PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, December 30, 2011

எனக்கு மட்டும் எஸ்.ரா கையால் சவால் பரிசு

வால் சிறுகதைப் போட்டி(2011) போட்டியில் கலந்து கொண்டு ஒரு மொக்கை கதையை நான் எழுதியதும் அந்தக் கதை முதல் பரிசு வாங்கப் போகும் நேரத்தில் நடுவர்கள் விழித்துக்கொண்டதால் இவன் கிழிக்கிற கிழிப்புக்கு ஆறுதல் பரிசு கொடுத்தாலே அதிகம் என்று முடிவு செய்து போனால் போகிறது என்று ஆறுதல் பரிசு கொடுத்த வரலாறு, புவியியல் அனைவரும் அறிந்ததே.

அப்படி என்னதான் கிழிச்சேன்னு இங்கே கிளி(ழி)க்கிப் படியுங்கள்.

சில உண்மைகளை பகிர வேண்டிய தருணம் வந்துவிட்டது...

அது இன்னான்னா..

இந்தக் கதையை ஏற்கனவே படிச்சுட்டு ஏன் முதல் பரிசு கொடுக்கலைன்னு என் வாசகர் வாட்ட நண்பர்கள் வாடிப்போய் கொடிபிடித்து பஸ் பிடித்து சென்னை வரை பயணம் செய்ய கொதித்தெழுந்து கொந்தளித்து நீதியும் ,(என்னிடம்)நிதியும் கேட்டுப் புறப்பட்டபோது, என் பாக்கெட்டைக் காட்டி பட்ஜெட் கொஞ்சம் உதைப்பதால் அடுத்தவருடம் வைத்துக்கொள்ளலாம் என கூறி விட்டதால் பொதுக்குழுவை டாஸ்மாக்கிலேயே முடித்துக்கொண்டோம்.  அன்று கர்ப்பிணியாய் இருந்த என் பர்ஸ் அபார்ஷன் ஆகி வற்றிப் போன வயிறோடு என்னைப் பார்த்த பார்வை இன்னும் எந்தன் கண்ணிலேயே நிற்கிறது.

எழுத்தாளன் ஆவது சுலபமில்லை என்கிற ஞானம் டாஸ்மாக் பாரின் உடைந்துபோன டேபிளின் கீழேஅப்போதுதான் உதயமானது. புத்தம் சரணம் கச்சாமி என்பதற்குப் பதிலாக பீரு பிராந்தி ஊறுகாய் என்று மந்திரம் சொல்லி இன்று வரை உளறிக்கொண்டிருக்கிறேன். இப்போதுகூட அந்த பாதிப்பில்தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  போதி தர்மர் மாதிரி என் திறமையைக் கண்டுகொள்ளாத தமிழ்நாட்டைப் புறக்கணித்துவிட்டு சீனாவுக்கு சென்று நாறடிக்கலாமென்று நினைத்ததுண்டு.

அப்பாடா தப்பித்தோம் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது.  உங்களையெல்லாம் அனாதையாய் விட்டுப்போக மனமில்லாததாலும் அப்புறம் அது தவறான வரலாறு ஆகிவிடுமே என்பதாலும் அந்த திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறேன்.

உளறியது போதும் சீரியசாக எழுது என்று என்பின்னால் ஓராயிரம் குரல்கள் கேட்பதால் சிரியஸிலிருந்து சீரியஸாகிறேன்.

சவால் சிறுகதைப்போட்டி அறிவித்தவுடன் எப்படியும் கலந்து கொள்வது என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.  ஆனால் அவர்கள் கொடுத்திருந்த கதைக் குறிப்புகள் ரொம்பவும் கடுமையாகவே இருந்ததாகத் தோன்றியது.  பல இரவுகளில் பரிசல் வந்து படுத்தி எடுத்துவிட்டார். ஏனெனில் கொடுத்திருந்த புகைப்படத்தில் அவர்தானே போஸ் கொடுத்திருந்தார்.  இரவுத்தூக்கத்தில் கூட SW, H20, MNO4, H2SO4 என்று உளறி இருக்கிறேன்.  படிக்கிற காலத்தில் இந்த அளவுக்கு வேதியியல் சமன்பாடுகளை மனப்பாடம் செய்திருந்தால் அரியர்ஸ் வைக்காமல் பாஸ் ஆகி இருந்திருப்பேன்..

