PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Thursday, November 26, 2015

கர்த்தரே...முருகா....!!! - குறும்படம்.

ந்த வருட தீபாவளி நாள்....காலை எண்ணை குளியல்...நண்பர் பரிசல்காரன் குடும்ப வருகை...மதியம் தூங்காவனம் படம் என்று ஓடியது.  இரவு எழு மணிக்கு மேட்டுபாளையம் அம்மாயி வீட்டுக்கு குடும்பத்துடன் காரில் பயணம்.

எங்களின் கார் பயணம் எப்போதுமே ஜாலியானதாக இருக்கும்.  சூர்யா கார் ஓட்ட  நான் அருகில் இருக்க, பின் சீட்டில் யுகாவும் தங்கமணியும் எப்போதும் சண்டையிட்டபடி வருவார்கள்.

நாங்கள் வழக்கம் போல ஒரு ஒன் லைன் சொல்லி அதை கதையாக விரித்து அழகு பார்ப்போம்.  எப்போதும் நான்தான் ஒன்லைன் கொடுப்பேன்.  இந்த முறை சூர்யா கொடுத்தான்.

"ஒரு பாதிரியார் - ஒரு திருடன் - ஒரு ரயில்  பயணம்"

  கொஞ்சநேரம் மூவரும் சிந்தித்தோம்.  முதலில் யுகா ஒரு கதை சொன்னான்...அடுத்து நான் சொன்னேன்.  நான் சொன்ன கதையை கொஞ்சம் டிங்கரிங் பார்த்து  சூர்யா தெளிவாக்கினான்.

"கர்த்தரே...முருகா..!!!" கதை ரெடியாகிவிட்டது.

எங்களின் மேட்டுப்பாளையம் பயணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் இதை படம் எடுக்க ஆயதங்கள் நடந்தது.  சூர்யா திரைக்கதை எழுதினான்.  அவன் எழுதிய திரைக்கதையில் சில வசனங்கள் மட்டும் நான் எழுதினேன்.

எல்லாம் ரெடி... பாதிரியார் அங்கி கிடைக்கவில்லை.  எங்கெங்கோ தேடினோம்..   சில மேக்கப் சென்டர்களில் தேடினோம்..கிடைத்த பாடில்லை.  கடைசியில் எங்களின் தோழமை உதவி மையத்தின் உதவி மூலமாக   பாதர் ஜார்ஜ் வர்கீஸ் தந்து உதவினார்.

எல்லோரும் மாலை எட்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் சென்றுவிட்டனர். எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் நான் செல்ல முடியவில்லை. இருந்தபோதும் எனது வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு நானும் ஸ்டேஷன் சென்றுவிட்டேன்.  அதுவரை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் சில காட்சிகளை எடுத்துகொண்டு இருந்தனர்.

பரிசல் வேறு ஒரிஜினல் பாதர் போலவே கையில் பைபிள் வைத்துக்கொண்டு  ஆழ்ந்து படித்தபடி கேரக்டராகவே மாறி இருந்தார்.  சிலர் அவரை மிகுந்த மரியாதையாக பார்த்தபடி சென்றார்கள்.

பிறகு பாலக்காடு வரை ஏழு டிக்கட்கள் எடுத்துக்கொண்டு கேரளா  செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். வந்த ரயில்களில் எல்லாம் கூட்டம் வழிந்தது.  கோவை வரை செல்லும் இண்டர்சிட்டிதான் கொஞ்சம் கூட்டம் குறைவாக வந்தது.  'கர்த்தர்' மேல் பாரத்தை போட்டுவிட்டு  ஏறிவிட்டோம்.   உடனே காட்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்டோம்.  பொதுமக்கள் குறுக்கீடு கொஞ்சம் கூட இல்லை.  நாங்கள் என்னவோ போட்டோ பிடித்து விளையாடுகிறோம் என்று எண்ணிக்கொண்டார்கள்.

சில காட்சிகளை எடுப்பதற்குள் கோவை வந்துவிட்டது.  அங்கே ரயில் ஹால்ட் என்று சொன்னார்கள்  ஒருவர் வந்து ஜன்னல் எல்லாம் அடைத்துவிட்டு லைட்டை அணைக்க போனார்.  கொஞ்சநேரம் லைட்டை அணைக்கவேண்டாம் என்று சொன்னோம்  பாதரை வித்தியாசமாக பார்த்துவிட்டு "ஓகே சீக்கிரம் முடிச்சுடுங்க... வண்டி க்ளீனிங் எடுத்துடுவாங்க.." என்று சொல்லியபடி போனார்.

வெளியே ஒரு ரயில்வே போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்தியபடி இருந்தார்.  நாங்கள் அவரை பார்த்ததும் வண்டியைவிட்டு இறங்கி விட்டோம்.  காமிரா பைக்குள் போய்விட்டது.  கொஞ்ச நேரத்தில் அந்த போலீஸ்காரர் போய்விட்டார்.

உடனே காமிராவை எடுத்து நிற்கும் ரயிலுக்குள்  படம் பிடிக்க தொடங்கினோம்.  நானும் சுரேனும் வெளியே காவலுக்கு நின்றுகொண்டோம்.  அந்த போலீஸ்காரர் அங்கேயேதான் உலவிக்கொண்டிருந்தார்.  இன்னொரு போலீஸ் மப்டியில்... வரும் போகும் பயணிகளை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டிருந்தார்.  அவருக்கு யாரை பிடிக்கிறதோ அவரை நிறுத்தி துகில் உரித்துகொண்டிருந்தார்.

முதலில் பயமுறுத்திய போலீஸ் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருந்தார்.  ஒருவழியாக ரயிலுக்குள் எடுக்கவேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்டனர்.  இனி ரயிலுக்கு வெளியே ஜன்னலோரத்தில் எடுக்கவேண்டிய காட்சிதான் இருக்கிறது.

வெளியே பார்த்தால் அந்த போலீஸ் நின்றுகொண்டிருந்தார்.  கொஞ்ச நேரம் காத்திருந்தோம்.  அவர் கொஞ்சம் நகர்ந்தார்.  உடனே அந்த காட்சியை எடுக்க சொன்னோம்.  சரசரவென்று ஏற்பாடுகள் நடந்தன.  அந்த காட்சியை எடுத்துகொண்டிருந்த போது எங்கிருந்தோ அந்த போலீஸ்காரர் 'நிறுத்து..நிறுத்து' என்று  வந்துவிட்டார்.

எங்களுக்கு பக் என்று நவதுவாரங்களும் அடைத்துக்கொண்டது.  சூர்யா சடாரென்று காமிராவை பைக்குள் போட்டுவிட்டு தள்ளி நின்றுகொண்டான்.  அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கெஞ்சி பார்த்தும் பெர்மிசன் இல்லாமல் எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டார்.  முன்னாடி போய் ஆபீசில் அனுமதி வாங்கிவரும்படி சொல்லிவிட்டார்.  நல்லவேளை காமிராவை கேட்கவில்லை. 'சார்... ஒரே சீன்தான்... யாருக்கும் டிஸ்டர்ப் இல்லாம எடுத்துக்குறோம்..' என்று சொல்லிப் பார்த்தோம்.  'என் வேலைக்கு உலை வெச்சிராதீங்க..' என்று மிரட்டினார்.

"சரி போய் பர்மிசன் வாங்கிட்டு வருவோம் .." என்று எல்லோரும் ஆபீஸ் நோக்கி போனோம்.
சூர்யா..."அப்பா எல்லாம் எடுத்தாச்சு... கடைசி சீன்தான் திருப்பூர்லயே எடுத்துக்குவோம்... இங்க ரிஸ்க் வேண்டாம்..." என்றான்.


அதுவும் சரிதான் என்று திருப்பூர் திரும்ப டிக்கட் எடுத்து ரயிலுக்காக காத்திருந்தோம். 11:45 க்கு வரவேண்டிய ரயில் தாமதமானது.  அங்கேயே எல்லோரும் டீ குடித்தோம்.  எந்த ரயிலும் வரவில்லை.  எல்லோரும் சாப்பிட்டோம்....இன்னும் எந்த ரயிலும் வரவில்லை.  இரண்டு  மணிக்கு திருவனந்தபுரம் மெயில் வந்தது.  அப்பாடா என்று ஏறி அமர்ந்தோம்.

ரயில் நகர்ந்ததும்தான் எனக்கு  இந்த ரயில் திருப்பூர் நிற்குமா என்று ஒரு சந்தேகம் வந்தது.  அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன்.. யாருக்கும் தெரியவில்லை.  உடனே நெட்டில் செக் செய்தால்  திருப்பூரில் நிற்பது மாதிரி தெரியவில்லை.  படியருகே நவீனையும் விக்னேசையும் கையில் கார் சாவி  மற்றும் டோக்கனையும் கொடுத்து நிற்க வைத்தேன்.  வண்டி ஸ்லோ ஆச்சுனா டக்குனு இறங்கி கார் எடுத்துட்டு ஈரோடு வந்துடு என்று சொன்னேன்.  ஆனால் அந்த இரும்பு பாம்பு கொஞ்சம் கூட வேகம் குறையாமல் திருப்பூருக்கு சாவகாசமாக டாட்டா காட்டியபடி கடந்தது.  கொஞ்ச நேரத்தில் ஈரோடு வந்துதான் நின்றது.

