PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Showing posts with label chittukuruvi. Show all posts
Showing posts with label chittukuruvi. Show all posts

Monday, December 30, 2013

எங்கள் வீட்டில் ஆனந்தப் பிரசவம் -2- வெற்றுக்கூடு


இது எங்கள் வீட்டில் ஓர் ஆனந்தப் பிரசவத்தின் தொடர்ச்சி...
அதை வாசிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்.

உறங்கும் குஞ்சுகள்

அடுத்த நாள்  அருகில் சென்று கூட்டை கையில் தொடாமல் உள்ளே பார்த்தபோது கடைசி முட்டையும் பொரிந்து குஞ்சு வெளியே வந்திருந்தது.  கூட்டுக்குள் ஒரே குதூகலம்தான். எப்போதும் கீச் கீச் என்ற ஒலிகள எழுந்தவண்ணமே இருந்தன.

இரண்டு மூட்ன்று நாள் அவதானித்ததில் தாய்க்குருவி அதிகாலை குளிர் அடங்கும்வரை கூட்டுக்குள் இருக்கிறது.  சிறிது வெயில் வந்து கூதல் அடங்கிய பின் எட்டுமணிக்குமேலே கூட்டைவிட்டு இரையைத் தேடி போகிறது.  பிறகு அவ்வப்போது இரையுடன் வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுகிறது.  நாங்கள் யாரும் இரண்டு மூன்று நாட்கள் கூட்டின் அருகில் செல்லவே இல்லை.

அப்படியே போனாலும் தாய்க்குருவி கூட்டில இல்லாத சமயம் பார்த்து தொடாமல் எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவந்துவிடுவோம்.

கூட்டின் அருகிலேயே ஒரு பிளாஸ்டிக் டப்பாவை தூளி மாதிரி கட்டி அதில் தானியங்களை உடைத்து போட்டு வைத்தோம்.  தாய்க்குருவி இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும்.  கீச் கீச் என்று கூவிக்கொண்டு அந்த தானியங்களை கொத்தி தின்ன ஆரம்பித்தது.

அந்தக் கூடு மிகச் சிறியது.  தாய்க்குருவியோடு ஐந்து குருவிகளுக்கும் அந்த சிறிய கூடு போதுமானதா என்கிற கேள்வி எங்களுக்குள் உதித்தது.  இருந்தபோதும் கூட்டை கட்டிய குருவிக்கு இது தெரியாதா என்று வாளாவிருந்தோம்.

மூன்றாம் நாள் காலை பத்து மணிக்கு கூட்டின் அருகில் போய் பார்த்தபோது கூட்டினுள் தாய்க்குருவி இருக்கவில்லை.  ஆகையால் தைரியமாய் கூட்டுக்குள்ளே எட்டிப் பார்த்ததும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  கூட்டினுள் இப்போது இரண்டு குஞ்சுகள் மட்டுமே இருந்தது.  மற்ற இரண்டு குஞ்சுகள் எங்கேவெனத் தெரியவில்லை.  பறவைப் பார்வையாளர்களைக் கேட்டபோது..தாய்க்குருவி அதைத் தின்று இருக்கலாம் என்று கூறினார்கள்.  அடப்பாவி இப்படியும் நடக்குமா என்று வியப்பதைத் தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

கூட்டின் இடப்பற்றாக்குறையால் தாய்க்குருவி இளம்குஞ்சுகளை தின்றிருக்க ஒரு நியாயம் இருந்தது.  இல்லாவிடில் மற்ற வளர்ந்த இருகுஞ்சுகளும் ஏறி மிதித்து இளம் குஞ்சுகள் செத்திருக்கலாம்.  தாய்க்குருவி செத்த குஞ்சுகளை அப்புறப்படுத்தி இருக்கக்கூடும்.  ஆனால் உடைந்த முட்டையின் ஒட்டுப்பகுதிகள் கூட்டினுள் இருக்கவில்லை.  கூடு நன்றாக சுத்தாமாகவே இருந்தன.

மனதைத் தேற்றிக்கொண்டு அந்தக் கூட்டை தினமும் அவதானிக்க ஆரம்பித்தோம்.  தாய்க்குருவி கூட்டில இல்லாத சமயம் பார்த்து கூட்டருகில் சென்று கையில் தொடாமல் அந்தக் குஞ்சுகளை கொஞ்சினோம். அதுவும் கூட்டருகில் யார் வந்தாலும் சத்தம் கேட்டதும் தாய்க்குருவிதான் வந்துவிட்டதென்று எண்ணி வாயைத் திறந்தபடி கத்தும்.  சில வேளைகளில் தாய்க்குருவி எண்கள் அருகிலேயே இருந்து நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தூரமிருந்து பார்த்தது.  பிறகு பயமின்றி எங்கள் அருகில் வந்தது.  நாங்கள் அதற்காக அதிர்ந்து கூட பேசுவதில்லை.  எல்லோரும் மௌனமொழியிலேயே பேசிக்கொள்வோம்.  ஆகையால் தாய்க்குருவி இப்போதெல்லாம் எங்களைக் கண்டு பயப்படுவதில்லை.

குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்க ஆரம்பித்தது.  கண்கள் மட்டும் பெரிதாகவே இருந்தது.  கால்கள் வளர்ந்திருந்தது.  கால் நகங்கள் முளைத்திருந்தது.  அவற்றின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.

அடுத்த நாள் மாலை மணி நான்கு இருக்கும்.  நான் ஆபீசிலிருந்து வந்ததும் முதல் வேலையாக கூட்டைப் பார்க்கப் போனேன்.  தாய்க்குருவி அங்கே இருக்கவில்லை.  கூட்டை எட்டிப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது.  கூடு வெற்றுக்கூடாக இருந்தது.  பசங்களையும் தங்கமணியும் கத்திக் கூப்பிட்டேன்.  அவர்கள் வருவதற்குள் அருகில் தேடினேன்.  கீழே ஒரு குஞ்சு விழுந்துகிடந்தது.  குனிந்து அதைப் பார்த்தேன்.  உயிர் இருந்தது.  அருகில் இன்னொரு குஞ்சுவும் கிடந்தது. அதுவும் உயிரோடேயே இருந்தது.  என்ன செய்வதென்று தெரியாமல் அதனருகில் அமர்ந்து நால்வரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.




ஒரு பிளாஸ்டிக் முறத்தை எடுத்து அலுங்காமல் இரு குருவிகளையும் எடுத்து கூட்டினுள் விட்டோம்.  கொஞ்சம் உயிர் இருக்கவே செய்தது.  அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு கூட்டைவிட்டு தள்ளி வந்து நின்றுகொண்டோம்.  இப்போது தாய்க்குருவி எங்கிருந்தோ வாயில் உணவோடு பதட்டமாக வந்து கூட்டுக்கு சென்றது.    கொஞ்ச நேரத்தில் குஞ்சுகளின் கீச் சத்தம் கேட்டதும்தான் எங்களுக்கு நிம்மதி வந்தது.

கூடு சிறியதாக இருப்பதால் அது கூட்டின்  விளிம்புக்கு வந்து தவறி கீழே விழுந்திருக்க வேண்டும். கூட்டுக்கும் கீழே தரைக்கும் சுமார் நான்கடி உயரம் மட்டுமே இருக்கும்.  நல்லவேளை உயரம குறைவாக இருந்ததால் அடி குறைவாகவே பட்டிருக்கும்.  ஆனால் குஞ்சுகள் எப்போது விழுந்தது, எவ்வளவு நேரம் அது தரையிலேயே கிடந்தது என்று தெரியவில்லை.   மதிய நேரமாகையால் தரையும் கொஞ்சம் சூடாகவே இருந்திருக்கும் என்பதை நினைக்கும்போது பதைப்பாகவே இருந்தது.  பாவம் குஞ்சுகள் அதை எப்படி தாங்கியதோ என்று மனதில் ஒரு பாரம் குடியேறி உட்கார்ந்துகொண்டது.

அன்றைய இரவு எங்கள் எல்லோருக்குமே பதற்றம் சூழ்ந்த நீளமான இரவாகவே இருந்தது.  குஞ்சுகள் பிழைத்துக்கொள்ள வேண்டும் என மனது அடித்துக்கொண்டது.



விடிகாலை எழுந்து ஆவலோடு கூட்டருகில் சென்றேன்.  கூட்டில் தாய்க்குருவி இருக்கவில்லை.  கூட்டினுள் சத்தமுமில்லை.  மிக மெதுவாக எட்டிப்பார்த்தேன்.  குஞ்சுக் குருவியின் கால் பகுதி மேலே தெரிந்தது.  இரண்டும் மல்லாக்க இருந்தது.


இன்னும் அருகில் சென்று பார்த்தபோது சலனமில்லாத அந்தக் குஞ்சுக்குருவிகள் இரண்டும் இறந்து கிடந்தன.  படாரென்று இதயம் வெடித்ததைப் போல உணர்ந்தேன்.  அதற்குள் வீட்டில் எல்லோரும் வந்து பார்த்து அதிர்ச்சியில் சிலையாயினர்.  தங்கமணியின் கண்கள் குளம் கட்டி நின்றது.  ஒருவாரமாக எங்கள் உணர்வுகளோடு விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குஞ்சுக்குருவிகளின் பிணங்கள்  எங்களின் இதயத்தை கொஞ்சம் அதிகமாகவே அசைத்துப் பார்த்தது.

