PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, June 19, 2014

THE HEADMATE - குறும்படம் உருவான கதை.

னது மகன் சூர்யபாரதி இந்தவருடம் +2 படித்துக்கொண்டிருக்கிறான்.  கோடை விடுமுறை முடியும் முன்பு ஒரு வாரம் இருக்கும்போதே வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன.  விடுமுறையில் குதூகலமாய் இருந்தவன் இப்போது சார்ஜ் குறைந்த போன் போல் பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தான்.  அன்றைய வாரத்தின் வியாழக்கிழமை மாலையில் "அப்பா நான் ஒரு குறும்படம் எடுக்கப் போகிறேன்" என்றான்.

நான் "அதுக்கு உனக்கு ஏதுடா நேரம்?" என்றேன்.

"இல்ல எனக்கு மூணு நாள் லீவு. அதுக்குள்ள எடுத்துருவேன்"

"மூணு நாளுக்குள்ள எடுத்துற முடியும்.  ஆனா எடிட்டிங் டப்பிங்க்னு ஒரு வாரம் ஆயிடுமே.  படிப்பு கெடாதா?"

"எல்லாத்தையும் மூணு நாளுக்குள்ளே முடிச்சுருவேன்"

எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.  மூன்று நாட்களுக்குள் எப்படி எடுத்து முடிக்க முடியும்.  சான்சே இல்லை.  சரி என்னவோ செய்யட்டும்.  வேண்டாம் என்றால் கேட்கப் போவதில்லை.

"சரி கதையைச் சொல்லு" என்றேன்.

"நைட் வாங்க சொல்றேன்" - என்றான்.

நான் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு சென்றுவிட்டேன்.

இரவில் நான் வீட்டுக்குப் போனதும் அவனது ஸ்கிரிப்ட்டைக் காட்டினான். படித்துப் பார்த்தேன்.  நானொன்றும் கருத்துச் சொல்லவில்லை.

"ஓகே.. எப்ப சூட் போறே?"

"காலையில"

இவ்வளவுதான் சொன்னான்.  காலையில் எழுந்து பார்த்தால் ஆளைக்காணவில்லை.  போன் செய்தால் "ஷூட்டிங்ல இருக்கேன்பா" என்றான்.  "காமிரா யாருடா?" என்றேன்.  "நம்ம சந்தோஷ் தான்.  சென்னையில் இருந்து வந்திருக்கிறார்" என்றான்.

எனக்கு பகீரென்றது.  சந்தோஷ் எனில் CANON 5D கேமரா  மார்க் 3,  எப்படியும் வாடகை ஒரு நாளைக்கு இரண்டாயிரம் கொடுக்க வேண்டி இருக்குமே எனும் கவலையில் " வாடகை யார் தர்றது?" என்றேன்.

"தயாரிப்பாளர்தான் தருவாரு"

"யாரு தயாரிப்பாளர்?" என்று அப்பாவியாய் கேட்டேன்.

"நீங்கதான்" என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.

அன்று இரவு வீடு திரும்பும்போது லாப்டாப்பில் நோண்டிக்கொண்டிருந்தான்.

"என்னடா ஷூட்டிங் முடிஞ்சுதா?" என்றேன்.

"அதெல்லாம் முடிஞ்சு எடிட்டிங் போயிட்டிருக்கு" என்றான்.

நான் ஒன்றும் சொல்லவில்லை.  இரவு சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டேன்.

எப்போதும் போல் காலையில் எழுந்தபோது, தூங்கிக்கொண்டிருந்த அவனும் எழுந்து வந்து லாப்டாப்பை திறந்தான்.

"படத்த முடிச்சுட்டேன்.  பர்ஸ்ட் காப்பி பாக்கிறீங்களா?"- என்றான்.

