PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, October 30, 2010

நாய் படுத்தும் பாடு.

 நாங்கள் எங்கள் வீட்டில்  எப்போதும்  வளர்ப்பு மிருகங்கள் வளர்த்துவதில்லை...
அது கொடுக்கும் இம்சைகளை  நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்... கண்கூடாகக் கண்டுமிருக்கிறோம்.
சிலர் நாய் வளர்ப்பதைப் பார்த்தால்  பொறாமையாக இருக்கும்.  அதுக்கு அவர்கள் கொடுக்கும் செல்லம் என்ன....முத்தம் என்ன...அதை அவர்கள் வீட்டுக்குள் விட்டு...அது மட்டும் இல்லாமல் படுக்கையில் கட்டிப்பிடித்து தூங்குவது வரை.....ராஜவாழ்க்கை வாழும்.




இப்படித்தான் எனது நண்பர் ஒருவரின்  15 வயது மகன் ஆசைப்பட்டானே என்று ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்தார். அது பண்ணிய அலம்பல்களைப் பற்றி அவர் சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது.
அது கொஞ்சம் வளர்ந்த குட்டியாக இருந்தபோதே ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தார்.

  தினமும் எட்டு மணி வரை தூங்கும் அவரது தூக்கம்  அது வந்ததிலிருந்து காலை ஆறு மணி வரைதான் ஆனது .  அதை காலையில் எழுப்பி வெளியே சிறிது தூரம் நடத்திச் சென்று கக்கா, உச்சா போன்ற காலைக் கடன்களை கழிக்க வைத்து கூட்டி வரவேண்டியது இவரது வேலை. அதுவோ புது இடம் என்பதால் ஜாலியாக வரும்போதுதான் போகும்.  அதன் பின்னாடி ஓடி ஓடி இவருக்கே கக்கா வந்துவிடும். பிறகு ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீடு வரும்போது ஒரு மணி நேரம் ஆகிஇருக்கும்.

பிறகு அவரது மனைவியின் வேலை ஆரம்பித்துவிடும்.  அதற்க்கு தேவையான உணவுகளை சமைத்து போடுவது அவருக்கு பெரிய வேலையாக இருந்தது.  அது எதை விரும்புகிறது என்று கண்டுபிடிப்பதற்க்கே ஒரு மாதம் ஆகி விட்டது.  எதைப் போட்டாலும் திங்க மறுக்கும்.  பையனுக்கு என்ன கொடுக்கிறோமோ அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும்.  ஒரு வழியாக நூடுல்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று தெரிய வந்தது.  அதுவும் சூடாக வைத்தால்தான் சாப்பிடும்.  சூடு இல்லையென்றால் ஒரு நாளானாலும் சாப்பிடாது.  சாப்பிடும்போது சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே நிற்கவேண்டும்.  கொஞ்சம் விலகினாலும் குரைக்கும்.  அவரது கணவருக்கு கூட பக்கத்தில் இருந்து பரிமாறும் வழக்கம் அவரிடம் இல்லை.  ஆனால் இந்த நாய் படுத்தும் பாடு சொல்லி மாளாது. அதே மாதிரி சாதாரண குடி  தண்ணீர் ஊற்றினால் குடிக்காது.  எல்லோரும் குடிக்கும் bisleri வாட்டர் ஊற்றினால்தான் குடிக்கும்.  அதற்கு வாரம் மூணு முறை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டவேண்டும்.  பாத்ரூம் சுத்தமாக   இருந்தால் மட்டுமே உள்ளேயே வரும்.  வாசனை பவுடர் வேறு.  எப்படியும் மாதம் நாலாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை செலவு வைத்துவிடும்.

இரவு இவர் வரும் வரை  காத்திருக்கும்.  வந்துவிட்டால் பழகி பத்து வருஷம் ஆன மாதிரி குரைத்துவிட்டு இவர் மடி மீது ஏறி படுத்துக்கொள்ளும்.  இவர் முதுகை தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் மெதுவாக தூங்கிவிடும்.  இது தினமும் நடக்கவேண்டும். இவர் வர தாமதம் ஆனாலும் தூங்காமல் காத்துகொண்டிருக்கும்.


அதை மாதம் ஒருமுறை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவது அவரது வேலை.  டாக்டரும் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன ஊசி போடுவது என்று ஒரு பைலே போட்டு கொடுத்திருக்கிறார்.  பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி விபரத்தை ஒரு அட்டையில் எழுதிக்  கொடுப்பார்களே அப்படி. ஒருமுறை போய் வந்தால் 500 ரூபாய் கழண்டுவிடும். அதுபோக அது விளையாட பிளாஸ்டிக் எலும்புத்துண்டு, பந்து என்று செலவு வேறு.