இறங்கி அடுத்த ரயில் எதிர் பிளாட்பாரத்தில் ஐந்து நிமிடத்தில் வந்தது. ஆனால் பயங்கர கூட்டம்.  வேறு வழியே இல்லை.  ஏறிவிட்டோம்.   தூக்கம் டாய்லெட் மணத்தில் கரைந்து கொட்ட கொட்ட விழித்தபடி பயணம் செய்தோம்.   நாப்பது நிமிடம் நாப்பது நாள் போல கடந்தது.  திருப்பூர் வந்து சேர்ந்தபோது விடிகாலை நான்கு மணி.  

அடுத்தநாள் மீண்டும் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மிச்ச காட்சியை எடுத்தார்கள்....

இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை முடித்து பார்த்தபோது திருப்தியாக வந்தது...

என்னதான் கஷ்டப்பட்டு எடுத்தாலும் மார்க் போடவேண்டியவர்கள் நீங்கள்தான்.  இந்தப் படத்தை  நீங்களும் பார்த்து குறைகளையும் நிறைகளையும் சொல்வீர்களானால் உங்களுக்கு ராம்ராஜ் வேஷ்டிகள் துண்டுகள் வழங்கும் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும்.  கோ ஸ்பான்சர்டு பை....நண்டு  மார்க் லுங்கிகள் மற்றும் முருகன் மார்க் கோவணங்கள்.




https://www.youtube.com/watch?v=w3J4tgZprHg

Friday, November 6, 2015

இளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை!!!

வெளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை.  கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான்.  தன் கையை வெட்டிக்கொண்டு சாகப் போகிறான்.  அப்போது அவன் வீட்டிலிருக்கும் ரேடியோ திடீரென பாடுகிறது.

'என்ன காயம் ஆனபோதும் எந்தன் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது பொன்மானே'

இளையராஜாவின் பாடல் அவனுக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல்.  சரி சாவதற்கு முன் இந்தப் பாடலை கேட்டுவிட்டு செத்துவிடுவோம் என்று எழுந்து சென்று அந்தப் பாடலை கேட்கிறான்.

அவனுக்காக போட்ட பாடல் மாதிரியே தெரிகிறது.  கையை வெட்டிக்கொள்ள வேண்டாம்,  உந்தன் மேனி தாங்காது என்று தடவுகிறது அந்த தேன் குரல்.

அந்த பாடல் முடிந்ததும் RJ ரேடியோவில் பேசுகிறாள்.  அது சன்பிளவர் FM, பேசுவது தென்றல்,   'கண்மணி அன்போடு காதலன்' என்கிற நிகழ்ச்சி.  இன்று நாம் கேட்கப்போகும் காதல் கதையை சொல்லப்போகும் லக்கி காலர் யாரு என்று டயல் செய்கிறாள்.  அது  விரக்தியில் இருக்கும் நம் கதாநாயகனுக்கு வருகிறது.  அவனிடம் பேசுவதன் மூலம் அவன் விரக்தியை உணர்கிறாள்..  'உங்க கேர்ல் பிரண்டோட சண்டையா?' என கேட்கிறாள்.  'செம்ம லவ் போல..' என்று அவனது 'சோகத்துக்கு மருந்து தடவ இளையராஜா பாடி வெச்சிருக்காரு...'என்று ஒரு சோகப் பாடல் போடுகிறாள்.

'ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்... மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்லவேணும்.. கொட்டுமழைக் காலம் உப்பு விக்கப் போனேன்.. காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்.. தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே...'  

அவன் சோகம் இளையராஜாவின் கானத்தில் கொஞ்சம் கரைகிறது...தப்புக்கணக்கை போட்டுவிட்டாய் என்று சொல்கிறது.  மற்றவரை குற்றம் சொல்ல வேண்டாம் என்கிறது.

பாடல் முடிந்ததும் அவள் லைனுக்கு வருகிறாள்.  'சொல்லுங்க என்ன சோகம்?' என்கிறாள்.

'அவளோடு காலையில் இருந்து பேசவில்லை.... அவளோட பேசாத...அவளோடு இல்லாத இந்த நாள்...' என்று சோக கீதம் பாடுகிறான்.  தென்றல் அவனை ரிலாக்ஸ் ஆக்க முயற்சிக்கிறாள்.

'வெளியே ஜோரான மழை.  மழையோட   ஒவ்வொரு துளியும் மண்ல ஊடுருவற மாதிரி ராஜா சார் இசை நம்  ஒவ்வொரு செல்லிலயும் ஊடுருவி இருக்கு.  இப்ப ஒரு காபி மட்டும் இருந்தா... மழை..காபி...ராஜா சார்....'   


அந்தக் குரல் அவனுக்கு ஆணையிடுவது போல்  இருக்கிறது.  போ போய் ஒரு காபி போட்டு இந்த மழையையும் இளையராஜாவையும் அனுபவி...என்பது போல் இருக்கிறது.

'ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது...நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் எதோ செய்யுது... தென்றல் வந்து தீண்டும்போது....என்ன வண்ணமோ.. மனசுல.."

பாட்டை கேட்ட படி அவன் காபி போடுகிறான்.  அங்கே எறும்புகள் கூட்டமாக போய்க்கொண்டிருக்கின்றன. ஒன்றின் அடிச்சுவட்டை பற்றி அடுத்த எறும்பு சென்றபடி இருந்தன.  அது அவன் தனிமையை விரட்டி கூட்டமாக இருக்கச் சொல்கிறது.  அவன் மனசு மாதிரியே காபியும் கொதிக்கிறது.  காபியோடு வெளியே வருகிறான்.  பாட்டைக் கேட்டபடி மழையை மனசுக்குள் உள்வாங்கியபடி பால் கலக்காத கசப்புக் காப்பி தொண்டையில் இறங்குகிறது.  அவனுக்கும்  வாழ்க்கை கசப்பெல்லாம் விழுங்கிவிட்ட உணர்வு வருகிறது.  ஒரு செடியை மழை முழுதாக நனைத்த மாதிரி மழை அவன் மனசை முழுதாக குளிர்வித்திருந்தது.  மனதில் இருள் விலகி ஒரு ஒளி பிறக்கிறது.

பாடல் முடிந்ததும் தென்றல் லைனுக்கு வருகிறாள்.

 'ஹல்லோ சார் இப்போ எப்படி FEEL பண்றீங்க?'

'இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கு தென்றல்'

 அவனின் காதல் கதையை கேட்கிறாள்.   வீட்டை எதிர்த்து கல்யாணம் முடிந்த கதையைச் சொல்கிறான்.

'அப்புறம் என்ன சண்டை?' என்று கேட்கிறாள்.

'அவளுக்கு இளையராஜா பாட்டுன்னா உயிர்.  காலையில் அவ கேட்டுட்டு இருந்த ராஜா சார் சாங்க நிறுத்திட்டேன்.  அப்ப ஆரம்பிச்ச சண்ட பெருசாயி அவள லேசாத்தான் தள்ளி விட்டேன்.  கட்டில்ல அடிச்சு விழுந்துட்டா.. அப்புறம் போயிட்டா...'

அருகில் இருக்கும் பெட்ரூம் திரைசீலை காற்றுக்கு மெதுவாக ஆடுகிறது.  அங்கே யாரோ இருப்பது போல தெரிகிறது...

'போயிட்டான்னா.....'  என்று தென்றல் கேட்கும்போது ஒரு பீதி தெரிகிறது.

கட்...கட்...முழு கதையையும் நானே சொல்லிட்டா..எப்படி? ...மீதிய கீழே இருக்கும் லிங்கில் பாருங்க.

கொஞ்சம் காபி...கொஞ்சும் மழை.. குறும்படம்.

இந்த குறும்படத்தில் அந்த பாடல்கள் அவனது சிச்சுவேசனுக்கு தகுந்த மாதிரி தேர்ந்தெடுத்து போட்டிருப்பது அழகு.  ஷூட்டிங் நடத்தும் இடத்தில் கிடைக்கும் பொருள்களை படத்துக்கு பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவது அழகு.

அந்த வீடு பழமையும் புதுமையும் கலந்த வீடு.  பெண்டுலம் ஆடும் பழைய மாடலில் புதிய கடிகாரம், பழைய மாடவிளக்கு அதில் புதுமையாக மெழுகுவர்த்தி வைத்து இருக்கும்,  பழைய மாடல் ரேடியோவில் மாற்றம் செய்யப்பட்டு FM கேட்கும் மாதிரி செய்யப்பட ரேடியோ.  பழைய காதலர்கள் சிலை புதுமையாக பளிங்குக் கல்லில்.  இதை உணர்த்தவே பழைய கருப்பு வெள்ளையில் புதிய காதல் கதையோ?

கருப்பு வெள்ளை கலர் அவனோட சோகத்தை சொல்லுகிறது.  அவன் காதல் கதை வரும்போது கலராகிறது.

வசனங்கள் எழுதி இருப்பவர் பிரபல எழுத்தாளர்  'பரிசல்காரன்' கே.பி.கிருஷ்ணகுமார்.    படத்துக்கு தேவையான க்யூட்டான வசனங்கள் படத்துக்கு ஒரு வண்ணத்தை தருகின்றன.