"என்னடா அதுக்குள்ள முடிச்சுட்டியா?" - எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.  "படத்த பாருங்க.. இன்னும் மியூசிக் மட்டும் சேர்க்கல" என்று சொல்லி லாப்டாப்பை டிவியில் இணைத்து  போட்டுக் காண்பித்தான்.  படத்தைப் பார்த்துவிட்டு சில திருத்தங்கள் சொன்னேன்.  அதுக்கு மறுபடியும் சூட் பண்ணவேண்டும் என்றான்.  "அதனால என்ன பண்ணு" என்றேன்.

"நடிச்ச ஒருத்தன் இன்னைக்கு சென்னை போறான்பா" என்றான்.

"ஓகே அவன்கிட்ட பேசு.  கொஞ்ச நேரம்தான வந்துட்டு போகச் சொல்லு" என்று கொஞ்ச நேரம் பேசியதும்  அவன் அந்த நடிகனிடம் பேசினான்.

அவனோ வரமுடியாது என்று மறுக்க அவனது அப்பாவிடம் பேசச் சொன்னேன்.  அவனது அப்பா சென்னைக்கு ரயில் மூன்று மணிக்கு அவனை ஒருமணிக்குள் விட்டுவிடுவதாய் இருந்தால் அனுப்புகிறேன் என்று சொல்ல அதுக்கு ஓகே சொல்லி அவனை அழைத்துவர வண்டி அனுப்பியாயிற்று.

அடுத்து படத்தில்  நடித்திருந்த வண்டி மறுபடி வேண்டும்.  வண்டி கடன் கொடுத்தவனை கேட்டால் வண்டியில் சின்ன கீறல் விழுந்துவிட்டதால் வண்டி தரமாட்டேன் என்று சொல்ல மீண்டும் பிரச்சினை.  பிறகு அவனை நேரில் போய் பார்த்து சமாதானம் செய்து வண்டியை சூர்யாவே நண்பனோடு எடுத்துவந்தான்.

அடுத்து காமிராமேன் பிரச்சினை.  உறங்கிக்கொண்டிருந்த அவர்களை எழுப்பி ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்தும்போது மணி பத்து.  இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வந்துவிட்டார்கள்.

அன்று இரவு நான் வீட்டுக்கு போகும்போது படம் இசை எல்லாம் சேர்த்து ரெடியாக இருந்தது.  போட்டுப்பார்க்கும்போது திருப்தியாக இருந்தது.  மூன்று நாட்களில் முடிப்பதாய்ச் சொன்ன படத்தை இரவு பகல் பாராமல் இரண்டே நாட்களில் முடித்த அவனது ஆர்வத்திற்கும் அதற்கு அவன் போட்ட உழைப்பிற்கும் எனது பாராட்டுக்களை சொன்னேன்.

பிறகு ஒன்பதாவது படிக்கும் எனது சின்ன மகன் நவயுகனிடம் இந்த படத்திற்கான ட்ரைலரை தயாரிக்கும்படி சொன்னேன்.  அவனும் இரண்டே மணி நேரத்தில் அந்த ட்ரைலரை தயாரித்து கொடுத்தான்.  அருமையாக இருந்தது.  அது உங்கள் பார்வைக்கு....

HEADMATE-TRAILOR

இந்த ட்ரைலரை முகப்புதகத்தில் வெளியிட்டபோது நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.  பிறகு முழுப் படத்தையும் யூட்யூப்பில் படத்தை வெளியிட்டுள்ளோம்.  படத்தை பார்த்து  உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

படம்  உங்கள் பார்வைக்கு..

https://www.youtube.com/watch?v=5z_7NZrJMk4

THE HEADMATE - SHORTFILM

 

3 comments :

 1. வணக்கம்
  பிள்ளைகளின் ஆர்வத்திற்கு எனது பாராட்டுக்கள்... மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. காணோளி கண்டு ரசித்தேன் அருமை
  முடித்தவிதம் மனம் கவர்ந்தது
  (குறிப்பாக அந்த வாசகம் )
  தொடர நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. சூர்யா பாரதிக்கு வாழ்த்துக்கள் ..உற்சாகப்படுத்திய உங்களுக்கும் . உங்களின் இன்னொரு பரிமாணத்தை உணர உதவிய முகநூலுக்கு நன்றிகள் .

  ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......