PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, December 30, 2011

எனக்கு மட்டும் எஸ்.ரா கையால் சவால் பரிசு

வால் சிறுகதைப் போட்டி(2011) போட்டியில் கலந்து கொண்டு ஒரு மொக்கை கதையை நான் எழுதியதும் அந்தக் கதை முதல் பரிசு வாங்கப் போகும் நேரத்தில் நடுவர்கள் விழித்துக்கொண்டதால் இவன் கிழிக்கிற கிழிப்புக்கு ஆறுதல் பரிசு கொடுத்தாலே அதிகம் என்று முடிவு செய்து போனால் போகிறது என்று ஆறுதல் பரிசு கொடுத்த வரலாறு, புவியியல் அனைவரும் அறிந்ததே.

அப்படி என்னதான் கிழிச்சேன்னு இங்கே கிளி(ழி)க்கிப் படியுங்கள்.

சில உண்மைகளை பகிர வேண்டிய தருணம் வந்துவிட்டது...

அது இன்னான்னா..

இந்தக் கதையை ஏற்கனவே படிச்சுட்டு ஏன் முதல் பரிசு கொடுக்கலைன்னு என் வாசகர் வாட்ட நண்பர்கள் வாடிப்போய் கொடிபிடித்து பஸ் பிடித்து சென்னை வரை பயணம் செய்ய கொதித்தெழுந்து கொந்தளித்து நீதியும் ,(என்னிடம்)நிதியும் கேட்டுப் புறப்பட்டபோது, என் பாக்கெட்டைக் காட்டி பட்ஜெட் கொஞ்சம் உதைப்பதால் அடுத்தவருடம் வைத்துக்கொள்ளலாம் என கூறி விட்டதால் பொதுக்குழுவை டாஸ்மாக்கிலேயே முடித்துக்கொண்டோம்.  அன்று கர்ப்பிணியாய் இருந்த என் பர்ஸ் அபார்ஷன் ஆகி வற்றிப் போன வயிறோடு என்னைப் பார்த்த பார்வை இன்னும் எந்தன் கண்ணிலேயே நிற்கிறது.

எழுத்தாளன் ஆவது சுலபமில்லை என்கிற ஞானம் டாஸ்மாக் பாரின் உடைந்துபோன டேபிளின் கீழேஅப்போதுதான் உதயமானது. புத்தம் சரணம் கச்சாமி என்பதற்குப் பதிலாக பீரு பிராந்தி ஊறுகாய் என்று மந்திரம் சொல்லி இன்று வரை உளறிக்கொண்டிருக்கிறேன். இப்போதுகூட அந்த பாதிப்பில்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  போதி தர்மர் மாதிரி என் திறமையைக் கண்டுகொள்ளாத தமிழ்நாட்டைப் புறக்கணித்துவிட்டு சீனாவுக்கு சென்று நாறடிக்கலாமென்று நினைத்ததுண்டு.

அப்பாடா தப்பித்தோம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது.  உங்களையெல்லாம் அனாதையாய் விட்டுப்போக மனமில்லாததாலும் அப்புறம் அது தவறான வரலாறு ஆகிவிடுமே என்பதாலும் அந்த திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறேன்.

உளறியது போதும் சீரியசாக எழுது என்று என்பின்னால் ஓராயிரம் குரல்கள் கேட்பதால் சிரியஸிலிருந்து சீரியஸாகிறேன்.

சவால் சிறுகதைப்போட்டி அறிவித்தவுடன் எப்படியும் கலந்து கொள்வது என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.  ஆனால் அவர்கள் கொடுத்திருந்த கதைக் குறிப்புகள் ரொம்பவும் கடுமையாகவே இருந்ததாகத் தோன்றியது.  பல இரவுகளில் பரிசல் வந்து படுத்தி எடுத்துவிட்டார். ஏனெனில் கொடுத்திருந்த புகைப்படத்தில் அவர்தானே போஸ் கொடுத்திருந்தார்.  இரவுத்தூக்கத்தில் கூட SW, H20, MNO4, H2SO4 என்று உளறி இருக்கிறேன்.  படிக்கிற காலத்தில் இந்த அளவுக்கு வேதியியல் சமன்பாடுகளை மனப்பாடம் செய்திருந்தால் அரியர்ஸ் வைக்காமல் பாஸ் ஆகி இருந்திருப்பேன்..

கோகுல், விஷ்ணு என்று தாறுமாறாக உளறியதைப் பார்த்து என் தங்கமணி "இதெல்லாம் யாரு,  ஏதாவது சின்னவீடு வெச்சிருக்கீங்களா? இதெல்லாம் பசங்க பேரா?" என்று ஆயிரம் கேள்வி கேட்ட அசட்டுத் தங்கமணியாகி ட்ரைவாஸ்(டைவர்ஸ்) கேட்கும் நிலைக்கு சென்றுவிட்டாள்அப்புறம் பரிசல் போட்டோ காட்டி தப்பித்தது தனிக் கதை.

