PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, October 3, 2011

Gaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு


வெளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு குடும்பமே சொகுசாக வாழும்.  ஆனால் அந்த காசை சம்பாரிக்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.  அந்த காசில் எவ்வளவு வலிகளும் வேதனைகளும் இருக்கிறது என்பதை இதுவரை எந்தப் படமும் சொன்னதாகத தெரியவில்லை.

ட்டம்ம- இதுமாதிரி வெளிநாட்டில் வேலைக்குப் போய் கஷ்டப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை.   அதை எவ்வளவு சுவராஸ்யமாக சொல்லமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் டைரக்டர் கமல்.

அஸ்வதி-(காவ்யா மாதவன்)கேரளாவின் ஒரு கிராமத்தில் மசாலா கம்பெனியில் வேலை செய்யும் ஒரு நடுத்தர குடும்பத்து பெண்.  அவளுக்கு கல்யாணம் ஆகிறது.  ஆனால் கணவன் அல்பாயுசில் ஆற்றோடு போய்விட நிர்கதியாய் நிற்கிறார்.  ஏழை அப்பாவுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் சவுதிக்கு வீட்டுவேலை செய்யும் வேலைக்கு ஆள் தேவைப்பட விமானம் ஏறுகிறார்.


விமான நிலையத்திலேயே நெற்றியில் அணிந்திருக்கும் பொட்டு, சந்தனம் எல்லாவற்றையும் அழித்து பர்தா அணிந்தபிறகே விமானம் ஏற்றப்படுகிறாள்.  அவளை மாதிரியே இப்படி வேஷம் மாற்றப்பட்டு நிறைய பேர் இருக்கிறார்கள்.(இது உண்மைதானா?  நான் நிறையப் பேரை சாதாரண உடைகளில்தான் விமான நிலையத்தில் கண்டிருக்கிறேன்)

வேலைக்கு போகும் இடத்தில் அந்த அரபு ஷேக்கின் வீட்டுக்குள் புகும் முன்னரே வாசலில் வைத்து முதல் வேலையாக அவளது பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்கிறார்கள்.  இவளை அழைத்துவந்த உஸ்மான் என்பவன் அந்த வீட்டில் டிரைவராக வேலை செய்வதுதான் ஒரே ஆறுதல்.  அவன் மட்டுமே மலையாளம் பேசக்கூடியவன்.  அப்புறம் இன்னொரு வேலைக்காரியான இந்தோனீசிய இளம்  பெண்ணொருத்தி .

அந்த வீட்டில் எப்போதும் தின்றபடியே இருக்கும் ஆஜானுபாகுவான ஒரு பையன்.  அவனுடைய பொழுதுபோக்கு தின்பது, கையில் பிளேடு வைத்து வேலைக்காரிகளை  விளையாட்டுக்காக  கீறுவது.  இன்னொரு பொடியன் இருக்கிறான், அவன் ஒரு செமி. அவனையும் அந்த வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வதுதான் வேலை.

உஸ்மானுக்கும் இந்தோனீசிய  பெண்மணிக்கும் காதல்.  இது இவளுக்கு தெரியவர கண்டிக்கிறாள்.  இங்கெல்லாம் இது சகஜம் என்கிறான் அவன்.  ஊரில் உனக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்களே என்கிறாள் இவள்.  அது அங்கு-இது இங்கு என்கிறான் அவன்.  இதை அஸ்வதியால் ஜீரணிக்க முடியவில்லை.  உஸ்மானின் காதல் விஷயம் ஷேக்குக்கு தெரிய இந்தோனீசிய பெண்ணுக்கு பயங்கர அடி, சித்திரவதை.  டிரைவரை உடனே வேலையை விட்டு துரத்துகிறார்கள்.  அன்று இரவு உஸ்மான் அஸ்வதியை மொபைலில் அழைத்து இந்தோனீசியப் பெண்ணை தப்பிக்க உதவுமாறு கேட்கிறான்.  அவளும் அந்தப் பெண் படும் பாட்டைக் கண்டு இரக்கப்பட்டு அந்த அறையின் ஏ.சி. ஓட்டை வழியாக தப்புவிக்கிறாள்.