கோகுல், விஷ்ணு என்று தாறுமாறாக உளறியதைப் பார்த்து என் தங்கமணி "இதெல்லாம் யாரு,  ஏதாவது சின்னவீடு வெச்சிருக்கீங்களா? இதெல்லாம் பசங்க பேரா?" என்று ஆயிரம் கேள்வி கேட்ட அசட்டுத் தங்கமணியாகி ட்ரைவாஸ்(டைவர்ஸ்) கேட்கும் நிலைக்கு சென்றுவிட்டாள்அப்புறம் பரிசல் போட்டோ காட்டி தப்பித்தது தனிக் கதை.

கடைசி நாள் வரை கதை பிடிபடாமலேயே இருந்தது.  தீபாவளி பண்டிகையன்று கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல், பட்டாசு வெடிக்காமல், புத்தாடை உடுத்தாமல் மோட்டுவளையைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  மாமியார் கூட "என்னடி மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சு?  பேயோட்டுற மாயாண்டியை வரச் சொல்லட்டுமா?" என்று கேட்கும் நிலைமை ஆகிப் போச்சு.

பசங்க கூட என் நிலையைப் பார்த்து ஆளுக்கொரு கான்செப்ட் சொன்னார்கள். என்னடா இது குதிரைக்கு வந்த சோதனை என்று பிளிரிக்கொண்டு ஒரு வழியாக காமெடியை முதன் முதலில் முயற்சி செய்து பாப்போம் என்று முடிவு செய்து 'ரங்கு குரங்கு ஆன கதை' எழுதினேன்.  அதை எழுதுவதற்குள் வெண்புரவி கருங்கழுதை ஆன கதைதான் நீங்கள் இது வரை படித்தது.

எப்படியோ தக்கிமுக்கி கடந்த வருடம் போலவே முதல் பதினைந்து கதைகளில் ஒன்றாக தேர்வு ஆகி வயிற்றில் பீரை வார்த்தார்கள் நடுவர் குழுவினர்.

அழும் குழந்தைக்கு ஆறுதலாக பஞ்சுமிட்டாய் வாங்கிக் கொடுத்ததைப் போல ஆறுதல் பரிசும் கிடைத்தது.  அதற்கான விழா சென்னையில் நடந்தது.  கண்டிப்பாக போய்விடவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன்.  ஆனால் எங்களது தொழில் எப்போதும் அதுவே எங்களின் போக்கை முடிவு செய்யும் இயல்பு வாய்ந்தது.  அது போலவே போக முடியாமல் போய்விட்டது.

பரிசுப் புத்தகங்கள் கொரியரில் அனுப்பு வைத்திருப்பதாக ஆதியிடமிருந்து மெயில் வந்தது.  தினமும் ஆவலோடு கொரியர்காரனை வழி மீது விழி வைத்துப் பார்த்திருந்தேன்.

நேற்றுதான் வந்து சேர்ந்தது.  அற்புதமான மூன்று புத்தகங்கள்.  தமிழ்மகனின் வெட்டுப்புலி, கேபிள் சங்கரின் மீண்டும் ஒரு காதல் கதை, கி.ரா.வின் கரிசல் காட்டுக் கடுதாசிகள்.  பார்சலை வாங்கி பிரித்து புத்தகத்தை பார்த்தபோது விவரிக்கமுடியாத ஒரு உணர்ச்சியை அடைந்தேன்.  அது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இந்த நேரத்தில் நான் கூரிக்கொல்வது என்னவென்றால் இதை அடைய உறுதுணையாய் இருந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ஊக்குவித்த சேர்தளம் நண்பர்களுக்கும் என் நன்றியை காணிக்கையாக்கிக் கொள்கிறேன்.  (கோவில் பூசாரி மாதிரி தட்டைப் பாக்காதேங்கோ.இது வேற காணிக்கை)


கொரியர் கொண்டு வந்தவர் பார்சலைக் கொடுக்கும்போது 'சார் ஏதோ புத்தகம் போல இருக்கு?' என்று ஆவல் மிகுதியில் கேட்டார்.