கடைசி நாள் வரை கதை பிடிபடாமலேயே இருந்தது.  தீபாவளி பண்டிகையன்று கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், பட்டாசு வெடிக்காமல், புத்தாடை உடுத்தாமல் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மாமியார் கூட "என்னடி மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு?  பேயோட்டுற மாயாண்டியை வரச் சொல்லட்டுமா?" என்று கேட்கும் நிலைமை ஆகிப் போச்சு.

பசங்க கூட என் நிலையைப் பார்த்து ஆளுக்கொரு கான்செப்ட் சொன்னார்கள். என்னடா இது குதிரைக்கு வந்த சோதனை என்று பிளிரிக்கொண்டு ஒரு வழியாக காமெடியை முதன் முதலில் முயற்சி செய்து பாப்போம் என்று முடிவு செய்து 'ரங்கு குரங்கு ஆன கதை' எழுதினேன்.  அதை எழுதுவதற்குள் வெண்புரவி கருங்கழுதை ஆன கதைதான் நீங்கள் இது வரை படித்தது.

எப்படியோ தக்கிமுக்கி கடந்த வருடம் போலவே முதல் பதினைந்து கதைகளில் ஒன்றாக தேர்வு ஆகி வயிற்றில் பீரை வார்த்தார்கள் நடுவர் குழுவினர்.

அழும் குழந்தைக்கு ஆறுதலாக பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்ததைப் போல ஆறுதல் பரிசும் கிடைத்தது.  அதற்கான விழா சென்னையில் நடந்தது.  கண்டிப்பாக போய்விடவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.  ஆனால் எங்களது தொழில் எப்போதும் அதுவே எங்களின் போக்கை முடிவு செய்யும் இயல்பு வாய்ந்தது.  அது போலவே போக முடியாமல் போய்விட்டது.

பரிசுப் புத்தகங்கள் கொரியரில் அனுப்பு வைத்திருப்பதாக ஆதியிடமிருந்து மெயில் வந்தது.  தினமும் ஆவலோடு கொரியர்காரனை வழி மீது விழி வைத்துப் பார்த்திருந்தேன்.

நேற்றுதான் வந்து சேர்ந்தது.  அற்புதமான மூன்று புத்தகங்கள்.  தமிழ்மகனின் வெட்டுப்புலி, கேபிள் சங்கரின் மீண்டும் ஒரு காதல் கதை, கி.ரா.வின் கரிசல் காட்டுக் கடுதாசிகள்.  பார்சலை வாங்கி பிரித்து புத்தகத்தை பார்த்தபோது விவரிக்கமுடியாத ஒரு உணர்ச்சியை அடைந்தேன்.  அது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இந்த நேரத்தில் நான் கூரிக்கொல்வது என்னவென்றால் இதை அடைய உறுதுணையாய் இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஊக்குவித்த சேர்தளம் நண்பர்களுக்கும் என் நன்றியை காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.  (கோவில் பூசாரி மாதிரி தட்டைப் பாக்காதேங்கோ.இது வேற காணிக்கை)


கொரியர் கொண்டு வந்தவர் பார்சலைக் கொடுக்கும்போது 'சார் ஏதோ புத்தகம் போல இருக்கு?' என்று ஆவல் மிகுதியில் கேட்டார்.

"ஆமாம் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டதற்காக பரிசு அனுப்பி இருக்கிறார்கள்"

"சார் சொல்லவே இல்லை"

"ஆமாம் எல்லோரும் பெரிய பெரிய எழுத்தாளர்கள் கையால பரிசு வாங்குவாங்க.  நான் உங்க கையால பரிசு வாங்குகிறேன்"

அவர் மனம் குளிர்ந்து சங்கோஜப்பட்டு.  "சார் போங்க சார்" என்றார்.

நான், "உங்கள் பெயர் என்ன"-வென்று கேட்டேன்.

"ராமகிருஷ்ணன்" என்றார்.

 எனக்கு ஆச்சர்யாமாகப் போயிற்று.

 'இனிஷியல் என்ன?

"எஸ்.ராமகிருஷ்ணன்"

எனக்கு மட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் கையால் பரிசா?  அப்படிப் போடு.


 

4 comments :

  1. உங்க கதை போலவே உங்க இந்த பதிவும், செம திருப்பம்...

    ReplyDelete
  2. பரிசு அனுபவத்திற்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  3. @கோபி ராமமூர்த்தி
    வருகைக்கு நன்றி.

    @சூர்யஜீவா
    நன்றி.

    @இராஜராஜேஸ்வரி
    நன்றி.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......