PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, November 26, 2011

பொறந்த நாளு கண்டுபோச்சு போங்க.





இன்று எனக்கு ஒரு போன்.. எனது மகனின் நண்பனிடமிருந்து.


”அங்கிள்...ஹேப்பி பர்த்டே..”


எனக்கு அதிர்ச்சியாய்ப் போயிற்று.


தேதியைப் பார்த்தேன். 26.11.2011.


அட.. ஆமாமில்ல.... ஆனால் இல்லை.
என்னுடைய பிறந்த நாளில் (பிறந்ததே..) ஒரு குழப்பம் உண்டு.


பள்ளிக்கூடத்தின் ரெக்கார்டுப் பிரகாரம் எனது பிறந்த நாள் 25.05.1966.


வெகு நாள்வரை இதுதான் எனது உண்மையான பிறந்த நாள் என்று நினைத்திருந்தேன்.


ஒருமுறை தீர விசாரித்தபோது எனது உண்மையான பி.நா இதுவல்ல என்று தெரிந்தது.


உண்மையான தேதி தெரியாத காரணத்தினால்வாத்தியார்அவராக முடிவு செய்து வழக்கமான யுனிவர்சல் சூத்திரப் பிரகாரம் தலையைச் சுற்றி காதைத் தொட்டபிறகு அவராக ஒரு தேதியைப் போட்டுக்கொண்டார். பள்ளிக்கூடம் ஜூன் மாதம் திறப்பதால் மே மாதத்தில் பிறந்ததாக எனது வரலாற்றில் ஒரு தவறான பதிவைச் செய்துவிட்டார். அனேகமாக இந்த தவற்றை அந்த கிராமத்தில் எல்லொருக்குமே அவர் செய்திருப்பார் என்றே நினைக்கிறேன்.  ஆகையால் நண்பர்களே நீங்கள் யாராவது மே மாதத்தில் பிறந்ததாக இருந்தால் தயவு செய்து நன்றாக விசாரியுங்கள்.  அதுவும் ஒரு வரலாற்றுப் பிழையாய் இருந்தாலும் இருக்கலாம்.


என்னைப் பத்து மாசம் சுமந்து பெற்ற அன்னைக்கே எனது பிறந்த நாள் என்னவென்று தெரியவில்லை. அதைப் பற்றிக் கேட்டால் மழுப்பலாகவே பதில் வரும்.


இந்த நாளுக்கான கொண்டாட்டங்களை நானும் விரும்பியதுமில்லை.  ஆகையால் இது ஒரு பெரிய விஷயமில்லாமல் போய்விட்டது.


ஆனால் இதற்கான தேவையும் ஒரு நாள் வந்தது. கல்யாணத்துக்கு பெண் தேடும்போது ஜாதகம் அவசியம் தேவைப்பட்டது. அது இல்லையென்றால் வந்தவர்களெல்லாம் நாலடி பின்வாங்கினார்கள். ஏதோதோ சந்தேகப்பட்டார்கள். ஜாதகத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது. அதனால்தான் ஜாதகம் தர மறுக்கிறேன் என்று பல ஐஸ்வர்யாராய்க்களின் தகப்பன்கள் நினைத்து விட்டார்கள். ஆகையால் எனது வாழ்வில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. சச்சின் மாதிரி 99 ரன்களில் நிறைய முறை அவுட் ஆகியிருக்கிறேன்.


ஒரு முறை இதை எப்படியும் கண்டுபிடித்து விடுவது என்று பேன்டை மடித்துவிட்டு(வேட்டியெல்லாம் பழைய ஸ்டைலுங்க) களத்தில் இறங்கினேன்.


அம்மாவை உட்காரவைத்து எனது பிரச்சினையெல்லாம் சொல்லி என் வாழ்க்கையில் ஒளியேற்றச் சொன்னேன்.


“அதுவா... நீ கார்த்திகை ஜோதியன்னைக்கு பொறந்தே... அதனால்தன் உனக்கு அருணானு பேர் வெச்சோம்”


ஒளி நிஜமாகவே ஏற்றியது. என்னே ஒரு பொருத்தம்.


