PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, November 26, 2011

பொறந்த நாளு கண்டுபோச்சு போங்க.

இன்று எனக்கு ஒரு போன்.. எனது மகனின் நண்பனிடமிருந்து.


”அங்கிள்...ஹேப்பி பர்த்டே..”


எனக்கு அதிர்ச்சியாய்ப் போயிற்று.


தேதியைப் பார்த்தேன். 26.11.2011.


அட.. ஆமாமில்ல.... ஆனால் இல்லை.
என்னுடைய பிறந்த நாளில் (பிறந்ததே..) ஒரு குழப்பம் உண்டு.


பள்ளிக்கூடத்தின் ரெக்கார்டுப் பிரகாரம் எனது பிறந்த நாள் 25.05.1966.


வெகு நாள்வரை இதுதான் எனது உண்மையான பிறந்த நாள் என்று நினைத்திருந்தேன்.


ஒருமுறை தீர விசாரித்தபோது எனது உண்மையான பி.நா இதுவல்ல என்று தெரிந்தது.


உண்மையான தேதி தெரியாத காரணத்தினால்வாத்தியார்அவராக முடிவு செய்து வழக்கமான யுனிவர்சல் சூத்திரப் பிரகாரம் தலையைச் சுற்றி காதைத் தொட்டபிறகு அவராக ஒரு தேதியைப் போட்டுக்கொண்டார். பள்ளிக்கூடம் ஜூன் மாதம் திறப்பதால் மே மாதத்தில் பிறந்ததாக எனது வரலாற்றில் ஒரு தவறான பதிவைச் செய்துவிட்டார். அனேகமாக இந்த தவற்றை அந்த கிராமத்தில் எல்லொருக்குமே அவர் செய்திருப்பார் என்றே நினைக்கிறேன்.  ஆகையால் நண்பர்களே நீங்கள் யாராவது மே மாதத்தில் பிறந்ததாக இருந்தால் தயவு செய்து நன்றாக விசாரியுங்கள்.  அதுவும் ஒரு வரலாற்றுப் பிழையாய் இருந்தாலும் இருக்கலாம்.


என்னைப் பத்து மாசம் சுமந்து பெற்ற அன்னைக்கே எனது பிறந்த நாள் என்னவென்று தெரியவில்லை. அதைப் பற்றிக் கேட்டால் மழுப்பலாகவே பதில் வரும்.


இந்த நாளுக்கான கொண்டாட்டங்களை நானும் விரும்பியதுமில்லை.  ஆகையால் இது ஒரு பெரிய விஷயமில்லாமல் போய்விட்டது.


ஆனால் இதற்கான தேவையும் ஒரு நாள் வந்தது. கல்யாணத்துக்கு பெண் தேடும்போது ஜாதகம் அவசியம் தேவைப்பட்டது. அது இல்லையென்றால் வந்தவர்களெல்லாம் நாலடி பின்வாங்கினார்கள். ஏதோதோ சந்தேகப்பட்டார்கள். ஜாதகத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது. அதனால்தான் ஜாதகம் தர மறுக்கிறேன் என்று பல ஐஸ்வர்யாராய்க்களின் தகப்பன்கள் நினைத்து விட்டார்கள். ஆகையால் எனது வாழ்வில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. சச்சின் மாதிரி 99 ரன்களில் நிறைய முறை அவுட் ஆகியிருக்கிறேன்.


ஒரு முறை இதை எப்படியும் கண்டுபிடித்து விடுவது என்று பேன்டை மடித்துவிட்டு(வேட்டியெல்லாம் பழைய ஸ்டைலுங்க) களத்தில் இறங்கினேன்.


அம்மாவை உட்காரவைத்து எனது பிரச்சினையெல்லாம் சொல்லி என் வாழ்க்கையில் ஒளியேற்றச் சொன்னேன்.


“அதுவா... நீ கார்த்திகை ஜோதியன்னைக்கு பொறந்தே... அதனால்தன் உனக்கு அருணானு பேர் வெச்சோம்”


ஒளி நிஜமாகவே ஏற்றியது. என்னே ஒரு பொருத்தம்.


”எந்த வருசம்..?”.


