கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி அந்த பஸ் போய்க்கொண்டிருந்தது. அதில் நான் ஒருவித படபடப்போடும் இருப்புக்கொள்ளாமலும் உட்கார்ந்து இருந்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் நான் வீடு போய்ச் சேர்ந்தாகவெண்டும். அப்படித்தான் சற்று நேரத்துக்கு முன்னர் கூப்பிட்டவர்கள் சொல்லி இருந்தார்கள். இப்பொது மதியம் மணி இரண்டு. எப்படியும் திருப்பூர் போய்ச்சேர 1 ½ மணி நேரம் ஆகிவிடும்.
பஸ்ஸில் ’ஒய் திஸ் கொலவெறி டி’ என்று நேரம் காலம் தெரியாமல் அலறிக் கொண்டிருந்தது. எனக்கிருந்த மன நிலையில் என்னால் அந்த பாடலை ரசிக்க முடியவில்லை. பஸ்ஸினுள் இருந்தவர்களை நோட்டமிட்டேன். பஸ் நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவர் முகமும் ஒவ்வொரு பிரச்சினையை சுமந்துகொண்டிருந்தது.
அப்போது என்னுடைய செல்போன் கூவியது. இப்போதிருந்த மனநிலையில் நான் அந்த அழைப்பை மறுதளிக்கவே நினைத்தேன். அழைத்தவர் பெயரைப் பார்த்தேன். காருண்யா ரவி. இவர் ரத்த நன்கொடை நிறுவனத்தை நடத்தி வருபவர். ஏதேனும் அவசியமின்றி அழைக்கமட்டார்.
“சொல்லுங்க ரவி...”
“சார் ஒரு அர்ஜென்ட். உங்க ப்ளட் க்ரூப் ஒரு பேஷன்ட்-க்கு தேவைப்படுது. எங்க இருக்கீங்க?”
“நான் இப்போ கோவையிலிருந்து திருப்பூர் போயிட்டு இருக்கேன்.”
“நல்லதாப் போச்சு. பேஷன்ட் திருப்பூர்தான். குமரன் ஹாஸ்பிடல்ல இருக்காரு. நீங்க டொனேட் பண்ணி ஆறு மாசம் இருக்குமில்ல...”
“இருக்கும் ரவி”.
“ரொம்ப நன்றி. உங்க குரூப் ab- ரொம்ப அபூர்வம் அப்படிங்கிறதாலதான் அடிக்கடி தொந்தரவு பண்ணவேண்டி இருக்கு. ரொம்ப ஸாரி விஷால். இந்த குரூப் நம்ம டோனர்ஸ்ல மொத்தம் பத்து பேருக்குதான் இருக்கு. அதுல ரெண்டு பேருக்குதான் கொடுக்கக்கூடிய நிலையில் இருக்கு. இன்னொருத்தர் அவுட் ஆப் ஸ்டேசன். நீங்க ஒருத்தர்தான் இருக்கீங்க”
“நோ ப்ராப்ளம். இப்ப நான் என்ன செய்யணும் சொல்லுங்க”
“நீங்க கருமத்தம்பட்டியை கடந்துட்டிங்களா?”
“இல்ல இன்னும் அரை மணி நேரத்துல நான் அங்க இருப்பேன்”
“நல்லதாப் போச்சு. பேஷன்ட்டோட மகன் கார்ல கருமத்தம்பட்டியில நிக்கிறாரு. அங்க இறங்குங்க. அவர் பிக்கப் பண்ணிக்குவாரு”
“ஒ;கே. நான் பாத்துக்கறேன்”
“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்”
போனை அணைத்தேன்.
இப்போது நினைவுகள் ரவியைச் சுற்றியது.