தனிமை தவிர்க்க எறும்புகள் கூட்டமாக  நகர்வதும்,  மனசு கொதிப்பது போல் காபி கொதிப்பது,  அவன் மனசு குரங்கு மாதிரி பாய்வதை குரங்கு பொம்மையை காட்டியும்,  மனசு குளிர்வதை செடியை மழை நனைப்பதையும்,
இப்படி கிடைக்கும் இடங்களில் எடிட்டர் சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் அவனை பார்த்து கண் சிமிட்டுவது, மழையை பார்த்தவாறு ஈசி சேரில் அமர்ந்து இருக்கும் காட்சி, காதல் சின்ன கோப்பை காபியில் ஆவி வருவது,  விளக்கு இப்படி பல காட்சிகளில் CINEMATOGRAPHER சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.

இளையராஜா ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்து கலக்கி இருக்கிறார் டைரக்டர் சூர்யபாரதி.     முதலிலேயே சஸ்பென்ஸ் வைத்து படம் முழுக்க பதைபதைப்பாக கொண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தென்றலின் குரலில் பேசி இருக்கும் ப்ரியா.D க்கு ரேடியோ உலகத்தில்  நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல தேர்ச்சி பெற்ற RJவைப் போல் கேட்பவரை வசீகரிக்கும் மாயாஜாலக் குரல்.  நடித்திருக்கும் விஷ்ணுவும் சௌமியாவும் நடிப்பு மோசம் சொல்வதற்கில்லை.



பரிசல்காரன் சொல்வது மாதிரி  ஒரு காபி கோப்பையோடு மழை பெய்யும் அந்தி மாலை நேரத்தில் காதுகளில் ஹெட்போனுடன் இந்தப் படத்தை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள்.  அவர்கள் இளையராஜாவை நேசிப்பவர்களாயிருந்தால் வெறியர்களாக மாறுவார்கள்.

இப்படத்தை இயக்கி இருக்கும் சூர்யபாரதி என் மகன்.... இல்லை..இல்லை... நான் சூர்யபாரதியின்  அப்பா!!!  வளரும் கலைஞனை வாழ்த்துவோம்.
 

Friday, July 3, 2015

இன்று நேற்று நாளை - நான் ரசித்தவை!

இன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன்.  படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்..  எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.  அப்போதிருந்தே கை பர பரவென்று இருந்தாலும் இன்னொரு முறை  பார்த்துவிட்டு எழுதலாம் என்று இருந்ததால் இத்தனை தாமதம் ஆகியிருக்கிறது.


படத்தின் கதையை எல்லோரும் கொத்துபரோட்டா போட்டுவிட்டதால் நாமும் இனி குதறவேண்டாம், பாவம் அதை விட்டுவிடுவோம்.  நான் இந்தப் படத்தில் என்ன ரசித்தேன் என்பதை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.


கால இயந்திரம் - அப்படி ஒன்று இருக்கிறதா?  இது மிகப்பெரிய கேள்வி.  கடவுள் இருக்கிறாரா என்பது மாதிரியான மெகா கேள்வி என்பதால் இதை நாம் ஆரய்ச்சி செய்து நேரத்தை வீணாக்காமல் அதை முழுமையாக அப்படியே நம்பினால்தான் என்ன  என்று தைரியமாய் உள்ளே இறங்கினால் பல பரவசங்கள் காத்திருக்கிறது.

படத்தின் முதல் முக்கால் மணி நேரங்கள் கொஞ்சம் மெதுவாக போனாலும் அனைத்து பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி பின்னல் வரப்போகும் முக்கியமான திருப்பங்களுக்கு லீட் கொடுக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாலும் வேகம் மட்டுப்படுவதை மன்னிக்கலாம்.  அதிலும் படத்தை சுவராசியப் படுத்தி நகர்த்தியதில் இயக்குனர் ரவிக்குமார் வென்றிருக்கிறார்.

அதுவும் கதாநாயகனின் ஜாதகத்தை வைத்து பரீட்சை எழுதும் ஜோசிய நண்பன் புலிவெட்டி சித்தரை (?) வைத்து காட்சிப் படுத்திய விதம் புதுமை.  வேலைக்குப் போகாமல் சொந்தத் தொழில் செய்ய ஒற்றைக்காலில் நிற்பதாக எழுதும்போது பாங்கில் மானேஜர் முன்பு ஒற்றைக்காலில் நிற்கும் கதாநாயகனை காண்பிக்கும்போது அங்குதான் ரவி நிற்கிறார் (இரண்டு காலிலும்தான்).

மோடி கண்டுகண்டிருக்கும் கனவுப்படி 2065 ஆம் ஆண்டில் உலகம் டிஜிட்டல் மயம் ஆகிவிடும் என்பதை ரவி குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.  ஒரு காட்சியில் நாய்க்கு கூட டிஜிடல் எலும்புதான் உணவு ஆகிறது.  மோடிக்கு இதன் மூலம் எதையோ சொல்ல வருகிறார் என்பது நமக்கு நன்றாக தெரிகிறது.  (எதையாவது பத்த வெச்சாத்தானே நல்லா இருக்கும்).  டாஸ்மாக் கட்டிடம் LIC கட்டிடம் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. (ஸாரி....அம்மா நான் ஒண்ணும் சொல்லலை).

ஜோதிடர் தேர்வில் ஒவ்வொரு டவுட்டாக கேட்டு ஒவ்வொரு ஆளாக அவுட் செய்யும் கருணாகரனின் அட்ராசிட்டி ஆரம்பித்திலேயே தொடங்கி சிக்சரும் போருமாக அடித்து ஆடி செம ஸ்கோர் பண்ணுகிறார்.

முடி ஏற்றுமதி செய்யும் கடையின் முதலாளி தலையில் முடி இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது ரவியின் குசும்பு தெரிகிறது.  கோயமுத்தூர் குசும்புன்னு சும்மாவா சொன்னாங்க.

கதாநாயகி மியா குண்டு கண்களும், குண்டு கன்னங்களும்... குண்டு...(போதும்..சென்சார் டிபார்ட்மென்ட் கத்திரியோட வர்றாங்க.)...அழகான ஐ போன் 6 தான் போங்க.  என்ன ஐ போன் மாதிரி கொஞ்சம் ஸ்லிம்மா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.  கதாநயகன் ஒரு ஏழை ( செங்கல் செட்டு )  என்பதை வித்தியாசம் காட்ட இங்கே அவன் பாயிலிருந்து எழ... அங்கே அவள் பெட்டிலிருந்து எழுகிறாள்.   இங்கே அவன் அடிபம்பில் தண்ணி அடித்து குளிக்கிறான்... அங்கே அவள் ஷவரில் குளிக்கிறாள்.  இங்கே ரெண்டு இட்லிக்கு ஒரு ஸ்பூன் சட்னி வைத்து தின்ன.. அங்கே ஒரு இட்லிக்கு நாலு வகை சட்னி வைத்து சாப்பிடுகிறாள். இவன் டூ வீலரில் (ரவியோட சொந்த வண்டிதானே) போக அவள் BMW காரில் போகிறாள்.  சூப்பர்...சூப்பர்.

லோக்கல் விஞ்ஞானி 'பழம் பார்த்தா' அறிமுகம்,,,,அசத்துகிறது.  ஒரு மிக்சியை ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு நக்கல் செய்யும் பெண்மணி.  சொன்னபடி கேட்கும் காரையே செய்யும் விஞ்ஞானிக்கு ஒரு மிக்சியை சரிசெய்ய நேரமில்லாமல் சட்னி அரைத்துக்கொடுக்கும் நிலைமை.  நல்ல முரண் நகை,  "மத்தியானம் மசாலா அரைக்கணும்.  கடையை சாத்திட்டு போயிடாத.. என்ன?"

அதே போல புலிவெட்டி சித்தர் எனும் போர்டை மறைத்தபடி துணி காயப்போடும் பெண்.
 "ஒரு நாளைக்கு நிக்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் வரத்தான் போகுது"  
"அப்படி வந்தா நான் புடைவையே போடமாட்டேன்.."
"அப்படியா...?"
"அய்ய...போ"
நல்ல குசும்பு அந்த காட்சி!.... கைதட்டல் அள்ளுது இந்த காட்சியில்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் குணாதிசயங்களோடு வடித்ததில்தான் அந்த பாத்திர வெற்றி இருக்கிறது.

புலி வெட்டியும் அவன் உதவியாளரும், பார்த்தாவும் அவன் வாக்கிங் ஸ்டிக்கும்,   வில்லனும் சொடக்கு போட்டால் பாயும் அவன் நாயும்,... இந்த படைப்புகள் அவ்வப்போது கதையின் திருப்பத்துக்கு உதவுகின்றன.

படத்தில் வரும் இரண்டு மூன்று புத்திசாலித்தனமான திருப்பங்கள்... படம் பார்ப்பவரை ஒரு வித்தியாசமான வேறு தளத்துக்கு இழுத்துச் செல்கிறது.
நாய் சங்கிலி ஒரு பைக்கின் ஸ்டேண்டில் மாட்டிக்கொள்வது,  பார்த்தாவையும் கதாநாயகனையும் கால இயந்திரத்தையும் இணைப்பது, பார்த்தா முதல் நாள் இயந்திரத்தை சோதனை செய்யவேண்டுமென்று தான் வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் போகும்போது யாரோ மறைந்திருந்து பார்ப்பது போல் தோன்ற எட்டிப்பார்ப்பது,  கார் ஆக்சிடென்ட் ஆவதற்கு முன் காரின் பின்னால் முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டு இருவர் காரை துரத்துவது ... இவையெல்லாம் பின்னால் வரப்போகிற காட்சிகளில் அட போட வைக்கிற ட்விஸ்ட்க்கான பேஸ்.

