PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, November 11, 2011

இதுவும் ஒரு மழைக் கவிதைதான்.

இது கடந்த திங்கள் (07.11.11)அதிகாலை திருப்பூரில் வந்த வெள்ளத்தைப் பற்றியது...



ஒரு மழைநாளின்
நள்ளிரவில்
எங்கள் நொய்யல் நதிக்கு
கோபம் வந்தது.

அழையா
விருந்தாளியாய்
அடியெடுத்து வைத்தது!

உறங்கிக்
கொண்டிருந்தவர்களைத்
தட்டி எழுப்பி
சுகமா என்று கேட்டது.

பதில்
சொல்லாதவர்களை
மென்று விழுங்கி
ஏப்பம் விட்டது...,

பதில்
சொன்னவர்களோடு
பல்லாங்குழி
விளையாடியது.

குழிக்குள் காய்கள்
விழுவதும்,
பிறகு
மீண்டும் எழுந்து
வேறு குழிகளில்
விழுவதும்
விளையாட்டாயிற்று!

யானை வழியை
மறித்த மனிதன்
யானைக்கு
எதிரியானதைப் போல்,

நதியின் பாதையை
மறித்து நின்ற
வீடுகளை
தின்று செரித்தது நதி!

சாயத் தண்ணீரை
கலந்து கலந்து
நதியின் கோபத்தை
இருபது வருடங்களில்
கொஞ்சம் கொஞ்சமாக
ஏற்றி வைத்து
இருந்தோம் நாங்கள்.

சமயம் பார்த்து
தனது கோபத்தைத்
தீர்த்துக்கொண்டது
நொய்யல் நதி.

தன்மீது படிந்த
அத்தனை சாயங்களையும்
தனக்குத் தானே
கழுவிக் கொண்டது.

கையில் அரிவாளோடு
வில்லனின் ஆட்கள்
வலம்
வந்ததைப் போல்
ஆக்ரோசத்தொடு
வீதி வலம் வந்தது.

அலட்சியமாய்
போடப்பட்ட
பாலங்களையும்
தார் ரோடுகளையும்
சாயம் வெளுக்கச்
செய்தது!

10 x 10 தான்
அந்த அறை,
ராசிப்படி
கிழக்கு வாசல்,
அக்னி மூலையில்தான்
அடுப்பு,
கன்னிமூலையில்தான்
சாமி படம் இருக்கு,
குபேரன் மூலையில்
இருக்குது
ட்ரங்குப் பெட்டி,
அதில் பழனிமலை
பாதயாத்திரைக்கு
சேர்த்து வைத்த
அறுபத்து மூணு ரூபாய் இருபத்தைந்து காசு,
ஜல மூலையில்
பிளாஸ்டிக் குடத்தில்
நாலு நாட்களுக்கு முன்
பிடித்து வைத்த
லாரித் தண்ணி,
இப்படி நூறு சதம்
வாஸ்து கொண்ட
வீட்டையும் கூட
விட்டுவைக்கவில்லை
சினம் கொண்ட
நொய்யல் நதி!

இன்று தெரு நாயோடு...
தெருவில் அவர்களும்!

3 comments :

  1. அருமையான பதிவு தோழா

    ReplyDelete
  2. கொடுமை !..இயற்க்கைக்கு ஏனோ இத்தனை சீற்றம்!....
    பாவம் நொந்துபோன மக்களுக்கு அவர்கள் வாழ்வு
    மீண்டும் வளமைநிலையை எட்டப் பிரார்த்திப்போம் .
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ..........

    ReplyDelete
  3. இயற்கை தான் என்றும் உயர்ந்தது. பெரியது. நாமெல்லாம் அதற்கு தூசு.

    இனி இப்படி ஒரு சிரமம் வராமல் அறிவில் சிறந்த மனித இனம் பார்த்துக் கொள்ளுமா?

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......