ரவி காருண்யா எனும் அமைப்பின் மூலம் ரத்ததானம் செய்து வருபவர். அவர்தான் அந்த அமைப்பின் தலைவர். நிறைய உயிர்களை காப்பாற்றி இருக்கிறார். எனது ரத்தம் ab நெகடிவ். உலகத்தில் 0.05% பேருக்குதான் இருக்கும். இப்போது நான் ரத்ததானம் செய்யவில்லை என்றால் இன்னொருவரை பிடிப்பது மிகவும் கஷ்டம். நிறைய முறை கொடுத்திருக்கிறேன். நிறைய உயிர்களை காப்பாற்றி இருக்கிறேன்.
என் அப்பாவுக்கும் இதே குரூப்தான். அவரும் நிறைய முறை தானம் செய்திருக்கிறார். தானம் என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். இந்த குரூப் நமக்கு அரிதாக வாய்த்திருக்கிறது. இது நமக்கு கடவுள் கொடுத்த தானம். இதை வைத்து நம்மால் பிறருக்கு எவ்வளவு தர முடியுமோ அவ்வளவு தரச் சொல்லி கடவுள் அனுப்பி வைத்த தூதுவர்தாம் நாம் எனச் சொல்லுவார்.
அவர்தான் எனது ஆதர்சம். அவர்தான் எனது குரு. அவரும் நானும் நிறையப் பேசுவோம். ஒவ்வொரு கேள்விக்கும் வித்தியாசமான பதில் கிடைக்கும். காலப் போக்கில் அவருடைய தர்க்கஞானம என்னிலும் புகுந்து கொண்டது. எனது வாழ்வில் அவர் மடியில் படுத்து கண்ணீர் விட்ட தருணங்கள் இரண்டு முறை வாய்த்திருக்கிறது. எனது முதல் காதல் தோல்வியில் முடிந்த போது அவர் மடியில் தலை வைத்து தேம்பி தேம்பி அழுது இருக்கிறேன். இன்னொரு முறை எனக்கு கல்யாணம் ஆகி எனது மனைவியின் முதல் பிரசவம் அபார்ஷனில் முடிந்தபோது. இரண்டு முறையும் அவர் தந்தையாய் இல்லாமல் தாயாய் இருந்து முதுகு வருடி ஆறுதல் சொல்லி இருக்கிறார்.
நினைவுகளுக்கு தடை போட்ட மாதிரி செல் அலறியது. நான் அதற்கு உயிர் கொடுத்து “புறப்புட்டுடேன். இன்னும் ஒரு மணி நேரத்துல ஷார்ப்பா வந்துடுவேன்” என்று சொல்லி போனை அணைத்தேன்.
அப்போது பஸ் நின்றது. கருமத்தம்பட்டி வந்திருந்தது. நான் அவசர அவசரமாக இறங்கினேன். அருகில் கலைந்த தலையுடனும் அழுது வீங்கிய முகத்துடனும் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். அருகில் வந்தான்.
“ஸார் நீங்கதான் விஷாலா?”
“ஆமாம் நான்தான். ரவி சொன்னார். போலாமா?”
அருகில் நின்று கொண்டிருந்த வாடகைக் காரில் ஏறிக்கொண்டனர். வண்டி கிளம்பியது. அந்த இளைஞன் முகத்தைப் பார்த்தேன். மிகவும் டென்ஷனாக இருப்பது போல் தெரிந்தது. அவனும் இன்னொரு பையனும் இருந்தனர்.
“பேஷன்ட் இப்போ எப்படி இருக்கார்?”
