PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, July 3, 2015

இன்று நேற்று நாளை - நான் ரசித்தவை!

இன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன்.  படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்..  எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.  அப்போதிருந்தே கை பர பரவென்று இருந்தாலும் இன்னொரு முறை  பார்த்துவிட்டு எழுதலாம் என்று இருந்ததால் இத்தனை தாமதம் ஆகியிருக்கிறது.


படத்தின் கதையை எல்லோரும் கொத்துபரோட்டா போட்டுவிட்டதால் நாமும் இனி குதறவேண்டாம், பாவம் அதை விட்டுவிடுவோம்.  நான் இந்தப் படத்தில் என்ன ரசித்தேன் என்பதை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.


கால இயந்திரம் - அப்படி ஒன்று இருக்கிறதா?  இது மிகப்பெரிய கேள்வி.  கடவுள் இருக்கிறாரா என்பது மாதிரியான மெகா கேள்வி என்பதால் இதை நாம் ஆரய்ச்சி செய்து நேரத்தை வீணாக்காமல் அதை முழுமையாக அப்படியே நம்பினால்தான் என்ன  என்று தைரியமாய் உள்ளே இறங்கினால் பல பரவசங்கள் காத்திருக்கிறது.

படத்தின் முதல் முக்கால் மணி நேரங்கள் கொஞ்சம் மெதுவாக போனாலும் அனைத்து பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி பின்னல் வரப்போகும் முக்கியமான திருப்பங்களுக்கு லீட் கொடுக்கவேண்டிய கட்டாயம் இருப்பதாலும் வேகம் மட்டுப்படுவதை மன்னிக்கலாம்.  அதிலும் படத்தை சுவராசியப் படுத்தி நகர்த்தியதில் இயக்குனர் ரவிக்குமார் வென்றிருக்கிறார்.

அதுவும் கதாநாயகனின் ஜாதகத்தை வைத்து பரீட்சை எழுதும் ஜோசிய நண்பன் புலிவெட்டி சித்தரை (?) வைத்து காட்சிப் படுத்திய விதம் புதுமை.  வேலைக்குப் போகாமல் சொந்தத் தொழில் செய்ய ஒற்றைக்காலில் நிற்பதாக எழுதும்போது பாங்கில் மானேஜர் முன்பு ஒற்றைக்காலில் நிற்கும் கதாநாயகனை காண்பிக்கும்போது அங்குதான் ரவி நிற்கிறார் (இரண்டு காலிலும்தான்).

மோடி கண்டுகண்டிருக்கும் கனவுப்படி 2065 ஆம் ஆண்டில் உலகம் டிஜிட்டல் மயம் ஆகிவிடும் என்பதை ரவி குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.  ஒரு காட்சியில் நாய்க்கு கூட டிஜிடல் எலும்புதான் உணவு ஆகிறது.  மோடிக்கு இதன் மூலம் எதையோ சொல்ல வருகிறார் என்பது நமக்கு நன்றாக தெரிகிறது.  (எதையாவது பத்த வெச்சாத்தானே நல்லா இருக்கும்).  டாஸ்மாக் கட்டிடம் LIC கட்டிடம் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. (ஸாரி....அம்மா நான் ஒண்ணும் சொல்லலை).

ஜோதிடர் தேர்வில் ஒவ்வொரு டவுட்டாக கேட்டு ஒவ்வொரு ஆளாக அவுட் செய்யும் கருணாகரனின் அட்ராசிட்டி ஆரம்பித்திலேயே தொடங்கி சிக்சரும் போருமாக அடித்து ஆடி செம ஸ்கோர் பண்ணுகிறார்.

முடி ஏற்றுமதி செய்யும் கடையின் முதலாளி தலையில் முடி இல்லாமல் இருப்பதை பார்க்கும்போது ரவியின் குசும்பு தெரிகிறது.  கோயமுத்தூர் குசும்புன்னு சும்மாவா சொன்னாங்க.

கதாநாயகி மியா குண்டு கண்களும், குண்டு கன்னங்களும்... குண்டு...(போதும்..சென்சார் டிபார்ட்மென்ட் கத்திரியோட வர்றாங்க.)...அழகான ஐ போன் 6 தான் போங்க.  என்ன ஐ போன் மாதிரி கொஞ்சம் ஸ்லிம்மா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.  கதாநயகன் ஒரு ஏழை ( செங்கல் செட்டு )  என்பதை வித்தியாசம் காட்ட இங்கே அவன் பாயிலிருந்து எழ... அங்கே அவள் பெட்டிலிருந்து எழுகிறாள்.   இங்கே அவன் அடிபம்பில் தண்ணி அடித்து குளிக்கிறான்... அங்கே அவள் ஷவரில் குளிக்கிறாள்.  இங்கே ரெண்டு இட்லிக்கு ஒரு ஸ்பூன் சட்னி வைத்து தின்ன.. அங்கே ஒரு இட்லிக்கு நாலு வகை சட்னி வைத்து சாப்பிடுகிறாள். இவன் டூ வீலரில் (ரவியோட சொந்த வண்டிதானே) போக அவள் BMW காரில் போகிறாள்.  சூப்பர்...சூப்பர்.

