PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, October 30, 2010

நாய் படுத்தும் பாடு.

 நாங்கள் எங்கள் வீட்டில்  எப்போதும்  வளர்ப்பு மிருகங்கள் வளர்த்துவதில்லை...
அது கொடுக்கும் இம்சைகளை  நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்... கண்கூடாகக் கண்டுமிருக்கிறோம்.
சிலர் நாய் வளர்ப்பதைப் பார்த்தால்  பொறாமையாக இருக்கும்.  அதுக்கு அவர்கள் கொடுக்கும் செல்லம் என்ன....முத்தம் என்ன...அதை அவர்கள் வீட்டுக்குள் விட்டு...அது மட்டும் இல்லாமல் படுக்கையில் கட்டிப்பிடித்து தூங்குவது வரை.....ராஜவாழ்க்கை வாழும்.
இப்படித்தான் எனது நண்பர் ஒருவரின்  15 வயது மகன் ஆசைப்பட்டானே என்று ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்தார். அது பண்ணிய அலம்பல்களைப் பற்றி அவர் சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது.
அது கொஞ்சம் வளர்ந்த குட்டியாக இருந்தபோதே ஐந்தாயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தார்.

  தினமும் எட்டு மணி வரை தூங்கும் அவரது தூக்கம்  அது வந்ததிலிருந்து காலை ஆறு மணி வரைதான் ஆனது .  அதை காலையில் எழுப்பி வெளியே சிறிது தூரம் நடத்திச் சென்று கக்கா, உச்சா போன்ற காலைக் கடன்களை கழிக்க வைத்து கூட்டி வரவேண்டியது இவரது வேலை. அதுவோ புது இடம் என்பதால் ஜாலியாக வரும்போதுதான் போகும்.  அதன் பின்னாடி ஓடி ஓடி இவருக்கே கக்கா வந்துவிடும். பிறகு ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீடு வரும்போது ஒரு மணி நேரம் ஆகிஇருக்கும்.

பிறகு அவரது மனைவியின் வேலை ஆரம்பித்துவிடும்.  அதற்க்கு தேவையான உணவுகளை சமைத்து போடுவது அவருக்கு பெரிய வேலையாக இருந்தது.  அது எதை விரும்புகிறது என்று கண்டுபிடிப்பதற்க்கே ஒரு மாதம் ஆகி விட்டது.  எதைப் போட்டாலும் திங்க மறுக்கும்.  பையனுக்கு என்ன கொடுக்கிறோமோ அதுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும்.  ஒரு வழியாக நூடுல்ஸ் ரொம்ப பிடிக்கும் என்று தெரிய வந்தது.  அதுவும் சூடாக வைத்தால்தான் சாப்பிடும்.  சூடு இல்லையென்றால் ஒரு நாளானாலும் சாப்பிடாது.  சாப்பிடும்போது சாப்பிட்டு முடிக்கும் வரை அருகிலேயே நிற்கவேண்டும்.  கொஞ்சம் விலகினாலும் குரைக்கும்.  அவரது கணவருக்கு கூட பக்கத்தில் இருந்து பரிமாறும் வழக்கம் அவரிடம் இல்லை.  ஆனால் இந்த நாய் படுத்தும் பாடு சொல்லி மாளாது. அதே மாதிரி சாதாரண குடி  தண்ணீர் ஊற்றினால் குடிக்காது.  எல்லோரும் குடிக்கும் bisleri வாட்டர் ஊற்றினால்தான் குடிக்கும்.  அதற்கு வாரம் மூணு முறை ஷாம்பூ போட்டு குளிப்பாட்டவேண்டும்.  பாத்ரூம் சுத்தமாக   இருந்தால் மட்டுமே உள்ளேயே வரும்.  வாசனை பவுடர் வேறு.  எப்படியும் மாதம் நாலாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை செலவு வைத்துவிடும்.

இரவு இவர் வரும் வரை  காத்திருக்கும்.  வந்துவிட்டால் பழகி பத்து வருஷம் ஆன மாதிரி குரைத்துவிட்டு இவர் மடி மீது ஏறி படுத்துக்கொள்ளும்.  இவர் முதுகை தட்டிக் கொடுத்துக்கொண்டே இருந்தால் மெதுவாக தூங்கிவிடும்.  இது தினமும் நடக்கவேண்டும். இவர் வர தாமதம் ஆனாலும் தூங்காமல் காத்துகொண்டிருக்கும்.


