PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, September 15, 2014

‘பீ’ட்சா - சிறுகதை.

இது எனது மகன் சூர்ய பாரதி எழுதிய முதல் சிறுகதை.  போன வருடம் ஒரு போட்டிக்காக எழுதியது.  இதுதான் அவனது முதல் முயற்சி.  படித்து பார்த்து அவனை ஊக்குவியுங்கள்.

‘பீ’ட்சா
                                                                      எழுதியவர்:அ.அ.சூர்யபாரதி.    பள்ளி கோடை விடுமுறையின் முதல் இரண்டு நாட்களே வெயில் சஹாராவில் இருப்பது போல் இருந்தது.  வீட்டில் இருந்தால் மொட்டை வெயிலில் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு சுகமாக இருந்தபோதிலும் அப்பா அம்மாவிற்கு ஏனோ பிடிக்கமாட்டேன் என்கிறது.  அப்பா அவ்வப்போது கட்டிட வேலைக்குப் போவதும் கிடைக்கிற காசில் மாலை நேரத்தை முழுமையாக போதையில் கழிப்பதுவுமே அவருடைய முழுக் கடமையாக இருந்தது. அம்மாவும் சித்தாள் வேலைக்குப் போவதால் ஏதோ பிரச்சினை இல்லாமல் ஓடுகிறது.

அப்பா இன்று வக்கீல் வீட்டில் மழைநீர்க் குழி தோண்டுவதற்காக போனார். கைவேலைக்கு என்னையும் அழைத்தார்.  சாயந்திரம் காசு கொடுப்பதாக இருந்தால் மட்டுமே வருவேன் என்கிற நிபந்தனையோடு நானும் போயிருந்தேன்.  எப்போதும் இந்த மாதிரி விடுமுறை காலங்களில் வேலை செய்து கொஞ்சம் காசு சேர்த்து வைத்துக்கொள்வேன்.  புத்தகம் நோட்டு பென்சில் பேனா வாங்க உதவும்.

     எனக்குத் தெரிந்தவரை வீடு என்பது ஒற்றை அறைதான். எங்கள் வீடு அப்படித்தான் இருக்கும்.  சமைக்கவென்று அடுப்பும் புத்தகங்கள் வைக்க ஒரு பெட்டியும், துணிகள் வைக்க ஒரு பழைய பீரோவும், கலைஞர் டிவி வைக்க இடமும், மூன்று பேர் கால்நீட்டி படுக்க என அந்த ஒற்றை அறை போதுமானதாக இருந்தது. என் நண்பன் குமார் வீடு கொஞ்சம் பெரியது.. சமைக்கவென்று தனி அறை உள்ளது.

அப்பா குழி தோண்ட நான் மண்ணள்ளி வெளியே கொட்டிக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். வக்கீல் வீடு பெரியதாக இருந்தது.  நிறைய அறைகள் இருக்கும் போல் தெரிந்தது.  அங்கே என்னுடைய வயதில் ஒரு பையனும் அவனை விட இரண்டு வயது குறைந்த ஒரு பையனும் இருந்தனர். அவர்கள் இருவரும் எதன் பொருட்டோ சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த பங்களாக்கார அம்மா அவர்களை அதட்டிக் கொண்டிருந்தாள்.  நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்த போது,  “ராகேஷ்.. அவனுக்கு ஒரு பீஸ் கொடுடா...”-என்றாள்.
“எனக்கு வேண்டாம்..” என்று உடனே மறுத்தேன்.  இருந்தபோதும் நாக்கில் எச்சில் ஊறியது.
“டே சாப்பிடு.  இது வேறொண்ணும் இல்ல  பீட்சா தான்”

பங்களாக்காரம்மா அப்படி சொன்ன போதிலும் அந்த குண்டுப் பன்றிகள் எனக்கு கொடுப்பதாக இல்லை.

“போங்க மம்மி எனக்கே பத்தாது.  இதில் கண்டவனுக்கு எல்லாம் நான் கொடுக்க மாட்டேன்.  வேணா ரமேஷை கொடுக்கச் சொல்லுங்க.”

“நோ.. நோ.. நான் கொடுக்கமாட்டேன்...”

