உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது. எல்லா ஆட்டங்களின் லைவ் பார்க்கவில்லைஎன்றாலும் சில முக்கியமான ஆட்டங்களின் லைவ் நான் பார்த்துவிடுவது உண்டு. சரியாக இரண்டரை மணிக்கு அலாரம் வைத்து படுத்துவிட்டு அலாரம் அடித்தவுடன் எழுந்து நானும் என் மகன் நவயுகன் இருவரும் கொட்டகொட்ட பார்ப்போம். சனியன்று இரவு பிரேசில்-நெதர்லாந்து ஆட்டத்தை பார்த்திருந்தோம்.
இறுதிப் போட்டி ஞாயிறு அன்று இரவு 12:30 மணிக்கே ஆட்டம் ஆரம்பம். யுகன் எழுப்பிவிடுங்கள் என்று சொல்லி படுத்துவிட்டான். ஆட்டம் ஆரம்பிக்கும்வரை என்ன செய்வது? சரி ஒரு படம் பார்க்கலாம் என்று ஹார்ட் டிஸ்கை திறந்தபோது GOAL - THE DREAM BEGINS என்கிற இந்தப் படம் கண்ணில் பட்டது. இன்றைய தினத்துக்கு மிகவும் பொருத்தமான படம் - பார்த்துவிடுவோம் என்று பார்க்க ஆரம்பித்தேன்.
SANDIAGO MUNEZ எனும் இளைஞனின் கதை இது. வறுமை ஒன்றையே சொத்தாக கொண்ட இவன் ஒரு கால்பந்து பைத்தியம். அப்பாவின் தோட்ட வேலைகளுக்கு அவ்வப்போது உதவி செய்தும், ஒரு சைனீஸ் உணவகத்தில் பகுதிநேரமாக வேலை செய்துவரும் இவனின் மெயின் வேலை சளைக்காமல் கால்பந்து விளையாடுவது. இவனது அணியில் இவன்தான் கதாநாயகன். ஆனால் வீட்டின் வறுமை இவனை மேலே விடாமல் கீழேயே அழுத்துகிறது. இவனது அப்பாவுக்கோ இவனின் கால்பந்து மோகம் கொஞ்சம் கூட பிடிப்பதில்லை. அவனின் ஒரே ஆறுதல் அவனுக்கு சப்போர்ட் பண்ணும் அவனது பாட்டி மட்டுமே.
முனீஸ் ஒருநாள் நியுகாசல் யுனைடேட் (NEWCASTLE UNITED) அணியின் முன்னாள் பிளேயர் GLEN RAY-ன் கண்களில் படுகிறான். அவர் தான் விளையாடிய அணியில் சேர்த்துவிடுகிறேன் இங்கிலாந்து வந்துவிடு என்கிறார். இங்கிலாந்து போவதற்கோ அவனிடம் இருப்பது ஷூவுக்குள் சேர்த்து வைத்திருக்கும் சொற்ப பணம் மட்டும்தான். இருந்தபோதிலும் அவனது அப்பா அனுமதிக்க போவதில்லை. குழப்பத்தில் இருக்கும் முனீஸ் பாட்டியிடம் சொல்ல 'யோசிக்கவே செய்யாதே.. உடனே கிளம்பு' என்கிறாள்.
ஆனால் ஷூவுக்குள் இருந்த பணத்தை அப்பா எடுத்து கார் ரிப்பேருக்கு கொடுத்துவிடுகிறார். மனம் தளராமல் நகைகளை விற்று பாட்டி கொடுத்த கொஞ்சம் பணத்தை வைத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து இங்கிலாந்து செல்கிறான்.
அவன் ஒரு ஆஸ்துமா நோயாளி, இதை மறைத்து, அணியில் இருக்கும் சீனியர்களின் ஈகோவை வென்று, புது இடத்தின் அந்நியத் தன்மையை வென்று, அப்பாவின் மரணத்துக்கு கூட செல்ல முடியாமல் கடுமையாக போராடி அணியில் இணைகிறான். அதற்குள் அவனுக்கு வரும் இடையூறுகள் அதை அவன் வெல்லும் ஒவ்வொரு கட்டமும் சுவராஸ்யம் நிறைந்தது.
இதற்குள் ஜெர்மனி-அர்ஜென்டினா இறுதி ஆட்டம் தொடங்கிவிட படத்தையும் ஆட்டத்தையும் விட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். படமும் சுவராஸ்யமாக போய்க்கொண்டிருந்தது. ஆட்டமும் அப்படியே திரில் குறையாமல் இரு அணிகளும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் ஒரு கோல் கூட போடாமல் விளையாடிக்கொண்டிருந்தனர்.