இந்தப் படத்தில் இயக்குனரின் திறமை எங்கு பளிச்சிடுகிறது என்றால் அவரின் கச்சிதமான தேர்வுகள்தான்.  நடிகர் தேர்வு ......எல்லோருமே படத்துக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக செய்கிறார்கள்.  புலிவெட்டி சித்தராக வரும் கருணாகரன், மியாவின் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷ், விஞ்ஞானியாக வரும் கார்த்திக், வில்லனாக வரும் சாய் ரவி, எதிர்கால விஞ்ஞானியாக வரும் ஆர்யா இப்படி நடிகர்கள் எல்லோரையும் பொருத்தமாக தேர்வு செய்தாலே பாதி வெற்றிதான்.

ஆர்ட் டைரக்டரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.  கால இயந்திர டிசைன்,  பார்த்தாவின் ஆராய்சிக்கூடம், ஆர்யாவின் ஆராய்சிக்கூடம், பழங்கால தவமணிதேவி நகைக்கடை, புலிவெட்டி ஆபீஸ், வில்லனின் ஆபீஸ் என எல்லா இடங்களையும் அட்டகாசமாக நம்பகமாக செட் போட்டிருக்கிறார்.  இவருடைய உழைப்புக்கு  உதாரணம்,  புலிவெட்டி சித்தரின் போர்ட்.  ஒரு குண்டு பல்ப்,  எப்பவோ போட்ட மாலை,  காக்கா போய் வெச்ச ஆய், பழைய சாயம் போன இத்தனை விஷயங்களும் கொண்ட  போர்ட் அது.   உண்மையில் கலை இயக்குனரின் பேர் சொல்லும் போர்ட்தான் அது.

படத்தின் வசனங்கள் ...படத்துக்கு மிகப்பெரிய பலம்.

உங்கப்பா கேள்வின்னு கேட்டாலே பதில் தெரியாது எனக்கு.

inteligents எப்பவுமே அமைதியாத்தான் இருப்பாங்க.. சிலநேரம் ஒண்ணும் தெரியாதவங்களும் அமைதியாத்தான் இருப்பாங்க.

புளியம்கொம்புதான் பிடிப்பாங்க... நீ புளியமரத்தையே பிடிச்சிட்ட..

நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?  ஆமா பாஸ் ஒன் சைடு.  நான் அவரைக் கேட்டேன்.

இப்படி படம் நெடுக அங்கங்கே புன்னகைக்க வைக்கும் ஒன்லைனர்கள்.

இயக்குனரை ஞாபகப்படுத்தும் காட்சிகள்..

கால இயந்திரத்தில் பின்நோக்கி காதலியுடன் சென்று காதலி பிறப்பதையும் அந்த குழந்தையை அவளே கையில் வாங்கி முத்தமிடுவதும் அட்டகாசமான காட்சி.

கதாநாயகன் காரும் பார்த்தாவின் காரும் ஆக்சிடென்ட் ஆகி கிடக்கும்போது பார்த்தா எதுவோ சொல்ல புலிவெட்டி கிண்டலாக ரைட்டு என்று சொல்லும்போது காரின் சக்கரம் ரைட் சைடு திரும்புவது.

அம்மாவின் காணாமல் போன கண்ணாடி திரும்ப கிடைக்கும் காட்சி... நல்ல ஐடியா.

பார்த்தாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்க பார்க்கப் போகும் கதாநாயகன் அங்கிருக்கும் டாக்டரிடம் "டாக்டர்... பழம் ..." என்று இழுக்க... அதை டேபிளில் வை என்று சொல்வது.

ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டு வரும் பார்த்தாவிடம் நடந்ததெல்லாம் தொண்டைத் தண்ணி வரள சொல்லிவிட்டு பார்த்தாவை பார்க்க, அதுவரை சீரியஸாக கேட்டுக்கொண்டிருந்த பார்த்தா "ஆமா நீங்க யாரு?'  என்று கேட்பது.

தவமணிதேவி நகைக்கடையில் வேலை செய்யும் பையனைப் பார்த்து "டேய் நம்ம அதர்வா" என்று கிண்டல் செய்வது,  அங்கிருந்து தப்பி ஓடுவது,

டிவி ஆட்கள் புலனாய்வு செய்யப்போய் அவர்களே மாட்டிக்கொள்வது

புலிவெட்டி டைம் மெசினில் போய் கணக்கு வாத்தியாருக்கு கொட்டு வைப்பது,

முதலில் ஒரு ஷேர் மார்கெட் பற்றிய மீட்டிங்கும்,,,, அதே மீட்டிங்கை முற்றிலும் வித்தியாசமாக மறுபடியும் காட்டுவது,

பொண்ணுக கிட்ட சொல்றதும் ஒண்ணு... facebookல போடறதும் ஒண்ணு..

மியாவை ஒரு காட்சியில் சாக அடித்து... இன்னொரு காட்சியில் உயிர்ப்பிப்பது...

முன்டாசுபட்டி சினிமா பைத்தியம் முனிஸ்காந்துக்கு பதவி உயர்வு கொடுத்து இதில் ஒரு நடிகராக்கியிருப்பது...

எல்லாவற்றையும் அழித்துவிட்டு இறுதியில் கல்யாணத்தில் முடிப்பது...

இவை அனைத்துமே இயக்குனரின் திறமைக்கு சாட்சி சொல்லும் காட்சிகள்தான்.  வெல்டன் இயக்குனரே.... கழுத்தை காலியாக வையுங்கள்... நிறைய வெற்றி மாலைகள் காத்திருக்கிறது...!!!


Friday, June 12, 2015

ஹிப்ஹாப் தமிழனின் மற்றுமொரு வெற்றி....இன்று நேற்று நாளை.


மிழ் சினிமா உலகில் புதுவிதபாணியில் வெளியாகவிருக்கிற  நண்பர் ரவிக்குமாரின் இன்று நேற்று நாளை படப்பாடல்கள் இன்று சூரியன் fmல் வெளியிட்டார்கள்.

ஹிப்ஹாப் தமிழன் இசையில் முதன் முதன்முதலாக இசை அமைத்து இரண்டாவதாக வெளியாகிற படம்.  கொஞ்ச நாட்களுக்குமுன் இந்த படத்தின் 'ஐபோன் 6 நீஎன்றால்....' பாடல் ப்ரோமோ வந்து படத்தின் மற்ற பாடல்களைப் பற்றி எதிர்பார்ப்பு எகிறவைத்தது.

'இன்று நேற்று நாளையா...' எனத்தொடங்கும் ஷங்கர் மகாதேவனின் குரலில் தொடங்குகிற பாடல் இளையராஜாவின் எண்பதுகளில் ஒலிக்கும் சோகப் பாடல்களைப்போல இருக்கிறது.  இடையிடையே வருகிற சங்கர் மகாதேவனின் ஆலாபனையும் ஒட்டிவருகிற வீணை இசையும் மனதை என்னவோ செய்கிறது.    காதல் பிரிவில் பாடுகிற பாடலில் சோகம் இழையோடுவது பாடலுக்கு அழகைத் தருகிறது.

அடுத்து ஹிப்ஹாப் தமிழனின் குரலில்  'ஐபோன் 6 நீஎன்றால் நான்தாண்டி செங்கல் செட்டு...'  என்கிற பாடல்.   இது ஆதியின் வழக்கமான ஸ்டைலில் போடப்பட்ட பாட்டு.  'நான் கட்டங்காப்பி.. நீ காபிச்சீனோ.. நமக்குள்ள எப்படி செட்டாகும்ன்டி..." என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.  காதலர்களை வெகுவாகக் கவரப்போகும் பாடல் இது.

அடுத்து வருகிறது.. 'காதலே..காதலே..' பாடல்.  ஷங்கர் மகாதேவனும் பிரேமலதாவும் இணைந்து பாடியிருக்கிற டுயட்.  பிரேமலதாவின் குரல் பிரெஷ்ஷாக இருக்கிறது.  ஷங்கர் மகாதேவன் இடையிடையே தனது ஆலாபனையில் பாடலை வேறு தளத்துக்கு கொண்டு சென்று விடுகிறார்.  திரும்பத் திரும்ப கேட்கவைக்கும் பாடல் இது. இசையும் பாடல்வரிகளும் அருமையாக உள்ளது.  இந்தப் பாடலுக்கான காட்சிகள் எப்படி இருக்கும் என்று இப்போதே கற்பனைகளை உதிக்க வைக்கிறது.

அடுத்து ஒரு குதூகலப் பாட்டு... 'நானேதான் ராஜா...நானேதான் மந்திரி...'.. அந்தோணி தாஸ் பாடிய பாடல்.  அவருடைய வித்தியாசமான குரல் மனசுக்குள் இறங்கி அடிக்கிறது.  துள்ளளிசையும் மனசுக்குள் புகுந்து ஆட்டம் போட வைக்கிறது.