“ராகேஷ்.. மைன்ட் யுவர் வேர்ட்.  ஒய் யூ ஆர் பிகேவ் இண்டீசன்ட்..”-அந்த அம்மா அவர்களை திட்டியது எனக்கு என்னவோ போல் இருந்தது.

இந்த சண்டையைப் பார்த்து என் அப்பா சத்தம் போட்டார்,

“இதெல்லாம் வேணாம்மா.  டே போடா போய் வேலையைப் பாரு”

நான் அவர்கள் சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டு சென்றேன். அந்தப் பையனின் பேச்சு எனக்கு கஷ்டமாய் இருந்தது.  எனக்கு டிவியில் வருகிற பீட்சா விளம்பரம் மனதில் ஓடியது.  இதை இது வரை நான் சாப்பிட்டதே இல்லை.  இது என்ன ருசியில் இருக்கும் என்றே எனக்கு தெரியாது.
எனக்கும் அதை ருசிக்க வேண்டும் போல் ஆசையாக இருந்தது.

சிறிது நேரம் கழித்து கட்டிவைத்திருந்த நாயின் அருகே ஒரு பீட்சா துண்டு வந்து விழுந்தது.  நாய் அதை முகர்ந்து பார்த்துவிட்டு ஒரு ஓரமாக போய் படுத்துவிட்டது..

சுற்றும் முற்றும் பார்த்தேன் ஒரு நாயைத்தவிர வேறு எந்த நாயையும் காணவில்லை. அந்த பீட்சா துண்டை எடுத்தேன். அந்த நாய் என்னையே கொஞ்சம் முறைத்த மாதிரி பார்த்துக்கொண்டிருந்தாலும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பீட்சா பார்க்க ஒரு காய்ந்த பன்னு போல் இருந்தது.  குடைமிளகாய் நிறைய போட்டு சிவப்பு கலரில் எதையோ ஊற்றி வைத்திருந்தார்கள். அதில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை துடைத்தேன். கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டேன். நாக்கில் பட்டதும் அது என்னை வேறொரு உலகுக்கு அழைத்து சென்றது.
நாக்கில் ஒருவித புது உணர்வு,.. இனிப்பும் காரமும் கலந்து ஒரு புதிய சுவையை அது கொண்டிருந்தது. கொஞ்சம் வழவழப்பாய் நாக்குக்குள் வழுக்கி சென்றது. . பன்னும் இல்லை.  மசாலா கொஞ்சம் தூக்கலாய் உள்நாக்கில் ஒட்டிக்கொண்டது.. இதுவரை ரேசன் அரிசியில் இட்லியும் தொசையுமாக தின்று சலித்துப்போன எனக்கு இது ஒரு புது சுவையாய்  இருந்தது.
எங்கிருந்தோ வந்த அந்த குண்டுப்பன்றி என் கையிலிருந்த தேவார்மிதத்தை பிடுங்கி கீழே எறிந்தான்.

“ஹேய் இட்ஸ் வெரி டர்ட்டி னா ??? ” என்று கூறினான்.

நான் மண்ணில் கிடந்த பாதி துண்டு பீட்சாவை ஏக்கத்துடன் பார்த்தேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமப் போச்சே...

ஆதங்கத்துடன் அவனைப் பார்த்தேன். 

“இது என்ன விலை?  எங்கே கிடைக்கும்?” என்று கேட்டேன்.

இது ஐநூறு ரூபாய்.  டொமினோஸ்லதான் கிடைக்கும்...” என்று இளக்காரமாக ஒரு பார்வை பார்த்தான்.

“ஐநூறு ரூபாயா...?” என வாயைப் பிளந்தேன். 

“சின்ன பீஸ் நூத்தம்பது ரூபாய்க்குகூட கிடைக்கும்.”

“இந்தா இதை வெச்சுக்க.  இதுல கடையோட அட்ரஸ் இருக்கு. போன் பண்ணாக்கூட வீட்டுக்கே வந்து தருவாங்க..” என்று ஒரு நோட்டீசை நீட்டினான்.  அதில் ஒவ்வொரு பீட்சாவும் என்ன விலை என்று போட்டிருந்தது.  கலர் கலராக பீட்சாவின் படங்கள் போட்டிருந்தன.  அந்த படத்தைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறியது.

அதற்குமேல் எனக்கு வேலை ஓடவில்லை. நான் பீட்சா சாப்பிட்டே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தேன்..

