PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, September 14, 2013

பிச்சைசில நேரங்களில் பிச்சை எடுப்போரிடம்தான்  நமது மேதாவித் தனத்தை காட்டுவோம். அப்போதுதான் உலகப் பொருளாதார ஞாபகம் வந்து அவனிடம் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் பற்றி லெக்சர் எடுப்போம். மன்மோகன்ஜியே கவலைப்படாத போது நாம் நமது சமூகக் கடமையை அவனிடம்தான் காட்டுவோம்.

ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்தோடு பழனி சென்றபோது நடந்தது.  மதியம் அங்கிருந்த ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தேன்.  மனைவி வரவேண்டியிருந்தது. அப்போது அழுக்கடைந்த சட்டையுடனும் பரட்டை தலையுடனும் ஒருவர் என்னை மெல்ல அணுகினார்.  பார்த்தவுடனே பிச்சைக்காரன் என்பதை கணிக்கும் வகையிலான தோற்றம் கொண்டிருந்தான்.

 “சார் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.  ஒரு பத்து ரூபா இருந்தா கொடுங்களேன்.”-என்றான்.

பசி என்கிற வார்த்தை என்னை எப்போதுமே உருக்கிவிடும்.  சரியான வார்த்தையாய் பொறுக்கி எடுத்து வீசுகிறான்.

நான் மேலும் கீழும் அவனை பார்க்கிறேன்.  ஒரு இருபத்தைந்து வயது மதிக்கலாம்.  கை கால்களில் எந்த சேதாரமும் இல்லை.  கண்களில் கஞ்சா கலவரம் தெரிந்தது.  லேசான புளிச்ச தயிர் வாசனை.  ஆல்கஹால்.

“யேப்பா... நல்லாத்தான இருக்கிற ஏதாவது வேலைக்கு போலாமில்ல...?.”என்னை மேலும் கீழும் பார்க்கிறான்.  என்னை எடை போடுகிறான் போல தெரிகிறது.

“சார் ரொம்ப பசிக்கிறது சார்.  ஒரு பத்து ரூபா போதும்.. தாங்க...”“வேலை வேணா தர்றேன்.  நல்ல சம்பளமும் தர்றேன்.  என் கூட வர்றியா?”

இப்போது அவன் பார்வையில் கேலி தெரிந்தது.  இருந்தபோதும் அதை அடக்கிவிட்டு “சார் பத்து ரூபா கொடுங்க போதும். பசிக்குது” என்று அதே பல்லவியையே பாடினான்.

அப்போது அருகில் ஒருவர் வந்து,  “சார் இவனுக்கு எதுவும் கொடுத்துராதீங்க... காசை வாங்கியதும் நேரா டாஸ்மாக்க்குதான் போவான்.”-என்று ப்ரீ அட்வைஸ் கொடுத்தார்.

அவன் அவரையும் ஒரு மாதிரி கேலியாகப் பார்த்துவிட்டு மீண்டும் அதே பல்லவியை பாடினான்.

அதற்குள் எனது தங்கமணியும் வந்திருந்தார்.  இதையெல்லாம் பார்த்துவிட்டு,  “உங்ககிட்ட நானே ஒரு பைசாவும் வாங்கிற முடியாது.  இவன் எப்படி வாங்குரான்னு நானும் பார்க்கிறேன்.”  என்று கிண்டலாக ஒரு பார்வை பார்த்தார்.

இது எனக்கு கௌரவப் பிரச்சினையாய் போயிற்று.  நான் அவனை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்குச் சென்று,  அங்கிருந்த கேஷியரிடம், ”இவருக்கு ஒரு சாப்பாடு கொடுத்திருங்க.  காசு நான் கொடுத்திடறன்”-என்றேன்.

“சார் உங்களுக்கு எதுக்கு வேண்டாத வேலை...”

“இல்லை.. பசிங்கறான்..  அதான்.”

அவர் இப்போது எழுந்து வெளியே வந்தார்.  அவனை முழுமையாக பார்த்தபிறகு,  “சார் நாலு கஷ்டமர் வந்து போற இடம்.  உட்கார வெச்செல்லாம் சோறு போடா முடியாது.  வேணா பார்சல் கொடுத்துடலாம்...  என்னடா பார்சல் சாப்பாடு வாங்கிக்கிறயா?”-என்று அவனிடம் கேட்டார்.

அவன் என்னையும் அவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு “பார்சல்  என்ன விலை?”-என்றான்.

“குசும்பைப் பார்த்தீங்களா?  விலை சொன்னாதான் சாப்புடுவீங்களோ?  சார் அறுபது ரூபா டோக்கன் வாங்கி கொடுத்திருங்க..”

இதைக் கேட்டதும் அவன் “அறுபது ரூபாயா?  ரொம்ப அதிகம்.” என்று வாயைப் பிளந்து நின்றான். 

“டே போடா அப்படி... சார் இவன் என்ன சோறு வாங்கி கொடுத்தாலும் சாப்பிட மாட்டான்.  அவனுக்கு தேவை தண்ணி அடிக்க காசுதான்.  டே..ஒதுங்கி ஓரமா நில்லு.   கஸ்டமர் வர்ற நேரம்.”

அடி பட்ட புலியாய் கேஷியர் உள்ளே போய்விட்டார்.

“சார் இவர் சாப்பாட்டுக்கு அறுபது ரூபா ரொம்ப ரொம்ப அதிகம்.  நீங்க எனக்கு பத்து ரூபா கொடுங்க போதும்.  நான் வேற பக்கம் சாப்பிட்டுக்கிறேன்.”
 “என்னங்க இன்னும் பஞ்சாயத்து தீரலையா?  வாங்க நேரமாகுது போகலாம்”-என்று தங்கமணி அழைத்ததும் நான் பாக்கெட்டுக்குள் விட்ட கையை எடுத்துவிட்டு காரை நோக்கி சென்றேன். 

அவன் என் பின்னாலேயே சார் சார் என்று வந்தான்.நான் காருக்குள் ஏறி உட்கார்ந்தும் விடவில்லை அவன்.

தங்கமணி “ஏங்க ஒரு பத்து ரூபா இருந்தாதான் கொடுத்துவிடுங்க.  அவன் என்னமோ பண்ணட்டும்.”-என்றாள்.

எனக்கும் அவனை ஏமாற்ற விரும்பாமல்  பாக்கெட்டில் இருந்து பத்து ரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுத்தேன்.

அவன் ரூபாய் தாளைப் பார்த்துவிட்டு “ரொம்ப தாங்க்ஸ் சார்” என்று நகர்ந்தான்.  இரண்டடி போனவன் திரும்பி வந்து என்னைப் பார்த்து, “மீதி ஐம்பது ரூபாவை நீயே வெச்சுக்கோ”-என்று சொல்லியபடி விடுவிடுவென நடந்து போய்விட்டான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை,  “என்ன சொல்லிட்டு போறான்?” என்று தங்கமணியிடம் கேட்டேன்.

“புரியலியா... அவன் உங்களுக்கு பிச்சை போட்டுட்டு போறான்.”

நான் ங்கே என்று விழித்தபடி இருந்தேன்.

இது என் நண்பருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்.