”எந்த வருசம்..?”.


“அது நீ பொறந்தப்பதான் M,G,R,-ஐ சுட்டுட்டாங்க. நீ பொறந்து ஆஸ்பத்திரியில இருக்குறப்பதான் நர்ஸு வந்து சொல்லுது.  M,G,R,-ஐ M.R.ராதா சுட்டுட்டாராமா..   பொழைக்கிறது கஸ்டமாமாம். எல்லொரும் பேசிக்கறாங்க. நான் உன்னை மடியில போட்டு கண்ணீர் விட்டு அழறேன். அடுத்த நாள் வந்து நர்ஸம்மா சொல்லுச்சு.  M,G,R பொழைச்சுட்டாரு. ஒண்ணும் கவலைப்படாதீங்கன்னு.அப்ப பொறந்தே நீ”


நூலகத்துக்குச் சென்று பல புத்தகங்களை ஆராய்ந்து பார்த்தால் கார்த்திகை ஜோதி நவம்பர் மாதம் வருகிறது ஆனால்    M,G,R-ஐ சுடப்பட்டது ஜனவரியில் வருகிறது. எனக்குத் தலை சுற்றியது. எப்படி கண்டு பிடிப்பது என்று அம்மா அவர்கள் அமச்சரவையைக் கூட்டி மின்கட்டணத்தை ஏற்றியது போல நானும் நண்பர்களவையைக் கூட்டி ஆலோசனை செய்தோம். பிறகு ஒரு முடிவுக்கு வந்தோம். பிறந்த ஆஸ்பத்திரி ரெக்கார்டுகளை பார்த்துவிடுவது என்று.


நான் பிறந்தது கரூர் பெரியாஸ்பத்திரியில். அதையாவது சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார்களே என்று அம்மாவுக்கு ஒரு சல்யுட் வைத்துவிட்டு எனது நண்பன் வடிவேலுவுடன் கரூர் பயணமானோம். அங்கே நமது அரசாங்க இயந்திரத்துக்கு செய்யவெண்டிய மரியாதைகளைச் செய்தவுடன் அந்த வருட ரெஜிஸ்டரைக் கையில் கொடுத்து தேடி எடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் 1966 வருடத்தில் தேடினோம். கிடைக்கவில்லை.  1967ம் வருட ரெஜிஸ்டரைக் கேட்டதும் மரியாதை அதிகம் எதிர்பார்த்தார்கள்.  அழுததும் கிடைத்தது. நவம்பர் வரை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.  நம்பிக்கை இழந்தோம் விடாமல் தேடியபோது நவம்பர் மாதத்து ஆவணங்களில் இருந்தது. அப்பாடா பொறந்தநாளைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள பொறந்த நாளே கண்டுபோச்சு போங்க.


சந்தோஷமாக திருப்பூர் வந்து வடிவேலுவை அனுப்பிவிட்டு பழைய பஸ்டேண்ட் பக்கம் இருக்கும் கம்ப்யூட்டர் சென்டரில் ஜாதகம் போட்டுக்கொண்டேன். இதுவரை ஜோதிடரைப் பார்த்திராத நான் ராயபுரத்தில் ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை நீட்டினேன். அவர் தீர ஆராய்ந்துவிட்டு இந்த ஜாதகத்தில் செவ்வாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்.  அவரோடு சண்டை போட்டு நன்றாகப் பார்க்கச் சொன்னேன். அவரோ ’நெற்றிக்கண் திறப்பினும் செவ்வாய்..செவ்வாயே!’ என்றார். கூடுதலாக ’ஜாதகங்களில் லக்கினத்திலிருந்து 2,4,7,8,12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும்.இதை சந்திர லக்னம் (ராசி),சுக்ரன் இருக்கும் இடங்களிலிருந்தும் கணிக்கப்படவேண்டும்’ என்ற ரகசியங்களையும் சொல்லிக்கொடுத்தார். 