அதை மாதம் ஒருமுறை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போவது அவரது வேலை.  டாக்டரும் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன ஊசி போடுவது என்று ஒரு பைலே போட்டு கொடுத்திருக்கிறார்.  பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி விபரத்தை ஒரு அட்டையில் எழுதிக்  கொடுப்பார்களே அப்படி. ஒருமுறை போய் வந்தால் 500 ரூபாய் கழண்டுவிடும். அதுபோக அது விளையாட பிளாஸ்டிக் எலும்புத்துண்டு, பந்து என்று செலவு வேறு.

ஒருநாள் காலை அசதியில் கொஞ்சம் தூங்கிவிட்டார்.... அவரது மனைவி அவசரமாக அவரை எழுப்பினார்.எழுந்து பார்த்தால் நாடு ஹாலில் கக்கா போய் இருந்தது. அதை திட்டியபடியே எழுந்து அடிக்க ஓடினார். அது அவருக்கு தண்ணி காட்டிவிட்டு ஓடிவிட்டது.
 "அதை விரட்ட உங்களை எழுப்பலை....  இடத்தை சுத்தம் பண்ணத்தான் எழுப்பினேன்." -என்று அவர் மனைவி சொன்னபோது தலை சுற்றி கிழேயே விழுந்துவிட்டார். என்ன செய்ய விதியை நொந்து கொண்டு சுத்தம் செய்தார்.

எல்லா வீடுகளிலும் யாராவது தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர்கள் வந்தால் அந்த வீட்டில் உள்ள நாய் உள்ளேயே விடாது.  குரைத்து அதகளம் பண்ணிய பிறகு வீட்டுக்காரர் நசுங்கிய சொம்போடு வந்து பஞ்சாயத்து பண்ணிய பிறகே உள்ளே அனுமதிக்கும். ஆனால் இது மற்ற நாய்களைப் போல வீட்டுக்கு யார் வந்தாலும் குரைக்காது.   மாறாக அவர்களை போன ஜென்மத்தில் பழகிய மாதிரி அவர்களோடு பழகும்.   திருடனே வந்தாலும் அவனது காலை காலை  சுற்றி வந்து கல்லாப் பெட்டியை காட்டி கொடுக்கும்.  மாறாக இந்த வீட்டுக்காரர்கள் இவரோ, இவரது மனைவியோ, அல்லது பையனோ வெளியே போய் விட்டு உள்ளே  வந்தால் ஊரே அதிரும்படி ஐந்து நிமிடம் குரைக்கும்.

இதைவிட  பெரிய விஷயம் என்னவென்றால்.....பக்கத்துக்கு வீட்டிற்கும் இவர்களுக்கும் ஒத்து வராது.  பக்கத்து வீட்டம்மாவுக்கு கொஞ்சம் வாய் ஜாஸ்தி. எப்போதும் ஜாடையாக திட்டிக்கொண்டே இருப்பாள்.  நம்ம வீட்டம்மாவோ எந்த வம்பு தும்புவுக்கும் போகாதவர். இவர் கதவை சாத்திவிட்டு ஒன்றும் கொண்டுகொள்ளாமல் இருந்துவிடும் குணம்.  இவர்கள் நாய் வாங்கியதும் போட்டிக்கென்று அவரும் நாயை வாங்கி வளர்த்தார்.  அது எப்போதும் யார் வந்தாலும் வராவிட்டாலும் குரைத்துக் கொண்டே இருக்கும்.   அது வந்ததிலிருந்து அந்தம்மா குரைப்பதை நிறுத்திவிட்டார்.  ஆனால் நம்ம நாயோ எதிர்ப்பாட்டு மாதிரி ஒரு எதிர்க்குரைப்பு கூட குரைப்பதில்லை என்று இவரது மனைவிக்கு தீராத மனக்குரை ஸாரி மனக்குறை உண்டு. பதிலாக அந்த நாயோடு இது ஒரு அட்டாச்மென்டோடு பழகியதில் காதல் படத்து தகராறு மாதிரி அருவா கம்போடு மோதுகிற சூழ்நிலை வந்தது.