அதை அப்படியே விட்டுவிட்டு நாங்கள் வந்துவிட்டோம்.  யாருக்கும் சாப்பிடத் தோன்றவில்லை.  மனசில் ஒரு பாரம் உட்கார்ந்துகொண்டு இம்சை செய்தது.  பிறகு நாமென்ன செய்வது என்று ஒருவாறாக எங்களை நாங்களே தேற்றிக்கொண்டோம்.  மதியம் சென்று பார்த்தபோது கூடு வெறுமையாக இருந்தது.  குஞ்சுகளைக் காணவில்லை.  கூட்டுக்குள் நான்கு குஞ்சுகள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் சுத்தமாக இருந்தன.  அந்த வெற்றுக்கூட்டை பார்க்கும்போது ஒரு தோல்வியின் தடயத்தைப் பார்ப்பதுபோலவே இருந்தது.



இப்போது கீச் கீச் எனும் சிம்பொனி இசை இல்லை... வீடு ஆழ்ந்த அமைதியில் இருந்தது.  ஆறுதலாக அவ்வப்போது தாய்க்குருவி மட்டும் வந்து ஜன்னலில் தலையை காட்டிவிட்டு தொங்கும் பிளாஸ்டிக் டப்பாவில் இருக்கும் தானியங்களை கொத்திவிட்டுப் போகும்.
இனி இங்கே கூடு கட்ட அனுமதியில்லை என்று எழுதி வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்.

 

Tuesday, December 24, 2013

எங்கள் வீட்டில் ஒரு ஆனந்தப் பிரசவம்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டின் பின்புறத்தில் கீச் கீச் என்று சத்தம் கேட்க ஆரம்பித்தது.  இரண்டு தேன் சிட்டுகள் அவ்வப்போது வந்து விளையாடிவிட்டு போகும். 
வீட்டின் பின்புறத்தில் ஒரு கொடிரோஜா ஒன்று படர்ந்திருந்தது. அருகில் ஒரு மஞ்சள் கிழங்கு செடி.  ஒவ்வொரு வருட பொங்கலுக்கும் சாமி கும்பிடும்போது மட்டும் பயன்படும். அருகில் ஒரு மணிபிளான்ட் கொடியாக வளர்ந்து மதில்சுவற்றில் ஏறி  இருந்தது.  அது இருந்தால் வீட்டில் நிறைய பணம் கொட்டும் என்று தங்கமணி நம்பி வளர்த்து வந்தாள். இப்படியான சூழ்நிலை அந்த குருவிகளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது போலிருக்கிறது.  அடிக்கடி வந்து இடத்தை சர்வே செய்து போய்க்கொண்டு இருந்தது. 

சிலநாள் கழித்து பார்த்தால் மணிப்ளாண்ட் கொடியின் இலைகளில் கூடு கட்டி இருந்தது.  அந்த கொடியின் அளவான இரண்டு இலைகளைத் தேர்ந்தெடுத்து துளைகளிட்டு, துளைகளில் நூல் கொண்டு மடித்து தைத்து இருந்தது. மழைநீர் ஒழுகாத வண்ணம்  அழகாக மடித்த பாங்கில் தேர்ந்த அனுபவம் வாய்ந்த பொறியாளர் தெரிந்தார்.  உள்ளே தென்னை நாரைக்கொண்டு கூடு அமைத்து மெத்தென்று இருக்க கழிவு பஞ்சை பொறுக்கிக்கொண்டு வந்து மெத்தை அமைத்து இருந்தது.

நாங்கள் இதை ஆச்சர்யத்துடன் வியந்து தொட்டு தொட்டு பார்த்து ஆனந்தம் கொண்டோம்.  அக்கம் பக்கம் எல்லாம் வந்து புது குடியேறிகளையும் அதன் புது வீட்டையும் பார்த்து வியந்து சென்றனர். 
நான் இயற்கை வரலாறு அறக்கட்டளை நல்லசிவத்துக்கு தகவல் சொன்னேன்.  அவர் வந்து கூட்டை பார்த்தார்.  யாராவது கூட்டைத் தொட்டீர்களா எனக் கேட்டார்.  ஆமாம் எல்லோரும் தொட்டுத்தொட்டு பார்த்த விஷயத்தை சொன்னதும் தலை மீது கையை வைத்து உட்கார்ந்துவிட்டார்.  இனி அந்தக் குருவிகள் அந்த கூட்டை உபயோகப்படுத்தாது எனக் கூறினார்.