பாடல்கள் நன்றாக வந்ததில் இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் உழைப்பும் இசையமைத்த ஆதியின் உழைப்பும்  தெரிகிறது.  பாடல்கள் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகிறது. வருகிற விளம்பரங்களும் வித்தியாசமானதாக இருக்கிறது.  அதுவும் காந்தியுடன் கதாநாயகன் எடுக்கிற செல்பி விளம்பரம் அட்டகாசம்.  சீக்கிரம் படத்தை காண்பியுங்கள் டைரக்டர் சார்.    





 

Wednesday, June 10, 2015

காக்காமுட்டை - என் கதையின் காப்பி?

இதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.
'பீ'ட்சா- சிறுகதை.

இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒருநாள் நான் என் மகன்களோடு பீட்சா கடைக்கு சென்றிருந்தோம்.  அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது சாதாராணமாகச் சொன்னேன்.

"இந்தக் கடைக்கு யாராவது சேரிப்பையன் வந்தான்னா  உள்ளே விடுவாங்களா?"

இந்த ஒன்லைனைப் பிடித்துக்கொண்டு ஒரு வாரம் கழித்து இந்தக் கதையை எழுதிக்கொண்டு வந்து காட்டினான்.  நன்றாகவே இருந்தது.  முடிவு மட்டும் வேறு மாதிரி எழுதி இருந்தான்.  நான் சிற்சில மாற்றங்கள் சொன்னதும் ஒரு மாதம் கழித்து மாற்றி எழுதிக் கொண்டுவந்து காட்டினான்.

இதை குறும்படமாக எடுக்கப்போவதாக சொன்னான்.

"இந்த மாதிரி கதைக்கு பீசா கடையில் படம் பிடிக்க நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.  எதற்கும் கேட்டுப் பார்" என்றேன்,

மற்றொருமுறை அந்தக் கடைக்குப் போயிருந்தபோது படம் பிடிக்க அனுமதி கேட்டேன்.

அவர்களோ "நிறைய பார்மாலிடீஸ் இருக்கு சார்.  அதுவுமில்லாம ஒருநாளைக்கு வாடகையா இருபத்தஞ்சாயிரம் ரூபா கறந்துடுவாங்க.." என்றார்.

இருபத்தஞ்சாயிரமா.... சரி இது வேலைக்காகாது என்று என்று கதையை ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேறு வேலைய பாக்க போயிட்டோம்.  சரி எழுதியது  வீணாப் போகக்கூடாது என்று எண்ணியும் பையனோட முயற்சியை ஊக்குவிக்கும் விதமாகவும்  அவனோட முதல் கதையை என்னோட பிளாக்கில் போட்டுவிட்டேன்.

அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.  அவனுக்கும் ரொம்ப திருப்தியாக இருந்தது.

ஒரு மாதம் முன்பு காக்கா முட்டை படத்தின் ட்ரைலர் பார்த்தபோது டக்கென்று மண்டையில் இடித்தது.  அப்போதே என் முகநூலில் போட்டிருந்தேன்.

நேற்று படம் பார்த்தபோது என்னோட அனுபவம் வேறு மாதிரி இருந்தது.  இந்தப் படத்தை 'பீ'ட்சா கதையின் காப்பி என்று சொல்ல என் மனம் ஒப்பவில்லை.  பல விஷயங்கள் ஒத்துப்போன போதும் காப்பி என்று சொல்வது சற்று அபத்தமாகவே பட்டது.

இனி படத்தைப் பற்றி..

படம் ஓப்பன் பண்ண உடனே.. இரவு... தூங்கும் சிறுவன் .. அவனது டிராயரில் இருந்து கொப்பளிக்கும் மூத்திரம்.  விழித்து எழும் சிறுவன்.... மூத்திரம் மெல்ல மெல்ல ஊர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவை அடையப்போகிறது.  சட்டென்று தன் சட்டையைக் கழட்டி அணை போடும் சிறுவன்.  எக்சலேன்ட்.

இந்தமாதிரி ஒரு {மூத்திர) ஒப்பனிங் சீன் இதுவரை எந்தப் படத்திலேயும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன்.  இந்த சீனை வைக்க ஒரு ரசனையுள்ள இயக்குனரும் அதை ஒத்துக்கொள்ளும் தயாரிப்பாளரும் கிடைக்கவேண்டும்.

சிறுவர்களின் அம்மா... அவளுக்கொரு பிரச்சினை.. சிறையில் இருக்கும் கணவனை பெயிலில் எடுக்கவேண்டும்.  கணவனின் தாயார்... பையன் மேல் அன்பு இருப்பினும் அவனைப் பார்க்க ஜெயிலுக்கு போக மறுக்கும் எதார்த்தம்.

"அத்த வரன்னுதான் சொல்லிச்சு... நான்தான் வேணாம்னுட்டேன்.." என்று சமாளிக்கும் பையனின் அம்மா.  எதார்த்தம் சொட்டுகிறது.  ஏரியாவுக்குள் திருடும் திருடர்கள், பீட்சாக்கடை முதலாளி,  குப்பத்துப் பசங்க.  பணக்கார வீட்டுப் பையன்,  பழைய இரும்புக்கடை முதலாளி, அவரின் மனைவி என்று எதார்த்தத்துக்கு நெருக்கமாய் பாத்திரங்கள்.

பொம்மைக் கடிகாரத்தை ரிப்பேர் செய்யக்கொடுப்பது,  நாட்டு நாயை இருபத்தஞ்சாயிரம் விலை சொல்வது, 'எச்சிப் பீசாவையா தின்னப் போற" என்று விடுவிடுவென நடப்பது,  'அம்மா இன்னைக்கு இவன் படுக்கையில மூத்திரமே போகல... பெரியவன் ஆயிட்டான் போல இருக்கு..'  என்று சொன்னதும் அந்தச் சிறுவனின் எக்ஸ்ப்ரஷனும் அதற்கு அவனின் அம்மா கொடுக்கும்    எக்ஸ்ப்ரஷனும்  அள்ளுகிறது.

பாட்டி செய்கிற தோசைப் பீட்சாவும், அதை அந்த பசங்க தின்ன மறுத்து கிண்டல் செய்வதும் இறுதியில் ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு என்று சொல்வதும் கிளாசிக்.

பீட்சாக்கடையில் அசோக் அடி வாங்குவது,  அப்பப்ப கிருஷ்ணமூர்த்தி முதலாளியை கலாய்ப்பது..சிறுவர்கள் தண்ணி அடித்து மட்டை ஆகும் டாஸ்மாக் ஆசாமிகளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்று இடையிடையே காமெடி சிரிக்க வைக்கிறது.

பசங்களோட நடிப்பு சான்சே இல்ல.  கொஞ்சம்கூட ஓவர் ஆக்டிங் இல்லாம சரியா பண்ணி இருக்காங்க.  என்ன அடி வாங்கும்போது கொஞ்சம்கூட எதுத்துப் பேசாம வர்றதுதான் உறுத்துது.

அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம்தான்.  வளர்ந்து வரும் நடிகை இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடிக்க தில் வேண்டும்.  அவருடைய அழகே இந்த பாத்திரத்துக்கு கொஞ்சம் நெகடிவாக இருப்பதை மறுக்க முடியாது.

கிஷோரின் எடிட்டிங் சூப்பர். ஆயா இறந்து கிடக்கும்போது  நாய்க்குட்டி சுகமாக தூங்கும் ஒரு ஷாட்டை  இணைத்திருக்கும் நேர்த்தியில் தெரிகிறது கிஷோரின் இழப்பு.

இடையில் கொஞ்சம் மெதுவான ஓட்டமும்... படத்துடன் ஒட்டாத பின்னணி இசையுமே இந்தப் படத்தின் பலவீனங்கள்.   மற்றபடி படம் அருமை!

இந்தமாதிரி நிறைய படங்கள் வரவேண்டும்.. தமிழ் சினிமா உலக சினிமாவுக்கு பக்கத்தில் பார்க்க அழகாகவும் கௌரவமாகவும் இருக்கிறது.  வெல்டன் மணிகண்டன்.  தமிழ் சினிமா வரலாற்றில் உங்கள் பெயரை அழுத்தமாக பதித்திருக்கிறீர்கள்.  அதை அழியாமல் பார்த்துக்கொள்ள இன்னும் நல்ல படங்களை கொடுக்கவும்.

பெங்களூரில் காலேஜ் படிக்கப் போயிருக்கும்  என் பையனுக்கு போன் பண்ணிச் சொன்னேன்...

"படத்தோட கதை உன் கதை மாறியே இருந்தாலும் always geniuses thinks same. இருந்தாலும்  ஒரு ஒன்லைனை எப்படி ஒரு திரைக்கதையாக மாற்றும்  வித்தையை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவே இதை எடுத்துக்கோ".

 

Monday, September 15, 2014

‘பீ’ட்சா - சிறுகதை.

இது எனது மகன் சூர்ய பாரதி எழுதிய முதல் சிறுகதை.  போன வருடம் ஒரு போட்டிக்காக எழுதியது.  இதுதான் அவனது முதல் முயற்சி.  படித்து பார்த்து அவனை ஊக்குவியுங்கள்.

‘பீ’ட்சா
                                                                      எழுதியவர்:அ.அ.சூர்யபாரதி.