திடீரென்று ஒருநாள்  அது கத்திக் கொண்டே இருந்தது.  என்னவென்று தெரியாமல் டாக்டரிடம் அழைத்துச் சென்று ஒரு ஊசி போட்டு வீட்டுக்கு வந்தார்கள்.  ஆனால் காரை விட்டு இறங்கும்போது அது இறந்திருந்தது.  என்னவென்று தெரியவில்லை.

இப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் ஒரு களை இல்லையாம்.  இன்னொரு நாய் எடுத்து வளர்த்தலாம் என்றிருக்கிறேன் என்று அவர் சொன்னபோது எனக்கு கஷ்டமாய் இருந்தது.   நாய் வளர்த்துவதற்க்கு பதிலாக ஒரு அனாதைப் பிள்ளையை எடுத்து வளர்த்தலாமே என்று வாய் வரை வந்த வார்த்தையை அப்படியே விழுங்கி விட்டேன்.

Friday, October 15, 2010

எங்கெங்கு காணினும் காமினி (சவால் சிறுகதை)

 
 ண்டி... ஒரு சுடிதார் எடுக்க இவ்ளோ நேரமா? .எடுத்துட்டுச் சொல்லு. அதுவரைக்கும் சித்தே உட்கார்ந்து இருக்கேன்....”- என்று உடம்பு பெருத்த ஐம்பது வயதை எட்டிய வைரம் என்னும் காமினியின் அம்மா சொன்னபோது அந்த கடைக்குள் இருவரும் வந்து இரண்டு மணி நேரம் ஆகியிருந்தது.


இந்த காமினி எப்பவுமே இப்படித்தான், எந்த விஷயத்துலயும் அவ்வளவு சீக்கிரமா திருப்தி அடைந்துவிடமாட்டள்தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக ஒரு சுடிதார் செட் எடுக்க இந்த போராட்டம்.  கலர் நன்றாக இருந்தால் டிசைன் சரியாக இல்லை, டிசைன் சரியாக இருந்தால் ஸ்டிச்சிங் சரியாக இல்லை.எல்லாம் சரியாக இருந்தால் பிட்டிங் இல்லை. இந்த காலத்து பெண்களை புரிஞ்சுக்கவே முடியவில்லை...

அலுப்பில் அம்மா ஹாண்ட் பேக்கை மார்போடு அணைத்தபடி அசந்து உட்கார்ந்து விட்டாள். அம்மா ஒரு மேக்கப் பைத்தியம்.  எப்போதும் இந்த ஹாண்ட் பேக்கை மட்டும் விடவே மாட்டாள். அதனுள் ஒரு மேக்கப் ருமே இருக்கும்.  அப்போது காமினியின் செல் சினுங்கியது.

“ஹலோ காமினியா...?-என்றது எதிர்முனையில் ஒரு பரிச்சயம் இல்லாத ஆண் குரல்.

“ஆமா நீங்க யாரு?-என்று கேட்டாள் காமினி.

“உங்கப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு...உடனே பழைய பஸ் ஸ்டான்ட் பக்கம் தண்ணி டேங் இருக்கில்ல ....அங்க வாங்க.. சீக்கிரம்.

“ஐயையோ அப்பாக்கு  என்ன ஆச்சு?...

அலறிய அலறலில் துணிக்கடையே திரும்பிப்பார்த்தது.  அம்மா வைரத்துக்கு திடுக்கென்று இருந்தது. 

“பெருசா ஒண்ணும் இல்லைமா..கால்லதான் கொஞ்சம் அடி,  லாரிக்காரன் அடிச்சுட்டு போய்ட்டான்.  காருக்கு நல்லா டேமேஜ், சாருக்கு  நல்லா  நினைவிருக்கு, நீங்க உடனே ஸ்பாட்டுக்கு வந்துருங்க...வந்துடுவீங்களா இல்லையா?

“இதோ வந்துடறேங்க... நாங்க பக்கத்துலதான் இருக்கோம். 5 நிமிசத்துல அங்கே இருப்போம்.  ஆம்புலன்சுக்கு...” 

“அதெல்லாம் ஆச்சு.. சீக்கிரமா வாங்க...

