PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, August 6, 2011

தமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்.....முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு, முதல் உதை... இப்படி அவரவர் வாழ்க்கையில்(சேரன்னு நினைப்பு) ஆயிரம் முதல்கள் இருக்கும்.
அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.
அதைப்பற்றி நான் எழுதலாம் என்று இருக்கிறேன்....கொஞ்சம் சுய சொறிதல்தான் ...இருந்தாலும் நம்ம வரலாறு முக்கியமில்லையா, கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.. வேறு வழியில்லை.

அதற்குமுன் எனது வரலாறு..(புவியியல், இரசாயனம்,பௌதீகம்)!

எனது சொந்த ஊர் திருப்பூர் என்றாலும் நான் எனது 13 வயது  வரையில்  வளர்ந்தது பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் என்ற அழகான கிராமத்தில்தான்.உங்களில் சில பேருக்கு தெரிந்திருக்கலாம்... இங்கு ஒரு ஜமீன்தார் அரண்மனை இருக்கிறது..இது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்,

இளையராஜா அடிக்கடி வந்துபோகும் கோடீஸ்வர சுவாமிகள் நினைவாலயம் உள்ள இடம். நாங்கள் கோடீஸ்வர சுவாமிகளின்  செல்லப் பிள்ளைகளாக வலம் வந்த காலம்.  அது ஒரு தனிக் கதை.

நான் அரசுப் பள்ளியில் நான்காவது படித்துக்கொண்டிருந்த சமயம். எனக்கு சினிமா என்றாலே என்னவென்று தெரியாது.  அப்போது பக்கத்துக்கு ஊரில் தமிழ்நாடு (அநேகமாக எல்லா ஊர் டெண்டு தியேட்டர் பெயரும் இதுவேதான்) என்றொரு டூரிங் டாக்கீஸ் இருந்தது.  என்னோடு படிக்கும் நண்பனின் உறவினர்தான் அதில் ஆபரேட்டர் .  அந்த செல்வாக்கில் அவன் எல்லாப் படங்களையும் பார்த்து விடுவான். அது மட்டும் இல்லாமல் அடுத்தநாள் பள்ளிகூடத்தில் கூட்டம் போட்டு அந்த படத்தை டைட்டிலில் இருந்து சுபம் கார்ட் போடும் வரை விலா வாரியாக விவரிப்பான். எம்ஜியார் நம்பியார் சண்டையை அப்படியே நடித்து காட்டிவிடுவான்.  அதை நாங்கள் எல்லோரும் வாயைப் பிளந்தபடி (கொசு போய் குடும்பம் நடத்திவிட்டு வெளியே வரும்) கேட்டுக்கொண்டு இருப்போம்.
எம்.ஜி.ஆர். அணி , சிவாஜி அணி என்று பிரிந்து சண்டை போட்டுகொண்டிருப்போம்.

எப்படியாவது ஒரு சினிமாவாவது பார்த்துவிடவேண்டும் என்று அம்மன் கோவிலில் காசு வெட்டி  சபதம் எடுத்துக்கொண்டேன்.   அம்மாவிடம் கேட்டால் உனக்கெல்லாம் எதுக்குடா சினிமா என்று புறந்தள்ளினார்கள்.  அதற்காக இரண்டு நாள் பாபா ராம்தேவ் கணக்காக உண்ணாவிரதம், தூங்காவிரதம், எடுபிடி வேலை செய்யா விரதம் என பல வி(ர)தங்களில் போராட்டம் செய்து கடைசியில் படிந்தார்கள்.   உடனே கை கால் முகம் கழுவி நெற்றி நிறைய விபூதியிட்டு அண்ணனோடு வெற்றிப் பெருமிதத்துடன்  'உலகம் சுற்றும் வாலிபன்' படம் பார்க்க போனேன்.

தியேட்டருக்கு போனபிறகுதான் அது வேறு உலகம் என்று புரிந்தது.  கொடிகளும், தோரணங்களும் கூட்டமும் மிரள வைத்தன. இருபத்தைந்து பைசா கொடுத்து தரை டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே போனோம்.  முன்னாடி போய் மணலை குவித்து அதன் மீது உட்கார்ந்து கொண்டோம்.  பீடி வாசனை தியேட்டர் முழுவதும் நிறைந்திருந்தது.
படம் போட்டு எம்ஜியார் வந்ததும் விசில் சத்தம் தியேட்டரின் கூரையைப் பிய்த்தது. அதுவே தனி உற்சாகமாக இருந்தது.

