ரபீந்திரநாத் தாகூர் எழுதிய கதைக்கு ரிதுபர்னோ கோஷ் திரைக்கதை அமைத்து இயக்கிய படம் இது. கதையின் காலம் 1902-1905. பினோதினி என்கிற இளம் விதவையின் கதை.
பினோதினி(ஐவர்யாராய்) என்கிற பிராமணப்பெண் அழகு தேவதை, அறிவு மிக்க பெண், ஆங்கிலம் கற்றவள், இந்தியாவுக்கு காபி அறிமுகமான சமயம் அது - நன்றாக காபி போடத் தெரிந்தவள். கைவேலைப்பாடுகள் அறிந்தவள். கைமருத்துவம் அறிந்தவள். ஆனால் அல்பாயுசில் போய்விட்ட கணவனால் வெண்ணிற சேலை கட்டும் இளம் விதவையானாள்.
ராஜலட்சுமியம்மாவின் மகேந்திரா என்கிற மருத்துவம் படிக்கிற பையனுக்குத்தான் பினோதினியை முதலில் மணம் பேசினார்கள். ஆனால் அவனுக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லாததால் அது நடக்கவில்லை. அடுத்து வந்த ஒரு வருடத்தில் என்னென்னமோ நடந்துவிட்டது. பினோதினி மணம் முடித்து விதவையானாள். மகேந்திராவுக்கு ஆசாலதா என்கிற பெண்ணோடு கல்யாணம் ஆனது. ராஜலட்சுமி கிராமத்துக்கு சென்றபோதுதான் பினோதினியை பார்க்கிறாள். பெண்கள் காபி குடிப்பது தவறாகக் கருதப்பட்ட காலம். அப்போது பினோதினி காபி தயாரித்து தருகிறாள். கதவை சாத்தி தாழ் போட்டுவிட்டே காபி குடிக்கிறார்கள். அந்த காபி சுவையிலும், பினோதினியின் கைமருத்துவமும பிடித்துப் போக பினோதினியை தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறாள்.
அங்கே ஆஷாவும் அவளும் இணைபிரியா தோழிகளாகிவிடுகிறார்கள். வீட்டில் இருக்கும்போது யாருமே ஜாக்கெட் அணியும் பழக்கமில்லை அந்தவீட்டில். அசட்டுப் பெண் ஆஷாவுக்கு ஆங்கிலம் முதல் ஆலிங்கனம் வரை எல்லாம் கற்றுக்கொடுக்கிறாள். ராஜலட்சுமியம்மாவுக்கு காபி தயாரித்து யாருக்கும் தெரியாமல் கொடுப்பதுமே அவள் வேலை.
அந்த வீட்டின் இன்னொரு பிள்ளை (தத்துப்பிள்ளை) பிஹாரி, அவனும் டாக்டருக்கு மகேந்திராவோடு படிக்கிறான். பிநோதினிக்கு பீகாரியின் மீது ஒரு அன்பு இருந்தபோதிலும் மகேந்திராவின் வலையில் வீழ்கிறாள். தன்னை இழக்கிறாள். இது ஆஷாவுக்கு தெரியவந்து அதிர்ச்சியாகி காசிக்கு சென்றுவிடுகிறாள்.
இதனால் மனம் உடைந்து வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் பினோதினி. பீகாரியிடம் தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவன் மறுக்கவே தன்னுடைய கிராமத்துக்கே செல்கிறாள். அங்கே மகேந்திரா அவளை தேடி வருகிறான். ஆனால் பினோதினி தன்னுடைய காதல் பிஹாரி மீதுதான் என்று சொல்லி அவனை தவிர்க்கிறாள். ஆஷாவைத் தேடி காசிக்கு அழைத்துச் செல்ல சொல்கிறாள். இருவரும் காசிக்கு செல்கிறார்கள்.
