PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, September 22, 2011

ஒரு வீடும் ஒரு உயிரும்!

னக்கு கல்யாணம் ஆகும்போது வாடகைக்கு ஒரு வீட்டில் குடி இருந்தேன்.  அந்த வீட்டுக்காரர் ஒரு முதியவர். அவருடைய மகன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். முதியவருக்கு மனைவி இல்லை.  தனியாகவே சமையல் செய்து கொள்வார்.  அவருடைய மகள்கள் இருந்தபோதும் அங்கு அதிகமாக செல்லமாட்டார்.  அவருடைய மனைவி நினைப்பிலும் மகன் வந்து தன்னை காப்பாற்றுவான் என்ற நினைப்பிலும் வாழ்ந்து வந்தார்.

அங்கு குடி இருந்த வரையில் அவர் எங்களோடு மிகவும் பாசமாகவே இருப்பார்.  எனது மனைவியும் அவரை நன்றாக கவனித்துக் கொள்வார்.  அவர் என்னை சொந்த மகன் போலவே நினைப்பதாக சொல்வார். நானும் அப்படியே அவரை எனது தந்தையாகவே நினைத்தேன்.

அப்போது என் கையில் கொஞ்சம் பணம் இருந்ததால் முதன் முதலில் நான் ஒரு வீடு வாங்கலாம் என்று முடிவுக்கு வந்தேன்.
இந்த முடிவு அவருக்கு பிடித்ததாகத் தெரியவில்லை.  அப்போது எனது மனைவி பிரசவத்துக்காக பிறந்த வீடு சென்று இருந்தாள்.
இந்த சமயத்தில் நான் இருந்த வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீட்டை விலை பேசி முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்தோம்.

இது தெரிந்ததும் வீட்டுக்காரர் உடனே வீட்டை எப்போது காலி செய்வீர்கள் என்று கேட்க்க ஆரம்பித்துவிட்டார்..
நான் வாங்கியிருந்த வீடு ஒரு 10 x 10 அளவிலான ஒரு அறையும் அதைவிட சின்னதான சமையலறையும் மட்டுமே கொண்டது.   அதில் நான், எனது அம்மா, மனைவி மற்றும் பிறக்கப் போகும் குழந்தைக்கும் போதாதாகையால் இன்னொரு அறையும்  இருக்கிற காலியிடத்தில் கட்டிய பிறகு போய்விடலாம் என்றிருந்தோம்.

ஆனால் அவ்வளவு நாள் (சுமார் இரண்டு வருடங்கள்) அன்யோன்யமாய் பழகி இருந்தும் அந்த முதியவர் வீட்டை உடனே காலி பண்ணச் சொல்லிவிட்டார்.  இந்த சமயத்தில் என் மனைவி ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்தார்.  அவசர அவசரமாக வீடு கிரையம் முடிந்துவிட்டது.
இந்த சமயத்தில் வீடு காலி பண்ணியே ஆகவேண்டும் என்று ஒற்றை காலில் நிற்க்கிறார்.
குழந்தையை எடுத்து வரவேண்டும்,  இன்னொரு அறை கட்டியாக வேண்டும்.  எதற்கும் அவகாசம் கொடுக்கவில்லை அவர்.  ஒரே நாளில் இரவோடு இரவாக புது வீட்டுக்கு எந்த விதமான பூஜை எதுவும் போடாமல் நானும் எனது அம்மாவும் மட்டும் அந்த புது வீட்டுக்கு போயாயிற்று.

அவருடைய போக்கு எங்களுக்கு புரியாததாகவும்  மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும்  இருந்தது.  அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று இன்றளவும் புரியவில்லை.

அந்த வீட்டுக்கு வந்ததும் ஒரு மேஸ்திரியை பிடித்து பேசி வீட்டு வேலையை ஆரம்பித்தோம். அது முடிய மூன்று நான்கு மாதங்கள் பிடித்ததால் எனது மனைவி இருப்பு தாங்காமல் பிடிவாதம் பிடித்து குழந்தையை எடுத்துக்கொண்டு அரைகுறை வீட்டுக்கு வந்து விட்டார்.

 பிறகென்ன கொத்தனாரிடம் வெகுவாக சண்டை பிடித்து அந்த வீட்டு வேலையை முடிக்க வேண்டியாகி விட்டது.  பணப் பற்றாக் குறை வேறு.  சொந்த பெரியப்பவிடம் ரூபாய் இருபதாயிரம் கடன் கேட்டதற்கு ப்ரோ நோட்டில் கையெழுத்து வாங்கிய பிறகே பணம் கொடுத்தார்.  மாதா மாதம் வட்டி தவறாமல் கட்டவேண்டும்.