அன்றிலிருந்து என் பீட்சா வேட்டை ஆரம்பமானது!

அப்பாவிடம் அன்றே வீட்டுக்குப் போகும் வழியில் கேட்டேன்.

“அதென்ன உனக்கு அவ்ளோ அவசியமா??  அதெல்லாம் பெரிய பணக்காரவுங்க சாப்பிடறது.  அதுக்கெல்லாம் நாம ஆசைப்படக்கூடாது கண்ணு.” என்று கட்டை குரலில் சொன்னவுடன் நான் சோகமானேன்.. இருந்தபோதும் வாங்கித் தருவதாக சொன்னார்.  ஆனால் கொஞ்ச நேரத்தில் தண்ணி போட்டுக்கொண்டு தள்ளாடியபடிதான் வீட்டுக்கு வந்தார்.  என்னுடைய அன்றைய சம்பளமும் போச்சு.

அம்மாவிடம் எனக்கு நேர்ந்த அவமானத்தை சிவாஜியை மிஞ்சும் வகையில் விவரித்தேன். .”பாவம் புள்ளை “ என்று சொன்னவாறே அஞ்சரைப்பெட்டியை திறந்தார். என் முகம் முழுவதும் மின்மினிப்பூச்சிகள் உட்கார்ந்ததைப் போல ஆயிற்று. பணம் எடுத்து கையில் கொடுத்து “தின்று வா மகனே” என்று அம்மா சொல்லுமென பார்த்தேன்,..

அவர் நான் அங்கு இருப்பதையே பொருட்படுத்தாமல் கடுகு பொறிக்க ஆரம்பித்துவிட்டார்..
அவர் என்னையே வறுத்தது போல் இருந்தது. மறுபடியும் அவமானம்! 

“என்னம்மா  நீயாவது வாங்கித் தாயேன்..” என்று கெஞ்சினேன்.  பல விதமான போராட்டங்களுக்குப் பிறகு அம்மா ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினார்.

“இது பத்தாதும்மா..”

“இதுக்கு என்ன கிடைக்குமோ அதை வாங்கித் தின்னு.  நாமெல்லாம் அதுக்கு ஆசைப் படக்கூடாது கண்ணு.”

அந்த ஐம்பது ரூபாயை என் சட்டை பையில் போட்டுவைத்துக்கொண்டேன்.. மறுநாள் அப்பாவோடு வேலைக்கு போக மறுத்து வீட்டிலேயே இருந்தேன். பக்கத்து வீட்டு செம்புலியிடம் இந்த மேட்டரை சொன்னேன்.  அவனுக்கும் அதை சாப்பிடுவதில் ஆர்வம் வந்தது.

அந்த ஐம்பது ருபாய் போதாது என்பதால் மீண்டும் அம்மாவிடம் போய், “நூறு ரூபாய்...”  என்று தாழ்ந்த குரலில் கேட்டேன்.

“அந்த ஐம்பது ரூவையைக் கொண்டா இங்கே.  இந்தப் பணம் இருந்தா ஒரு வாரம் சோத்துக்காவும்..  பீட்சாவாம் பீட்சா... பேரைப் பாரு. பீ மல்லுன்னு...”.

அப்படியே வாயைமூடிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன்.

மீதிப் பணத்திற்கு என்ன செய்வது...???? என் மண் உண்டியலை குலுக்கிப் பார்த்தேன். காதில் தேன் வந்து பாய்கிறதென்று பாரதி சொன்னது அப்போதுதான் புரிந்தது.

வீட்டின் பின் புறம் அதை எடுத்துசென்று சத்தமின்றி உடைத்தேன்.. பல சில்லறைகளும் சில பணத் தாள்களும் இருந்தன... எண்ணிப்பார்த்தேன் ஒரு ஐம்பது ருபாய் தேறியது... அனைத்தையும் என் கர்ச்சீப்பில் போட்டு முடிந்துவைத்தேன்..

மதியம் அம்மா வைத்துவிட்டுப்போன சாம்பார் இருந்தது. நான் நாளை சாப்பிடப்போகும் அமுதத்திற்கு இதெல்லாம் கால் தூசு என்று இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு.. வேண்டா வெறுப்பில் சாப்பிட்டேன்.