அடுத்த நாள் நான் எம்ஜியார் ரசிகனாக பதவியேற்றுக் கொண்டு தனியாக ஒரு கூட்டம் சேர்த்து கதை அளக்க ஆரம்பித்தேன்.  அப்போது தீப்பெட்டி பண்டல்களில் விதவிதமாக  எம்ஜியார் படம்  வரும்.  மாமாவின் மளிகைக்  கடையில் கெஞ்சி வாங்கி வந்து எனது வீட்டின் ஒரே ஒரு தட்டிக் கதவில் ஒட்டி வைப்பேன்.

அதற்குப் பிறகு எனக்கு கொடுக்கப்படும் ஐந்து பைசா, பத்துப் பைசா காசுகளை சேர்த்து நாலணா ஆனபிறகு யாராவது சினிமாவுக்குப் போனால் அவர்களோடு ஒட்டிக்கொண்டு போக ஆரம்பித்தேன்.  அடிக்கும் மேற்க்கத்திக் காற்றில்  மருத மலை மாமணியே முருகையா என்ற பாட்டை  கேட்டால் தியேட்டர் திறந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.  அந்த பாட்டைக் கேட்டவுடன் நமநமவென்று அரிக்க ஆரம்பித்துவிடும்.

அப்போது எனக்கு அந்த வயதிலேயே  பார்ட் டைம் வேலையொன்று  கிடைத்தது.   அந்த ஊரில் புதிதாக வந்த பேச்சிலர் குடும்ப கட்டுப்பாடு அலுவலர் ஒருவருக்கு காலையில் குளிப்பதற்காக தண்ணீர் காயவைத்துக் கொடுக்கும் வேலை.  மாதம் இரண்டு ரூபாய் கொடுப்பார்.  இடையில் அவருக்கு ஏதாவது எடுபிடி வேலை செய்து கொடுத்தால் ஐந்து பைசா பத்து பைசா கொடுப்பார்.  அவருடைய ரூம் அந்த ஊரின் கேளிக்கை கிளப்-ஆக உருவெடுத்தது.  அந்த ஊரின் வாத்தியார்கள், படித்த பெரிசுகள் எல்லாம் பொழுதைக் கழிக்கும் இடமாக அது இருந்ததால் எனக்கு வேலை அதிகமானது.  சீட்டாட்டம் ஆடினால் எனக்கு டீ வாங்கி வரும் வேலை.  எப்படியும் அந்த மாதிரி நாட்களில்   இருபத்தைந்து பைசா கொடுப்பார்கள்.   எங்களது வீட்டின் வறுமையை ஓரளவு இது விரட்டியது.  மிஞ்சிய காசுகளில் எப்படியும் படம் பார்த்துவிடுவேன்.

படத்துக்கு தனியாக போக ஆரம்பித்தேன்.  போவது ஒன்றும் பிரச்சினையில்லை  படம் விட்டு வரும்போதுதான் பிரச்சினை.  தியேட்டருக்கும் எனது வீட்டுக்கும் நாலு மைல் நடக்க வேண்டும். ஊரே அடங்கி இருக்கும் அந்த ஒன்பது மணி இருட்டில் எப்படியும் மெயின் ரோடு வரை யாராவது துணை இருப்பார்.  மெயின் ரோட்டில் இருந்து வீடு வரை யாரும் இருக்க மாட்டார்கள்.  மூன்று புளிய மரம்தான் எனக்கு இருக்கும் ஒரே பயம்.  புளிய மரத்தில் பேய் எனக்காக உட்கார்ந்து காத்திருப்பதாக எனது கற்பனை. கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவந்து வீட்டிற்குள் புகுந்துவிடுவேன். நெஞ்சம் பட படவென்று அடித்துக்கொள்ளும்.