என்னடா இது எனது வாழ்வில் வந்த சோதனை. இதற்காகவா இந்த பிறந்தநாளை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தோம் என்று பாலமுரளிகிருஷ்ணா ஷெனாய் வாசிக்க சோகமாக நடந்து வந்தேன். இந்தக் கொடுமை தீர எந்த ஆண்டவனை வேண்டினால் தீரும் என்று தீர ஆலோசனை செய்து மீண்டும் கம்ப்யூட்டர் ஆண்டவனையே நாடினேன்.


உண்மையான பிறந்த நாளுக்கு அடுத்த நாளை கொடுத்து புதிதாக ஒரு ஜாதகம் கேட்டேன். ஆண்டவர் உடனே கொடுத்தார். அதில் இருக்கும் கட்டங்களை ஆராய்ந்தேன். லக்னத்திலிருந்து செவ்வாயை எண்ணினேன். ஏழாம் இடம் வந்தது. அய்யோ இப்போதும் செவ்வாய் தோசம். எனது வாழ்க்கை திகார் ராஜா மாதிரி கட்டங்களில் அடைக்கப்பட்டு விழித்துக்கொண்டிருந்தேன்.   சளைக்காமல் உண்மையான பிறந்த நாளில் இருந்து வேறொரு நாள் முன்னதாக எழுதிக் கொடுத்து வெறொரு ஜாதகம் கேட்டேன். கடைக்காரர் என்னை முறைத்துப் பார்த்தார். கல்யாண வயதில் ஐஷ்வர்யாராயை வைத்திருப்பார் போலும் வேண்டாவெறுப்பாக பிரதி எடுத்துக் கொடுத்தார். இப்போது கம்ப்யூட்டர் ஆண்டவர் கைவிடவில்லை. சுத்த ஜாதகம். பரணி நட்சத்திரம். தரணி ஆள்வேன் என்று பலன் சொல்லியது.


இப்போது கேட்டவர்க்கெல்லாம் எனது திருத்தப்பட்ட ஜாதகமே கொடுக்கப்பட்டது. அப்படி வந்து அமைந்ததுதான் இப்போதைய தங்கமணி.  அதிலும் ஒரு சுவராஸ்யமாய் ஒரு கதை உண்டு. அதை இன்னொரு பதிவில் இன்னொரு சமயம் சொல்கிறேன். (விடமாட்டேனுல்ல) நெடுநாட்களுக்கு இந்த ரகசியத்தை கட்டிக் காப்பாற்றி வந்தேன். ஒருமுறை சொல்லிவிட்டேன்.  இன்னும் என்னென்ன ரகசியங்கள் இருக்கு என்று கேட்டதோடு சரி. மனதை சமாதானப் படுத்திக்கொண்டாள். வெறென்ன செய்யமுடியும்., ரெண்டு புள்ளைகளைப் பெற்ற பிறகு. வாழ்க்கையில் ஒரு பிரச்சினையும் இல்லாமல் போனதால் தப்பித்தேன்.


இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனது பிறந்த நாளில் எனக்கே குழப்பம்தான். மூன்று ஜாதகங்கள் இருக்கிறது. இந்த மூன்றில் எது எனது உண்மையான ஜாதம் என மறந்து போயிற்று.
இத்தனை நாள் அத்ற்கான அவசியம் வரவில்லை. இப்போது எனது பையன்கள் எனது பிறந்த நாளை கொண்டாட ஆசைப்படுகிறார்கள். ஆனால் என்னால் உண்மையான பிறந்த நாளை
சொல்லமுடியவில்லை. எனக்கு ஞாபகம் இல்லை. என்ன செய்ய?


ஆகையால் எனது பையன்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மூன்று நாளையுமே கொண்டாடிவிடுவது என்று. முதல் நாள் ஓட்டல். இரண்டாம் நாள் சினிமா. மூன்றாம் நாள் பிக்னிக் என்று பட்டியல் போடுகிறார்கள். எனக்கு செவ்வாய் தோசம் என்றால் என்னவென்று இப்போதுதான் புரிகிறது.
   


