PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, January 21, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-2.


ப்ளாக் பக்கம் தலைகாட்டி வெகு நாளகி விட்டது. உள்ளுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருந்தது.  அதுதான் மூக்கையாவது காட்டிவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன்.

எனது ரசிகர் பட்டாளம்(?) வேறு எழுது எழுது என்று ஒரு நாளைக்கு இருபத்தைந்து மணி நேரமும் கெஞ்சிக் கொண்டிருப்பதால் எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  ஆகையால்.... இனி நான் உங்களை விடமாட்டேன்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்..


எங்களது வீட்டில் எப்போதும் ரகளைதான்.  யாராவது ஒருத்தர் பல்ப் வாங்கிக் கொண்டிருப்போம்.

நேற்று காலை டிபன் நேரம்.  தங்கமணி தோசை வார்த்து போட்டுக்கொண்டிருந்தாள். நெடு நாட்களாக எங்களுக்கு வைக்கப் படுகிற சில  தோசைகளில் நடுவில் வட்டமாக உள்ளங்கை அளவில் ஒரு சிறிய பாகம் காணாமல் போய் இருக்கும்.  அது எப்படி என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  இருந்தபோதும் தோசை ருசியாக இருப்பதாலும் முருகலாகவும் இருப்பாதால் கேள்விகள் கேட்பதில்லை.  மேலும் வாய் என்பது சாப்பிடத்தானே தவிர கேள்வி கேட்பதற்கு இல்லை என்பது எங்கள் வீட்டில் டைனிங் டேபிள் விதிகளில் ஒன்று.

இந்த விதியை மீறி அவ்வப்போது நாங்கள் பல்ப் வாங்கிக்கொள்வதும் உண்டு. எனது பிள்ளைச் செல்வங்களுக்கு தோசை முருகலாக இருந்தாக வேண்டும்.  ஆனால் கொஞ்சம் கூட தோசை தீய்ந்து கருகக்கூடாது.    எனது சின்னப் பையன் யுகாவுக்கு வைக்கப்பட்ட தோசையில் நடுவில் கொஞ்சம் கருகி இருந்தது. உடனே தட்டுக்கும் பூமிக்குமாக குதித்தான்.

உடனே சமையலறையில் இருந்து ஓடிவந்த தங்கமணி அடடா கருகிய பாகத்தை டெலீட் செய்யாம கொடுத்திட்டேனே என்றாள்.  அப்போதுதான் எங்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ரகசியம் புரிந்தது.

மகனோ, "ஏம்மா எனக்கு கருத்த தோசையை கொடுத்தே.  தூக்கி வெளியே போடவேண்டியதுதானே" -என்றான்.

தங்கமணி அவனை நிதானமாக முறைத்தபடி,  "அப்படியா... அப்படீன்னா முதல்ல உன்னைத்தான் தூக்கி வெளியே போட்டிருக்கணும்.  உன்னைப் பெத்தப்போ கருப்பா இருந்த்தன்னு  அப்பவே தூக்கிப் போட்டிருக்கணும்"-என்றாள்.

அவ்வளவுதான்.  கப்சிப்.  டைனிங் டேபிள் விதி தன்னால் அமுலுக்கு வந்தது.
நான்,"செவ்வாழ வாயை வெச்சுட்டு கம்முன்னு இருடானா கேக்கிறியா?"-என்று சொன்னேன்...(மனசுக்குள்தான்!!!!).


வாழ்கையில் நல்லா...
கனவுகள்  சுவராஸ்யமானவை. அதுவும் எனக்கு வரும் கனவுகள் அவ்வப்போது ஒரு குறும்படத்துக்கான கருவைத் தந்திருக்கின்றன.  போனவாரம் வந்த கனவு அற்புதமானது.

நடு இரவு நேரம்.  ஒரு மெயின் ரோட்டில் நடு ரோட்டில் உட்கார்ந்து நாலைந்து நண்பர்கள் பேசிக்கொண்டிருகிறோம். அதில் ஒரு பையன் இருக்கிறான். அந்தப்  பையனுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.  நான்,"வாழ்க்கையில் அடிபட்டாத்தான் உயரமுடியும்டா.  எவ்வளவு அடிபடுகிறோமா அவ்வளவு அனுபவம் கிடைத்து நல்ல உயரத்துக்கு வளர முடியம்"-என்கிறேன்.

அப்போது நெடுஞ்சாலை போலீஸ் ரோந்து வருகிறது.  நாங்கள் நடு ரோட்டில் உட்கார்ந்து அரட்டை அடிப்பதைப் பார்த்து எங்களை மிரட்டி அனுப்புகிறது.  எல்லோரும் விலகிவிட அந்தப் பையன் மட்டும் அங்கேயே நிற்கிறான்.  எதிர்த்து பேசுகிறான்.  போலீஸ் அவனை நாலு மிதி மிதித்து அனுப்புகிறது.  நாங்கள் அவனை சூழ்ந்து "ஏண்டா அடி வாங்கினே... பேசாம வரவேண்டியதுதானே"-என்று கேட்கிறோம்.  அவனோ,"நீங்கதானே  அடிபட்டாதான் முன்னேறமுடியும்னு சொன்னீங்க.  அதனாலதான்!"-என்கிறான்.  கட்.  கனவு கலைகிறது.

இன்னும் நிறைய கனவுகள் இருக்கிறது... பிறகு பகிர்கிறேன்.


பிரியாத ப்ரியங்களுடன்...

No comments :

Post a Comment

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......