இந்த விஷயம் ஷேக்-க்கு தெரியவர மொபைலை வாங்கி உடைத்துவிட்டு இவளுக்கு சித்திரவதை ஆரம்பமாகிறது.  பெல்ட்டால் அடி பின்னி எடுக்கிறார்கள்.  அப்படியே கொண்டு வந்து அறையில் அவளை போட்டுவிடுகிறார்கள்.  அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.  சிறிது நேரம் கழித்து கதவை திறந்து அந்த வீட்டின்    ஆஜானுபாகுவான பையன் வருகிறான்.  அவளை நெருங்கி வந்து சாப்பிட ஒரு ரொட்டித் துண்டை கொடுத்துவிட்டு போகிறான்.

அடுத்த நாள் அந்த வீட்டை சுத்தம் செய்யும்படியும், துவைக்க வேலை கொடுத்தபிறகு  எல்லோரும் வெளியே சென்று விடுகின்றனர்.  இதுதான் சமயம் என்று அந்த வீட்டின் லேண்ட்லைனில் உஸ்மானை அழைத்து எப்படியாவது தன்னையும் காப்பாற்றும்படி வேண்டுகிறாள்.  அவனும் அதே ஏ.சி. ஓட்டை வழியாக தப்பித்து அருகில் இருக்கும் அபுக்கா எனும் நண்பனின் மளிகை  கடைக்கு வந்து விடும்படியும் அவன் தான் இருக்கும் ரியாத் எனும் நகரத்துக்கு அவளை சேர்த்துவிடுவான் எனவும் கூறுகிறான்.

மாலை நேரத்தில் அவளும் தப்பிக்க ஏ.சி. ஓட்டையை நாடி போகிறாள்,  ஆனால் அதை அடைத்துவிட்டார்கள்.  சுற்றியிருக்கும் காம்பவுண்ட் சுவர்களோ பின்லேடன் வீட்டைப் போன்று மிகவும் உயாரமானவை.  அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய ஏணி கிடைக்கிறது.  தன்னுடைய துணிமணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஏணி வழியாக ஏறி சுவரின் அந்தப்பக்கம் குதித்துவிடுகிறாள். காலில் கண்ணாடிச் சில் ஏறி காயம் ஆகிறது. அதே வேளையில் அந்த வீட்டினில் வெளியே போனவர்கள் உள்ளே வந்து விடுகிறார்கள்.   ஒரு குப்பைத் தொட்டியின் மறைவில் மறைந்துகொள்கிறாள்.  வீட்டுக்குள் போனவர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்து காவலரை கேள்வி கேட்கிறார்கள்.  பிறகு பரபரப்பாக அவளை தேடி காரில் பறக்கிறார்கள்.  சிறிது நேரத்தில் அவள் எங்கேயும் கிடைக்காமல் திரும்பி வருகிறார்கள். அதுவரை அவள் அங்கேயே இருக்கிறாள்.  சிறிது நேரம் கழித்து காவலர் அசந்த சமயத்தில் அங்கிருந்து ஓடிவிடுகிறாள்.

நேராக உஸ்மான் சொன்ன கடைக்கு போய் பார்க்கிறாள்.  பூட்டியிருக்கிறது. பூட்டிய ஷட்டரை தட்டுகிறாள்.  யாரும் வருவாரில்லை.  அருகினில் ஒரு பொதுத் தொலைபேசியைக் கண்டாள்.  போன் செய்ய பையில் காசை தேடுகிறாள்.  ஆனால் அவளிடம் இருப்பதெல்லாம் இந்திய ரூபாய்களும் சில்லரைகளும்தான்.  சோர்ந்து போய் அந்த நீண்ட நெடுஞ்சாலையில்    தன்னந்தனியாய்  ரியாத்தை நோக்கிச் செல்கிறாள்.  இருபுறமும் அடர்ந்த பாலைவன மணல்வெளி.  வீசியடிக்கும் காற்றில் மணல் கண்ணை மறைக்கிறது.  போட்டிருக்கும் பர்தாவோடு  சொர்ந்தபடி மெதுவாக நடக்கிறாள்.  விடிந்தும் நடக்கிறாள்.  பகல் பொழுது கடுமையாக இருக்கிறது.  விரைந்து செல்லும் வாகனங்கள் எதுவும் இவள் கைகாட்டலுக்கு நிற்கவில்லை.