 

Sunday, November 20, 2011

புறக்கணிப்பின் வலி



நானில்லாமல்
நடந்ததில்லை
உன் திருவிழாக்கள்!

நீ
கொண்டுவந்த
சந்தோசங்கள்
என்னிலும்
படர்ந்திருக்கின்றன.

உனக்கு வந்த
துக்கங்களுக்காக
எனது இதயத்திலும்
ரத்தம் கசிந்திருக்கிறது!

நிலவை
விழுங்கும்
பாம்பு போல
கொஞ்சம் கொஞ்சமாக
விழுங்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது...
நம் நட்பு!

ஏன்
எப்போதும்
உனக்கு
முற்றுப்புள்ளியே
பிடிக்கிறது?

என்னிடம்
இருந்து
விலகி இருப்பதுதான்
உனக்கு சந்தோசம்
எனில்
அப்படியே
செய்கிறேன்....!

எனது
இதயத்தில்
வழியும்
குருதிதான்
உனது பானமெனில்
இன்னும் தருகிறேன்...
தாகம் தீரும்வரை
அருந்து..!

இறந்தபிறகு-எனது
கண்களைத் தோண்டிபார்
அதில் தெரியும்
அழிக்க முடியாத - உன்
முகபிம்பங்கள்!

பிறகேனும்
நம்பு
இந்த
அரைக் குருட்டுக்
கண்களை!


Friday, November 18, 2011

மலர் விழியா? புதை குழியா?





மலர்களைப் 
போல்
உன் விழி 
என்றேன்..
இல்லை 
மலர்தான் நான்
என்றது
உனது விழி!



சூரியன் போன்ற
விழிகள் என்றேன்-
இல்லை
சூரியகாந்திப் பூதான்
நான்
என்றது
உனது விழி!



சூரிய காந்தி விழி
என்றால் 
சுடுமோ-என்றேன்,
அசடே
காந்திப் பூ
எப்போதடா
சுடும்?-என்றது
உனது விழி!




 
உன் கொல்லும்
விழிகளைகண்டு
 'அருகில் வர
பயம்' 
என்றேன்-
வாரி அணைத்து
தனக்குள் 
வைத்துக்கொண்டது
உனது விழி!

மலர் விழியா?
புதைகுழியா?
மலர்களுக்குள்
நான்
புதைந்து போனேன்..
உண்மையிலேயே
உன் விழிகள்
கொலைகார விழிகள்தான்!



பிறகுதான்
கண்டுகொண்டேன்
விழுங்கியது
உனது விழிகள்
மட்டுமல்ல
எனது விழிகளும்தான்!


Monday, November 14, 2011

டயர்வண்டி -சிறுகதை



ரு சைக்கிளோட்டி ஓடும் பஸ் முன் திடீரென புகுந்ததுதான் பிரச்சினை.  80 கி.மீ வேகத்தில் ஓட்டி வந்த அந்த பேருந்தின் ட்ரைவர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அனிச்சையாய் திடீரென ப்ரேக்கை மிதித்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத பயணிகள் நிலை தடுமாறினார்கள். நான்காம் வரிசையின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணுச்சாமியும் நிலை தடுமாறி பின்னிருக்கை கம்பியில் தலை நங் என்று இடித்ததுக் கொண்டான்.  தலை விண்ணென்று வலித்தது.  தலையை தடவிப் பார்த்துக்கொண்டான்.  காயம் எதுவும் ஆகியிருக்கவில்லை.

அறிவு கெட்ட நாயே….”

ட்ரைவர் சைக்கிள்காரனை திட்டிக் கொண்டிருந்தார்.  ஆனால் அவனோ கொஞ்சமும் கவலைப்படாமல்என் உச்சி மண்டைல சுர்ருங்குது…..சுர்ர்ர்ர்ர்என்று பாடியபடி லாவகமாக சைக்கிளை வளைத்து வளைத்து ஓட்டிப் போனான்.