காமினிக்கு ஒரே பதட்டமாக இருந்தது. கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.  அம்மாவை இழுத்துக்கொண்டு ஓடினாள்.  அவர்கள் சொன்ன அட்ரெஸ் நல்லவேளை அருகில்தான் இருந்தது.

“ஏண்டி என்னடி ஆச்சு...யாரு போன்ல?

கேள்விகளை அடுக்கிகொண்டே ஓடிவந்தாள்.

“என்னங்க இவ்வளவு நேரமா பார்த்துட்டு ஒண்ணுமே எடுக்காம போறீங்க...

கடைப் பையனின் அலுப்புக்கு பதில் சொல்ல நேரமில்லை....


வெகு தூரமில்லை...பத்து  நிமிடத்தில் தண்ணீர்  டேங்க் பக்கம் வந்து விட்டாள்.  
கூட்டத்தை காணவில்லை.  ஒரே ஒரு அம்பாசிடர் கார் மட்டுமே நின்று கொண்டிருந்தது.
எதிரில்தான் G.H.  ஒருவேளை அங்கு கொண்டு சென்றிருக்கலாம்.  காரின் அருகில் சென்றார்கள்.
திடீரென்று காரினுள் இருந்து மூன்று பேர் இறங்கினார்கள். முகத்தில் அடையாளம் தெரியாதவாறு கருப்பு துணி கட்டியிருந்தார்கள்.  ஒருவன் மட்டும் உயரமாக இருந்தான். அவன்
கையில் கார் ஜாக்கியை சுற்றும் லீவரை பிடித்தபடி இருந்தான். காமினியின் உள்மனசு எச்சரிக்கை விடுத்தது.

“அம்மா வேணாம் வா. திரும்பி போயிடலாம்...-என்று அம்மாவின் கையை பிடித்து இழுத்து ஓடினாள்.  அம்மா வைரத்தால் அவளுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் திணறி கீழ விழுந்தாள்.

அதற்குள் மூவரும் அவர்களை நெருங்கி விட்டார்கள். முதலில் அருகில் நெருங்கிய ஒருவனை சடாரென்று காலை உயர்த்தி கொட்டையை குறி வைத்து அடித்தாள். அவன் அப்படியே சுருண்டு உட்கார்ந்தான். அதற்குள் பின்னால் வந்தவன் கையிலிருந்த லீவரால் காமினியின் மண்டையில் அடித்தான். காமினி அலறியபடி  ரத்தம் வழிய கீழே விழுந்தாள். 

அப்போது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பெட்ரோல் பங்க்–லிருந்தும் கார் ஸ்டான்ட்-லிருந்தும் ஆட்கள் வரத் துவங்கினர்.
“டேய்  என்னாடா இப்படி அடிச்சிட்டே.....செத்தே போய்டுவா போலிருக்கே... நம்ம திட்டம் எல்லாம் வேஸ்டா போய்டும் போலிருக்கே....சரி சரி அந்தம்மாவையே தூக்கு  கொண்டு போய்டலாம்...-என்று கூறியபடி வைரத்தின் வாயை  கையால் பொத்திக்கொண்டு மூவரும் அவளைத் தூக்கி காரில் திணித்து உடனே வண்டியை ஸ்டார்ட் செய்தார்கள்.

ஓடி வந்த ஆட்களின் மீது உரசியபடி கொஞ்ச தூரம் சென்று லெப்ட் எடுத்து பல்லடம் ரோட்டில் கார் விரைந்தது. காமினி ஒன்றும் செய்ய இயலாதவளாய் பார்த்தபடி மயங்கினாள்.


மீண்டும் நினைவு வந்தபோது முகத்தில் உருத்தியபடி மாஸ்க்  இருந்தது. உடம்பைச் சுற்றி வயர்களால் பிணைக்கப்பட்டிருந்தாள்.  அவளின் முன்னால் டாக்டரும் அப்பாவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். திறக்க முடியாத கண்களோடு செவி வழியாக அவர்கள் பேசுவதை நன்றாக கேட்க முடிந்தது.

“டாக்டர் காமினியை எப்போ ரிகவரி ஆவாள்-னு எதிர்பார்க்கலாம்?