"ஆமாம் சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டதற்காக பரிசு அனுப்பி இருக்கிறார்கள்"

"சார் சொல்லவே இல்லை"

"ஆமாம் எல்லோரும் பெரிய பெரிய எழுத்தாளர்கள் கையால பரிசு வாங்குவாங்க.  நான் உங்க கையால பரிசு வாங்குகிறேன்"

அவர் மனம் குளிர்ந்து சங்கோஜப்பட்டு.  "சார் போங்க சார்" என்றார்.

நான், "உங்கள் பெயர் என்ன"-வென்று கேட்டேன்.

"ராமகிருஷ்ணன்" என்றார்.

 எனக்கு ஆச்சர்யாமாகப் போயிற்று.

 'இனிஷியல் என்ன?

"எஸ்.ராமகிருஷ்ணன்"

எனக்கு மட்டும் எஸ்.ராமகிருஷ்ணன் கையால் பரிசா?  அப்படிப் போடு.


 

Wednesday, December 28, 2011

மௌனகுரு-மௌனத்தில் அழகு.


கதாநாயகன் சாதாரண கல்லூரி மாணவன்வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ரேசன் கடைக்குப் போய்வருபவன்ரோட்டில் ஒரு சண்டை நடந்தால்கூட கண்டுகொள்ளாமல் தன் வழியே செல்பவன்இரண்டு ரூபாய் காசுக்காக டெலிபோன் பூத்தில் சண்டை போட்டதால் கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அண்ணனால் சென்னை அரசுக்கல்லூரியில் படிக்க வருகிறான்.

யாரோ செய்யும் தவறுகள் இவன் மீது விழ இவனைப் பற்றி தவறான இமேஜ் உருவாகிறது

நான்கு போலீஸ்காரர்கள் ஒரு ஹைவேயில் நின்றிருக்கும்போது ஒரு கார் அதிவேகமாக வந்து கண்ணெதிரே விபத்துக்குள்ளாகிறதுஅதில் இருந்த ஒரே மனிதன் ஆபத்தில் இருக்கிறான். வண்டியில் கோடிக்கணக்கான ரூபாயோடு ஒரு சூட்கேஸ் இருக்கிறது. குற்றுயிராய் இருக்கும் கார்காரனை கார் ஜாக்கியில் அடித்து கொன்றுவிட்டு நான்கு பேரும் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

அதிலிருந்து ஜெட்வேகத்தில் தடதடத்து செல்லும் அதிரடி திரைக்கதைஅடுத்து என்ன காட்சி வரும் என்று கொஞ்சம்கூட யூகிக்கமுடியாத அளவில் புதிய புதிய காட்சிகளால் நிரப்பி அருமையாக ஸ்டஃப் செய்யப்பட்ட காரமான சாண்ட்விச் கதை.

கதைக்குள் அவ்வளவு ஆழமாக உள்ளே போகாமல் இந்தப் படத்தில் ரசிக்கவென அழகான சில தனித்தன்மையுடைய பாத்திரப்படைப்புகளும் காட்சிகளும் இருக்கின்றனஅவைகளை சொல்லவெண்டும் என ஆசைப்படுகிறேன்.

வெள்ளந்தியான அம்மாமகனைப் பார்த்து மருகுவதாகட்டும்மகனின் காதலைப் பார்த்து அவனை அடிப்பதாகட்டும் (தனது உயரம் பற்றாமல் கன்னத்தில் அடிப்பதற்கு பதிலாக கையில் அடிக்கும்) ஒரு மிடில் கிளாஸ் அம்மா-அழகு..

காதல் கல்யாணம் செய்துகொண்ட அண்ணிஅழகான தங்கையை வீட்டில் வைத்துக்கொண்டு கொழுந்தனையும் வைத்துக்கொண்டு அவஸ்தைப்படும் நிலை-அழகு.

