PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, August 8, 2014

Mosayile Kuthira Meenukal (2014) - Malayalam - லட்சத்தீவில் ஒரு காதல்.



லையாளக் கரையோரத்தில் இருந்து மீண்டும் ஒரு வித்தியாசமான படம். இரு காதல் கதைகள்.  இரண்டும் வித்தியாசமான பின்புலத்தில் நடக்கும் கதை.

கோட்டயம் அருகில் பாம்பாடி கிராமத்தில் புத்தன்புரைக்கால் குடும்பத்தில் பதிமூன்று குழைந்தைகள் பெற்ற அந்த பழம்பெறும் கிருஸ்துவ கிழவனுக்கு ஒரே கவலைதான்.  தன்னுடைய சகோதரனைவிட (அவருக்கும் 13 தான்) ஒரு குழந்தையாவது அதிகமாக பெற்றுவிடவேண்டும்.  பல முயற்சிகளுக்குப்பின் 14வதாக பிறக்கிறான் அலெக்ஸ்.  அந்த வீட்டில் அவனைவிட பத்து வயது பெரியவனாக அவனது அக்கா பையன் இருக்கிறான்.  ஊருக்குள் எங்கும் இவனை நம்பர் 14 என்றே கிண்டல் செய்யப் படுகிறான்.

கொஞ்ச நாட்களில் அலெக்சின் அம்மா இறந்துவிட குடும்பத்தில் எல்லோரும் அவரவர் சொத்துக்களை பிரித்து எடுத்துச் சென்றுவிட அப்பாவும் இறந்துவிட கொஞ்சம் சொத்துக்களோடு அனாதையாய் நிற்கும்  அலெக்ஸ் கொச்சி வருகிறான்.  அங்கு கெட்ட சகவாசம் ஏற்பட கள்ளநோட்டு வழக்கில் ஜெயிலுக்கு போகிறான்.  அங்கு அவனுக்கு கொடுக்கபடுகிற யூனிபார்ம் நம்பர் கூட 14தான். அங்கு ஜெயிலராக இருப்பது தன் அக்காவின்  பத்து வயது  மூத்த மகன்.

சிறைச் சூழ்நிலை பிடிக்காமல் போக சிறையிலிருந்து தப்பிக்க நினைக்கிறான். சிறைக்குள் வந்த லாரியின் அடியில் மறைந்துகொண்டு தப்பிக்க நினைக்க கை நழுவி சரியாக செக்யூரிட்டி கேட்டின் முன் விழுந்து மாட்டிக்கொள்கிறான். மறுபடியும் சாப்பிடும் ஸ்பூனைக்கொண்டு சுவரை கொஞ்சம் கொஞ்சமாய் நோண்டி சுவற்றை ஓட்டை போட்டு பார்த்தால் அவனது துரதிர்ஷ்டம் அந்தப் பக்கம் ஜெயில் ஆபீஷாகிறது.  ஜெயிலர் சொந்தக்காரன் என்பதால் மன்னித்து விடப்படுகிறான்.

உடனிருந்த ஒரு கைதியின் ஐடியாப்படி தூக்குமரத்தின் கீழே இருக்கும் ஒரு பலகையை பிரித்து உள்ளே இறங்கினால் பாதளச்சாக்கடை வருகிறது. அசட்டுத் தைரியத்தில் இறங்கிவிட்ட அலெக்ஸுக்கு வெளியேற தெரியவில்லை.  அங்கேயே உட்கார்ந்துவிடுகிறான்.  எவ்வளவு நேரம் அப்படி இருந்தான் என்று தெரியவில்லை.  இன்னொரு கைதி அந்தவழியாக வர  ஒரு ஓட்டை போட்டு இருவரும் தப்பிக்கிறார்கள்.  தப்பித்தபின் அவனோ இவனை கண்டுக்காமல் போய்விடுகிறான்.

அடுத்த நாள் பேப்பரில் ஒரு செய்தி,  அடுத்து வரும் சுதந்திர தினத்தை ஒட்டி விடுதலை செய்யப்படும் கைதிகளின் பெயரில் இவன் பெயரும் இருக்கிறது. தனது சொந்தக்கார ஜெயிலருக்கு போன் பண்ணி கேட்கிறான். தப்பித்த இருவரும் யாருக்கும் தெரியாமல் உடனே வந்துவிட்டால்  விடுதலை செய்துவிடுகிறேன் என்கிறார்.

இன்னொரு கைதியை பிடித்தாகவேண்டுமே.. தேடிப்போகிறான்.  அது லட்சத் தீவுகளுக்கு கொண்டுபோய் விடுகிறது.  இடையில் கப்பல் பயணத்தில் ஜனனி அய்யரின் அறிமுகம் அவனது வாழ்க்கையையும் சிந்தனையையும் மாற்றுகிறது.  சுயநலவாதியாய் இருந்த அவனை அவள் மாற்றுகிறாள். அடுத்தவர் முகத்தில் புன்னகையை தோற்றுவிக்கும் வித்தையையும் அதனால் நமக்கு வரும் சந்தோசத்தையும் அவன் உணர்கிறான்.