முநீஸ் |
கோட்சே |
படத்தின் இறுதிக்காட்சி. எப்படியோ தக்கிமுக்கி தன்னுடைய பெர்பார்மான்ஸ் மூலம் A அணியில் இடம்பிடித்து விடுகிறான், அதுவும் மாற்றுவீரராக(SUBSTITUTE). அது மிக முக்கியமான ஆட்டம். அந்த ஆட்டத்தில் ஜெயித்தால்தான் அடுத்து நடக்க போகிற சாம்பியன்ஸ் லீகில் இந்த அணி கலந்து கொள்ள முடியும். எதிரணி HALFTIME-க்குள்ளேயே இரண்டு கோல்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறது. வெளியே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை உள்ளே இறக்கிவிடுகிறார் பயிற்சியாளர். முநீஸ் இறங்கியதும் கடைசி நிமிடத்தில் இரண்டு கோல்கள அடித்து சமன் செய்கிறான். வெல்வதற்கு இன்னும் ஒரு கோல் தேவை. இஞ்சுரி டைம் மட்டுமே உள்ளது. அப்போது ஒரு FREEKICK வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வாய்ப்பு முனீஸ் வசம வருகிறது. எல்லோரும் டென்சனுடன் இருக்க முனீஸ் அடிக்கிறான். பந்து கோலியை ஏமாற்றி வலையில் விழுகிறது. அந்த கோல் அவனது எதிர்காலத்தை உறுதி செய்கிறது. அந்த கோல் உலகத்தை திரும்பிப்பார்க்க வைக்கிறது. அந்த கோலை இறந்துபோன அவனது அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறான். படம் இங்கு நிறைவடைகிறது.
இந்தப் படத்தை பார்த்துவிட்டு டிவியை பார்க்கிறேன். அங்கு அனல் தெறிக்கும் ஆட்டம் நடைபெற்றுகொண்டிருக்கிறது. புல் டைம் முடிந்து யாரும் கோல் போடாமல் எக்ஸ்ட்ரா டைம் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது ஜெர்மனி அணியில் ஒரு மாற்றம் செய்கிறார்கள். முல்லர் வெளியே வர அதுவரை களம் இறங்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரியா கோட்சே என்கிற SUBSTITUTE-ஐ களம் இறக்குகிறார் பயிற்சியாளர். அவர் இறங்கி கொஞ்ச நேரத்தில் 113வது நிமிடத்தில் அந்த அதிசயம் நடந்தது. தன் சக நண்பன் ஆண்ட்ரே கொடுத்த பாசில் பந்தை நெஞ்சில் வாங்கிய கோட்சே அதை காலுக்கு நகர்த்தி கொல்போஸ்டின் சைடில் இருந்து பலமாக உதைக்க பந்து அர்ஜென்டினா கீப்பர் ரோமரியொவை ஏமாற்றி உள்ளே சென்றது. அந்த நிமிடத்தில் கோட்சே என்கிற அந்த மாற்றுவீரன், தன்னுடைய 22 வயதில் ஹீரோவானான். உலகக்கோப்பை வரலாற்றில் மாற்றுவீரரக வந்து வெற்றி கோலை அடித்த ஒரே ஒருவன் என்கின்ற சாதனை அவன் பக்கம் இப்போது.
முநீசும், கோட்சேவும் எனக்கு திரையில் ஒன்றாகவே தெரிந்தார்கள். ஒற்றை உதையில் உலகத்தை அளந்தவனாகவே தெரிந்தார்கள். இதற்கு முன்பு பல கோல்கள் அடித்திருப்பினும் இப்போது உதைத்த அந்த ஒற்றை கோலில் தனது துயரம், தான் பட்ட கஷ்டம அத்தனையையும் சுக்குநூறாக்கி விட்டிருந்தார்கள்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வந்திருப்பதாக சொன்னார்கள். தேடிக்கொண்டிருக்கிறேன் பார்க்க.
இந்தப் படத்தின் சிறப்பு, இதில் நடித்திருக்கும் பிளேயர்ஸ் எல்லோருமே நிஜ ஆட்டக்கரர்களே. நிஜமான ஒரு ஆட்டத்தை நடத்தி அதை அப்படியே படம் பிடித்திருக்கிறார்கள். முனீஸ் ஆக நடித்திருக்கும் Kuno Becker , அற்புதமான நடிகன். இது பார்க்க வேண்டிய படமே.
No comments :
Post a Comment
குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......