குழந்தையைப் பார்த்துக்கொள்ள அம்மாவை அழைத்துப்போக ஆசைப்படும் அண்ணன்அதற்காக அவன் தம்பியோடு அம்மாவை அழைத்துவந்து ஒரு நாள் கூட தன் வீட்டில் தங்க வைக்காமல் காலேஜில் சேர்த்துவிட்டு ஹாஸ்டலிலும் சேர்த்துவிடும் நிலை- அழகு.

அன்னை தெரஸாவை எம்ப்ராய்டரி போடும் இனியா, அக்கா மாமா முன்னால் தன் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிப்பதுதனது முதன்முதல் அல்வாவை அருள்நிதி கிண்டல்செய்யும்போது சிணுங்குவது, மொட்டை மாடியில் அருள்நிதியின் கையைப் பிடித்து காய்ச்சல் பார்ப்பது- அழகு

எப்போதும் ஆர்ப்பாட்டமாக நாம் பார்த்துப் பழகிய உமாரியாஸ் கர்ப்பவதி போலீஸ் வேடத்தில் கலக்குவது. கர்ப்பவதிக்குரிய உடல்மொழியுடன் கேஸை விசாரிப்பது-அழகு.

எப்போதும் லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரிகள். பணத்துக்காக எந்த எல்லையையும் தொடத்தயாராக இருக்கும் ஜான்விஜய் மற்றும் மூன்று போலீஸ் அதிகாரிகளின் அலட்டலும், அரற்றலும்-அழகு.

பணத்துக்கு ஆசைப்படும் விபச்சாரப் பெண்-பாத்திரப்படைப்பு-அழகு.

கல்லூரி முதல்வராகவும்  ஒரு தறுதலைக்கு அப்பாவாகவும் வந்து இருதலைக் கொள்ளி எரும்பாய் துடிக்கும் கல்லூரி முதல்வர்-அழகு.

பைத்தியக்கார நண்பனின் திருதிரு விழியும், உடல்மொழியும்-அழகு.

ஹாஸ்டலில் மாணவர்களின் பொருட்கள் அடிக்கடி காணாமல் போவதும் அதை சரியான நேரத்தில் திரும்பக்கிடைப்பதும்அழகு.

அருள்நிதியை என்கவுண்டர் செய்ய ஆந்திர மாநில எல்லைக்கு அழைத்துச்சென்று கொல்ல முயலும் அந்த திக்திக் இருபது நிமிடங்கள்-அழகு.


போலீசிடம் சிக்கிக்கொள்வதும் தப்பிப்பதுமான அந்த போலீஸ் திருடன் விளையாட்டுஅழகு.

காதுகேளாத குழந்தைகளை வைத்துக்கொண்டு நெஞ்சம் நிகிழச்செய்யும் இடங்கள்-அழகு.

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து அடிக்கடி ஊசி போட்டு அரைமயக்க நிலையிலேயே வைத்து சித்திரவதை செய்வதும் ஆஸ்பத்திரி சூழ்நிலையை பொருத்தமாக கேஸாக்குவதும்-அழகு.

ஆஸ்பத்திரியில் இருந்து இன்னொரு பைத்தியத்தின் உதவியுடன் தப்பிக்கும் அந்த திக்திக் நிமிடங்கள்-அழகு.

கல்லூரி மாணவர்கள், அவர்களின் ஃபைட் ரவுடிகள், மெண்டல் டாக்டர், பைத்தியங்கள், என்று ஒவ்வொரு சிறு பாத்திரப் படைப்புகளும் பார்த்துப் பார்த்து செதுக்கிய விதம்-அழகு

போலீஸ் சொல்லும் பைத்தியக்கார நாடகத்தை நம்பி தனது அம்மா உட்பட எல்லோரும் அவனை பைத்தியமாகவே பார்க்கும் திரைக்கதை அமைப்பு-அழகு.

அடிக்கடி போடப்படும் முடிச்சுகளும் அதை அவிழ்ப்பதும், பத்து நிமிடத்துக்கொருமுறை வரும் ட்விஸ்ட்டுகளும்-அழகு.

அறிமுகப் படத்திலேயே அழகான கதை சொல்லி கில்லி அடித்திருக்கும் அறிமுக இயக்குனர் சாந்தகுமார் சரக்குள்ளவர்எந்த ஆங்கிலப் படத்திலிருந்தும் காப்பி அடிக்காமல் எத்தனையோ முறை அடித்து திருத்தி எழுதிய திரைக்கதையில் இயக்குநரின் உழைப்பு நூறு சதவிகிதம் தெரிகிறது.