ஆஷாவை கண்டுபிடித்தார்களா? பினோதினி பீகாரியோடு இணைந்தாளா? என்பதே மீதிக் கதை. ஜீ டிவியின் சொல்வதெல்லாம் உண்மையில் வருகிற ஒரு பஞ்சாயத்தைப் போன்ற கதைதான் இதுவும். ஆனாலும் கொஞ்சம் புனிதத்தன்மை கூடிவிடுவதால் காவியம் ஆகிறது.
முதலில் ஐஸ்வர்யாராயின் நடிப்பை சொல்லியே ஆகவேண்டும். அந்தக் கண்களில் எவ்வளவு உணர்ச்சிகளைத்தான் அடைத்து வைத்திருக்கிறார். அந்த அப்பழுக்கற்ற முகம் என்னென்ன பாவங்களைத் தருகிறது. அந்த பாத்திரத்துக்கு ஒரு புதிய அர்த்தத்தை தனது நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஏமாந்தாலும் ஒரு பிட்டு படத்தின் கதையைப் போல ஆகிவிடும் ஆபத்து இந்தக் கதையில் இருக்கிறது. ஆனால் தனது நடிப்பின் மூலம் அதை தகர்த்தெறிகிறார். வேறெந்தப் படத்திலும் இந்த அளவுக்கு நடித்திருப்பதாய் தெரியவில்லை. இந்தப் படத்துக்காக சிறந்த நடிகை அவார்டை பெற்றிருக்கிறார்.
2004ம் வருடத்தின் சிறந்த படம் என்று நேஷனல் அவார்ட் பெற்றிருக்கிறது. பல உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.
கலை இயக்குனர் INDRANIL GHOSH. 1900 காலத்தை அப்படியே கண்முன் விரிக்கிறார். அதற்க்கு அவர் எடுத்திருக்கும் PROPERTIES அபாரமானவை. விளக்குகள், நகைபெட்டிகள், குதிரை வண்டி, ஓவியங்கள், என்று மெனக்கெட்டிருக்கிறார். அவருடைய உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.
ஒளிப்பதிவு AVEEK MUHARJI - இது மாதிரியான பீரியட் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை அற்புதமாக செய்திருக்கிறார். காசியின் உண்மையான முகம் இல்லாமல் அதை அழகாக காட்டியதுக்கு அவரின் காமிராவுக்கு நன்றி சொல்லவேண்டும்.
டைட்டில் போடும்போது கொஞ்ச நேர கதையை நகர்த்த காமிராவை மாடிப்படியின் அருகே டாப் ஆங்கலில் மாட்டிவிட்டு நடப்பதை காட்டும் ரிதுபர்னோ கோஷ் என்னும் இந்தப் படத்தின் இயக்குனரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. பல இடங்களில் விரசமாகிவிடக்கூடிய பல காட்சிகளை கையாண்டவிதம் திரை நுணுக்கங்களை கற்றுத்தருகிறது. கையில் ஏற்பட்ட சின்ன வெட்டுக்காயத்துக்கு ஆஸ்பத்திரி போகும் அந்த காட்சி ஒரு சிறந்த உதாரணம். கோஷ் போனவருடம்தான் இறந்தார். அவர் தன்னை ஓப்பனாக ஒரு ஹோம்செக்ஸ் என்று தைரியமாக கூறிக்கொண்டவர். கோஷ் ஒரு திருநங்கை வாழ்க்கையை தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்ததாக சொல்வார்கள்.
CHOKHAR BALI என்றால் கண்ணில் உறுத்தும் மணல் என்று அர்த்தம். பெயரைப்போலவே படமும் கவிதையாய் இருக்கும். பாருங்கள் உங்களுக்கும் பிடித்துப்போகும்-தாகூரை, ஒளிப்பதிவை, இசையை, ரிதுபர்னோ கோஷை, ஆஷாவை, பீகாரியை, பினோதினியை....அழகு கொஞ்சும் ஐஸ்வர்யாராயை...!
No comments :
Post a Comment
குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......