PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, February 7, 2014

BEKAS (2012) - அழுக்குப் பசங்களின் அமெரிக்கப் பயணம்.

இன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் உலக சினிமாவின் வரிசையில் BEKAS (2012)...இன்று தமிழ்நாட்டில் ரஜினி, விஜய் சூர்யா மோகத்தில் எத்தனையோ சிறுவர்கள் திருட்டு ரயிலேறி அவர்கள் வீட்டின் கேட்டை மட்டும் பார்த்து வரும் கதைகளை  தினசரிகளில் படித்துள்ளோம்.

இது ஈராக் நாட்டில் 1990ம் ஆண்டில் நடக்கிற கதை.  டானா, ஜானா எனுமிரு பெற்றோர் இல்லாத சகோதர சிறுவர்கள் ஷூ பாலீஸ் போட்டு பிழைத்து வருகிறார்கள்.  அவர்கள் ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் ஓடும் சூப்பர்மேன் படத்தை திருட்டுத்தனமாக பார்க்கிறார்கள்.  தியேட்டர்காரர்களிடம் அடி உதை வாங்கி சோர்ந்து போய் ஒரு மலையின் மீது நின்று சபதம் எடுக்கிறார்கள்.  மலையின் மறுபுறம் இருக்கும்   அமேரிக்கா போய் எப்படியும் சூப்பர்மேனை பார்த்துவிடுவது என்று.   சூப்பர்மேனை மட்டும் பார்த்துவிட்டால் தமது துன்பம் எல்லாம் தீர்ந்துவிடும், தனது எதிரிகளை வென்றுவிடலாம்  என்று நம்புகிறார்கள்.  எதிரிகளின் லிஸ்டில் முதல் பெயர் சதாம் ஹுசேன்.  அமேரிக்கா போக  பாஸ்போர்ட் வேண்டும்,  பாஸ்போர்ட் எடுக்க காசு வேண்டும்.  அதற்கு நிறைய பாலீஸ் போடவேண்டும் என்று சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள்.

பாலீஸ் போட வரும் ஒரு வாத்தியார் மகளிடம் அண்ணனுக்கு காதல் வேறு.. அவளை தனியே சந்தித்து முத்தம் வரை காதல் வளர்ந்துவிடுகிறது.  காதலி ஏரியில் குளிக்கும்போது தங்கச் செயினை தொலைத்து விட,  டானா ஓடிப்போய் வீராவேசமாக நீச்சல் தெரியாமலே ஏரியில் குதித்துவிட அருகிலிருந்தவர்கள் காப்பாற்றுகிறார்கள்.  ஆனால் அந்த தங்கச் செயின் இப்போது அவன் கைகளில், காதலியோ ஊரைவிட்டே போய்விட்டாள்.

இவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு கண் தெரியாத பெரிசு போய்ச் சேர்ந்துவிட இனி நாம் அமெரிக்காவுக்கே போய்விடலாம் என்று இருவரும் முடிவுக்கு வருகிறார்கள்.  கையிலிருக்கும் கொஞ்சம் காசைப்போட்டு ஒரு கழுதையை வாங்கி அதற்கு மைக்கேல் ஜாக்சன் என்று பெயரிட்டு கழுதை மேலேறி அமெரிக்காவுக்கு பயணமாகிறார்கள்.

போகிற வழியில் கைவண்டி இழுத்துச் செல்லும் ஒரு பெரியவரைப் பார்த்து தன் கழுதையை அந்த வண்டியில் பூட்டி மூவரும் வண்டியில் செல்கிறார்கள். ஒரு இடத்தில் பெரியவர் போய்விட கழுதையில் ஏறி அந்த நாட்டின் எல்லையை அடைகிறார்கள்.  எல்லைப் பதுகாவலுக்கு நிற்கும் போலீஸ் சோதனையைத் தாண்டி நெடுநெடுவென போகும் இருவரும் தடுத்து நிறுத்தும் போலீசிடம் நாங்கள் அமெரிக்காவுக்கு போகவேண்டும் வழி விடுங்கள் என்று மிரட்ட சிரித்துக்கொண்டே போலீஸ் திருப்பி விரட்டுகிறார்கள்.

