கதாநாயகன் சாதாரண கல்லூரி மாணவன். வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ரேசன் கடைக்குப் போய்வருபவன். ரோட்டில் ஒரு சண்டை நடந்தால்கூட கண்டுகொள்ளாமல் தன் வழியே செல்பவன். இரண்டு ரூபாய் காசுக்காக டெலிபோன் பூத்தில் சண்டை போட்டதால் கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அண்ணனால் சென்னை அரசுக்கல்லூரியில் படிக்க வருகிறான்.
யாரோ செய்யும் தவறுகள் இவன் மீது விழ இவனைப் பற்றி தவறான இமேஜ் உருவாகிறது.
நான்கு போலீஸ்காரர்கள் ஒரு ஹைவேயில் நின்றிருக்கும்போது ஒரு கார் அதிவேகமாக வந்து கண்ணெதிரே விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்த ஒரே மனிதன் ஆபத்தில் இருக்கிறான். வண்டியில் கோடிக்கணக்கான ரூபாயோடு ஒரு சூட்கேஸ் இருக்கிறது. குற்றுயிராய் இருக்கும் கார்காரனை கார் ஜாக்கியில் அடித்து கொன்றுவிட்டு நான்கு பேரும் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.
அதிலிருந்து ஜெட்வேகத்தில் தடதடத்து செல்லும் அதிரடி திரைக்கதை. அடுத்து என்ன காட்சி வரும் என்று கொஞ்சம்கூட யூகிக்கமுடியாத அளவில் புதிய புதிய காட்சிகளால் நிரப்பி அருமையாக ஸ்டஃப் செய்யப்பட்ட காரமான சாண்ட்விச் கதை.
கதைக்குள் அவ்வளவு ஆழமாக உள்ளே போகாமல் இந்தப் படத்தில் ரசிக்கவென அழகான சில தனித்தன்மையுடைய பாத்திரப்படைப்புகளும் காட்சிகளும் இருக்கின்றன. அவைகளை சொல்லவெண்டும் என ஆசைப்படுகிறேன்.
வெள்ளந்தியான அம்மா. மகனைப் பார்த்து மருகுவதாகட்டும். மகனின் காதலைப் பார்த்து அவனை அடிப்பதாகட்டும் (தனது உயரம் பற்றாமல் கன்னத்தில் அடிப்பதற்கு பதிலாக கையில் அடிக்கும்) ஒரு மிடில் கிளாஸ் அம்மா-அழகு..
காதல் கல்யாணம் செய்துகொண்ட அண்ணி. அழகான தங்கையை வீட்டில் வைத்துக்கொண்டு கொழுந்தனையும் வைத்துக்கொண்டு அவஸ்தைப்படும் நிலை-அழகு.
குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மாவை அழைத்துப்போக ஆசைப்படும் அண்ணன். அதற்காக அவன் தம்பியோடு அம்மாவை அழைத்துவந்து ஒரு நாள் கூட தன் வீட்டில் தங்க வைக்காமல் காலேஜில் சேர்த்துவிட்டு ஹாஸ்டலிலும் சேர்த்துவிடும் நிலை- அழகு.
அன்னை தெரஸாவை எம்ப்ராய்டரி போடும் இனியா, அக்கா மாமா முன்னால் தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பது, தனது முதன்முதல் அல்வாவை அருள்நிதி கிண்டல்செய்யும்போது சிணுங்குவது, மொட்டை மாடியில் அருள்நிதியின் கையைப் பிடித்து காய்ச்சல் பார்ப்பது- அழகு
எப்போதும் ஆர்ப்பாட்டமாக நாம் பார்த்துப் பழகிய உமாரியாஸ் கர்ப்பவதி போலீஸ் வேடத்தில் கலக்குவது. கர்ப்பவதிக்குரிய உடல்மொழியுடன் கேஸை விசாரிப்பது-அழகு.
எப்போதும் லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரிகள். பணத்துக்காக எந்த எல்லையையும் தொடத்தயாராக இருக்கும் ஜான்விஜய் மற்றும் மூன்று போலீஸ் அதிகாரிகளின் அலட்டலும், அரற்றலும்-அழகு.
