PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Showing posts with label vairamuthtu. Show all posts
Showing posts with label vairamuthtu. Show all posts

Monday, December 26, 2011

வைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.



கொள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பேருக்கு அழியாத ஓவியமாய் மனசில் படிந்திருக்கும்.


ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சுடுகாட்டுக்கு வாயிருக்குமானால் இந்த நாட்டின் உண்மையான வரலாறு நிறைய சொல்லும்.

முன்பெல்லாம் ஒவ்வொரு பகுதிக்கு ஒரு சுடுகாடு இருக்கும்.  அதுவும் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும்.  அங்கும் பலப்பல சண்டைகள் நடக்கும்.  ஆண்டனியைப் புதைக்கப் போனால் அங்கு முன்னரே புதைக்கப்பட்ட ஆறுமுகம் எழுந்து அருவாள் எடுத்து வருவான்.  ரங்கராஜனும், ராமானுஜமும் புதைக்கப்பட்ட இடத்தில் ரங்கனுக்கும் ராமனுக்கும் இடம் இருக்காது. இப்படி ஆறடி நிலத்திற்கே அடிதடி நடக்கும்.


பின்பு நகரம் வளர வளர ஆற்றோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வாழ்விடங்களாக மாறிப்போயின.  ஆறுகளே ஆக்கிரமிக்கப்ப்படும்போது சுடுகாடுகள் எம்மாத்திரம்?  என் நண்பனின் தாத்தாவை புதைக்க குழி வெட்டும்போது டையிங் தண்ணீர் கலர் கலராக ஊற்றெடுத்து வந்தது. அதற்குள்ளேதான் அவர் வண்ணவண்ண கனவுகளோடு மக்கிப்போனார்.


சுருங்கிப்போன சுடுகாடுகள் மல்டிபர்ப்போஸ் வளாகங்களாக மாறின.  ஒரே இடம் ரம்மி விளையாட்டும் , ரம்மியோடு விளையாட்டு (ரம்யாக்கள் மன்னிக்கவும்) நடக்கும் இடங்களாகியது.  அதுமட்டுமில்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாகவும் உபயோகப்படுத்தி நாசப்படுத்தி வைப்பார்கள்.  சுடுகாட்டுக்குப் போனால் மலம் காலில் படாமல் உள்ளே நுழைய ஷோபனாவைப் போல் பரதநாட்டியத்தின் அத்தனை அபிநயங்களும் தெரிந்திருக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல யோகா ராம்குருதேவ் போல் மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால்தான் தம்பிடித்து உள்ளே சென்று வரமுடியும்.


அப்புறம் குழி வெட்டுபவர்களின் அலப்பறை தாங்க முடியாது.  சரியான அளவில் குழி வெட்டியிருக்க மாட்டார்கள்.  உயரமானவரின் பிணம் எனில் காலை மடக்கித்தான் குழிக்குள் தள்ளவேண்டியிருக்கும்.  குழிக்குள் இருவர் நின்று பிணத்தை இறக்கும் அளவுக்கு அகலம் இருக்காது.  ஆனால் அதைப் பற்றிய கவலையே குழி வெட்டுபவர்களுக்கு இருக்காது.  அவர்களைப் பொருத்தவரை பிணத்தை பிணமாகவே பார்ப்பார்கள்.  தட்டிக்கேட்டால் பெரிய சண்டை உருவாகிவிடும்.  அவர்கள் பதில் சொல்லும் நிலையிலும் இருக்க மாட்டார்கள்.    நிற்கவே முடியாத அளவில் தண்ணியில் இருப்பார்கள். எப்படியும் கணிசமான தொகையை கூலியாக பிடுங்கி விடுவார்கள்.  அவர்களைச் சொல்லியும் தவறு கிடையாது.  தினம் என்ன பத்து பிணமா வருகிறது?


இப்படி பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக வந்ததுதான் மின் மயானம்.  திருப்பூர் தெற்கு ரோட்டரி க்ளப் நிர்வாகத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மின்மயானம் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.  


ஒரு பிணத்தை எரிக்க ரூ.1800/= வாங்குகிறார்கள்.  ஆம்புலன்ஸ் வண்டி வீட்டிற்கே வந்து பாடியை எடுத்துச் சென்று விடுவார்கள்.


சுத்தமான மற்றும் மரம், செடிகளோடு கூடிய அழகான இடம்.  இறுதிகாரியங்கள் செய்ய வளாகம்.  மொட்டை அடிக்க, குளிக்க என சுத்தமான பாத்ரூம் வசதி.  வள் என்று விழாத ஊழியர்கள்.  ஓவனுக்குள் எரிய பாடியைக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார இருக்கை வசதி. 


 அத்தகைய மயான அமைதியில் ஒரு பாடல் ஒன்று ஒலிபரப்பப்படுகிறது.  அந்த இசை மனதுக்குள் ஊடுருவி என்னவோ செய்வது தெரிகிறது.  ஒவ்வொரு வார்த்தையும் இறந்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து இதயம் நெகிழ்கிறது.  ஏறக்குறைய பத்து நிமிடங்கள் நாம் அந்த குரலில் கட்டுண்டது போல் கிடப்பது உண்மை. 


இந்த அரங்கத்தின் திறப்புவிழாவுக்கு திரு வைரமுத்து அவர்கள் வந்திருந்தார்கள்.  இதன்மீது கவரப்பட்ட அவர் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தார்.  இதை இசை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.  ஆனால் உருக்கும் இசை.  நிச்சயம் பாடலைக் கேட்டபிறகு நமது இறந்துபோன நெருக்கமானவர்கள் நினைவில் வந்து போவது உண்மை.  விழியோரம் சிறிதேனும் ஈரம் நிச்சயம் சுரக்கும்.


இந்த பாடலை ஒலிவடிவில் கேட்டு இன்புற கீழே கிளிக் செய்யுங்கள். 



இங்கே கேட்க சிரமம் இருப்பின் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். டவுன்லோடும் செய்துகொள்ளலாம்.


அந்த மனதை உருக்கும் அந்த மந்திர பாடல் வரிகள்...



ஜென்மம் இறந்தது சென்றவர்கள் வாழ்க.
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க.
நீரில் மிதந்திடும் கண்கள் காய்க.
நிம்மதி நிம்மதி நெஞ்சிடம் சூழ்க.


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை 

பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீயுண்டது என்றது  சாம்பலும் இங்கே


கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியை போலொரு மாமருந்தில்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதுமில்லை
நதிமழை போன்றது விதியென்று கண்டும்
மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதையொன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்


பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதை ஆகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுruம்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்



மாண்டவர் பாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவன் கண்ணொளி தோலினால் சேர்க
போதங்கள் ஐந்திலும் உன்னுடன் சேர்க
போனவர் புண்ணியம் என்னுடன் சேர்க..
போனவர் புண்ணியம் என்னுடன் சேர்க..




மின் மயானம் போய் இந்த பாட்டை கேட்டு வந்தால் நிச்சயம் நம்முடைய மரணம் பற்றிய ஆத்மவிசாரணையை ஆரம்பிப்போம்.


மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.