இப்படித்தான் வீட்டில் அனுமதியின்றி பத்ரகாளி படம் பார்த்துவிட்டு வந்தேன்.  படமே ஒரு டெரர்- ஆகத்தான்  இருக்கும்.  படத்தின் கதாநாயகி வேறு தலையை விரித்துப்போட்டு பேயாட்டம் ஆடியிருப்பார்.  மெயின் ரோடு வரை ஒரு துணை இருந்தது.  அதற்கு மேல் வழக்கம் போல் புளியமரத்து நண்பனிடம் இருந்து தப்பிக்க கூடுதல் பயத்துடன் கண்ணை மூடி ஓடிப் போய் கதவை திறந்து நின்றால் தலையை விரித்துப் போட்டு கையில் பிரம்புடன் அம்மா... அவ்வளவுதான் படத்தில் பார்த்த பத்ரகாளி ஆட்டம் நிஜத்தில் நடந்தது.
புண்ணிய பூமி என்றொரு சிவாஜி படம்.  அங்குதான் சூட்டிங் நடந்தது.  சிவாஜியை அப்போதுதான் முதன் முதலில் நேரில் பார்த்தது.  தொந்தியை இறுக்கிக் கட்டி பெல்ட் போட்டு மிலிடரி ட்ரெஸ்-ல் ஒரு தீவிரவாதி போல் நடித்திருப்பார்.  வாணிஸ்ரீ ஓல்ட் கெட்டப்-ல் நடித்திருப்பார். நம்பியார்தான் வில்லன்.


அரண்மனை திண்ணையில் நம்பியார் v.k. ராமசாமியுடன் ரொம்ப சிம்பிளாக பேசிக்கொண்டிருந்தார்.  அவர் அருகில் போகவே எங்களுக்கெல்லாம் பயம்.  தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தோம்.  அப்போது என்னை தம்பி இங்கே வா என்று  அருகில் அழைத்தார்.    அவ்வளவுதான் பின்னங்கால் பிடரியில் பட ஓடிப்போய் வீட்டுக்குள் புகுந்துகொண்டேன்.  பிறகு இரண்டு நாள் சூட்டிங் பார்க்க போகவேயில்லை.  நம்பியார் என்னை தேடிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் என்னை கலாய்த்தார்கள்.

கரையெல்லாம் செண்பகப் பூ படம்.  சுஜாதா அவர்கள் வர்ணித்திருந்த ஜமீன் பங்களாவும் கிராமும் எங்களது கிராமம்தான்.  பிரதாப் போத்தன் கித்தாரோடு ஒரு நாட்டுப் புறப்பாடலுக்கு அங்கு சூட்டிங் நடந்தது.  அன்று நான் சூட்டிங் பார்க்க போகவில்லை.  பிரதாப் போத்தனோடு ஆட அந்த ஊர் சிறுவர்கள் சிலரை தேர்வு செய்து காஜா செரீப்போடு ஆட வைத்திருக்கிறார்கள்.


 கசாப்பு கடைகாரர் பையன் மாரியப்பனும் அதில் ஒருவன். அதன் பின் அவன் செய்த அளப்பரைகள் இருக்கிறதே..... அப்பப்பா அவனே ஹீரோவாக நடித்த மாதிரி அலட்டிக் கொள்வான்.
அன்று மட்டும் நான் சூட்டிங் பார்க்கப் போயிருந்தால் இன்று தமிழ் சினிமா உலகில் ஒரு ஸ்டார் உருவாகி இருப்பேன்.   தமிழ்நாடு செய்த புண்ணியம் அவ்வளவுதான். 




4 comments :

  1. நான் ரொம்ப கஷ்டபட்டு முதல் தடவை தனிய தேட்டர்ல பார்த்த படம் ஆட்டோகிராப்,
    அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நான் ரொம்ப கஷ்டபட்டு முதல் தடவை தனிய தேட்டர்ல பார்த்த படம் ஆட்டோகிராப்,
    அருமையான பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஆட்டோ கிராப் அனேகம பேருடைய நினைவுகளை தோண்டிப் பார்த்த படம்... நன்றி கிருபா...

    ReplyDelete
  4. //அன்று நான் சூட்டிங் பார்க்க போகவில்லை//
    இது போன்ற செயல்கள் தான் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைக்கிறது.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......