    பள்ளி கோடை விடுமுறையின் முதல் இரண்டு நாட்களே வெயில் சஹாராவில் இருப்பது போல் இருந்தது.  வீட்டில் இருந்தால் மொட்டை வெயிலில் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு சுகமாக இருந்தபோதிலும் அப்பா அம்மாவிற்கு ஏனோ பிடிக்கமாட்டேன் என்கிறது.  அப்பா அவ்வப்போது கட்டிட வேலைக்குப் போவதும் கிடைக்கிற காசில் மாலை நேரத்தை முழுமையாக போதையில் கழிப்பதுவுமே அவருடைய முழுக் கடமையாக இருந்தது. அம்மாவும் சித்தாள் வேலைக்குப் போவதால் ஏதோ பிரச்சினை இல்லாமல் ஓடுகிறது.

அப்பா இன்று வக்கீல் வீட்டில் மழைநீர்க் குழி தோண்டுவதற்காக போனார். கைவேலைக்கு என்னையும் அழைத்தார்.  சாயந்திரம் காசு கொடுப்பதாக இருந்தால் மட்டுமே வருவேன் என்கிற நிபந்தனையோடு நானும் போயிருந்தேன்.  எப்போதும் இந்த மாதிரி விடுமுறை காலங்களில் வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து வைத்துக்கொள்வேன்.  புத்தகம் நோட்டு பென்சில் பேனா வாங்க உதவும்.

     எனக்குத் தெரிந்தவரை வீடு என்பது ஒற்றை அறைதான். எங்கள் வீடு அப்படித்தான் இருக்கும்.  சமைக்கவென்று அடுப்பும் புத்தகங்கள் வைக்க ஒரு பெட்டியும், துணிகள் வைக்க ஒரு பழைய பீரோவும், கலைஞர் டிவி வைக்க இடமும், மூன்று பேர் கால்நீட்டி படுக்க என அந்த ஒற்றை அறை போதுமானதாக இருந்தது. என் நண்பன் குமார் வீடு கொஞ்சம் பெரியது.. சமைக்கவென்று தனி அறை உள்ளது.

அப்பா குழி தோண்ட நான் மண்ணள்ளி வெளியே கொட்டிக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். வக்கீல் வீடு பெரியதாக இருந்தது.  நிறைய அறைகள் இருக்கும் போல் தெரிந்தது.  அங்கே என்னுடைய வயதில் ஒரு பையனும் அவனை விட இரண்டு வயது குறைந்த ஒரு பையனும் இருந்தனர். அவர்கள் இருவரும் எதன் பொருட்டோ சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த பங்களாக்கார அம்மா அவர்களை அதட்டிக் கொண்டிருந்தாள்.  நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்த போது,  “ராகேஷ்.. அவனுக்கு ஒரு பீஸ் கொடுடா...”-என்றாள்.
“எனக்கு வேண்டாம்..” என்று உடனே மறுத்தேன்.  இருந்தபோதும் நாக்கில் எச்சில் ஊறியது.
“டே சாப்பிடு.  இது வேறொண்ணும் இல்ல  பீட்சா தான்”

பங்களாக்காரம்மா அப்படி சொன்ன போதிலும் அந்த குண்டுப் பன்றிகள் எனக்கு கொடுப்பதாக இல்லை.

“போங்க மம்மி எனக்கே பத்தாது.  இதில் கண்டவனுக்கு எல்லாம் நான் கொடுக்க மாட்டேன்.  வேணா ரமேஷை கொடுக்கச் சொல்லுங்க.”

“நோ.. நோ.. நான் கொடுக்கமாட்டேன்...”

“ராகேஷ்.. மைன்ட் யுவர் வேர்ட்.  ஒய் யூ ஆர் பிகேவ் இண்டீசன்ட்..”-அந்த அம்மா அவர்களை திட்டியது எனக்கு என்னவோ போல் இருந்தது.

இந்த சண்டையைப் பார்த்து என் அப்பா சத்தம் போட்டார்,

“இதெல்லாம் வேணாம்மா.  டே போடா போய் வேலையைப் பாரு”

நான் அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு சென்றேன். அந்தப் பையனின் பேச்சு எனக்கு கஷ்டமாய் இருந்தது.  எனக்கு டிவியில் வருகிற பீட்சா விளம்பரம் மனதில் ஓடியது.  இதை இது வரை நான் சாப்பிட்டதே இல்லை.  இது என்ன ருசியில் இருக்கும் என்றே எனக்கு தெரியாது.
எனக்கும் அதை ருசிக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து கட்டிவைத்திருந்த நாயின் அருகே ஒரு பீட்சா துண்டு வந்து விழுந்தது.  நாய் அதை முகர்ந்து பார்த்துவிட்டு ஒரு ஓரமாக போய் படுத்துவிட்டது..

சுற்றும் முற்றும் பார்த்தேன் ஒரு நாயைத்தவிர வேறு எந்த நாயையும் காணவில்லை. அந்த பீட்சா துண்டை எடுத்தேன். அந்த நாய் என்னையே கொஞ்சம் முறைத்த மாதிரி பார்த்துக்கொண்டிருந்தாலும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பீட்சா பார்க்க ஒரு காய்ந்த பன்னு போல் இருந்தது.  குடைமிளகாய் நிறைய போட்டு சிவப்பு கலரில் எதையோ ஊற்றி வைத்திருந்தார்கள். அதில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை துடைத்தேன். கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டேன். நாக்கில் பட்டதும் அது என்னை வேறொரு உலகுக்கு அழைத்து சென்றது.
நாக்கில் ஒருவித புது உணர்வு,.. இனிப்பும் காரமும் கலந்து ஒரு புதிய சுவையை அது கொண்டிருந்தது. கொஞ்சம் வழவழப்பாய் நாக்குக்குள் வழுக்கி சென்றது. . பன்னும் இல்லை.  மசாலா கொஞ்சம் தூக்கலாய் உள்நாக்கில் ஒட்டிக்கொண்டது.. இதுவரை ரேசன் அரிசியில் இட்லியும் தொசையுமாக தின்று சலித்துப்போன எனக்கு இது ஒரு புது சுவையாய்  இருந்தது.
எங்கிருந்தோ வந்த அந்த குண்டுப்பன்றி என் கையிலிருந்த தேவார்மிதத்தை பிடுங்கி கீழே எறிந்தான்.

“ஹேய் இட்ஸ் வெரி டர்ட்டி னா ??? ” என்று கூறினான்.

நான் மண்ணில் கிடந்த பாதி துண்டு பீட்சாவை ஏக்கத்துடன் பார்த்தேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமப் போச்சே...

ஆதங்கத்துடன் அவனைப் பார்த்தேன். 

“இது என்ன விலை?  எங்கே கிடைக்கும்?” என்று கேட்டேன்.

இது ஐநூறு ரூபாய்.  டொமினோஸ்லதான் கிடைக்கும்...” என்று இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தான்.

“ஐநூறு ரூபாயா...?” என வாயைப் பிளந்தேன். 

“சின்ன பீஸ் நூத்தம்பது ரூபாய்க்குகூட கிடைக்கும்.”

“இந்தா இதை வெச்சுக்க.  இதுல கடையோட அட்ரஸ் இருக்கு. போன் பண்ணாக்கூட வீட்டுக்கே வந்து தருவாங்க..” என்று ஒரு நோட்டீசை நீட்டினான்.  அதில் ஒவ்வொரு பீட்சாவும் என்ன விலை என்று போட்டிருந்தது.  கலர் கலராக பீட்சாவின் படங்கள் போட்டிருந்தன.  அந்த படத்தைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறியது.

அதற்குமேல் எனக்கு வேலை ஓடவில்லை. நான் பீட்சா சாப்பிட்டே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்..

அன்றிலிருந்து என் பீட்சா வேட்டை ஆரம்பமானது!

அப்பாவிடம் அன்றே வீட்டுக்குப் போகும் வழியில் கேட்டேன்.

“அதென்ன உனக்கு அவ்ளோ அவசியமா??  அதெல்லாம் பெரிய பணக்காரவுங்க சாப்பிடறது.  அதுக்கெல்லாம் நாம ஆசைப்படக்கூடாது கண்ணு.” என்று கட்டை குரலில் சொன்னவுடன் நான் சோகமானேன்.. இருந்தபோதும் வாங்கித் தருவதாக சொன்னார்.  ஆனால் கொஞ்ச நேரத்தில் தண்ணி போட்டுக்கொண்டு தள்ளாடியபடிதான் வீட்டுக்கு வந்தார்.  என்னுடைய அன்றைய சம்பளமும் போச்சு.

அம்மாவிடம் எனக்கு நேர்ந்த அவமானத்தை சிவாஜியை மிஞ்சும் வகையில் விவரித்தேன். .”பாவம் புள்ளை “ என்று சொன்னவாறே அஞ்சரைப்பெட்டியை திறந்தார். என் முகம் முழுவதும் மின்மினிப்பூச்சிகள் உட்கார்ந்ததைப் போல ஆயிற்று. பணம் எடுத்து கையில் கொடுத்து “தின்று வா மகனே” என்று அம்மா சொல்லுமென பார்த்தேன்,..

அவர் நான் அங்கு இருப்பதையே பொருட்படுத்தாமல் கடுகு பொறிக்க ஆரம்பித்துவிட்டார்..
அவர் என்னையே வறுத்தது போல் இருந்தது. மறுபடியும் அவமானம்! 

“என்னம்மா  நீயாவது வாங்கித் தாயேன்..” என்று கெஞ்சினேன்.  பல விதமான போராட்டங்களுக்குப் பிறகு அம்மா ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினார்.