லோக்கல் விஞ்ஞானி 'பழம் பார்த்தா' அறிமுகம்,,,,அசத்துகிறது.  ஒரு மிக்சியை ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு நக்கல் செய்யும் பெண்மணி.  சொன்னபடி கேட்கும் காரையே செய்யும் விஞ்ஞானிக்கு ஒரு மிக்சியை சரிசெய்ய நேரமில்லாமல் சட்னி அரைத்துக்கொடுக்கும் நிலைமை.  நல்ல முரண் நகை,  "மத்தியானம் மசாலா அரைக்கணும்.  கடையை சாத்திட்டு போயிடாத.. என்ன?"

அதே போல புலிவெட்டி சித்தர் எனும் போர்டை மறைத்தபடி துணி காயப்போடும் பெண்.
 "ஒரு நாளைக்கு நிக்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் வரத்தான் போகுது"  
"அப்படி வந்தா நான் புடைவையே போடமாட்டேன்.."
"அப்படியா...?"
"அய்ய...போ"
நல்ல குசும்பு அந்த காட்சி!.... கைதட்டல் அள்ளுது இந்த காட்சியில்.

ஒவ்வொரு பாத்திரத்தையும் அதன் குணாதிசயங்களோடு வடித்ததில்தான் அந்த பாத்திர வெற்றி இருக்கிறது.

புலி வெட்டியும் அவன் உதவியாளரும், பார்த்தாவும் அவன் வாக்கிங் ஸ்டிக்கும்,   வில்லனும் சொடக்கு போட்டால் பாயும் அவன் நாயும்,... இந்த படைப்புகள் அவ்வப்போது கதையின் திருப்பத்துக்கு உதவுகின்றன.

படத்தில் வரும் இரண்டு மூன்று புத்திசாலித்தனமான திருப்பங்கள்... படம் பார்ப்பவரை ஒரு வித்தியாசமான வேறு தளத்துக்கு இழுத்துச் செல்கிறது.
நாய் சங்கிலி ஒரு பைக்கின் ஸ்டேண்டில் மாட்டிக்கொள்வது,  பார்த்தாவையும் கதாநாயகனையும் கால இயந்திரத்தையும் இணைப்பது, பார்த்தா முதல் நாள் இயந்திரத்தை சோதனை செய்யவேண்டுமென்று தான் வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் போகும்போது யாரோ மறைந்திருந்து பார்ப்பது போல் தோன்ற எட்டிப்பார்ப்பது,  கார் ஆக்சிடென்ட் ஆவதற்கு முன் காரின் பின்னால் முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டு இருவர் காரை துரத்துவது ... இவையெல்லாம் பின்னால் வரப்போகிற காட்சிகளில் அட போட வைக்கிற ட்விஸ்ட்க்கான பேஸ்.

இந்தப் படத்தில் இயக்குனரின் திறமை எங்கு பளிச்சிடுகிறது என்றால் அவரின் கச்சிதமான தேர்வுகள்தான்.  நடிகர் தேர்வு ......எல்லோருமே படத்துக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக செய்கிறார்கள்.  புலிவெட்டி சித்தராக வரும் கருணாகரன், மியாவின் அப்பாவாக வரும் ஜெயப்ரகாஷ், விஞ்ஞானியாக வரும் கார்த்திக், வில்லனாக வரும் சாய் ரவி, எதிர்கால விஞ்ஞானியாக வரும் ஆர்யா இப்படி நடிகர்கள் எல்லோரையும் பொருத்தமாக தேர்வு செய்தாலே பாதி வெற்றிதான்.

ஆர்ட் டைரக்டரின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.  கால இயந்திர டிசைன்,  பார்த்தாவின் ஆராய்சிக்கூடம், ஆர்யாவின் ஆராய்சிக்கூடம், பழங்கால தவமணிதேவி நகைக்கடை, புலிவெட்டி ஆபீஸ், வில்லனின் ஆபீஸ் என எல்லா இடங்களையும் அட்டகாசமாக நம்பகமாக செட் போட்டிருக்கிறார்.  இவருடைய உழைப்புக்கு  உதாரணம்,  புலிவெட்டி சித்தரின் போர்ட்.  ஒரு குண்டு பல்ப்,  எப்பவோ போட்ட மாலை,  காக்கா போய் வெச்ச ஆய், பழைய சாயம் போன இத்தனை விஷயங்களும் கொண்ட  போர்ட் அது.   உண்மையில் கலை இயக்குனரின் பேர் சொல்லும் போர்ட்தான் அது.

படத்தின் வசனங்கள் ...படத்துக்கு மிகப்பெரிய பலம்.