“நத்திங் டு ஒர்ரி... லேசான காயம்தான்.  கொஞ்ச நேரத்தில் ரிகவரி ஆய்டுவா.  உங்க ஓய்ப் பத்தி தகவல் ஏதும் கெடைச்சுதா?

“நோ டாக்டர்.  யாரோ தெரிஞ்சவந்தான் கடத்தி இருக்கனும்.  எங்கிட்ட பரம்பரை பரம்பரையா காப்பாத்திட்டு வர்ற ஒரு வைரம் இருக்கு.  அது எங்க வம்சாவளியா வந்தது.  அதை கொடுத்தாதான் மனைவியை விடமுடியும்னு டிமாண்ட் பண்றாங்க...

“அப்ப அந்த டையமண்ட் பத்தி நல்லா தெரிஞ்ச யாரோதான் இதை செய்திருக்கனும்.

“எஸ் டாக்டர் அதுதான் யார்னு தெரிய மாட்டேங்குது.

“போலீஸ்-ல இன்பார்ம் பண்ணீட்டிங்களா?

“இல்லை டாக்டர் .. ஏதாவது விபரீதமா ஆயிடுமோனு பயமா இருக்கு

“நோ நோ உடனே புகார் பண்ணுங்க பரந்தாமன்...உங்க மனைவியை எதாவது பண்ணிட போறாங்க

காமினிக்கு இந்த பேச்சை கேட்டவுடன் சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.
பேசியவாறு டாக்டரும் பரந்தாமனும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

பார்க்கிங்கில் அப்பாவுடைய கார் நின்றுகொண்டிருந்தது.  உள்ளே அப்பாவுடைய டிரைவர் சிவா  உட்கார்ந்து பேப்பர் படித்துகொண்டிருந்தான். கதவைத் திறந்து உள்ளே ஏறிய காமினியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனான்.

"சிவா உடனே வண்டியை எடு.......போகணும்"-என்றால் காமினி. 

 “அம்மா  ஐயாட்ட சொல்லிட்டு வந்துடறேன்..”-தயங்கினான் சிவா.

“எல்லாம் சொல்லியாச்சு.. அவர் வந்துடுவாரு...  நீ கெளம்பு.

உத்தரவிடும் பாணியில் சொன்னாள்.

மறுப்பு சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்து வெளியே ரோட்டுக்கு வந்தான் சிவா.

“உடம்பு எப்படி இருக்கும்மா?

“பரவாயில்ல. சிவா  .. நல்லாத்தான் இருக்கு.  சரி  உன் பிரண்ட் ராஜா  எங்கே?

ராஜா  பரந்தாமனின் மில்லில்  வேலை செய்யும் இன்னொரு டிரைவர். 

.அவன் இன்னைக்கு வேலைக்கு வர்லீங்கம்மா. ஏன் எதுக்கு கேக்கறீங்க?

“இல்ல அவன் கேரக்டர் எப்படி?

“அவனைப் பத்தி பேசதீங்கம்மா... அவனெல்லாம் ஒரு பிரண்டு

“இல்லை அவன்தான் அம்மாவை கடத்தி இருக்கனும்னு தோணுது

“இருக்கலாம்... ஏனா அவனோட சேர்க்கையே சரி இல்லீங்கம்மா.  உங்ககிட்ட முதலிலேயே சொல்லலாம்னு இருந்தேன்.  போலீஸ்காரங்களோட சேர்ந்துட்டு சுத்தறானுங்க
என்ன சொல்ற?

“ஆமாம்மா...லஞ்சம வாங்கி சஸ்பென்ட் ஆன ரெண்டு போலீஸ்காரர்கள் இவனுக்கு பழக்கம். அவங்களோட சேர்ந்துதான் இப்பல்லாம் சுத்துறான்.  என்ன பண்ணறான் ஏது பண்ணறான் அப்படீங்கறது ஒண்ணும் புரிய மாட்டேங்குது...

காமினிக்கு இப்போது சந்தேகம் உறுதியானது.  அவள் பார்த்த மூவரில் உயரமாய் இருந்தவன் ராஜாவாகதான் இருக்கவேண்டும்.  அவன்தான் தனது குடும்ப விவகாரங்கள் நன்றாகத் தெரிந்தவன். அவன் அந்த  போலீஸ்காரர்கள் ரெண்டு பேரோடு சேர்ந்து செய்கிற வேலைதான் இது என்று தெளிவாகப் புரிந்தது.