ஏனெனில் குருவிகள் தங்கள் கூட்டை கட்ட தேர்ந்தெடுக்கும் இடம் தனக்கு பாதுகாப்பான இடம் என்று உணர்ந்தால்தான் கூடு கட்டுமாம்.  அதுவும் அந்தக் கூட்டில் மனுசவாடை அடித்துவிட்டால் அது எப்பேர்பட்ட கூடு என்றாலும் அதை உபயோகப்படுத்தாதாம்.

குருவிகள் குடித்தனம் பண்ணுவதை பார்க்கலாம் என்று ஆவலோடு இருந்த எங்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.  அதெல்லாம் சும்மா அந்தக் குருவிகள் நிச்சயம் வந்து முட்டை வைக்கும் என்று கூறினேன்.

ஆனால் குருவிகள் வரவே இல்லை.  கூடு கட்டிய இலை காய்ந்து தொங்கும் வரை பார்த்துவிட்டோம்.  அந்தக் கூட்டருகில் குருவிகள் வரவேயில்லை.  எங்களுக்கோ மனசு மிகவும் கஷ்டமாகபோனது.   அந்த சிட்டுக்குருவிகளின் உழைப்பை மதிக்காமல் போய்விட்டோமோ என்று எங்களை நாங்களே திட்டிக்கொண்டோம்.  எனக்கு நாங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தபோது காலி பண்ணச்சொன்ன அடாவடி வீட்டுக்காரர் ஞாபகம் வந்தது. அந்தக் கதையை இங்கே படியுங்கள். அந்தக் குருவிகளிடம் நாங்கள் அறியாமல் செய்த தவறுக்காக மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டோம்.

தங்கமணி அந்த கொடியை வெட்டிவிடலாம் என்று கூறினாள்.  நான் வேண்டாம் எதற்கும் இருந்துவிட்டுப்போகட்டும் என்று விட்டுவிடச்சொன்னேன்.  பிறகு காய்ந்துபோன அந்த கூட்டை எடுத்து வீட்டின் ஷோகேசில் வைத்துவிட்டு இந்த விசயத்தையே மறந்து போனோம்.

சிறிது நாள் கழித்து பின்புறம் மீண்டும் கீச் கீச் சத்தம் கேட்டது.  இந்தமுறை எல்லோரும் சர்வ ஜாக்கிரதையாக இருந்தோம்.  யாரும் பின்புறம் போய் பார்க்கவே இல்லை. அதன் கொஞ்சல்களையும் குலாவலையும் வீட்டின் ஜன்னலை சார்த்தி கண்ணாடி வழியாகவே பார்த்து ரசித்தோம். 

முன்பு மாதிரியே அந்தக் கொடியின் வேறொரு கிளையில் இரண்டு இலைகளை தேர்ந்தெடுத்து கூடு கட்ட ஆரம்பித்தது.  இதை கண்ட எங்களுக்கு மிக்க சந்தோசமாக இருந்தது.  அந்த குருவிகள் எங்களை மன்னித்துவிட்டதாக உணர்ந்தோம்.  

இந்தமுறை அந்தக் குருவிகளை சுதந்திரமாக உலவவிட்டு எங்களால் எந்த தொந்தரவும் வராத மாதிரி பார்த்துக்கொண்டோம். 
ஒருவாரம் கழித்து கூட்டின் அருகில் போய் அதை தொடாமல் உள்ளே பார்த்தபோது சின்னசின்னதாக நான்கு முட்டைகள் இருந்தது.  
அதைக்கண்டபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பிறகு அடுத்த வந்த தினங்களில் ஒவ்வொரு முட்டையாக பொறித்து மூன்று

முட்டைகளை பொரித்துவிட்டது.  ஒரு பச்சைக்குழந்தையின் சுண்டு விரல் 

அளவுக்கே இருந்த அந்தக் குஞ்சுகளின் கண்கள் மட்டும் பெரிதாக இருந்தது. 

நாங்கள் கூட்டருகில் போனபோது அது வாயை திறந்து உணவுக்காக கத்தியது 

அழகாக இருந்தது. 



இன்னும் ஒரு முட்டை பாக்கி இருக்கிறது. அது நாளை பொரிந்துவிடும்.  

இப்போது பின்புறத்தில் குஞ்சுகளின் கீச் கீச் என்ற மழலைச்சத்தம் 

கேட்கும்போது  பீத்தோவனின் சிம்பொனியை கேட்பது போல் இருக்கிறது.  

ஏதோ எங்கள் வீட்டில் பிரசவம் நிகழ்ந்து ஒரு குழந்தை வந்தது போல் 

மகிழ்ச்சி மனதில் ஆடுகிறது.