“சீரியசாதான் இருக்கார் சார். சார் என்னோட பேரு செல்வம். என்னோட அப்பா காலைல ரோட்டுல வாக்கிங் போய்ட்டிருக்கும்போது ஒரு மணல் லாரிக்காரன் அடிச்சுட்டுப் போய்ட்டான் சார். முன் மண்டையில நல்ல அடி. குமரன் ஆஸ்பிடல்ல சேர்த்திருக்கோம். ரத்தம் ரொம்ப ப்ளீட் ஆகி டோனர்ஸ் வேணும்னு சொல்லிட்டாங்க. ஹாஸ்பிடல்ல ஸ்டாக் இல்லைன்னு சொல்லிட்டாங்க. கஷ்டப்பட்டு ஒருத்தரை பிடிச்சுட்டோம். இன்னொருத்துருக்காக காலையில இருந்து தேடிக்கிட்டு இருக்கோம் சார். தெய்வம் மாதிரி வந்து கிடச்சிங்க”
“கவலைப் படாதீங்க. காப்பாத்திடலாம்”
“ரொம்ப நன்றி சார்”
“நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
“சார் நான் வேலூர் வி.ஐ.டி.ல மெக்கானிகல் இன்ஜினீயரிங் படிச்சுட்டு இருக்கேன் சார். ஸ்டடி லீவுல ஊருக்கு வந்தேன். வந்த இடத்துல அப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு”
“திருப்பூர்ல எந்த ஏரியாவுல இருக்கீங்க?”
“கருவம்பாளையம். மாகாளியம்மன் கோவிலுக்கு பக்கத்துல வீடு இருக்கு சார். எனக்கு என்னோட அப்பானா ரொம்ப பிடிக்கும் சார். என்னை இந்த அளவுக்கு படிக்க வேச்சதே அவரோட ஸ்டேட்டஸ்க்கு ரொம்ப ரொம்ப அதிகம் சார். ஒரு பனியன் கம்பெனில அக்கவுண்டண்டா இருந்துட்டு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் என்னை படிக்க வைக்கிறாரு சார். இன்னும் ஆறு மாசம்தான் படிப்பு. முடிச்சுட்டு அப்பாவை உட்கார வெச்சு சோறு போடணும்னு நினைச்சுட்டு இருந்தேன் சார். அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு”
உடைந்து அழ ஆரம்பித்தான். அவனை எனது தோளின் மீது சாய்த்துக்கொண்டு அவனது முதுகை வருடிக்கொடுத்தேன்.
“டோன்ட் வொர்ரி. அப்பாவை பிழைக்க வைச்சுடலாம்”
அப்போது எனது செல் ரிங்கியது.
நான் அதனை ஆன் செய்து “இன்னும் முக்கா மணி நேரத்தில் வந்துடுவேன்” என்று சொல்லி வைத்தேன்..
“பிழைக்கணும் சார். வாழ்க்கைல எப்பவுமே கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு சாகணுமா சார். கொஞ்சமாவது நான் அவருக்கு திருப்பி ஏதாவது செய்யவேணாமா? எனக்காக அவர் பாடுபட்டதுக்கு நான் என்கையால சோறு போடணும் சார். அதை அனுபவிக்க அவரை பிழைக்க வெச்சே ஆகணும் சார்”
எனக்கு அந்த இளைஞனை பார்க்க பார்க்க பொறாமையாக இருந்தது. ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒரு அப்பா பாசம் இருக்கத்தான் செய்கிறது.
அரை மணி நேரத்தில் ஆஸ்பத்திரியை வந்து அடைந்தோம். எனக்காக காத்திருந்த டாக்டரும் நர்சும் என்னை கையைப்பிடித்து கடத்திக் கொண்டு போனார்கள்.
மீண்டும் என் செல்போன் அலறியது. நான் அதை ஸ்விட்ச்ஆப் செய்து வைத்தேன்.
உடனே ரத்தம் டெஸ்ட் செய்து பார்க்கப்பட்டு என்னை ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள். சம்பிரதாயமான கேள்விகளுக்குப் பிறகு எனது ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பித்தார்கள்.