பிறகு என் ஜாமென்ட்ரி பாக்ஸில் மறைத்துவைத்திருந்த இருபது ரூபாய் ஞாபகம் வந்தது. பார்த்தால் அதில் பத்து ருபாய்தான் இருந்தது.

அன்று மாலை அப்பா அதிசயமாய் தண்ணி போடாமல் வந்தார்.  அவரிடம் ஒரு பிட்டைப் போட்டு பார்த்தேன்.

“நாளைக்கு ஒரு பக்கம் ஒரு சில்லறை வேலை இருக்கு.  நீயும் செம்புலியும் வாங்க.   கொஞ்ச நேரத்து வேலைதான்.  முடிச்ச உடனே ஆளுக்கு அம்பது ரூவா தாரேன்.  போய் என்ன வேணா சாப்பிடுங்க..” என்ற ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்.

“உன்னை நம்ப முடியாதே அப்பா..  எனக்கு காசு குடுக்காம ஆட்டைய போட்ருவியே...”

“அப்படியெல்லாம் பண்ணமட்டேண்டா... அப்பாவை நம்பு.  “

அப்பா சொல்வதில் ஒரு விஷயம் பிடித்தது.  செம்புலியும் நானும் வேலைக்குப் போனால் எனக்கு பணம் கொடுக்காமல் விட்டால் கூட செம்புலிக்கு கொடுக்காமல் விடமாட்டார்.  ஆகையால் எப்படியும் ஐம்பது ரூபா உறுதியாகக் கிடைக்கும்.  இப்போதுதான் கொஞ்சம் தெம்பாக இருக்கிறது.
நாளைக்கு பீட்சா சாப்பிடப்போவதை நினைத்தால் எனக்கு உடம்பை குலுக்கி கைகால்களை உதறிவிட்டு ஒரு குத்தாட்டம் போட வேண்டும் போல் இருந்தது.

உடனே செம்புலி வீட்டுக்குப் போய் சொல்லிவிட்டு வந்தேன். .

அன்று இரவு நான் தூங்கவுமில்லை அதற்கு முயற்சியும் செய்திடவில்லை. கலர் கலராய் பீட்சாக்கள் பல என் கனவில் உலா வந்த வண்ணம் இருந்தது. ஒரு பீட்சாவை பிடிக்கச்சென்று அருகே இருந்த அம்மாவின் கண்களில் கையை விட்டேன். தூக்கமே வரவில்லை. அதுவே என் வாழ்க்கையின் மிக நீளமான இருள்.

மறுநாள் விடிந்தது. இதுவரை இவ்வளவு நேரத்தில்  தேர்வன்றுகூட எழுந்ததேயில்லை. விரைவாக குளித்து முடித்து  நல்ல பேன்ட் போடுவதற்காக பழைய பீரோவை அலசினேன். என் சொந்தக்காரன் ஒருவன் கொடுத்திருந்த லேசான கிழிசலோடு இருந்த  பளிச்சிடும் சிவப்புக்கலரில் ஸ்கூல் பேன்ட் மட்டுமே இருந்தது.

வேறு வழியின்றி அதையும். அம்மா ஒருமுறை தான் வேலை செய்யுமிடத்தில் கொடுத்திருந்த ஒரு பழைய பனியனையும் போட்டுக்கொண்டேன். தொளதொளவென்று இருந்தது.
செம்புலியும் நேரமே வந்திருந்தான்.  அப்பாவோடு வேலைக்குப் போனோம்.  மதியம் வரைதான் வேலை இருந்தது.  அப்பா வீட்டுக்காரிடம் பணம் வாங்கிய பிறகு  எங்களுக்கும் உடனே  கொடுத்துவிட்டார்.  யப்பா என்னால் நம்பவே முடியவில்லை.