வாழ்த்துக்கள் சாந்தகுமார்.
வாழ்த்துக்கள் அருள்நிதி.
நல்ல கதையும், ஓகேவான நடிப்பும், நல்ல வசனங்களும், ஓகேவான இசையும்நல்ல ஒளிப்பதிவும், நல்ல இயக்கமும் கொண்ட பார்க்க தகுந்த நல்ல படம்-மௌனகுரு.

 

Monday, December 26, 2011

வைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.கொள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பேருக்கு அழியாத ஓவியமாய் மனசில் படிந்திருக்கும்.


ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சுடுகாட்டுக்கு வாயிருக்குமானால் இந்த நாட்டின் உண்மையான வரலாறு நிறைய சொல்லும்.

முன்பெல்லாம் ஒவ்வொரு பகுதிக்கு ஒரு சுடுகாடு இருக்கும்.  அதுவும் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும்.  அங்கும் பலப்பல சண்டைகள் நடக்கும்.  ஆண்டனியைப் புதைக்கப் போனால் அங்கு முன்னரே புதைக்கப்பட்ட ஆறுமுகம் எழுந்து அருவாள் எடுத்து வருவான்.  ரங்கராஜனும், ராமானுஜமும் புதைக்கப்பட்ட இடத்தில் ரங்கனுக்கும் ராமனுக்கும் இடம் இருக்காது. இப்படி ஆறடி நிலத்திற்கே அடிதடி நடக்கும்.


பின்பு நகரம் வளர வளர ஆற்றோரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வாழ்விடங்களாக மாறிப்போயின.  ஆறுகளே ஆக்கிரமிக்கப்ப்படும்போது சுடுகாடுகள் எம்மாத்திரம்?  என் நண்பனின் தாத்தாவை புதைக்க குழி வெட்டும்போது டையிங் தண்ணீர் கலர் கலராக ஊற்றெடுத்து வந்தது. அதற்குள்ளேதான் அவர் வண்ணவண்ண கனவுகளோடு மக்கிப்போனார்.


சுருங்கிப்போன சுடுகாடுகள் மல்டிபர்ப்போஸ் வளாகங்களாக மாறின.  ஒரே இடம் ரம்மி விளையாட்டும் , ரம்மியோடு விளையாட்டு (ரம்யாக்கள் மன்னிக்கவும்) நடக்கும் இடங்களாகியது.  அதுமட்டுமில்லாமல் திறந்தவெளி கழிப்பிடமாகவும் உபயோகப்படுத்தி நாசப்படுத்தி வைப்பார்கள்.  சுடுகாட்டுக்குப் போனால் மலம் காலில் படாமல் உள்ளே நுழைய ஷோபனாவைப் போல் பரதநாட்டியத்தின் அத்தனை அபிநயங்களும் தெரிந்திருக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல யோகா ராம்குருதேவ் போல் மூச்சுப்பயிற்சி பெற்றிருந்தால்தான் தம்பிடித்து உள்ளே சென்று வரமுடியும்.


அப்புறம் குழி வெட்டுபவர்களின் அலப்பறை தாங்க முடியாது.  சரியான அளவில் குழி வெட்டியிருக்க மாட்டார்கள்.  உயரமானவரின் பிணம் எனில் காலை மடக்கித்தான் குழிக்குள் தள்ளவேண்டியிருக்கும்.  குழிக்குள் இருவர் நின்று பிணத்தை இறக்கும் அளவுக்கு அகலம் இருக்காது.  ஆனால் அதைப் பற்றிய கவலையே குழி வெட்டுபவர்களுக்கு இருக்காது.  அவர்களைப் பொருத்தவரை பிணத்தை பிணமாகவே பார்ப்பார்கள்.  தட்டிக்கேட்டால் பெரிய சண்டை உருவாகிவிடும்.  அவர்கள் பதில் சொல்லும் நிலையிலும் இருக்க மாட்டார்கள்.    நிற்கவே முடியாத அளவில் தண்ணியில் இருப்பார்கள். எப்படியும் கணிசமான தொகையை கூலியாக பிடுங்கி விடுவார்கள்.  அவர்களைச் சொல்லியும் தவறு கிடையாது.  தினம் என்ன பத்து பிணமா வருகிறது?