“சரி சிவா... அவனுக்கு பல்லடம் ரோடுல எந்த இடம் நல்லா  தெரியும்.....

“அவனோட மாமாவோட தோட்டம் ஒண்ணு பொங்கலூர் பக்கம் இருக்கும்மா.  ஒரு தடவை கெடா வேட்டுன்னு சொல்லி கூட்டிட்டு போயிருக்கான்

“ரொம்ப நல்லதாப் போச்சு.  நேரா அங்க விடு

“இல்லம்மா நாம ஏன் அவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்.  பேசாம போலீஸ்-ல சொல்லி பார்துக்காலாம்மா

“இல்ல சிவா  இது வைரம் சம்பந்தப் பட்டது. வீணான பிரச்சினை வரும்.  அதும் மட்டுமில்ல போலீசே இதுல சம்பந்தப்பட்டிருக்கு.  அதனால அவங்களுக்கு போலீஸ்ல எப்படியும் செல்வாக்கு இருக்கும்.... ஸோ நம்மால ஏதாவது பண்ண முடியுமான்னு ட்ரை பண்ணி பார்ப்போம்.  முடிஞ்சா நீ வா. இல்லாட்டி நானே பார்த்துக்கிறேன்

அவளது உறுதியை பார்த்து சிவா மலைத்துப் போய் காரை பல்லடம் ரோட்டில் விட்டான்.பொங்கலூரை அடையும் பொது லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது. காரை கொஞ்சம் முன்னதாகவே ஒரு வீட்டின் பின்புறம் நிறுத்தி விட்டு இருவரும் அந்த தோட்டத்தை நோக்கி நடந்தார்கள்.

காமினி தான் முன்னால் போவதாகவும்.  சிவாவை ஐந்து நிமிடம் கழித்து தொடரச் சொன்னாள்.
தோட்டத்து நடுவில் ஒரு ஓலை வேய்ந்த குடிசை இருந்தது.  சுற்றிலும் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. குடிசையின் பின்புறம் மெதுவாக சென்ற காமினி ஓலையை விலக்கி உள்ளே பார்த்தாள்.  உள்ளே கும்மிருட்டாக இருந்தது. இருட்டு பழக உள்ளே யாரோ படுத்திருப்பது தெரிந்தது.  சுற்றி அடி மேல் அடி வைத்து முன்புறமாக வந்தாள்.  வீடு பூட்டி இருந்தது. கையில் கிடைத்த ஒரு பெரிய கல்லை  எடுத்து பூட்டை உடைத்தாள். சிரமம் வைக்காமல் பூட்டு திறந்து கொண்டது. உள்ளே மெதுவாக சென்று பார்த்தபோது.....
அம்மா வைரத்தை கைகளும் கால்களும் கட்டப்பட்டு வாயில் துணியோடு பார்க்க முடிந்தது. கண்கள் மூடி இருந்தது.  பதறியபடி காமினி அம்மாவின் அருகில் போய் கட்டுகளை அவிழ்த்தாள். வாயிலிருந்த துணியை எடுத்துவிட்டு மயங்கி இருந்த அம்மாவை எழுப்ப முயன்றாள்.
அப்போது மண்டையை ஏதோ உறுத்த திரும்பினாள்.

சிவா கையில் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தான்.

“சிவா நீயா... ஏன் என்னாச்சு?

“ரொம்ப கஷ்டப்பட்டு உன்னைத்தான் கடத்திட்டு வர பிளான் போட்டோம்.  ஆனா நீ தப்பிச்சிட்டே.. மீண்டும் எங்ககிட்டேயே வந்து நீயா மாட்டிகிட்டே.. ரொம்ப தேங்க்ஸ்.

அப்போது மறைவிலிருந்து இருவர் வெளிப்பட்டனர். அவர்கள் பார்த்தவுடனே  அவர்கள்தான் சஸ்பென்ட் செய்யப்பட்ட  போலீஸ்காரர்கள் -என்று தெளிவாக தெரிந்தது.