அங்கேயே கை முகம் கழுவி தலையை நன்றாக தண்ணீர் விட்டு ஒதுக்கிவிட்டு கிளம்பிவிட்டோம்.    
பஸ்சில் போனால் எப்படியும் ஐந்து ரூபாயேனும் கொடுக்கவேண்டுமென்பதால் நடந்தோம்... 
வேர்த்து ஒழுக சட்டையெல்லாம் நனைந்து இருந்தது.  காதோரம் வியர்வை வழிந்து கழுத்தில் இறங்கி ஓடியது. அந்த கடையை நெருங்கினோம். கடையின் பெயர் போட்ட பலகை கம்பீரமாக முகப்பில் நின்றுகொண்டிருந்தது. அதன் கண்ணாடிக்கதவுகள் அனைத்திலுமே பீட்சாக்களின் வண்ணவண்ணப் படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தது. உள்ளே போவோர் அனைவருமே இங்கிலீசில் பேசிய  வண்ணம் இருந்தனர்.. கலர் கலர் கார்கள் தங்கள் டிரைவர்களுடன் தூங்கிக்கொண்டிருந்தது.

செம்புலியைப் பார்த்தேன். அவனும் ஆடை வடிவமைப்பில் சிறந்தவனென்று அப்போதுதான் தெரிந்தது.

“டேய் உள்ள விடுவாங்களாடா...” என்று  முதல் குண்டைத் தூக்கிப் போட்டான்.

“வாடா பாத்துக்கலாம்...” என்றபடி, கடையின் முதல் படியை தாண்டி கதவைத்திறந்தேன். செக்யூரிட்டி போல இருந்தவர் உள்ளே விட மறுத்தார்.  நான் பாக்கெட்டில் இருந்த காசைக் காட்டியதும் உள்ளே விட்டார்.  நாங்கள் உள்ளே சென்று ஒரு ஓரமாக இருந்த மேசையில் அமர்ந்துகொண்டோம்.

உள்ளே பார்த்தால் பெண்களே அதிகமாக இருந்தனர். அவர்கள் அனைவருமே  காலோடு ஒட்டியிருந்த பேண்ட்தான் அணிந்திருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். அவர்களை அவ்வாறு சொல்வதைவிட கொழுத்த பன்றிக்குட்டிகள் என்று சொல்வதே சரி.

எல்லோருக்குமே தமிழ் தெரியாதது மாதிரி ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டிருந்தனர். எங்களை கண்டதும் அவர்கள் ஏனோ முகம் சுழித்தனர்.  தெருவில் போகிற நாய் ஒன்று உள்ளே வந்ததைப் போன்றே அனைவரும் நினைத்த மாதிரி எனக்குப் பட்டது. 

ஒரு பெண்மணி தொப்பி போட்ட ஒருவரை அழைத்து ஏதோ சொன்னார்.  அவர்  வேகமாக எங்களை நோக்கி விரைந்தபடி,”தம்பி என்னப்பா வேணும்.?” என்று இறைந்தபடி கேட்டார்.

“அண்ணா நாங்க பீட்சா சாப்ட வந்தோம்னா..”

“இல்லப்பா இங்க பீட்சாலாம் விக்கிறதில்ல..போங்க..”

“ஏண்ணா போய் சொல்றீங்க... அதோ எல்லாரும் சாப்பிடுறாங்க....”

“இல்லப்பா இன்னிக்கு பீட்சா முடிஞ்சிது... போங்க”

என்று தன் குரலை உயர்த்தினார் அவர்.

அப்போது தன் குடும்பத்துடன் உள்ளே நுழைந்த ஒரு சிங்கு மாமாவை எங்களிடம் பீட்சா முடிந்துவிட்டதென்று சொன்னவர்...” வெல்கம் சார்” என்று வரவேற்றார்.

“பீட்சா முடிஞ்சிருச்சின்னு சொன்னீங்க.. அப்புறம்  எதுக்கு அவங்கள மட்டும் உள்ள விட்டீங்க????” என்று நானும் குரலை உயர்த்தினேன்.

அவர் ‘உச்’ போட்டுவிட்டு பின்னால் திரும்பி தனது மேனேஜரை ஏக்கத்துடன் ஒரு லுக்கு விட்டார்.
அவர் வெளியே தள்ளும்படி சைகை செய்ததும்...

“எந்த ஏரியாடா நீங்க? ஆ” என்று என் தோளில் கைவைத்து தள்ளினார்.

“ண்ணா..... மேல கைவைக்கிற வேலை எல்லாம்  வெச்சுக்காதீங்கண்ணா...” என்று எகிறினேன்.  செம்புலி கண்களில் கலவரம் தெரிந்தது.

