PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, March 21, 2012

MICROCOSMOS(1996)-சின்னஞ்சிறு பூச்சிகளின் அற்புத உலகம்!


நாம் என்றாவது ஒரு எறும்பின் பயணத்தை தொடர்ந்திருக்கிறோமா? சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டுக்கு அது செல்லும் வழியில் எத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோமா?  மழை வந்த பின்னால் எறும்புக்கு எப்படி இறக்கை முளைக்கிறது?

இப்படி பல கேள்விகள், நம் சிறுவயது சந்தேகங்களின் அவிழ்க்கப்படாத  முடிச்சுகள் எவ்வளவோ இருக்கின்றன.  அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமான செய்திப்படம்தான்-MICRO COSMOS.

இதை செய்திப்படம் என்று சொல்வதில் எனக்கு சம்மதமில்லை.  இது ஒரு முழுநீள சித்திரம் என்றே சொல்வேன்.  இதில் காதல் உண்டு.  சண்டை உண்டு.  வாழ்வுக்காகப் போராடும் போராட்டம் உண்டு.  கூட்டமாய் சாவும் மனதைப் பிழியும் சோகக்காட்சிகள் உண்டு. படத்தை பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் முடியாமல் எழமாட்டீர்கள் என்பதை திண்ணமாகக் கூறமுடியும்.

படத்தின் ஆரம்பத்தில் காமிரா பிரபஞ்சவெளியில் துவங்கி மேகக்கூட்டத்தை கடந்து காட்டைக் காட்டி புல்வெளியில் இறங்கி ஒரு புல்லின் மீது நிற்கும்.  காமிரா அந்தப் புல்லை பிரமாண்டமாய்க் காட்டும். அந்த ஒற்றைப் புல்லைப் பற்றியபடி ஒரு வெட்டுகிளியின் கால்கள் மட்டும் நகரும்.

ஒரு ரஜினி படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி அருமையாக இருக்கிறது. ஒரு எறும்பு மெகா சைசில் புல்லுக்கு இடையில் நகர்ந்து செல்லும்.  ஒரு காண்டாமிருகத்தின் கொம்புகள் மட்டும் தெரியம்.  அதை முழுமையாகக் காட்டும்போது ஒரு வண்டாய் மாறும்.

பூ ஒன்று அழகாக விரியும்.  உள்ளிருந்து வண்டொன்று ஓடும்.  பூவுக்குள்ளிருந்த தேனை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது மாதிரி வண்டுகள் உறிஞ்சும் காட்சி, அப்போது நடக்கும் மகரந்த சேர்க்கை, பனித்துளியை குடிக்கும் எறும்பு, சூரிய வெப்பத்தில் ஆவியாகும் பனித்துளி, எறும்பும் வண்டும் சண்டையிடும் காட்சி என காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறார்கள்.

நத்தைகள் இரண்டு ஓருயிர் ஈருடலாய் ஆலிங்கனம் செய்யும் காட்சி...நாம் எந்தப் படத்திலும் பாராதது.  அதற்கான பின்னணி இசை பொருத்தமானது.  மணிரத்தினத்தின் ஓம் நமஹா பாடல் நினைவுக்கு வருகிறது. இதை மீறியொரு காதல் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் வந்ததில்லை எனலாம்.

குளவி ஒன்று முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது.  அது வெளியே வந்ததும் அதன் முதல் உணவே அந்த முட்டை ஓடுதான் எனும்போது அந்த குளவிக்கு அந்த உணவை தின்னவேண்டும் எனும் சிஸ்டத்தை நினைத்து ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியாது.

எட்டுக்கள் பூச்சி தன்னுடைய உணவை வேட்டையாடும் விதம் மற்றொரு ஆச்சர்யம்.  வலையை விரித்து காத்திருக்கும் சிலந்தி, அதில் வந்து ஒட்டிக்கொள்ளும் பூச்சியை உடனே நான்கு உருட்டு உருட்டி தனது வலையில் pack செய்து கொள்கிறது.  பிறகு அதன் ரத்தத்தை மட்டும் உறுஞ்சிக் கொள்கிறது.