“இது பத்தாதும்மா..”

“இதுக்கு என்ன கிடைக்குமோ அதை வாங்கித் தின்னு.  நாமெல்லாம் அதுக்கு ஆசைப் படக்கூடாது கண்ணு.”

அந்த ஐம்பது ரூபாயை என் சட்டை பையில் போட்டுவைத்துக்கொண்டேன்.. மறுநாள் அப்பாவோடு வேலைக்கு போக மறுத்து வீட்டிலேயே இருந்தேன். பக்கத்து வீட்டு செம்புலியிடம் இந்த மேட்டரை சொன்னேன்.  அவனுக்கும் அதை சாப்பிடுவதில் ஆர்வம் வந்தது.

அந்த ஐம்பது ருபாய் போதாது என்பதால் மீண்டும் அம்மாவிடம் போய், “நூறு ரூபாய்...”  என்று தாழ்ந்த குரலில் கேட்டேன்.

“அந்த ஐம்பது ரூவையைக் கொண்டா இங்கே.  இந்தப் பணம் இருந்தா ஒரு வாரம் சோத்துக்காவும்..  பீட்சாவாம் பீட்சா... பேரைப் பாரு. பீ மல்லுன்னு...”.

அப்படியே வாயைமூடிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்.

மீதிப் பணத்திற்கு என்ன செய்வது...???? என் மண் உண்டியலை குலுக்கிப் பார்த்தேன். காதில் தேன் வந்து பாய்கிறதென்று பாரதி சொன்னது அப்போதுதான் புரிந்தது.

வீட்டின் பின் புறம் அதை எடுத்துசென்று சத்தமின்றி உடைத்தேன்.. பல சில்லறைகளும் சில பணத் தாள்களும் இருந்தன... எண்ணிப்பார்த்தேன் ஒரு ஐம்பது ருபாய் தேறியது... அனைத்தையும் என் கர்ச்சீப்பில் போட்டு முடிந்துவைத்தேன்..

மதியம் அம்மா வைத்துவிட்டுப்போன சாம்பார் இருந்தது. நான் நாளை சாப்பிடப்போகும் அமுதத்திற்கு இதெல்லாம் கால் தூசு என்று இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. வேண்டா வெறுப்பில் சாப்பிட்டேன்.

பிறகு என் ஜாமென்ட்ரி பாக்ஸில் மறைத்துவைத்திருந்த இருபது ரூபாய் ஞாபகம் வந்தது. பார்த்தால் அதில் பத்து ருபாய்தான் இருந்தது.

அன்று மாலை அப்பா அதிசயமாய் தண்ணி போடாமல் வந்தார்.  அவரிடம் ஒரு பிட்டைப் போட்டு பார்த்தேன்.

“நாளைக்கு ஒரு பக்கம் ஒரு சில்லறை வேலை இருக்கு.  நீயும் செம்புலியும் வாங்க.   கொஞ்ச நேரத்து வேலைதான்.  முடிச்ச உடனே ஆளுக்கு அம்பது ரூவா தாரேன்.  போய் என்ன வேணா சாப்பிடுங்க..” என்ற ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்.

“உன்னை நம்ப முடியாதே அப்பா..  எனக்கு காசு குடுக்காம ஆட்டைய போட்ருவியே...”

“அப்படியெல்லாம் பண்ணமட்டேண்டா... அப்பாவை நம்பு.  “

அப்பா சொல்வதில் ஒரு விஷயம் பிடித்தது.  செம்புலியும் நானும் வேலைக்குப் போனால் எனக்கு பணம் கொடுக்காமல் விட்டால் கூட செம்புலிக்கு கொடுக்காமல் விடமாட்டார்.  ஆகையால் எப்படியும் ஐம்பது ரூபா உறுதியாகக் கிடைக்கும்.  இப்போதுதான் கொஞ்சம் தெம்பாக இருக்கிறது.
நாளைக்கு பீட்சா சாப்பிடப்போவதை நினைத்தால் எனக்கு உடம்பை குலுக்கி கைகால்களை உதறிவிட்டு ஒரு குத்தாட்டம் போட வேண்டும் போல் இருந்தது.

உடனே செம்புலி வீட்டுக்குப் போய் சொல்லிவிட்டு வந்தேன். .

அன்று இரவு நான் தூங்கவுமில்லை அதற்கு முயற்சியும் செய்திடவில்லை. கலர் கலராய் பீட்சாக்கள் பல என் கனவில் உலா வந்த வண்ணம் இருந்தது. ஒரு பீட்சாவை பிடிக்கச்சென்று அருகே இருந்த அம்மாவின் கண்களில் கையை விட்டேன். தூக்கமே வரவில்லை. அதுவே என் வாழ்க்கையின் மிக நீளமான இருள்.

மறுநாள் விடிந்தது. இதுவரை இவ்வளவு நேரத்தில்  தேர்வன்றுகூட எழுந்ததேயில்லை. விரைவாக குளித்து முடித்து  நல்ல பேன்ட் போடுவதற்காக பழைய பீரோவை அலசினேன். என் சொந்தக்காரன் ஒருவன் கொடுத்திருந்த லேசான கிழிசலோடு இருந்த  பளிச்சிடும் சிவப்புக்கலரில் ஸ்கூல் பேன்ட் மட்டுமே இருந்தது.

வேறு வழியின்றி அதையும். அம்மா ஒருமுறை தான் வேலை செய்யுமிடத்தில் கொடுத்திருந்த ஒரு பழைய பனியனையும் போட்டுக்கொண்டேன். தொளதொளவென்று இருந்தது.
செம்புலியும் நேரமே வந்திருந்தான்.  அப்பாவோடு வேலைக்குப் போனோம்.  மதியம் வரைதான் வேலை இருந்தது.  அப்பா வீட்டுக்காரிடம் பணம் வாங்கிய பிறகு  எங்களுக்கும் உடனே  கொடுத்துவிட்டார்.  யப்பா என்னால் நம்பவே முடியவில்லை.

அங்கேயே கை முகம் கழுவி தலையை நன்றாக தண்ணீர் விட்டு ஒதுக்கிவிட்டு கிளம்பிவிட்டோம்.    
பஸ்சில் போனால் எப்படியும் ஐந்து ரூபாயேனும் கொடுக்கவேண்டுமென்பதால் நடந்தோம்... 
வேர்த்து ஒழுக சட்டையெல்லாம் நனைந்து இருந்தது.  காதோரம் வியர்வை வழிந்து கழுத்தில் இறங்கி ஓடியது. அந்த கடையை நெருங்கினோம். கடையின் பெயர் போட்ட பலகை கம்பீரமாக முகப்பில் நின்றுகொண்டிருந்தது. அதன் கண்ணாடிக்கதவுகள் அனைத்திலுமே பீட்சாக்களின் வண்ணவண்ணப் படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தது. உள்ளே போவோர் அனைவருமே இங்கிலீசில் பேசிய  வண்ணம் இருந்தனர்.. கலர் கலர் கார்கள் தங்கள் டிரைவர்களுடன் தூங்கிக்கொண்டிருந்தது.

செம்புலியைப் பார்த்தேன். அவனும் ஆடை வடிவமைப்பில் சிறந்தவனென்று அப்போதுதான் தெரிந்தது.

“டேய் உள்ள விடுவாங்களாடா...” என்று  முதல் குண்டைத் தூக்கிப் போட்டான்.

“வாடா பாத்துக்கலாம்...” என்றபடி, கடையின் முதல் படியை தாண்டி கதவைத்திறந்தேன். செக்யூரிட்டி போல இருந்தவர் உள்ளே விட மறுத்தார்.  நான் பாக்கெட்டில் இருந்த காசைக் காட்டியதும் உள்ளே விட்டார்.  நாங்கள் உள்ளே சென்று ஒரு ஓரமாக இருந்த மேசையில் அமர்ந்துகொண்டோம்.

உள்ளே பார்த்தால் பெண்களே அதிகமாக இருந்தனர். அவர்கள் அனைவருமே  காலோடு ஒட்டியிருந்த பேண்ட்தான் அணிந்திருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். அவர்களை அவ்வாறு சொல்வதைவிட கொழுத்த பன்றிக்குட்டிகள் என்று சொல்வதே சரி.

எல்லோருக்குமே தமிழ் தெரியாதது மாதிரி ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தனர். எங்களை கண்டதும் அவர்கள் ஏனோ முகம் சுழித்தனர்.  தெருவில் போகிற நாய் ஒன்று உள்ளே வந்ததைப் போன்றே அனைவரும் நினைத்த மாதிரி எனக்குப் பட்டது. 

ஒரு பெண்மணி தொப்பி போட்ட ஒருவரை அழைத்து ஏதோ சொன்னார்.  அவர்  வேகமாக எங்களை நோக்கி விரைந்தபடி,”தம்பி என்னப்பா வேணும்.?” என்று இறைந்தபடி கேட்டார்.

“அண்ணா நாங்க பீட்சா சாப்ட வந்தோம்னா..”

“இல்லப்பா இங்க பீட்சாலாம் விக்கிறதில்ல..போங்க..”

“ஏண்ணா போய் சொல்றீங்க... அதோ எல்லாரும் சாப்பிடுறாங்க....”

“இல்லப்பா இன்னிக்கு பீட்சா முடிஞ்சிது... போங்க”

என்று தன் குரலை உயர்த்தினார் அவர்.