கண்ணுச்சாமிக்கு கண் இருள் கட்டியது. வயிற்றுக்குள் போயிருந்த பிராந்தி மூளையில் கலந்திருந்தது.  அது வலியை மறக்கச் செய்தது.   கொஞ்ச நேரத்தில் சுதாரிப்பு வந்தது. 

ண்ணுச்சாமி குன்னத்தூரைச் சேர்ந்தவன்.  ஊரை ஒட்டிய ஒதுக்குப்புறத்தில் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் அப்பாவும் அம்மாவும் விவசாயம் பார்த்துக்கொள்ள இவன் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கிறான். 

முதலில் குன்னத்தூரில் உள்ள கடையில்தான் வேலை செய்தான்.  அங்கு சரியானபடி வருமானம் இல்லாததால் ஒரு லட்சம் செலவு பண்ணி திருப்பூர் கடைக்கு மாற்றல் வாங்கி வந்திருந்தான்.
 இங்கு வந்த பிறகு வருமானம் பரவாயில்லை.  பனியன் கம்பெனியில் உழைத்து வாங்கும் காசு அத்தனையையும் மக்கள் டாஸ்மாக் கடைக்கே கொண்டுவந்து கொடுத்தார்கள்.  பெரும்பாலான தொழிலாளிகள் டீ-க்கு பதிலாக சரக்கையே குடித்தார்கள்.  அவர்களின் உடம்பில் ஊசியால் குத்தினால் ரத்தத்திற்குப் பதிலாக சாராயமே வரும். 

கண்ணுச்சாமிக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.  மனைவி கயல்விழி ஒரு பக்காவான கிராமத்துப் பெண்.  வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து சனி, திங்கள் கிழமைகளில் புருசனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருப்பவள்.  அவர்களுக்கு நான்கு வயதில் விசு எனும் பையனும் மூன்று வயதில் ரிதன்யா எனும் பெண்ணும் இருக்கின்றனர். 

இவன் இரவு வீட்டுக்கு கிளம்பும்போது ஒரு குவாட்டர் பிராந்தியை விழுங்கிவிட்டுத்தான் கிளம்புவான்.  போய்ச் சேர இரவு மணி பத்தாகிவிடும்.  அதுவரை குழந்தைகள் இருவரும் விழித்துக் கொண்டுதான் இருப்பர்.  இவன் வாங்கிக்கொண்டு போகும் முறுக்கை பாதித் தூக்கமென்றாலும் தின்றுவிட்டுத்தான் தூங்குவார்கள்.  வார லீவு நாட்களில் குழந்தைகளை முன்னும் பின்னும் டிவிஎஸ் வண்டியில் உட்கார வைத்து ஊரை சுற்றி வருவான்.  அப்போது அந்த குழந்தைகளின் முகத்தில் தெரியும் சந்தோசத்தை பார்க்கும்போது கண்ணுச்சாமிக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

திருப்பூரில் புதிதாக வந்திருக்கும் சர்க்கஸ் பார்க்க கயலையும் குழந்தைகளையும் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டிப் போகவெண்டும்.  குழந்தைகள் மிகவும் சந்தோசப்படும்.  கயலையும் வெளியே கூட்டிப் போய் எத்தனை நாட்களாகி விட்டது.  ஆறு மாதம் முன்பு பெருமாநல்லூர் கொண்டாத்தா கொவிலுக்கு திருவிழாவின் போது கூட்டிப் போனதுதான்.  அதன்பிறகு எங்கேயும் கூட்டிப் போனதில்லை.  பாவம் அவளும் ஒன்றும் இதுவரை கேட்டதில்லை. 

பஸ்ஸை விட்டு இறங்கும்போதும் தலை சற்றே வலித்தது.  வீட்டுக்குப் போனதும் வாசலிலேயே விசுவும் ரிதன்யாவும் உட்கார்ந்து இருந்தார்கள்.  ஓடி வந்து அப்பா என காலைக் கட்டிக்கொண்டார்கள்.  கையிலிருந்த மிக்சர் பாக்கெட்டை பிடுங்கிக் கொண்டான் விசு.  அவனைத் துரத்தியபடி ரிதன்யா ஓடினாள்.