சிறிது நேரத்தில் வேலை முடிந்தது. ஒரு பாக்கட் குட் டே பிஸ்கட்டும் ப்ரூட்டி ஒரு டப்பாவும் கொடுத்தார்கள். ப்ரூட்டியை மட்டும் கொஞ்சம் உறிஞ்சிவிட்டு வெளியே வந்தேன். அந்த இளைஞன் என் கையை பற்றிக் கொண்டான். என்னை அழைத்துக்கொண்டு ஐ.சி.யுவுக்கு சென்றான். அவனது அப்பா தலையில் கட்டோடு படுத்துக்கொண்டிருந்தார். தளர்ந்த உடம்பு. ரத்தகறையோடு கூடிய வேட்டியில் அவரது வறுமையும் உழைப்பும் தெரிந்தது.
அவர் முன்னால் நின்று ஒரு நிமிடம் பிரர்த்தித்துக்கொண்டேன்.
“சீக்கிரம் எழுந்து வந்து இந்த மகனின் கையால் சோறு வாங்கி சாப்பிடு பெரியவரே”
“கவலைப்படாதே நண்பா.. உன் அப்பாவுக்கும் ஒண்ணும் ஆகாது. கலையில எழுந்து காலேஜுக்கு போகலையானு திட்டப் போறாரு பாரு”
-என்று தைரியம் கொடுத்தேன்.
அவன் கைகளை விடாமல் “ ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார். உங்களை என் வாழ்கையில என்னைக்குமே மறக்க மாட்டேன்” என நா தழுதழுக்க சொன்னபோது எனது உடம்பில் ஒரு வினாடி மெல்லிய சிலிர்ப்பு தோன்றி மறைந்தது.
நான் அங்கிருந்து விடை பெற்று ஒரு ஆட்டோபிடித்து வீட்டை நோக்கி சென்றேன். அப்போதுதான் எனது செல்லை எடுத்து அதற்கு உயிர் கொடுத்தேன். டிஸ்ப்ளேயில் நிறைய மிஸ்டு கால்கள்.
வீட்டை நெருங்க நெருங்க கூட்டம் தெரிந்தது.
“மகன் வந்துட்டான்பா...”-என்று யாரோ சொன்னது கேட்டது.
வீட்டினுள்ளே அழுகுரல் கேட்டது. என்னைக் கண்டதும் கூட்டம் பரபரப்பாகியது. எனக்காக காத்திருந்த எனது உறவுகள் எழுந்து நின்றார்கள். எனது கண்கள் கலங்க ஆரம்பித்தன. வீட்டினுள் நுழைந்து கூடத்தில் நின்றேன். அங்கே எனது அப்பாவை படுக்கவைக்கப்பட்டு தலைமாட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததது. எனது கால்கள் நழுவி நான் விழ ஆரம்பித்தேன்.
அடுத்த நாள் காலையில் எனது செல்போனில் ஒரு மெசெஜ் வந்திருந்தது.
“my daady is safe. Thank you very much sir”.
ungal thiyakam marakka kudiyathathu nanbare!
ReplyDeleteநல்ல கதை... அருமையான நடை....வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்..www.rishvan.com
கலங்க வைத்து விட்டீர் நண்பரே
ReplyDeleteகதையின் தாக்கம் ரொம்ப நேரம் மனதில் இருக்கும். லேபிளில் அனுபவம் என்றும் போட்டிருக்கா..மனசு அடிச்சிக்கிது...
ReplyDeletenice ... touch
ReplyDeleteஅப்பா ஆத்மா சந்தோஷப் பட்டிருக்கும்ங்க. யூகிக்க முடிந்த கதை என்றாலும் கண்கள் பனித்தது.
ReplyDelete@rishwan
ReplyDelete@கோவை நேரம்
@நிகழ்காலத்தில்
@சுந்தரவடிவேலு
@ரசிகன்
நன்றி. நன்றி. நன்றி.
நல்ல கதை தோழர்..தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.
ReplyDeleteநல்லதொரு கதை..இக்கதையை வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்..நேரமிருந்தால் பார்வையிடவும்..நன்றி.
ReplyDelete