அப்போது தன் குடும்பத்துடன் உள்ளே நுழைந்த ஒரு சிங்கு மாமாவை எங்களிடம் பீட்சா முடிந்துவிட்டதென்று சொன்னவர்...” வெல்கம் சார்” என்று வரவேற்றார்.

“பீட்சா முடிஞ்சிருச்சின்னு சொன்னீங்க.. அப்புறம்  எதுக்கு அவங்கள மட்டும் உள்ள விட்டீங்க????” என்று நானும் குரலை உயர்த்தினேன்.

அவர் ‘உச்’ போட்டுவிட்டு பின்னால் திரும்பி தனது மேனேஜரை ஏக்கத்துடன் ஒரு லுக்கு விட்டார்.
அவர் வெளியே தள்ளும்படி சைகை செய்ததும்...

“எந்த ஏரியாடா நீங்க? ஆ” என்று என் தோளில் கைவைத்து தள்ளினார்.

“ண்ணா..... மேல கைவைக்கிற வேலை எல்லாம்  வெச்சுக்காதீங்கண்ணா...” என்று எகிறினேன்.  செம்புலி கண்களில் கலவரம் தெரிந்தது.

“என்னடா.. பெரிய இவனாடா நீயி... கை வெச்சா என்னாடா பண்ணுவே...”

உள்ளே அமர்ந்திருந்தவர்கள் எங்களை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.  ஒரு சிலர் எழுந்து விட்டார்கள்.
“எனக்கு பீட்சா வேணும்.. பீட்சா சாபிடாம நான் போகமாட்டேன்...”

“அதெல்லாம் உனக்கு கொடுக்கமுடியாது... மூடிட்டு போடா...” என்றார்.  அந்த  வார்த்தையை கேட்கும்போது அவமானமாக இருந்தது..

“ஏன்டா... எங்கள பாத்தா சாப்பிட்டு காசுகுடுக்காம ஓடிப் போறவங்க மாறி தெரியுதா... எல்லாரு சாப்பிட்டு தாண்டா இருக்காங்க...ஏன் எங்களுக்கு மட்டும் தரமட்டேங்குறீங்க. எங்களப் பாத்தா என்ன பிச்சக்காரங்க மாதிரி தெரியுதா..???” என்று நானும் பேசினேன்.

என் பக்கத்தில் செம்புலி தொளதொளா பனியனுக்குள்ளே தன்னை மறைத்துக்கொண்டு மிகவும்  பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தான்.

தொப்பி போட்டவர், “டேய் வார்த்தைய பாத்துப்பேசுடா... “ என்று கத்தினான்.

மேனேஜர் – காட்டெருமை போன்றவர், எங்களை நோக்கி விரைவாக வந்தார். அவர் எங்கள் அருகே வந்ததும் ஒரு வாடிக்கையாளர் பெண்மணி அவரைக்கூப்பிட்டு,” கெட் தீஸ் டர்ட்டி சிட்ஸ் ஆப்ஃ...” என்று எதோ சொன்னார்.

அவர் வந்த வேகத்தில்  எங்களின் கழுத்தைப்பிடித்து கதவுகளுக்கு வெளியே வீசி கதவை அடித்து சாத்தினார்.

தார் ரோட்டில் முழங்கைகள் உரச கீழே வீழ்ந்தோம்.  முட்டிலும் புறங்கையிலும் சாறுகாயம் ஏற்பட்டு கொஞ்சம் ரத்தம் தீற்றலாக தெரிந்தது. எல்லோரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.  என் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றிருந்தது.. செம்புலி வாய்விட்டு அழுதுகொண்டு நின்றிருந்தான். . ரோட்டில் போகும் நாய்கூட ஒரு கணம் நின்று என் மானம் பறிபோன நிகழ்ச்சியை பார்த்துப்போனது.

எவரும் எங்களுக்காக நீதி கேட்கவில்லை.  கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்தோம்.

அழுதுகொண்டிருந்த செம்புலியை அமைதிப்படுத்தினேன்.

“கவலைப்படாதடா.. இன்னைக்கு நாம கண்டிப்பா இந்த பீட்சாவ சாப்பிடத்தான் போறோம்” என்றேன்.
“எனக்கு அந்த பீ வேணாண்டா...”

“இல்லடா இன்னொரு வழி இருக்கு.. “என்று அருகில் இருந்த போன் பூத்துக்கு சென்றேன்.

பாக்கெட்டில் இருந்த நோட்டீசை எடுத்து அந்த நம்பருக்கு அழைத்தேன்.

என்னிடமிருந்த காசில் ஒரு ரூபாயை எடுத்து போட்டேன்.

“திசிஸ் டொமினோஸ். பிளேஸ் யுவர் அடர் சார்” என்றான் அந்த காட்டெருமை.
“எங்களுக்கு பீட்சா வேணும்”

என்ன எது என்று கேட்டான்.  நானாக ஏதோவென்று உளறி வைத்தேன்.  இருப்பதிலேயே சின்னதாக கொடுக்கச் சொன்னேன். பில் நூற்று எழுபது வருமென்று சொன்னான்,  நான் பரவாயில்லை என்று சொன்னேன்.

“அட்ரஸ் சார்??”

என் வீட்டு அட்ரசையே குடுத்தேன்.  ஏன் அப்பாவின் செல்போன் நம்பரும் கொடுத்தேன்.

“யு வில் ரிசீவ் வித்தின் ஃபிப்டீன் மினிட்ஸ் சார்” என்று மரியாதையுடன் சொன்னான்.
ரிசீவரை வைத்துவிட்டு அவனை பெருமையாக பார்த்தேன்.  உடனே எங்கள் வீட்டை நோக்கி ஓட்டம் எடுத்தோம்.

வீடு வந்து அவனுக்காக வெளியே காத்திருந்தோம்.

ஒருவன் பீட்சா பைக்கில் வந்து நின்றான். அவன் என்னிடம் சண்டைபோட்ட தொப்பிக்காரன்தான். 

 ஹெல்மெட்டை கழற்றி என்னை நெருங்கினான். இதற்கு முன்பு என்னைப் பார்த்தே இராதது போல் என் வீட்டு விலாசத்தை என்னிடமே கேட்டான்.

“நாந்தா போன் பண்ணினேன்...” என்று திமிருடன் சொன்னேன்.

“டேய் நீயா?  இதை நீ அப்பவே பண்ணியிருக்கலாமில்ல. தம்பி சாரிடா... அந்த மேனேஜர் ஆர்டர் படிதான் நான் நடந்தேன்..  இல்லாட்டி என் வேலை போயிடும்டா...”’ என்று கொஞ்சினான்.

“ஏழைகனா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா தெரியுதா ??” என்று பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டேன்.

“ச்சே... அப்பிடியில்லடா நான்கூட இந்த எரியா தான்.. இந்த பீட்சால்லாம் பணக்கரங்களுக்கு மட்டும்னு எழுதீருக்குடா...அதான் அப்டி ஆயிடிச்சு”

“அதெல்லாம் நீ சொல்லாதே.. பில் குடு..”

பில்லை நீட்டினான்.

170 ருபாய் என்று அச்சடித்திருந்தது.

அவனிடமிருந்து பீட்சா பொட்டியை வாங்கிக்கொண்டேன். செம்புலியிடம் இருந்த  பணத்தையும் என் கைக்குட்டையில் முடிந்துவைத்திருந்த அனைத்தையும் அவன் முகத்தில் விட்டெறிந்தேன். சில்லறைகள் அவனது மண்டையில் பட்டுத் தெறித்தது.

அவன் அடிபட்ட புலியாய் என்னையே சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பார்சலை பிரித்தேன்... அருகில் இருந்த நாய் பீயின் மீது அப்படியே கவிழ்த்தேன்.  செம்புலியும் தொப்பிக்காரனும் பதறினார்கள்.  வலது காலால் சதக் சதக்கென்று இரண்டு முறை மிதித்தேன்.  எனக்கு என்னை வெளியே தள்ளிய மேனேஜரையும் தொப்பிக்காரனையும் மிதித்தது போலிருந்தது.
தொப்பிக்காரனின் முகத்தில் தெரிந்த அசூயை எனக்கு வெற்றிப் பெருமிதத்தை தந்தது.
செம்புலியை அணைத்துக்கொண்டு உள்ளங்காலை தார் ரோட்டில் தேய்த்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.  செம்புலி கீழே கிடந்த பீட்சாவையே பார்த்தவாறு வந்தான்...

“டே.. பீட்சாவை வேஸ்ட் பண்ணிட்டியேடா..”

“டே  நாம பழைய சோறு தின்னாலும் உப்பு போட்டு திங்கறோம்டா... கொஞ்சமாவது ரோஷம் இருக்காதா...”

“டே.. நான் பீட்சா தின்னதேயில்லை..  ச்சே...”

“பீட்சாங்குறது வேறோன்னுமில்ல .. நாயர்கடை பன்னுதான். காரத்தும் மிளகாயும் உள்ள வெச்சு கொடுக்கறானுங்க.  நான் வாங்கித் தர்றேன் வா...”

பீயில் கிடந்த பீட்சா என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.
                ----------------------------------------------------------------------------

கதை எழுதுவதில் இது எனது கன்னி முயற்சி. பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.  வாய்ப்புக்கு நன்றி.