“அது நீ பொறந்தப்பதான் M,G,R,-ஐ சுட்டுட்டாங்க. நீ பொறந்து ஆஸ்பத்திரியில இருக்குறப்பதான் நர்ஸு வந்து சொல்லுது.  M,G,R,-ஐ M.R.ராதா சுட்டுட்டாராமா..   பொழைக்கிறது கஸ்டமாமாம். எல்லொரும் பேசிக்கறாங்க. நான் உன்னை மடியில போட்டு கண்ணீர் விட்டு அழறேன். அடுத்த நாள் வந்து நர்ஸம்மா சொல்லுச்சு.  M,G,R பொழைச்சுட்டாரு. ஒண்ணும் கவலைப்படாதீங்கன்னு.அப்ப பொறந்தே நீ”


நூலகத்துக்குச் சென்று பல புத்தகங்களை ஆராய்ந்து பார்த்தால் கார்த்திகை ஜோதி நவம்பர் மாதம் வருகிறது ஆனால்    M,G,R-ஐ சுடப்பட்டது ஜனவரியில் வருகிறது. எனக்குத் தலை சுற்றியது. எப்படி கண்டு பிடிப்பது என்று அம்மா அவர்கள் அமச்சரவையைக் கூட்டி மின்கட்டணத்தை ஏற்றியது போல நானும் நண்பர்களவையைக் கூட்டி ஆலோசனை செய்தோம். பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். பிறந்த ஆஸ்பத்திரி ரெக்கார்டுகளை பார்த்துவிடுவது என்று.


நான் பிறந்தது கரூர் பெரியாஸ்பத்திரியில். அதையாவது சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார்களே என்று அம்மாவுக்கு ஒரு சல்யுட் வைத்துவிட்டு எனது நண்பன் வடிவேலுவுடன் கரூர் பயணமானோம். அங்கே நமது அரசாங்க இயந்திரத்துக்கு செய்யவெண்டிய மரியாதைகளைச் செய்தவுடன் அந்த வருட ரெஜிஸ்டரைக் கையில் கொடுத்து தேடி எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் 1966 வருடத்தில் தேடினோம். கிடைக்கவில்லை.  1967ம் வருட ரெஜிஸ்டரைக் கேட்டதும் மரியாதை அதிகம் எதிர்பார்த்தார்கள்.  அழுததும் கிடைத்தது. நவம்பர் வரை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.  நம்பிக்கை இழந்தோம் விடாமல் தேடியபோது நவம்பர் மாதத்து ஆவணங்களில் இருந்தது. அப்பாடா பொறந்தநாளைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள பொறந்த நாளே கண்டுபோச்சு போங்க.


சந்தோஷமாக திருப்பூர் வந்து வடிவேலுவை அனுப்பிவிட்டு பழைய பஸ்டேண்ட் பக்கம் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டரில் ஜாதகம் போட்டுக்கொண்டேன். இதுவரை ஜோதிடரைப் பார்த்திராத நான் ராயபுரத்தில் ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை நீட்டினேன். அவர் தீர ஆராய்ந்துவிட்டு இந்த ஜாதகத்தில் செவ்வாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.  அவரோடு சண்டை போட்டு நன்றாகப் பார்க்கச் சொன்னேன். அவரோ ’நெற்றிக்கண் திறப்பினும் செவ்வாய்..செவ்வாயே!’ என்றார். கூடுதலாக ’ஜாதகங்களில் லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும்.இதை சந்திர லக்னம் (ராசி),சுக்ரன் இருக்கும் இடங்களிலிருந்தும் கணிக்கப்படவேண்டும்’ என்ற ரகசியங்களையும் சொல்லிக்கொடுத்தார். 


என்னடா இது எனது வாழ்வில் வந்த சோதனை. இதற்காகவா இந்த பிறந்தநாளை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தோம் என்று பாலமுரளிகிருஷ்ணா ஷெனாய் வாசிக்க சோகமாக நடந்து வந்தேன். இந்தக் கொடுமை தீர எந்த ஆண்டவனை வேண்டினால் தீரும் என்று தீர ஆலோசனை செய்து மீண்டும் கம்ப்யூட்டர் ஆண்டவனையே நாடினேன்.


உண்மையான பிறந்த நாளுக்கு அடுத்த நாளை கொடுத்து புதிதாக ஒரு ஜாதகம் கேட்டேன். ஆண்டவர் உடனே கொடுத்தார். அதில் இருக்கும் கட்டங்களை ஆராய்ந்தேன். லக்னத்திலிருந்து செவ்வாயை எண்ணினேன். ஏழாம் இடம் வந்தது. அய்யோ இப்போதும் செவ்வாய் தோசம். எனது வாழ்க்கை திகார் ராஜா மாதிரி கட்டங்களில் அடைக்கப்பட்டு விழித்துக்கொண்டிருந்தேன்.   சளைக்காமல் உண்மையான பிறந்த நாளில் இருந்து வேறொரு நாள் முன்னதாக எழுதிக் கொடுத்து வெறொரு ஜாதகம் கேட்டேன். கடைக்காரர் என்னை முறைத்துப் பார்த்தார். கல்யாண வயதில் ஐஷ்வர்யாராயை வைத்திருப்பார் போலும் வேண்டாவெறுப்பாக பிரதி எடுத்துக் கொடுத்தார். இப்போது கம்ப்யூட்டர் ஆண்டவர் கைவிடவில்லை. சுத்த ஜாதகம். பரணி நட்சத்திரம். தரணி ஆள்வேன் என்று பலன் சொல்லியது.


