PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, September 1, 2010

திருப்பூரைக் காப்பாற்றுங்கள்



பருத்தியின் வெண்மை ஆள்வோர் நெஞ்சில் இல்லையே...


           திருப்பூரில் ஏற்றுமதி தொழில் கரைந்து காணமல் போகப்போகிறது....  காரணம், அரசாங்கமும் அதன் கொள்கைகளுமே.

         நானும் ஒரு ஏற்றுமதி தொழில் செய்கிறவன் என்பதால் இன்றைய சூழ்நிலையை சரியாக என்னால் கணிக்கமுடிகிறது.

         ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறையால் தத்தித் தவழ்ந்து கொண்டிருந்த தொழில் டையிங் பிரச்சினையால் படுத்துகொண்டிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஆரம்பித்த நூல்விலையேற்றப் பிரச்சினையால் முடங்கிப்போன தொழில் அரசாங்கத்தின் கடைக்கண் பார்வையால் நூல் விலை சற்று இறங்க தொழில் கொஞ்சம் மூச்சு விடத் தொடங்கியது.

        ஆனால் அரசாங்கம் மீண்டும் முருங்கை மரம் ஏறி உட்கார்ந்துள்ளது.  தனது ஏற்றுமதி கொள்கைகளை மாற்றிய பின்னர் தைத்த உடைகளாக ஏற்றுமதி செய்வதைவிட நூலாகவே ஏற்றுமதி செய்ய முன்னுரிமை அளிக்கிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவு திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

        நூல் மில்கள் தற்போதைய விலையைவிட பத்து ரூபாயிலிருந்து பதினைந்து  ரூபாய் வரை விலையை ஏற்றும்.  இந்த விலையை அடிப்படையாக கொண்டு பையர்களுக்கு கொட்டேஷன் கொடுக்கும் பட்சத்தில் ஏற்றுமதி ஆர்டர்கள் சீனா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பொய் விட வாய்ப்பு இருக்கிறது. இந்த விலை கொடுத்தாலும் கூட நூல் கிடைக்காத நிலை வரப்போகிறது. அப்படிப் போனால் தூங்கா நகரம் தூங்கி வழிய வேண்டியதுதான்.

         இப்படி ஒரு ஏற்றுமதி கொள்கையால் அரசாங்கம் மறைமுகமாக சீனா, பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  தற்போதைய நிலவரப்படி சீனாவில் பருத்தி விளைச்சல் குறைவாகவே உள்ளது.  அதனால் தன்னுடைய பருத்தி தேவைகளுக்கு இந்தியாவையே நம்பியுள்ளது. ஆகையால் என்ன விலை கொடுத்தாலும் நம் வளங்களை வாங்கியே தீரும்.

          ஏற்றுமதியை விடுங்கள்... உள்நாட்டு பனியன், ஜட்டி உற்பத்திக்கும் இதே கதைதான்.  நூல் விற்கும் விலைக்கு ஏற்றபடி விலையை ஏற்றவே செய்வார்கள்.  அதனால் விற்பனை குறையும்.  அதை நம்பி நிற்கும் ஏராளமான தொழிலாளர்களின் நிலைமை நடுத்தெருவில்தான்.

          ஆங்கிலேயர் காலத்தில்தான் இங்கிருந்து பருத்தியாக லண்டன போய் ஆடையாக இந்தியாவுக்கு கொண்டுவந்து நமக்கே விற்பார்கள். அந்த காலம் மறுபடியும் வரப்போகிறது.  இந்த நிலை மாறும் வரை நாம் அனைவரும் அம்மணமாகவே நிற்க வேண்டிவரும். நெய்பவனுக்கு உடுத்த துணியில்லை என்பது எந்தக்காலத்திலும் மாறாது போலிருக்கிறது.

          திருப்பூரைப் பொருத்தவரை இங்கு மண்ணின் மைந்தர்கள் குறைவுதான். தமிழ்நாட்டின் எல்லா பாகங்களில் இருந்தும் மக்கள் வந்து குவிந்து கிடக்கிறார்கள். ஏன் இப்போது பீகாரில் இருந்தும், ஒரிஸ்ஸாவில் இருந்தும்கூட ஏராளமான மக்கள் வந்து வேலை செய்கிறார்கள். 

 அவர்களுடைய பொருளாதாரம் இந்த தொழில் சார்ந்தே உள்ளது.  (இன்னும்கூட ஒரு தமிழ்நாடும்  ஒரு பீகாரும் திருப்பூருக்கு தேவைப்படும்)

அவர்கள் அத்தனை பேருடைய நிலையும் கேள்விக்குறிதான்.


        உடனடியாக திருப்பூரில் உள்ள தொழில் சார்ந்த சங்கங்களும், மக்களும் விழித்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கினால்தான் அரசியல்வாதிகள் இறங்கி வருவார்கள்.  டீமா (Tiruppur Export and Manufactures Association) சங்கம் முழுமூச்சாக இறங்கி விவாதித்துக கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் ஏதாவது உருப்படியாகச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

        அரசியல்வாதிகளே.... எதையாவது செய்து இந்த தொழிலை  அழிந்துபோகாமல் காப்பாற்றுவீர்களா?.....
உருகி வழியுமுன்...


பிரியாத ப்ரியங்களுடன்
வெண் புரவி அருணா...
NEST FASHIONS 

6 comments :

  1. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல...!

    ReplyDelete
  2. நானும் புது வீடு கட்டியிருக்கேன், உங்கள போலவே

    ReplyDelete
  3. இந்த ஏற்றுமதி கொள்கையால் தேர்தல் முடிவில் என்ன விளைவு என்பதைப் பொருத்தே அரசியல் வியாபாரிகளின் நடவடிக்கைகளிருக்கும்!

    ReplyDelete
  4. திருப்பூர் நிலை குழப்பமாகத்தான் இருக்கிறது...

    ReplyDelete
  5. இப்போது நிலை மீண்டுவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. நல்லதுதான்

    ReplyDelete
  6. அரசியல்வாதிகளே.... எதையாவது செய்து இந்த தொழிலை அழிந்துபோகாமல் காப்பாற்றுவீர்களா?.....

    யாருக்கிட்டே போய் ?

    அழிவிலிருந்து வேறொரு தொடக்கம் உருவாகும்.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......