ஒரே ஒரு ட்ரக் மட்டும் நிற்கிறது.  அவர்களிடம் தண்ணீர் கேட்க அவளது கைகளில் ஊற்றுகிறார்கள்.  ரியாத் போகுமா என்று கேட்க பின்னால் ஏற்றிவிடுகிறார்கள். அது ஆடுகளை ஏற்றிச் செல்லும் வண்டி.  ஆடுகளோடு ஆடுகளாக ஏறி அமர்ந்து கொள்கிறாள்.  கொஞ்ச தூரம் போனபிறகு அந்த ஆடுகளோடு இன்னொருவனும் கலைந்த தலையோடு உறுத்தும் விழிகளோடு ஒருவன் இருக்கிறான்.  வண்டி நெடுஞ்சாலையிலிருந்து பாதை மாறி செல்கிறது.  இவள் தான் ஏமாற்றப் படுகிறோம் என்பதை உணர்ந்து கத்துகிறாள். ஆனால் கேட்க  யார் இருக்கிறார்கள்...

சிறிது நேரத்தில் பாலைவனத்துக்கு இடையில் உள்ள ஒரு ஆட்டுப் பட்டியில் வண்டி நிற்கிறது.  இவளை இறக்கி அவளுக்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள்.  குடிக்க தண்ணீர் இல்லை. ஆடுகளுக்கு வைத்திருந்த தண்ணீரை அள்ளுகிறாள். அது மணலும் எறும்புகளும் நிறைந்ததாக இருக்கிறது.  அப்போது   அந்த கலைந்த தலையோடு இருந்தவன் தண்ணீர் தருகிறான்.  மாலை நேரத்தில் எல்லோரும்
 தொழுகையில் உட்கார்ந்த சமயத்தில் அந்த கலைந்த தலையோடு இருந்தவன் இவளின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறான்.  நடு பாலைவனத்தில் அவளை விட்டு 'ஓடிவிடு.. இங்கிருந்தால் உன்னை சின்னாபின்னப் படுத்திவிடுவார்கள்.  எங்கேயும் நிற்காமல் ஓடிவிடு'- என்கிறான்.  அவளும் தலை தெறிக்க திசை தெரியாமல் ஓடுகிறாள்.  அவன் திரும்பிவந்து தொழுகையில் கலந்துகொள்கிறான்.

தொழுகை முடிந்ததும் இவனை அடித்துபோட்டுவிட்டு அவளை  மூவரும் காரில் பாலைவனமெங்கும் தேடுகிறார்கள்.

இதற்கிடையில் ஆட்டுப்பட்டியில் டிரைவர் வேலை செய்யும் பரதன் என்பவன் அடிபட்ட  அவனது நண்பனை(பசீர்) பார்க்கிறான். அவன் மூலமாக விசயத்தை அறிந்துகொண்டு இருவரும் அவளை தேடி காரில் செல்கிறார்கள். இரவெல்லாம் தேடி கிடைக்காமல் சலித்து போய் திரும்பும் சமயத்தில் நடு பாலைவனத்தில் அஸ்வதி மயங்கி விழுந்து கிடப்பதை பார்க்கிறார்கள்.    அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலைக்கு வருகிறார்கள்.  பஷீர் அவளை எப்படியாவது ரியாத்தில் சேர்த்துவிடுமாறு பரதனிடம் சொல்லிவிட்டு ஆட்டுப்பட்டிக்கு போகிறான்.  அங்கே காத்திருந்த அரபியர்கள் இவனை கொன்றுவிடுகிறார்கள்.