உங்கப்பா கேள்வின்னு கேட்டாலே பதில் தெரியாது எனக்கு.

inteligents எப்பவுமே அமைதியாத்தான் இருப்பாங்க.. சிலநேரம் ஒண்ணும் தெரியாதவங்களும் அமைதியாத்தான் இருப்பாங்க.

புளியம்கொம்புதான் பிடிப்பாங்க... நீ புளியமரத்தையே பிடிச்சிட்ட..

நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?  ஆமா பாஸ் ஒன் சைடு.  நான் அவரைக் கேட்டேன்.

இப்படி படம் நெடுக அங்கங்கே புன்னகைக்க வைக்கும் ஒன்லைனர்கள்.

இயக்குனரை ஞாபகப்படுத்தும் காட்சிகள்..

கால இயந்திரத்தில் பின்நோக்கி காதலியுடன் சென்று காதலி பிறப்பதையும் அந்த குழந்தையை அவளே கையில் வாங்கி முத்தமிடுவதும் அட்டகாசமான காட்சி.

கதாநாயகன் காரும் பார்த்தாவின் காரும் ஆக்சிடென்ட் ஆகி கிடக்கும்போது பார்த்தா எதுவோ சொல்ல புலிவெட்டி கிண்டலாக ரைட்டு என்று சொல்லும்போது காரின் சக்கரம் ரைட் சைடு திரும்புவது.

அம்மாவின் காணாமல் போன கண்ணாடி திரும்ப கிடைக்கும் காட்சி... நல்ல ஐடியா.

பார்த்தாவை ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருக்க பார்க்கப் போகும் கதாநாயகன் அங்கிருக்கும் டாக்டரிடம் "டாக்டர்... பழம் ..." என்று இழுக்க... அதை டேபிளில் வை என்று சொல்வது.

ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டு வரும் பார்த்தாவிடம் நடந்ததெல்லாம் தொண்டைத் தண்ணி வரள சொல்லிவிட்டு பார்த்தாவை பார்க்க, அதுவரை சீரியஸாக கேட்டுக்கொண்டிருந்த பார்த்தா "ஆமா நீங்க யாரு?'  என்று கேட்பது.

தவமணிதேவி நகைக்கடையில் வேலை செய்யும் பையனைப் பார்த்து "டேய் நம்ம அதர்வா" என்று கிண்டல் செய்வது,  அங்கிருந்து தப்பி ஓடுவது,

டிவி ஆட்கள் புலனாய்வு செய்யப்போய் அவர்களே மாட்டிக்கொள்வது

புலிவெட்டி டைம் மெசினில் போய் கணக்கு வாத்தியாருக்கு கொட்டு வைப்பது,

முதலில் ஒரு ஷேர் மார்கெட் பற்றிய மீட்டிங்கும்,,,, அதே மீட்டிங்கை முற்றிலும் வித்தியாசமாக மறுபடியும் காட்டுவது,

பொண்ணுக கிட்ட சொல்றதும் ஒண்ணு... facebookல போடறதும் ஒண்ணு..

மியாவை ஒரு காட்சியில் சாக அடித்து... இன்னொரு காட்சியில் உயிர்ப்பிப்பது...

முன்டாசுபட்டி சினிமா பைத்தியம் முனிஸ்காந்துக்கு பதவி உயர்வு கொடுத்து இதில் ஒரு நடிகராக்கியிருப்பது...

எல்லாவற்றையும் அழித்துவிட்டு இறுதியில் கல்யாணத்தில் முடிப்பது...

இவை அனைத்துமே இயக்குனரின் திறமைக்கு சாட்சி சொல்லும் காட்சிகள்தான்.  வெல்டன் இயக்குனரே.... கழுத்தை காலியாக வையுங்கள்... நிறைய வெற்றி மாலைகள் காத்திருக்கிறது...!!!


4 comments :

  1. தங்களின் ரசனையை ரசித்தேன்...

    ReplyDelete
  2. அருமை அருமை ...

    ReplyDelete
  3. romba super unga review. naan rasichadhellam appadiye solli irukinga. naan paartha padangalil enakku miga miga miga pidittha padangalil indha padam 2m idam pidikkiradhu. mudhal idam (Mozhi) padam dhaan. ivvalavu enjoy seidhu naan theatre il oru padamum paartthadhu illai. avvalavu suspence aaga irundhadhu. karunakaran in comedy super'b. ovvoru kaatchiyayum avvalavu rasitthen. Backround theme music nanraaga irundhadhu. 1st adhai thedi kandu pidithu download seiyya vendum. mundhaiya kaalatthil poi avargale avargalai paarpadhu enbadhai naam thiraiyil paarkum podhu oru paravasa unarvu varugiradhu. screenplay attagaasam pa. indha padatthai meendum oru murai theatre il paarthu rasika vendum pol ulladhu...

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......