கண்ணுச்சாமி நேராக கை கால்கள் கூட கழுவாமல் கட்டிலில் போய் படுத்துக் கொண்டான்.  கயல் பதறிப் போய் ஓடிவந்தாள்.

ஏனுங்..மாமா என்னாச்சுங்க….வந்த உடனே படுத்துட்டீங்க….”

ஏனோ தெரியலைடீ….தல லேசா வலிக்குது….கொஞ்சம் தைலம் இருந்தா போட்டுவிடு

கயல் ஓடிப்போய் அமிர்தாஞ்சன் எடுத்து வந்து நெற்றியில் தடவி விட்டாள்.  தலையை தடவிக் கொடுத்தாள்.

இந்த கருமத்தை குடிக்காட்டி என்ன?  கண்டபடி காசை செலவளிக்காதீங்கன்னா கேட்டாத்தானே ஆகும்.  நமக்கும் ரெண்டு புள்ளைக இருக்குதுன்னு ஞாபகம் இருக்கா இல்லையா?”

அப்போது ரிதன்யா அழுதுகொண்டே வந்தாள். 

அப்பா….எனக்கு மிச்சர் தரவே மாட்டேங்குறான்…”

ஸ்ஸூ….அப்பாவை தொந்தரவு பண்ணாத….அப்பாவுக்குத் தலை வலிக்குதாம்

ஏப்பா தலையை வலிக்குதா?  நான் வேணா மாத்திரை தரட்டுமா?”
ஓடிப்போய் மாத்திரை டப்பாவை தேடினாள்.

கண்ணுச்சாமி அப்படியே தூங்கிப்போனான்.  அவனுடைய மார்பில் தலை வைத்து ரிதன்யாவும் அவனுடைய காலடியில் விசுவும் தூங்கிப் போனார்கள்.

காலையில் விழித்தபோதும் அதே தலைவலி நீடித்தது.  யாரிடம் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.  சொன்னால் வேலைக்குப் போகவிடமாட்டார்கள்.  இன்றைக்கு வேலைக்குப் போயே ஆகவெண்டும்.  இவன் போய்தான் இந்த வாரத்திற்கான சரக்குகளை வாங்க பர்ச்சேஸ் ஆர்டர் போடவெண்டும்.

கடைக்கு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது ஆகி இருந்தது.  பர்ச்சேஸ் ஆர்டர் போட ஸ்டாக் எடுக்க ஆரம்பித்தான்.  அவனது உதவியாளன் முருகன் இன்னும் வந்து சேரவில்லை.  கண்ணுச்சாமியால் நிற்க முடியவில்லை.  அப்படியே உட்கார்ந்து விட்டான்.  முருகன் வந்து இவனைப் பார்த்தபோது அதிர்ச்சியானான்.

என்னண்ணேஒரு மாதிரியா உட்கார்ந்து இருக்கீங்க….?”

ஒண்ணும் இல்லடா  சீக்கிரம் ஸ்டாக் எடு.  பர்ச்சேஸ் ஆர்டர் போடணும்

அதை விடுங்க….ஒரு நிமிசத்துல எடுத்துடலாம்  இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு…?”

தலை வலிக்குதுடா  வெற ஒண்ணுமில்ல..  நேத்து ராத்திரி டவுன் பஸ்காரன் திடீர்னு பிரேக் போட்டானா..  பின் மண்டையில நல்ல அடி.  ராத்திரி புடிச்சு தல விட்டு விட்டு வலிக்குது.”

சரி  வாங்கண்ணே.  ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடலாம்…”

இல்லடா ஒண்ணும் இல்லடா  இப்பல்லாம் ஆஸ்பத்திரியில ஒண்ணும் இல்லாததற்கெல்லாம் மூட்டை மூட்டையா பணம் பிடுங்கறான்.  கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாப் போய்விடும்

முருகன் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தான்.  நேரம் செல்ல செல்ல கண்ணுச்சாமியின் முகம் மிகவும் வாடத்துவங்கியது.  உடனே ஒரு ஆட்டோ பிடித்து அருகில் இருக்கும் ரேவதி மெடிக்கல் செண்டருக்கு கூட்டிச்சென்றான்.