உடன் தப்பித்த கைதி யார்?  அவன் ஏன் தப்பித்தான்?  அவன் நினைத்ததை அடைந்தானா?  அலெக்ஸ் மீண்டும் சிறைக்கு வந்து சேர்ந்தானா?  இருவரும் விடுதலை அடைந்தார்களா?  என்பதே மீதிக்கதை.

இன்னொரு கைதியின் வாழ்வில் இருக்கும் இசா என்கிற முஸ்லிம் தேவதையும்(சுவாதி-சுப்ரமணியபுரத்தில் அல்லைக்கண் அழகி) அவளைச் சுற்றி பின்னப்பட்ட ஒரு மெல்லிய காதல் கதையும் சுவராஸ்யம் நிறைந்தது. முஸ்லிம்களின் வாழ்க்கையில் நிக்காஹும் தலாக்கும் எவ்வளவு சுலபமாக நடத்தப்படுகிறது என்பதை அழகாக  சொல்லி இருக்கிறார்கள்.

நெடுமுடி வேணுவால் துப்பாக்கி முனையில் குடும்பக்கட்டுப்பாடு அதிகாரிகள் விரட்டப்படுவது , கள்ளரூபாய் நோட்டை போலீசுக்கு லஞ்சமாய் கொடுத்து மாட்டிக்கொள்வது,  சிறைக்குள் தூக்கம் வராமல் தவிப்பது, சிறையில் உள்ளே இருந்துகொண்டு நான்கு லட்சம் ரூபாய்க்கு தப்பிக்கும் வழியை சொல்லித்தரும் சக கைதி,  கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உண்டியலை உடைப்பது, டிக்கெட் எடுக்காமல் கப்பலில் ஏற சன்னி செய்யும் ஐடியா, கப்பல் பயணத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த அலெக்ஸுக்கு ஜனனி அய்யர் தன் கூந்தலை நுகரக் கொடுப்பது,  கடற்கரையில் சுவாதியும் சன்னியும் மீன் தேடி அலைவது,  லட்சத்தீவின் கடலுக்குள் இருக்கும் போஸ்டாபீஸ், அதில் வேலைக்கு சேரும் ஜனனி தனது முதல் லெட்டரை கொடுக்க அலெக்சோடு அலைவது,  கேன்சரால் பாதிக்கப்பட்ட தன் பையனுக்கு கீமோ செய்ய பணத்துக்காக  காலில்லாத சுலைமான் அலைவது,
என்று அங்கங்கே சுவராஸ்யம் தூவி அமைத்திருக்கும் திரைக்கதை நம்மை கதைக்குள்ளேயே இருத்துகிறது.


இயக்கம் அஜித்பிள்ளை-கிருஸ்துவ குடும்பத்தின் குடுமிப்பிடி -ஸாரி -குழந்தைபிடி சண்டையை சொன்னவிதம் அருமை.  அதுவும் பெரிசுகள் இரண்டும் போடும் குத்துச்சண்டை அற்புத கற்பனை.  கடற்கரை காதல் கதையை கவித்துவமாக சொன்னவிதம் எல்லோருக்கும் பிடிக்கும். கடலுக்கு அடியில் பவளப்பாறையில் கால் சிக்கிய நண்பனை காப்பாற்றும் காட்சியை கொஞ்சம் முன்கூட்டியே நம்மால் யோசிக்க முடிகிறது.  இதை தவிர்த்திருக்கலாம்.  இந்த உலகத்தில் பணத்தின் தேவை எல்லோருக்கும் இருக்கிறது.  பணத்தை மையமாக வைத்தே ஒவ்வொருத்தனும் சுயநலவாதியா? பொதுநலவாதியா என்பது தீர்மானிக்கப்படுகிறது என்று பல பாத்திரங்கள் மூலம் நிறுவப்பார்க்கிறார்.  அங்கங்கே சில குறைகள் இருப்பினும் எடுத்துக்கொண்ட கதையை ரசிக்கும்படி செய்ததில் இயக்குனர் ஜெயிக்கிறார்.


கதாநாயகன் ஆசிப் அலி,  சன்னி, ஸ்வேதா, ஜனனி ஆகியோர் நடிப்பில் குறை சொல்லமுடியவில்லை.

இசையும் ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலம்.  இசை பிரசாந்த் பிள்ளை.  காதல் கதைக்கு தேவையான இரண்டு தீம்சாங்குகளை கொடுத்திருக்கும் விதம் அருமை.  இன்னும் 'அக்பரீசா" காதுகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது.

சூரியனையும் நிலவையும் ஒரே பிரேமுக்குள் கொண்டுவந்து அந்த காட்சிக்குரிய மூடை கொண்டு வந்ததில் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் அசத்தி இருக்கிறார்.  லட்சத்தீவுக்கு போகவேண்டுமென்று நெடுநாட்களாக நினைத்திருந்தேன்.  அது கொஞ்சம் நிறைவேறியது போல் உணர்ந்தேன். ஆனால் இதைப் பார்த்தபிறகு அந்த ஆவல் இன்னும் அதிகரித்திருக்கிறது.

என்றும் ஆதரவு வற்றாத காதல் கதைப் பிரியர்கள் பார்க்கவேண்டிய படம்.

1 comment :

  1. வணக்கம்
    படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......