ஒருநாள் காலை அசதியில் கொஞ்சம் தூங்கிவிட்டார்.... அவரது மனைவி அவசரமாக அவரை எழுப்பினார்.எழுந்து பார்த்தால் நாடு ஹாலில் கக்கா போய் இருந்தது. அதை திட்டியபடியே எழுந்து அடிக்க ஓடினார். அது அவருக்கு தண்ணி காட்டிவிட்டு ஓடிவிட்டது.
 "அதை விரட்ட உங்களை எழுப்பலை....  இடத்தை சுத்தம் பண்ணத்தான் எழுப்பினேன்." -என்று அவர் மனைவி சொன்னபோது தலை சுற்றி கிழேயே விழுந்துவிட்டார். என்ன செய்ய விதியை நொந்து கொண்டு சுத்தம் செய்தார்.

எல்லா வீடுகளிலும் யாராவது தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் வந்தால் அந்த வீட்டில் உள்ள நாய் உள்ளேயே விடாது.  குரைத்து அதகளம் பண்ணிய பிறகு வீட்டுக்காரர் நசுங்கிய சொம்போடு வந்து பஞ்சாயத்து பண்ணிய பிறகே உள்ளே அனுமதிக்கும். ஆனால் இது மற்ற நாய்களைப் போல வீட்டுக்கு யார் வந்தாலும் குரைக்காது.   மாறாக அவர்களை போன ஜென்மத்தில் பழகிய மாதிரி அவர்களோடு பழகும்.   திருடனே வந்தாலும் அவனது காலை காலை  சுற்றி வந்து கல்லாப் பெட்டியை காட்டி கொடுக்கும்.  மாறாக இந்த வீட்டுக்காரர்கள் இவரோ, இவரது மனைவியோ, அல்லது பையனோ வெளியே போய் விட்டு உள்ளே  வந்தால் ஊரே அதிரும்படி ஐந்து நிமிடம் குரைக்கும்.

இதைவிட  பெரிய விஷயம் என்னவென்றால்.....பக்கத்துக்கு வீட்டிற்கும் இவர்களுக்கும் ஒத்து வராது.  பக்கத்து வீட்டம்மாவுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி. எப்போதும் ஜாடையாக திட்டிக்கொண்டே இருப்பாள்.  நம்ம வீட்டம்மாவோ எந்த வம்பு தும்புவுக்கும் போகாதவர். இவர் கதவை சாத்திவிட்டு ஒன்றும் கொண்டுகொள்ளாமல் இருந்துவிடும் குணம்.  இவர்கள் நாய் வாங்கியதும் போட்டிக்கென்று அவரும் நாயை வாங்கி வளர்த்தார்.  அது எப்போதும் யார் வந்தாலும் வராவிட்டாலும் குரைத்துக் கொண்டே இருக்கும்.   அது வந்ததிலிருந்து அந்தம்மா குரைப்பதை நிறுத்திவிட்டார்.  ஆனால் நம்ம நாயோ எதிர்ப்பாட்டு மாதிரி ஒரு எதிர்க்குரைப்பு கூட குரைப்பதில்லை என்று இவரது மனைவிக்கு தீராத மனக்குரை ஸாரி மனக்குறை உண்டு. பதிலாக அந்த நாயோடு இது ஒரு அட்டாச்மென்டோடு பழகியதில் காதல் படத்து தகராறு மாதிரி அருவா கம்போடு மோதுகிற சூழ்நிலை வந்தது.

திடீரென்று ஒருநாள்  அது கத்திக் கொண்டே இருந்தது.  என்னவென்று தெரியாமல் டாக்டரிடம் அழைத்துச் சென்று ஒரு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தார்கள்.  ஆனால் காரை விட்டு இறங்கும்போது அது இறந்திருந்தது.  என்னவென்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் ஒரு களை இல்லையாம்.  இன்னொரு நாய் எடுத்து வளர்த்தலாம் என்றிருக்கிறேன் என்று அவர் சொன்னபோது எனக்கு கஷ்டமாய் இருந்தது.   நாய் வளர்த்துவதற்க்கு பதிலாக ஒரு அனாதைப் பிள்ளையை எடுத்து வளர்த்தலாமே என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே விழுங்கி விட்டேன்.

3 comments :

  1. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரியம்!

    ReplyDelete
  2. உண்மைதாங்க...

    வளர்த்துப்பார்த்தவங்களுக்குத் தான் அதன் துன்பங்கள் புரியும்..

    எனக்குத் தெரியுங்க!!

    ReplyDelete
  3. உண்மை தான். கிராமத்து வாழ்க்கையில் இந்த நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றது.

    தீபாவளி வாழ்த்துகள் நண்பா.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......