டாக்டர் அவனைப் பார்த்ததும் விவரங்களைக் கேட்ட பிறகு தலைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார்.  ஸ்கேன் எடுத்து வரும்போதே கண்ணுச்சாமி மயங்கி விழுந்தான்.  உடனே அட்மிட் செய்யப்பட்டான்.  ஸ்கேன் ரிசல்ட் ப்ள்ட் க்ளாட்டிங் இன் ப்ரெய்ன் என்று சொன்னது.  மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கட்டியாக நின்றுவிட்டது.  ஆபரேசன் அவசியம் என்றார்கள். 

கண்ணுச்சாமியின் அப்பாவும் கயல்விழியும் வரவழைக்கப்பட்டார்கள்.  கையெழுத்து வாங்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.  விசுவும் ரிதன்யாவும் வீட்டில் பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்கள்.
அடுத்த நாள் காலை பணம் செலவ்வாகிவிடுமே என்று பயந்த மிடில்க்ளாஸ் மனிதன், இரண்டு இளம் பிஞ்சுகளின் தகப்பன் கண்ணுச்சாமி செத்துப்போனான். 

 வீட்டில் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள்.  விசுவுக்கும் ரிதன்யாவுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.  தனக்கு மிகவும் பிடித்த மாமாவும் அத்தையும் வந்திருந்தார்கள்.  ஆனால் எப்போதும் தன்னைப் பார்த்து சிரிக்கும் அத்தை ஏன் அழுகிறாள் என்பதுதான் அவர்களுக்கு புரியவில்லை.  பெரியப்பாவின் பையன் ரகு அண்ணா கூட வந்திருக்கிறான்.  ஆனால் அவன் விசுவோடு விளையாட வரமாட்டேன் என்கிறான். 

பாடி எப்ப வருமாமா….?” என்று பக்கத்து வீட்டுத் தாத்தா கேட்டார். 

போஸ்ட் மார்ட்டமெல்லாம் பண்ணி வந்து சேர பதினோரு மணியாய்டும்…”-என்று பதில் சொன்னார் பெரியப்பா.

ஏப்பா பாடிய அறுக்காம தர மாட்டாங்குளா?”

பொதுவா அறுக்க மாட்டாங்க. ஆக்சிடெண்ட் கேஸ்னா அறுக்காம கொடுக்க மாட்டாங்க….”

என்ன சொல்றது.  நேத்து நல்லாதானய்யா இருந்தான்.   இன்னெக்கி இப்படிப் போய்ச்சேருவான்னு யாரு நெனைச்சாங்க.  இந்த பிஞ்சுகளைக் கண்டாதான் மனசு அறுக்குதுப்பா…”

என்ன பண்றது பெருசு.  கடவுள் வெளையாடுற வெளையாட்டு இது

விசு அழுது கொண்டிருந்தான்.  ரிதன்யாவின் முகம் இன்னும் சிறிது நேரத்தில் அழுதுவிடுவாள் போலிருந்தது.  எளவுக்கு வந்திருந்தவர்கள் அவர்களைப் பார்த்து இச் கொட்டிக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் இருந்த செந்தில், கண்ணுச்சாமியின் பங்காளி  விசுவை தூக்கிக் கொண்டு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றார்.  ரிதன்யா அவர் பின்னாடியே ஓடினாள்.

ஏண்டா தம்பி அழுவுறே….  அப்பா வெணுமா?”.

இல்ல

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

வேற என்னடா?”

எங்கூட யாரும் வெளையாட வரவே மாட்டேஙுறாங்க.  ரகு அண்ணா, சுந்தர், ராசு யாரும் வர மாட்டேங்குறாங்க……”

இப்போது ரிதன்யாவும் அழ ஆரம்பித்தாள்.