“என்னடா.. பெரிய இவனாடா நீயி... கை வெச்சா என்னாடா பண்ணுவே...”

உள்ளே அமர்ந்திருந்தவர்கள் எங்களை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.  ஒரு சிலர் எழுந்து விட்டார்கள்.
“எனக்கு பீட்சா வேணும்.. பீட்சா சாபிடாம நான் போகமாட்டேன்...”

“அதெல்லாம் உனக்கு கொடுக்கமுடியாது... மூடிட்டு போடா...” என்றார்.  அந்த  வார்த்தையை கேட்கும்போது அவமானமாக இருந்தது..

“ஏன்டா... எங்கள பாத்தா சாப்பிட்டு காசுகுடுக்காம ஓடிப் போறவங்க மாறி தெரியுதா... எல்லாரு சாப்பிட்டு தாண்டா இருக்காங்க...ஏன் எங்களுக்கு மட்டும் தரமட்டேங்குறீங்க. எங்களப் பாத்தா என்ன பிச்சக்காரங்க மாதிரி தெரியுதா..???” என்று நானும் பேசினேன்.

என் பக்கத்தில் செம்புலி தொளதொளா பனியனுக்குள்ளே தன்னை மறைத்துக்கொண்டு மிகவும்  பயந்து நடுங்கிக்கொண்டு இருந்தான்.

தொப்பி போட்டவர், “டேய் வார்த்தைய பாத்துப்பேசுடா... “ என்று கத்தினான்.

மேனேஜர் – காட்டெருமை போன்றவர், எங்களை நோக்கி விரைவாக வந்தார். அவர் எங்கள் அருகே வந்ததும் ஒரு வாடிக்கையாளர் பெண்மணி அவரைக்கூப்பிட்டு,” கெட் தீஸ் டர்ட்டி சிட்ஸ் ஆப்ஃ...” என்று எதோ சொன்னார்.

அவர் வந்த வேகத்தில்  எங்களின் கழுத்தைப்பிடித்து கதவுகளுக்கு வெளியே வீசி கதவை அடித்து சாத்தினார்.

தார் ரோட்டில் முழங்கைகள் உரச கீழே வீழ்ந்தோம்.  முட்டிலும் புறங்கையிலும் சாறுகாயம் ஏற்பட்டு கொஞ்சம் ரத்தம் தீற்றலாக தெரிந்தது. எல்லோரும் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.  என் கண்களில் கண்ணீர் திரண்டு நின்றிருந்தது.. செம்புலி வாய்விட்டு அழுதுகொண்டு நின்றிருந்தான். . ரோட்டில் போகும் நாய்கூட ஒரு கணம் நின்று என் மானம் பறிபோன நிகழ்ச்சியை பார்த்துப்போனது.

எவரும் எங்களுக்காக நீதி கேட்கவில்லை.  கண்களைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து மெதுவாக நகர்ந்தோம்.

அழுதுகொண்டிருந்த செம்புலியை அமைதிப்படுத்தினேன்.

“கவலைப்படாதடா.. இன்னைக்கு நாம கண்டிப்பா இந்த பீட்சாவ சாப்பிடத்தான் போறோம்” என்றேன்.
“எனக்கு அந்த பீ வேணாண்டா...”

“இல்லடா இன்னொரு வழி இருக்கு.. “என்று அருகில் இருந்த போன் பூத்துக்கு சென்றேன்.

பாக்கெட்டில் இருந்த நோட்டீசை எடுத்து அந்த நம்பருக்கு அழைத்தேன்.

என்னிடமிருந்த காசில் ஒரு ரூபாயை எடுத்து போட்டேன்.

“திசிஸ் டொமினோஸ். பிளேஸ் யுவர் அடர் சார்” என்றான் அந்த காட்டெருமை.
“எங்களுக்கு பீட்சா வேணும்”

என்ன எது என்று கேட்டான்.  நானாக ஏதோவென்று உளறி வைத்தேன்.  இருப்பதிலேயே சின்னதாக கொடுக்கச் சொன்னேன். பில் நூற்று எழுபது வருமென்று சொன்னான்,  நான் பரவாயில்லை என்று சொன்னேன்.

“அட்ரஸ் சார்??”

என் வீட்டு அட்ரசையே குடுத்தேன்.  ஏன் அப்பாவின் செல்போன் நம்பரும் கொடுத்தேன்.