அங்கே ஒரு கடத்தல் கும்பலிடம் எப்படியாவது எல்லை தாண்டி விடச் சொல்ல கூலியாக தங்கச் செயினை தருவதாகச் சொல்கிறார்கள்.   காலை ஆறு மணிக்கு வரச் சொல்கிறார்கள்.  அதற்கிடையில் தனது பழைய காதலியைப் பார்த்துவிட்டு அவள் பின்னால் போய்விடுகிறான் டானா.  அவள் காலை ஆறு மணிக்கு வீட்டருகே வருமாறு சொல்லிவிட்டு போய்விடுகிறாள்.  இருவரும் அவள் வீட்டெதிரேயே தங்குகிறார்கள்.  டானா மட்டும் காதலியை ஜானாவுக்கு தெரியாமல் போய்ப் பார்த்து தங்கச் செயினை திருப்பித் தருகிறான்.  திரும்பி வந்து பார்த்தால்  தங்கச் செயின் இல்லாதலால் கடத்தல் கூட்டம் இவர்களை விட்டுவிட்டு சென்றுவிடுகிறது.

பிறகு கழுதையை விற்று காசு பண்ணிவிட்டு கோகோகோலா வேனில் ஏறிப் போய்விடலாம் என்று திட்டம் போடும்போது இருவரும் பிரிந்து விடுகிறார்கள். தம்பி மட்டும் வேனின் அடியில் தொற்றிக்கொண்டு எல்லைவருகிறான். அண்ணனும் எப்படியோ அங்கு வந்து விட இருவரும் சாதுர்யமாக எல்லையைக் கடக்கிறார்கள்.

ஓர்  இடத்தில் கடத்தல் கும்பல்காரனை பார்த்துவிட அவர்களை காரின் டிக்கியில் பொரி  மூட்டையில் ஒளிந்து செல்கிறார்கள்.  மீண்டும் சோதனை போலீசாரிடம் தப்பித்து கொஞ்ச தூரம் போய் இவர்களை இறக்கி விட்டு போய் விடுகிறார்கள்.

அமேரிக்கா அருகில் வந்து விட்டதாக நம்பி இருவரும் காட்டுவழியே நடந்து வருகிறார்கள்.  அப்போது அண்ணன் புதைத்து வைத்திருக்கும் கண்ணிவெடியில் கால் வைத்துவிட அவனைக் காப்பாற்ற தம்பி ஊருக்குள் போய் உதவி கேட்டு அலைகிறான்... கடைசியில் அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்களா,  கண்ணிவெடி டானாவை என்ன செய்தது என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குனர் Karzan Kader நல்ல குசும்பர் என்று தெரிகிறது.  அமெரிக்காவையும் அதன் கொள்கைகளையும் அழகாக பகடி செய்கிறார்.  கழுதைக்கு மைக்கேல் ஜாக்சன் என்று பெயர் சூட்டி அதை கலாய்ப்பதும்,  சிறுவன் ஜானா மூத்திரம் பேயும்போது ஜாக்சனின் நடன அசைவை பிரதிபலிப்பதும் சிரித்து மாளாது.  ஒற்றைக் குச்சியை  முறிப்பதெனில்  சுலபமாக உடைத்துவிடலாம்.  கற்றைக் குச்சிகளை உடைப்பது மிகவும் சிரமம் எனும் ஜென் கதையை ஊடே அழகாகச் சொல்லிச் செல்கிறார்.

அச்சமில்லை அச்சமில்லை படத்தில் பாலச்சந்தர் சுதந்திரம் என்று ஒரு பாத்திரத்தை ஒன்றை உருவாக்கி அவ்வப்போது கலாய்த்திருப்பார்.  அது மாதிரிதான் இந்த ஜாக்சன் கழுதை..