இப்படி பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக வந்ததுதான் மின் மயானம்.  திருப்பூர் தெற்கு ரோட்டரி க்ளப் நிர்வாகத்தால் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் மின்மயானம் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.  


ஒரு பிணத்தை எரிக்க ரூ.1800/= வாங்குகிறார்கள்.  ஆம்புலன்ஸ் வண்டி வீட்டிற்கே வந்து பாடியை எடுத்துச் சென்று விடுவார்கள்.


சுத்தமான மற்றும் மரம், செடிகளோடு கூடிய அழகான இடம்.  இறுதிகாரியங்கள் செய்ய வளாகம்.  மொட்டை அடிக்க, குளிக்க என சுத்தமான பாத்ரூம் வசதி.  வள் என்று விழாத ஊழியர்கள்.  ஓவனுக்குள் எரிய பாடியைக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார இருக்கை வசதி. 


 அத்தகைய மயான அமைதியில் ஒரு பாடல் ஒன்று ஒலிபரப்பப்படுகிறது.  அந்த இசை மனதுக்குள் ஊடுருவி என்னவோ செய்வது தெரிகிறது.  ஒவ்வொரு வார்த்தையும் இறந்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து இதயம் நெகிழ்கிறது.  ஏறக்குறைய பத்து நிமிடங்கள் நாம் அந்த குரலில் கட்டுண்டது போல் கிடப்பது உண்மை. 


இந்த அரங்கத்தின் திறப்புவிழாவுக்கு திரு வைரமுத்து அவர்கள் வந்திருந்தார்கள்.  இதன்மீது கவரப்பட்ட அவர் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தார்.  இதை இசை அமைத்தவர் யாரென்று தெரியவில்லை.  ஆனால் உருக்கும் இசை.  நிச்சயம் பாடலைக் கேட்டபிறகு நமது இறந்துபோன நெருக்கமானவர்கள் நினைவில் வந்து போவது உண்மை.  விழியோரம் சிறிதேனும் ஈரம் நிச்சயம் சுரக்கும்.


இந்த பாடலை ஒலிவடிவில் கேட்டு இன்புற கீழே கிளிக் செய்யுங்கள். இங்கே கேட்க சிரமம் இருப்பின் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். டவுன்லோடும் செய்துகொள்ளலாம்.


அந்த மனதை உருக்கும் அந்த மந்திர பாடல் வரிகள்...ஜென்மம் இறந்தது சென்றவர்கள் வாழ்க.
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க.
நீரில் மிதந்திடும் கண்கள் காய்க.
நிம்மதி நிம்மதி நெஞ்சிடம் சூழ்க.


ஜனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போல் ஒரு பழையதும் இல்லை
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை 

பாசம் உலாவிய கண்களும் எங்கே
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே
தேசம் அளாவிய கால்களும் எங்கே
தீயுண்டது என்றது  சாம்பலும் இங்கே


கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடன் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியை போலொரு மாமருந்தில்லை

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதுமில்லை
நதிமழை போன்றது விதியென்று கண்டும்
மதிகொண்ட மானுடர் மயங்குவதென்ன

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும்
விதையொன்று வீழ்ந்திடில் செடி வந்து சேரும்


பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதை ஆகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுruம்போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக்கூடும்மாண்டவர் பாசங்கள் காற்றுடன் சேர்க
தூயவன் கண்ணொளி தோலினால் சேர்க
போதங்கள் ஐந்திலும் உன்னுடன் சேர்க
போனவர் புண்ணியம் என்னுடன் சேர்க..
போனவர் புண்ணியம் என்னுடன் சேர்க..
மின் மயானம் போய் இந்த பாட்டை கேட்டு வந்தால் நிச்சயம் நம்முடைய மரணம் பற்றிய ஆத்மவிசாரணையை ஆரம்பிப்போம்.


மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.