி சேரில் அமர்ந்து இருக்கும் காட்சி, காதல் சின்ன கோப்பை காபியில் ஆவி வருவது,  விளக்கு இப்படி பல காட்சிகளில் CINEMATOGRAPHER சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.

இளையராஜா ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்து கலக்கி இருக்கிறார் டைரக்டர் சூர்யபாரதி.     முதலிலேயே சஸ்பென்ஸ் வைத்து படம் முழுக்க பதைபதைப்பாக கொண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தென்றலின் குரலில் பேசி இருக்கும் ப்ரியா.D க்கு ரேடியோ உலகத்தில்  நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல தேர்ச்சி பெற்ற RJவைப் போல் கேட்பவரை வசீகரிக்கும் மாயாஜாலக் குரல்.  நடித்திருக்கும் விஷ்ணுவும் சௌமியாவும் நடிப்பு மோசம் சொல்வதற்கில்லை.



பரிசல்காரன் சொல்வது மாதிரி  ஒரு காபி கோப்பையோடு மழை பெய்யும் அந்தி மாலை நேரத்தில் காதுகளில் ஹெட்போனுடன் இந்தப் படத்தை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள்.  அவர்கள் இளையராஜாவை நேசிப்பவர்களாயிருந்தால் வெறியர்களாக மாறுவார்கள்.

இப்படத்தை இயக்கி இருக்கும் சூர்யபாரதி என் மகன்.... இல்லை..இல்லை... நான் சூர்யபாரதியின்  அப்பா!!!  வளரும் கலைஞனை வாழ்த்துவோம்.