இந்த வீடு எனக்கு பலரின் முகத் திரையை கிழித்து காட்டியது.  எப்படியோ ஒரு வழியாக வேலை முடிந்து அப்பாடா என்று  கிரகப் பிரவேசம் நடந்தது.

அதன் பிறகு எனது மகன் தவழ்ந்து விளையாடிய வீடு அதுவானது.  அந்த வீட்டில்தான் எனது இரண்டாவது மகனும் பிறந்தான்.  இந்த வீட்டில் இருந்துதான் எனது முதல் பையனை பள்ளிக்கு போக ஆரம்பித்தான்.  இங்கிருந்துதான் அருகிலேயே ஒரு காலி இடம் வாங்கினேன்.  தொழிலும் மிகச் சிறப்பாக இருந்ததும் இங்கே இருந்த போதுதான்.

 எனக்கென்று எந்தவிதமான சென்டிமென்ட் இருந்ததில்லை.  அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை.  ஆனால் இந்த வீடு விசயத்தில் அது அத்தனையும் உடைந்து போனது.



கொஞ்ச நாளில் அந்த பழைய வாடகை வீட்டு முதியவர் அவருடைய வீட்டுக்குள் இரவு படுத்து இருந்தவர் காலையில் எழும்போது இறந்து இருந்தார்.  எப்படி இறந்தார் என்று யாருக்குமே தெரியவில்லை. மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

வாங்கிய காலி இடத்தினில் எனக்கென்று ரசித்து ரசித்து ஒரு வீடு கட்டினேன்.  அதில் குடியேறினோம்.  இருந்த வீடு பழைய வீடு ஆனது.  அதை வாடகைக்கு விட்டோம்.  

இப்போது ஒரு நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அந்த வீட்டை விற்க வேண்டிய சூழல் வந்திருக்கிறது.  எனது மனைவியிடம் சொன்னேன்.

"அந்த வீட்டை விற்று விடலாம்"

இரண்டு நாள் என்னிடம் பேசவேயில்லை.

பிறகு நானே கேட்டேன்.

"என்ன ஒன்னும் சொல்லவே மாட்டேன்கிற?"

என்னை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து

"அது வெறும் வீடு இல்லங்க....அதுக்கும் உயிர் இருக்கு!  எங்க உசிரும் அதுலதான் இருக்கு!"-என்று சொன்னாள்.

எனக்கு கொஞ்சம் நெஞ்சு வலித்தது மாதிரி இருந்தது.


  

8 comments :

  1. ஒவ்வொரு வருக்கும் சொந்த வீடு பற்றி எவ்வளவு கனவுகள் கதை சொல்லி இருந்த விதம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. நன்றி அம்மா... அந்த வீட்டில் சொல்லப்படாத கதைகள் இன்னும் நிறைய இருக்கின்றன.

    ReplyDelete
  3. உளியடிப்பட்டு உருவாகும் சிலை போல மனதாலும் உடலாலும் வ்லி பட்டு உருவாக்கிய சின்ன வீட்டில்
    கம்பீரமும் காதலும் உயிரும் வானலாவ உயர்ந்து நிர்கிரது.
    ஆசைபடகூடாது என்று ஆசைப்பட்டவர் புத்தர்.செண்டிமெண்டில் நம்பிக்கை இல்லதவ்ரின் செண்டிமெண்ட் அழகான உருவமாக உயர்ந்து நிர்கிரது.

    ReplyDelete
  4. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

    ReplyDelete
  5. தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் வரும் முகவரியில் வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/10/9102011.html

    ReplyDelete
  6. @லட்சுமி மேடம்... நன்றி. எண்ணிலடங்கா கதைகள் இன்னும் உள்ளன.

    ReplyDelete
  7. @கருணா நல்ல கருத்து... எழுத்துப் பிழைகள் மன்னிக்கப் படுகின்றன.

    புத்தரெல்லாம் உதாரணம். எங்கேயோ போயிட்டீங்க.

    ReplyDelete
  8. @thirumathi bs sridhar.. நன்றி மேடம். எளியோனையும் கடைக்கண் பார்வை பார்த்தீர்களே... நன்றி.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......