இப்போது கேட்டவர்க்கெல்லாம் எனது திருத்தப்பட்ட ஜாதகமே கொடுக்கப்பட்டது. அப்படி வந்து அமைந்ததுதான் இப்போதைய தங்கமணி.  அதிலும் ஒரு சுவராஸ்யமாய் ஒரு கதை உண்டு. அதை இன்னொரு பதிவில் இன்னொரு சமயம் சொல்கிறேன். (விடமாட்டேனுல்ல) நெடுநாட்களுக்கு இந்த ரகசியத்தை கட்டிக் காப்பாற்றி வந்தேன். ஒருமுறை சொல்லிவிட்டேன்.  இன்னும் என்னென்ன ரகசியங்கள் இருக்கு என்று கேட்டதோடு சரி. மனதை சமாதானப் படுத்திக்கொண்டாள். வெறென்ன செய்யமுடியும்., ரெண்டு புள்ளைகளைப் பெற்ற பிறகு. வாழ்க்கையில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் போனதால் தப்பித்தேன்.


இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனது பிறந்த நாளில் எனக்கே குழப்பம்தான். மூன்று ஜாதகங்கள் இருக்கிறது. இந்த மூன்றில் எது எனது உண்மையான ஜாதம் என மறந்து போயிற்று.
இத்தனை நாள் அத்ற்கான அவசியம் வரவில்லை. இப்போது எனது பையன்கள் எனது பிறந்த நாளை கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆனால் என்னால் உண்மையான பிறந்த நாளை
சொல்லமுடியவில்லை. எனக்கு ஞாபகம் இல்லை. என்ன செய்ய?


ஆகையால் எனது பையன்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மூன்று நாளையுமே கொண்டாடிவிடுவது என்று. முதல் நாள் ஓட்டல். இரண்டாம் நாள் சினிமா. மூன்றாம் நாள் பிக்னிக் என்று பட்டியல் போடுகிறார்கள். எனக்கு செவ்வாய் தோசம் என்றால் என்னவென்று இப்போதுதான் புரிகிறது.
   


 

11 comments :

 1. அருமையா சொல்லி இருக்கீங்க. நிறைய பேருக்கு சர்டிபிகேட் பிறந்தநாள் தான் ஞாபகம் இருக்கும். உண்மையான பிறந்த நாளை கண்டுபிடிக்க நீங்க செய்த ரிசர்ச் சூப்பருங்க...


  நம்ம தளத்தில்:
  "வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

  ReplyDelete
 2. பரவாயில்லை உங்களுக்கு மூன்று பிறந்த நாள்உள்ளது
  பலருக்கு ஒன்னுகூட இல்லையே.

  ReplyDelete
 3. //ஆகையால் எனது பையன்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மூன்று நாளையுமே கொண்டாடிவிடுவது என்று. முதல் நாள் ஓட்டல். இரண்டாம் நாள் சினிமா. மூன்றாம் நாள் பிக்னிக் என்று பட்டியல் போடுகிறார்கள். எனக்கு செவ்வாய் தோசம் என்றால் என்னவென்று இப்போதுதான் புரிகிறது.//
  இப்பம்(இப்போது) ஒங்க சரியான பொறந்த நாளு ஞாபகத்துக்கு வந்திருக்குமே

  ReplyDelete
 4. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 5. i want to appreciate your humor sense mr.aruna..
  keep it up

  ReplyDelete
 6. // உண்மையான தேதி தெரியாத காரணத்தினால் வாத்தியார் அவராக முடிவு செய்து வழக்கமான யுனிவர்சல் சூத்திரப் பிரகாரம் தலையைச் சுற்றி காதைத் தொட்டபிறகு அவராக ஒரு தேதியைப் போட்டுக்கொண்டார். //
  சேம் ப்ளட். இங்கயும் அதே கதைதான்.
  // பள்ளிக்கூடம் ஜூன் மாதம் திறப்பதால் மே மாதத்தில் பிறந்ததாக எனது வரலாற்றில் ஒரு தவறான பதிவைச் செய்துவிட்டார்.//
  உங்களுக்கு மே மாதம். எனக்கு ஏப்ரல் மாதம்.. மத்தபடி எல்லா ஊர்லயும் வாத்தியார்கள் ஒரே மாதிரிதான் கணக்கு போடுராங்க.

  ReplyDelete
 7. உங்கள் புரவியில் நம்பி ஏறலாம் போலிருக்கே . பலே.
  நெஞ்சம் உண்டு நேர்மை ஓடு ராஜா.

  ReplyDelete
 8. @suryajeeva said...
  நன்றி... சூர்யா!
  @தமிழ்வாசி பிரகாஷ் said...
  நன்றி.. பிரகாஷ்.

  @வலிபோக்கன் said...

  ஆமாங்க.. மூணு பொறந்த நாளு. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்.

  ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......