பணத்துக்கு ஆசைப்படும் விபச்சாரப் பெண்-பாத்திரப்படைப்பு-அழகு.
கல்லூரி முதல்வராகவும் ஒரு தறுதலைக்கு அப்பாவாகவும் வந்து இருதலைக் கொள்ளி எரும்பாய் துடிக்கும் கல்லூரி முதல்வர்-அழகு.
பைத்தியக்கார நண்பனின் திருதிரு விழியும், உடல்மொழியும்-அழகு.
ஹாஸ்டலில் மாணவர்களின் பொருட்கள் அடிக்கடி காணாமல் போவதும் அதை சரியான நேரத்தில் திரும்பக்கிடைப்பதும் –அழகு.
அருள்நிதியை என்கவுண்டர் செய்ய ஆந்திர மாநில எல்லைக்கு அழைத்துச்சென்று கொல்ல முயலும் அந்த திக்திக் இருபது நிமிடங்கள்-அழகு.
போலீசிடம் சிக்கிக்கொள்வதும் தப்பிப்பதுமான அந்த போலீஸ் திருடன் விளையாட்டு –அழகு.
காதுகேளாத குழந்தைகளை வைத்துக்கொண்டு நெஞ்சம் நிகிழச்செய்யும் இடங்கள்-அழகு.
பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து அடிக்கடி ஊசி போட்டு அரைமயக்க நிலையிலேயே வைத்து சித்திரவதை செய்வதும் ஆஸ்பத்திரி சூழ்நிலையை பொருத்தமாக கேஸாக்குவதும்-அழகு.
ஆஸ்பத்திரியில் இருந்து இன்னொரு பைத்தியத்தின் உதவியுடன் தப்பிக்கும் அந்த திக்திக் நிமிடங்கள்-அழகு.
கல்லூரி மாணவர்கள், அவர்களின் ஃபைட் ரவுடிகள், மெண்டல் டாக்டர், பைத்தியங்கள், என்று ஒவ்வொரு சிறு பாத்திரப் படைப்புகளும் பார்த்துப் பார்த்து செதுக்கிய விதம்-அழகு
போலீஸ் சொல்லும் பைத்தியக்கார நாடகத்தை நம்பி தனது அம்மா உட்பட எல்லோரும் அவனை பைத்தியமாகவே பார்க்கும் திரைக்கதை அமைப்பு-அழகு.
அடிக்கடி போடப்படும் முடிச்சுகளும் அதை அவிழ்ப்பதும், பத்து நிமிடத்துக்கொருமுறை வரும் ட்விஸ்ட்டுகளும்-அழகு.
அறிமுகப் படத்திலேயே அழகான கதை சொல்லி கில்லி அடித்திருக்கும் அறிமுக இயக்குனர் சாந்தகுமார் சரக்குள்ளவர். எந்த ஆங்கிலப் படத்திலிருந்தும் காப்பி அடிக்காமல் எத்தனையோ முறை அடித்து திருத்தி எழுதிய திரைக்கதையில் இயக்குநரின் உழைப்பு நூறு சதவிகிதம் தெரிகிறது.
வாழ்த்துக்கள் சாந்தகுமார்.
வாழ்த்துக்கள் அருள்நிதி.
நல்ல கதையும், ஓகேவான நடிப்பும், நல்ல வசனங்களும், ஓகேவான இசையும், நல்ல ஒளிப்பதிவும், நல்ல இயக்கமும் கொண்ட பார்க்க தகுந்த நல்ல படம்-மௌனகுரு.
நானும் நிறையவே ரசித்தேன், இந்த வருடத்தின் கறுப்புக் குதிரை. உங்கள் பார்வையும் அழகு
ReplyDeleteஉங்கள் விமரிசனம் அழகு. அவசியம் பார்க்கிறேன்.
ReplyDelete@தர்ஷன்
ReplyDeleteவிமர்சனத்தின் விமர்சனத்துக்கு நன்றி.
@ரசிகன்
பாருங்கள். அவசியம் பார்க்கவேண்டிய படம்.