PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Tuesday, December 24, 2013

எங்கள் வீட்டில் ஒரு ஆனந்தப் பிரசவம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டின் பின்புறத்தில் கீச் கீச் என்று சத்தம் கேட்க ஆரம்பித்தது.  இரண்டு தேன் சிட்டுகள் அவ்வப்போது வந்து விளையாடிவிட்டு போகும். 
வீட்டின் பின்புறத்தில் ஒரு கொடிரோஜா ஒன்று படர்ந்திருந்தது. அருகில் ஒரு மஞ்சள் கிழங்கு செடி.  ஒவ்வொரு வருட பொங்கலுக்கும் சாமி கும்பிடும்போது மட்டும் பயன்படும். அருகில் ஒரு மணிபிளான்ட் கொடியாக வளர்ந்து மதில்சுவற்றில் ஏறி  இருந்தது.  அது இருந்தால் வீட்டில் நிறைய பணம் கொட்டும் என்று தங்கமணி நம்பி வளர்த்து வந்தாள். இப்படியான சூழ்நிலை அந்த குருவிகளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது போலிருக்கிறது.  அடிக்கடி வந்து இடத்தை சர்வே செய்து போய்க்கொண்டு இருந்தது. 

சிலநாள் கழித்து பார்த்தால் மணிப்ளாண்ட் கொடியின் இலைகளில் கூடு கட்டி இருந்தது.  அந்த கொடியின் அளவான இரண்டு இலைகளைத் தேர்ந்தெடுத்து துளைகளிட்டு, துளைகளில் நூல் கொண்டு மடித்து தைத்து இருந்தது. மழைநீர் ஒழுகாத வண்ணம்  அழகாக மடித்த பாங்கில் தேர்ந்த அனுபவம் வாய்ந்த பொறியாளர் தெரிந்தார்.  உள்ளே தென்னை நாரைக்கொண்டு கூடு அமைத்து மெத்தென்று இருக்க கழிவு பஞ்சை பொறுக்கிக்கொண்டு வந்து மெத்தை அமைத்து இருந்தது.

நாங்கள் இதை ஆச்சர்யத்துடன் வியந்து தொட்டு தொட்டு பார்த்து ஆனந்தம் கொண்டோம்.  அக்கம் பக்கம் எல்லாம் வந்து புது குடியேறிகளையும் அதன் புது வீட்டையும் பார்த்து வியந்து சென்றனர். 
நான் இயற்கை வரலாறு அறக்கட்டளை நல்லசிவத்துக்கு தகவல் சொன்னேன்.  அவர் வந்து கூட்டை பார்த்தார்.  யாராவது கூட்டைத் தொட்டீர்களா எனக் கேட்டார்.  ஆமாம் எல்லோரும் தொட்டுத்தொட்டு பார்த்த விஷயத்தை சொன்னதும் தலை மீது கையை வைத்து உட்கார்ந்துவிட்டார்.  இனி அந்தக் குருவிகள் அந்த கூட்டை உபயோகப்படுத்தாது எனக் கூறினார்.

ஏனெனில் குருவிகள் தங்கள் கூட்டை கட்ட தேர்ந்தெடுக்கும் இடம் தனக்கு பாதுகாப்பான இடம் என்று உணர்ந்தால்தான் கூடு கட்டுமாம்.  அதுவும் அந்தக் கூட்டில் மனுசவாடை அடித்துவிட்டால் அது எப்பேர்பட்ட கூடு என்றாலும் அதை உபயோகப்படுத்தாதாம்.

குருவிகள் குடித்தனம் பண்ணுவதை பார்க்கலாம் என்று ஆவலோடு இருந்த எங்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.  அதெல்லாம் சும்மா அந்தக் குருவிகள் நிச்சயம் வந்து முட்டை வைக்கும் என்று கூறினேன்.

ஆனால் குருவிகள் வரவே இல்லை.  கூடு கட்டிய இலை காய்ந்து தொங்கும் வரை பார்த்துவிட்டோம்.  அந்தக் கூட்டருகில் குருவிகள் வரவேயில்லை.  எங்களுக்கோ மனசு மிகவும் கஷ்டமாகபோனது.   அந்த சிட்டுக்குருவிகளின் உழைப்பை மதிக்காமல் போய்விட்டோமோ என்று எங்களை நாங்களே திட்டிக்கொண்டோம்.  எனக்கு நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தபோது காலி பண்ணச்சொன்ன அடாவடி வீட்டுக்காரர் ஞாபகம் வந்தது. அந்தக் கதையை இங்கே படியுங்கள். அந்தக் குருவிகளிடம் நாங்கள் அறியாமல் செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.