பிறகு பூ வாடுகிறது.  கோடை தலை விரித்து ஆடுகிறது. நிலங்கள் வெடிக்கிறது.  எறும்புகள் சின்ன ஒரு குழியில் இருக்கும் கொஞ்சூண்டு தண்ணீரை குடிக்கிறது.  ஒரு தாய் எறும்பு தனது பிள்ளைக்கு தண்ணீர் ஊட்டிவிடும் காட்சி அற்புதமானது.  ஆபாவாணன் ஊமை விழிகளில் காட்டுவது போல கம்பளிப் பூச்சி ஒன்று தொலைவில் வருகிறது.  அருகில் வரும்போது நூற்றுக்கணக்காக மாறுகிறது.  அதுவும் உடையாத ஒன்றன் பின் ஒன்றான வரிசையில் வருகிறது.  மற்றொரு திசையில் வரும் இன்னொரு பூச்சி வரிசை இடையில் அழகாகச் சொருகி செல்லும் காட்சி அற்புதமானது.  ஊர்வலம் சென்ற பூச்சிகள் ஓரிடத்தில் இரை கிடைக்காததால் ஒன்றன் ஒன்றன்மீது விழுந்து அத்தனையும் இறந்து போகின்ற காட்சி உண்மையில் நெகிழச் செய்கிறது.

எறும்புகளின் வாழ்க்கை முறை அழகாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது.  அது உணவை சேமிக்கும் முறை.  தனது வலைக்குள் உணவைக் கொண்டு சென்று அடுக்கி வைக்கும் முறை.  திடீரென்று மழை வந்து அத்தனையும் வீனாதல்.  எறும்புகளுக்கு இறக்கை முளைத்து பறந்து செல்லுதல்,  எறும்புகளின் பார்வையில் வளைக்குள் இருந்து பறவையின் அலகு ஒன்று உள்ளே வந்து கொத்திச் செல்வது என்று அற்புதமாக இருக்கிறது.

சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டு ஒன்று அதன் பாதையில் எத்தனை மேடு பள்ளங்கள்.  அவற்றை எப்படி சமாளித்து உருட்டிச் செல்கிறது.  அது போகும் வழியில் ஒரு செடியின் முள்ளில் சாண உருண்டை மாட்டிக்கொள்ள சற்றும் மனம் தளராமல் முள்ளிளிருந்து அதை விடுவித்து எடுத்துச் செல்லும் காட்சி ஒரு அழகான த்ரில்லிங்கான கவிதை.

மாமிசம் தின்னும் தாவரம் ஒன்று தனது பூவை விரித்து காத்திருக்கிறது. வாசனை தேடி வருகின்ற பூச்சியை மடக்கிப் போட்டு பூவுக்குள் மூடி தின்னும் காட்சி இதுவரை நாம் பார்த்திராதது.

இன்னும் எதிரியிடம் தப்பிக்க பந்து போல் சுருண்டுகொள்ளும் வண்டு,  இலையைத் தின்னும் புழுக்களின் கூட்டம். பூவுக்குள் உறங்கும் வண்டு,  இரவுக்காட்டில் உறங்கும் ஒவ்வொரு பூச்சிகள் என மனதை விட்டு அகலாத அற்புதங்கள் நிறைந்தது இந்தப் படம்.

இறுதியில் கொசுவின் பிறப்பு அற்புதங்களின் உச்சம்.

நண்பர்களே மனிதனுக்குத்தான் ஆறறிவு எனும் தியரி இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் உடைந்து போகும் என்பது உறுதி.  படத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.

இப்போதைக்கு அதன் ட்ரைலர் பாருங்கள்

http://www.youtube.com/watch?v=76R2EKEnoJQ

 

2 comments :

  1. really i was wondered too much of watching this video.. pls convey me further similar to this ..thanks

    ReplyDelete
  2. really wonderful to watch. close up shots all are like a great poems.. please convey me aruna, this kind of excellent videos to me.. thanks a lot

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......