வேண்டாவெறுப்பாக நண்பன் சொல்லிவிட்டானே என்று அவளை கூட்டிகொண்டு ரியாத் செல்கிறான் பரதன்.  ரியாத்தில் உஸ்மானை பார்க்கிறார்கள்.  ஆனால் உஸ்மான் அவளை யாரென்றே தெரியாதென்கிறான் . ....  நிற்க..என்ன நான் இவ்வளவு விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அதன்பிறகு அவள் என்னவானாள்... தப்பித்தாளா.. இல்லையா? என்பதை வெள்ளித் திரையில் அல்லது கணினித் திரையில் காணுங்கள்.

 படத்தில் சுவாரஸ்யங்கள் சில...

காவ்யா மாதவன் அந்த வீட்டில் பெல்டில் அடி வாங்கும்போது,,,,இவளால் ட்யுஷன் சொல்லிகொடுக்கப் பட்ட பெண் யானை உருவத்தை அழகாக வரைவது,  சிந்திச் சாப்பிட்ட செமியான பையன் அழகாக சாப்பிடுவது போன்ற காட்சிகள்.

காவ்யா மாதவனின் அந்த குண்டு விழிகள்... அப்பப்பா எத்தனை பாவம்.  உடல் முழுவதும் மறைக்கப் பட்டு, முகமும் கூட மறைக்கப்பட்டு வெறும் விழிகளில் மட்டுமே மிரட்சியையும், அழுகையையும் காட்டிய விதம் அருமை.

படம் முழுக்க த்ரில்லாக கொண்டு சென்ற டைரக்டர் கமல் அருமையாக செய்திருக்கிறார்.  இடையில் சமூக சேவகராக வரும் சீனிவாசனின் போர்ஷனை இன்னும் நன்றாக எடிட் செய்திருந்தால் விறுவிறுப்புக்கு குறை இருந்திருக்காது.

கதை-கே.யு.இக்பால்.  இசை-Bennett-Veetrag, ஒளிப்பதிவு-மனோஜ் பிள்ளை -சில இடங்களில் அசத்துகிறார்.

நாம் படம் பார்க்கும்போது எப்படியாவது அவள் தப்பித்து ஊர் சேரவேண்டும் என நாம் அடித்துக்கொள்வது இந்தப் படத்தின் வெற்றி.  வெளிநாட்டில் இந்தமாதிரி வேலை செய்யும் நண்பர்களுக்காக ஒரு நிமிடம் நினைக்க வைத்த டைரக்டர் கமலுக்கு நன்றி.

நல்ல படம்- பார்த்தே தீரவேண்டிய படம்.


  

9 comments :

 1. பார்க்கிறேன் சார் நன்றீ:-)

  ReplyDelete
 2. பதிவைபார்த்தா ஒருமுறை பார்க்கலாம் போலத்தான் இருக்கு லிங்க் கொடுக்குரீங்களா?

  ReplyDelete
 3. பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி.
  சபுதி அரேபியாவில் இலங்கை, பிலிப்பைன், இந்தோனீசிய பெண்கள் படும் கொடுமைகள் பல அறிந்துள்ளேன். மலையாளம் மொழி விழங்காது. தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அல்லது தமிழ் டப்பிங் வந்தால் கண்டிப்பாக பார்ப்பேன். நண்பர்களுக்கும் சிபார்சு செய்வேன்.நன்றி.

  ReplyDelete
 5. @ லட்சுமி மேடம்... நன்றி. கூகிளாண்டவரைக் கேளுங்கள் வேண்டும் வரம் தருவார். சப் டைட்டிலோடு கிடைக்கிறது.

  ReplyDelete
 6. நன்றி @சாமீ

  நன்றி @முரளி

  நன்றி@மாலதி

  நன்றி@ baleno...மலையாளம் மொழி தெரியவேண்டியதில்லை. சப் டைட்டிலோடு பார்க்க படம் கிடைக்கிறது. கூகிளாண்டவரை கேளுங்கள்.

  ReplyDelete
 7. எல்லோருக்கும் வாழ்கை இனிமையாக அமைந்து விடுவதில்லை. அறியாமை தான் காரணம் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 8. இத்திரைப்படத்தை தமிழில் காண கிளிக் செய்யவும்
  https://www.youtube.com/watch?v=nbUcEys6KsU

  ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......