தங்கமணி அந்த கொடியை வெட்டிவிடலாம் என்று கூறினாள்.  நான் வேண்டாம் எதற்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்று விட்டுவிடச்சொன்னேன்.  பிறகு காய்ந்துபோன அந்த கூட்டை எடுத்து வீட்டின் ஷோகேசில் வைத்துவிட்டு இந்த விசயத்தையே மறந்து போனோம்.

சிறிது நாள் கழித்து பின்புறம் மீண்டும் கீச் கீச் சத்தம் கேட்டது.  இந்தமுறை எல்லோரும் சர்வ ஜாக்கிரதையாக இருந்தோம்.  யாரும் பின்புறம் போய் பார்க்கவே இல்லை. அதன் கொஞ்சல்களையும் குலாவலையும் வீட்டின் ஜன்னலை சார்த்தி கண்ணாடி வழியாகவே பார்த்து ரசித்தோம். 

முன்பு மாதிரியே அந்தக் கொடியின் வேறொரு கிளையில் இரண்டு இலைகளை தேர்ந்தெடுத்து கூடு கட்ட ஆரம்பித்தது.  இதை கண்ட எங்களுக்கு மிக்க சந்தோசமாக இருந்தது.  அந்த குருவிகள் எங்களை மன்னித்துவிட்டதாக உணர்ந்தோம்.  

இந்தமுறை அந்தக் குருவிகளை சுதந்திரமாக உலவவிட்டு எங்களால் எந்த தொந்தரவும் வராத மாதிரி பார்த்துக்கொண்டோம். 
ஒருவாரம் கழித்து கூட்டின் அருகில் போய் அதை தொடாமல் உள்ளே பார்த்தபோது சின்னசின்னதாக நான்கு முட்டைகள் இருந்தது.  
அதைக்கண்டபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பிறகு அடுத்த வந்த தினங்களில் ஒவ்வொரு முட்டையாக பொறித்து மூன்று

முட்டைகளை பொரித்துவிட்டது.  ஒரு பச்சைக்குழந்தையின் சுண்டு விரல் 

அளவுக்கே இருந்த அந்தக் குஞ்சுகளின் கண்கள் மட்டும் பெரிதாக இருந்தது. 

நாங்கள் கூட்டருகில் போனபோது அது வாயை திறந்து உணவுக்காக கத்தியது 

அழகாக இருந்தது. 



இன்னும் ஒரு முட்டை பாக்கி இருக்கிறது. அது நாளை பொரிந்துவிடும்.  

இப்போது பின்புறத்தில் குஞ்சுகளின் கீச் கீச் என்ற மழலைச்சத்தம் 

கேட்கும்போது  பீத்தோவனின் சிம்பொனியை கேட்பது போல் இருக்கிறது.  

ஏதோ எங்கள் வீட்டில் பிரசவம் நிகழ்ந்து ஒரு குழந்தை வந்தது போல் 

மகிழ்ச்சி மனதில் ஆடுகிறது.


7 comments :

  1. Amazing... you are very lucky. Thanks for sharing.

    ReplyDelete
  2. சிட்டுக்குருவி, புறா, தேன் சிட்டு போன்றவை கூடுகட்ட நம் வீட்டுச் சூழலைத் தேர்ந்தெடுத்தால் , அது அச் சூழல் நாமும் வாழ மிக ஏதுவானது என என் பாட்டா கூறுவார்.
    அதிஸ்டம் கொட்டுதோ, நிச்சயம் மன மகிழ்வைத் தரும்.
    தொடக்கூடாதென்பது மிக உண்மை. இப்படியே தூர இருந்து ரசிக்கவும். இந்தக் குஞ்சுகள் கூட வளர்ந்து இவ்விடத்தைத் தங்கள் எதிர்கால சந்ததிக்குத் தேர்வு செய்யலாம்.
    இங்கு என் சூழலில் நிறைய சிட்டுக்குருவிகள் ஒரு காலத்தில் கீச்சிட்டன. இப்போ அக்குரல் கேட்க ஆசையாகவுள்ளது. ஆனால் அவை இல்லை.
    அலைபேசியின் நுண்ணலைகளின் தாக்கம் என்கிறார்கள்.

    ReplyDelete
  3. படங்கள் அருமை , இப்படி ஒரு அனுபவம் எல்லாருக்கும் வாய்க்காது பாராட்டுக்கள் .

    ReplyDelete
  4. நன்றி.. பெருமாள்.
    நன்றி.....இராஜராஜேஸ்வரி.
    நன்றி யோகன்..
    நன்றி விமல்..
    உங்களின் மேலான யோசனைகளுக்கு நன்றி.

    ReplyDelete
  5. முடிந்தால், நானும் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......