நீ ஏம்மா அழுவுறே?”

ம்ம்ம்எனக்கு லாலிபாப் வேணும்.”

இருவரையும் கடைக்குக் கூட்டிப்போனான்.  இருவருக்கும் லாலிபாப் வாங்கிக் கொடுத்தான்.  விசு அதை வாங்க மறுத்துவிட்டான்.

வேற என்னடா வேணும்?”

எனக்கு வெளையாட டயர்வண்டி வேணும்…”

அதுக்கு இப்ப எங்கடா போறது?”

எங்க வீட்டு ஓட்டுமேல இருக்குஎடுத்துக் கொடுங்க.  நான் வெளையாடனும்

சரி வாஎடுத்து தாரேன்

அவர்கள் இருவரோடு வீட்டுக்கு வரும்போது ஆஸ்பத்திரியில் இருந்து பாடி வந்திருந்தது.  வண்டியில் இருந்து பிணத்தை இறக்கி கீழே வைத்து சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள்.

யாரோமகனையும் மகளையும் கொண்டு வாங்கோஎன்று அழைத்தார்கள்.  செந்தில் இருவரையும் கூட்டத்தின் இடையே கூட்டிப் போனான். 

விசுவின் அழுகை வலுத்தது.  ரிதன்யாவோ லாலிபாப் சாப்பிடுவதிலேயே மும்முரமாக இருந்தாள்.

வா பாப்பா.  அப்பாவைப் பாத்துட்டு வந்துடலாம்

இல்ல.  கொஞ்சம் இருங்க நான் இதை சாப்பிட்டுட்டு வந்துடறேனே..” என்று சொல்லியபடி லாலிபாப்பை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

சரி.. நீயாவது வாடா…”-என்று விசுவை கூப்பிட்டான்.

ம்ம்ஹூம்..  நான் வரமாட்டேன்எனக்கு டயர் வண்டியை எடுத்துக் கொடுங்க. நான் வெளையாடனும்….”

இடது கையில் விசுவையும் வலது கையில் ரிதன்யாவையும் தூக்கிக்கொண்டு செந்தில் பாடியை நோக்கிப் போக யத்தனித்தான்.  ஆனால் இருவரும் கத்தி அழ ஆரம்பித்தார்கள்.  இருவரும் அழுத அழுகையைப் பார்த்து கூட்டமே கதறி அழுதது. 

செந்தில் கூட்டத்தின் அருகிலேயே செல்ல முடியவில்லை.  இருவரும் துள்ளியபடியே கத்தியதால் கையில் இருந்து நழுவினார்கள். செந்திலால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. ஆகையால் செந்தில் ஓட்டின் மீது தேடிப்பார்த்து டயர்வண்டியை எடுத்து விசுவின் கையில் கொடுத்தான்.  ஸ்விட்ச் போட்டது போல அழுகை உடனே நின்றது. 

குச்சி?”

குச்சியைத் செந்தில் தேடுமுன் விசு 'குச்சி வேணாம்' என்று சொல்லியபடி  
விசு டயர்வண்டியை கையாலேயே  தட்டியபடி மெதுவாக ஓடினான்.  அவன் பின்னால் ஒரு கையால் லாலிபாப்பை சூப்பியபடி இன்னொரு கையில் கண்களைத் துடைத்தபடி  ரிதன்யா ஓடினாள்.  அதே நேரத்தில் பிணத்தை சுமந்தபடி பிணவண்டி அவர்கள் பின்னால் சென்றது.   பிணவண்டியின் பின்னால் சாவுக்கு வந்திருந்த மக்கள் மெதுநடையாய் சென்றனர். 


அப்போது டயர்வண்டியின் குறுக்கே ஒரு சின்னப் பையன் விழுந்தபோது 


"அறிவு கெட்ட நாயே.... ரோட்டைப் பாத்துப் போகமாட்டியா?"-என திட்டிக் கொண்டிருந்தான்.