“யு வில் ரிசீவ் வித்தின் ஃபிப்டீன் மினிட்ஸ் சார்” என்று மரியாதையுடன் சொன்னான்.
ரிசீவரை வைத்துவிட்டு அவனை பெருமையாக பார்த்தேன்.  உடனே எங்கள் வீட்டை நோக்கி ஓட்டம் எடுத்தோம்.

வீடு வந்து அவனுக்காக வெளியே காத்திருந்தோம்.

ஒருவன் பீட்சா பைக்கில் வந்து நின்றான். அவன் என்னிடம் சண்டைபோட்ட தொப்பிக்காரன்தான். 

 ஹெல்மெட்டை கழற்றி என்னை நெருங்கினான். இதற்கு முன்பு என்னைப் பார்த்தே இராதது போல் என் வீட்டு விலாசத்தை என்னிடமே கேட்டான்.

“நாந்தா போன் பண்ணினேன்...” என்று திமிருடன் சொன்னேன்.

“டேய் நீயா?  இதை நீ அப்பவே பண்ணியிருக்கலாமில்ல. தம்பி சாரிடா... அந்த மேனேஜர் ஆர்டர் படிதான் நான் நடந்தேன்..  இல்லாட்டி என் வேலை போயிடும்டா...”’ என்று கொஞ்சினான்.

“ஏழைகனா உங்களுக்கு அவ்ளோ இளக்காரமா தெரியுதா ??” என்று பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டேன்.

“ச்சே... அப்பிடியில்லடா நான்கூட இந்த எரியா தான்.. இந்த பீட்சால்லாம் பணக்கரங்களுக்கு மட்டும்னு எழுதீருக்குடா...அதான் அப்டி ஆயிடிச்சு”

“அதெல்லாம் நீ சொல்லாதே.. பில் குடு..”

பில்லை நீட்டினான்.

170 ருபாய் என்று அச்சடித்திருந்தது.

அவனிடமிருந்து பீட்சா பொட்டியை வாங்கிக்கொண்டேன். செம்புலியிடம் இருந்த  பணத்தையும் என் கைக்குட்டையில் முடிந்துவைத்திருந்த அனைத்தையும் அவன் முகத்தில் விட்டெறிந்தேன். சில்லறைகள் அவனது மண்டையில் பட்டுத் தெறித்தது.

அவன் அடிபட்ட புலியாய் என்னையே சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். பார்சலை பிரித்தேன்... அருகில் இருந்த நாய் பீயின் மீது அப்படியே கவிழ்த்தேன்.  செம்புலியும் தொப்பிக்காரனும் பதறினார்கள்.  வலது காலால் சதக் சதக்கென்று இரண்டு முறை மிதித்தேன்.  எனக்கு என்னை வெளியே தள்ளிய மேனேஜரையும் தொப்பிக்காரனையும் மிதித்தது போலிருந்தது.
தொப்பிக்காரனின் முகத்தில் தெரிந்த அசூயை எனக்கு வெற்றிப் பெருமிதத்தை தந்தது.
செம்புலியை அணைத்துக்கொண்டு உள்ளங்காலை தார் ரோட்டில் தேய்த்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.  செம்புலி கீழே கிடந்த பீட்சாவையே பார்த்தவாறு வந்தான்...

“டே.. பீட்சாவை வேஸ்ட் பண்ணிட்டியேடா..”

“டே  நாம பழைய சோறு தின்னாலும் உப்பு போட்டு திங்கறோம்டா... கொஞ்சமாவது ரோஷம் இருக்காதா...”

“டே.. நான் பீட்சா தின்னதேயில்லை..  ச்சே...”

“பீட்சாங்குறது வேறோன்னுமில்ல .. நாயர்கடை பன்னுதான். காரத்தும் மிளகாயும் உள்ள வெச்சு கொடுக்கறானுங்க.  நான் வாங்கித் தர்றேன் வா...”

பீயில் கிடந்த பீட்சா என்னைப் பார்த்து சிரிப்பது போலிருந்தது.
                ----------------------------------------------------------------------------

கதை எழுதுவதில் இது எனது கன்னி முயற்சி. பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.  வாய்ப்புக்கு நன்றி.