“ஏன் சிவா சும்மா பேசிட்டு நிக்கிற... கொடுக்கவேண்டியதை கொடுத்தா எல்லாம் தானா வரும் பாரு-என்றான் அதிலிருந்த ஒருவன்.

காமினி அசராமல் ....

“இத பார் சிவா.....ராஜாவை விட  உன்னை ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டு இருந்தேன். நீயா இப்படி பண்ணே. இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.. அப்பாட்ட சொல்லி உனக்கு எதாவது செய்யச் சொல்லறேன்

“ராஜா ஒரு பிழைக்கத் தெரியாத ரொம்ம்ப நால்லவன்.   அதெல்லாம் வேண்டாம்மா ... எனக்கு டயமண்ட் மட்டும் கொடுத்துடச் சொல்லுங்க அது போதும்

இன்னொருவன் பொறுமை இழந்து “இத பார் பகவத்கீதை கேக்க இது நேரமில்லை.  உடனே உங்கப்பாக்கு போன் பண்ணி டயமொண்டோடு இங்க வரச்சொல்லு”-என்றான்.

“இல்லாட்டி என்ன பண்ணுவே?-காமினி தைரியமாக கேட்டாள்.

ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

அப்போது சடாரென்று எழுந்த அம்மா வைரத்தின் கையில் பெப்பர் ஸ்ப்ரே இருந்தது.
காமினி கண்ணை மூடிக்கொண்டாள்.  சர் சர் என ஸ்ப்ரே பண்ணியதும். மூவரும் கண்களை மூடிக்கொண்டு அலறினார்கள்.

அம்மா கையில் ஹேண்ட்பாக்கோடு மலங்க மலங்க நின்றிருந்தாள். 

எப்படி தனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்று அவளுக்கே புரியவில்லை.  ஆபத்துக்கு உதவும் என்று காமினிதான் அந்த பெப்பர் ஸ்ப்ரேயை வாங்கி போட்டிருந்தாள்..

கிடைத்த சந்தர்ப்பத்தில் காமினியும் அவள் அம்மாவும் வெளியே ஓடி வந்தார்கள். மரத்தடியில் அம்பாசட்டர் நின்று கொண்டிருந்தது.  அதிர்ஷ்டவசமாக சாவி அதிலேயே இருந்தது. சுதாரித்துக்கொண்டு அவர்கள் மூவரும் வருவதற்குள் காமினி அம்மாவோடு மெயின் ரோட்டை அடைந்திருந்தாள்.

ரந்தாமனால் நம்பவே முடியவில்லை.
அம்மாவின் தீரத்தை பாராட்டினார்.
அம்மாவுடைய ஹேண்ட்பேக்-ஐ வாங்கி அதனுள்ளே இருந்து அம்மாவின் மேக்கப் செட்டை எடுத்தார்.  அதுனுள் இருந்த கண்ணாடியை லாவகமாக கழட்டவும் அதிலிருந்த வைரத்தை  உள்ளங்கையில் கொட்டிக் காட்டினார்.
காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே என்று பாராட்டினார் பரந்தாமன்.
காமினியால் நம்பவே முடியவில்லை. 

“ஏன்பா வைரைத்தை இதுக்குள்ளே வெச்சீங்க?

“அம்மா ஒரு மேக்கப் பைத்தியம் என்பது உனக்கு நல்லா தெரியும்  அவளோடு  எப்பவுமே இந்த மேக்கப் செட் ஒட்டிட்டு இருக்கும்.  உங்கம்மா எப்போதுமே இதை மிஸ் பண்ணவே மாட்டா.  அதனால டயமண்டுக்கு சரியான பாதுகாப்பான இடம் அம்மாவோட மேக்கப் செட்தான். அது மட்டுமில்லாம இந்த செட் உங்கம்மாவுக்கு நான் வங்கி கொடுத்த கிப்ட்.  ஸோ அதை எப்போதும் பொக்கிசமா பாதுகாப்பாள்.   உங்கம்மா வைரம்தான் எப்போதும் டயமண்டுக்கு பாதுகாப்பு

அப்பா சொல்லச் சொல்ல ஆச்சர்யமாக கேட்டாள். 

காமினி கைகள்  விரிய அம்மாவையும் அப்பாவையும் கட்டிக்கொண்டாள்.