மசூதியில் பிரார்த்தனை செய்யும்போது ஜானா செய்யும் குறும்புகள், கண் தெரியாத பெரிசிடம் என்னை மகனே என்று அழைக்க மாட்டாயா என்று கேட்பது என்று ஒரு தேர்ந்த இயக்கத்தைக் காணலாம்.  இது இவர் வாழ்வில் நடந்த கதையே என்கிறார்.  தான் பட்ட கஷ்டங்களையே நகைச்சுவையாக சொல்கிறார்.

சிறுவர்களாக நடித்திருக்கும் Zamand Taha, Sarwar Fazil இருவரின் நடிப்பும் அருமை.  அதுவும்  ஜானாவாக வரும் சிறுவனின் நடிப்பு நம்மை சொக்க வைக்கிறது.  அவனின் கோபம, அன்பு, மிரட்டல் .... எல்லாப் பாவங்களும் அவன் முகத்தில் ஊற்றாய் வருகிறது.படத்தை தனது பிஞ்சு கைகளாலேயே தாங்கிச் செல்கின்றனர்.

படம் ஆரம்பம் முதல் முடிவு வரை போர் அடிக்காமல் கொண்டு சென்று இருக்கும்  இயக்குனரை கண்டிப்பாக பாராட்டவேண்டும். 

WADJDA (2012) - பாலைவனச் சோலை.

ன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் WADJDA என்கிற சவூதி அரேபிய படத்தைப் பற்றிய விமர்சனம்.

நான் சிறுவயதில் இருக்கும்போது சைக்கிள் வாங்கும் கனவை மூன்று ஆண்டுகள் கண்டிருக்கிறேன்.  திருப்பூரில் எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்குக் கிட்டத்தட்ட போகவர எட்டு கி..மீ. வரும்.  இரண்டு வருடங்கள் நடந்தேதான் சென்று வருவேன்.  தினமும் என் அம்மாவையும் அப்பாவையும் ஒரு சைக்கிள் வாங்க நச்சரித்துக்கொண்டே இருப்பேன்.  இரண்டு வருடங்கள் அழுத்தத்தின் பலன் அப்பா ஒரு பழைய சின்ன சைக்கிள் முன்னூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தந்தார்.  அன்றைய நாள் நான் அடைந்த மகிழ்ச்சி இன்று வரை எப்போதும் அடைந்ததில்லை என்று சொல்வேன்.  அப்படி ஒரு சந்தோசம்.

இந்தியாவில் என்னைப்போன்ற ஒரு சிறுவனுக்கே சைக்கிள் என்பது ஒரு கனவென்றால் சவுதி அரேபியாவில் ஒரு சிறுமிக்கு சொந்த சைக்கிள் என்பது எப்படி சாத்தியப்படும்.  அதுவும் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்கிற நாட்டில்.

WADJDA ஒரு பதினோரு வயது சிறுமி, ரியாத் நகரில் அம்மாவோடு வசிக்கிறாள்.  அப்பா அவ்வப்போது வந்து செல்கிறார்.  அவருக்கு தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையென்பதால் இன்னொரு கல்யாணம் செய்யும் முடிவில் இருப்பதால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புரிதல் இல்லை.

சிறுமியின் பக்கத்து வீட்டு நண்பன் அப்துல்லா.   அவளை துப்பட்டாவை விளையாட்டுக்கு இழுத்து எடுத்துக்கொண்டு சைக்கிளில் வேகமாக போகிறான்.  வாஜ்டாவுக்கு அவனை சைக்கிள் பந்தயத்தில் வெல்லவேண்டும். அதுவே குறிக்கோள். ஆனால் அந்த நாட்டில் பெண்கள் சைக்கிள் ஓட்டத் தடை.  தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கடையில் புது சைக்கிளை பார்க்கிறாள்.  அதன் விலையை விசாரிக்கிறாள்.  800 ரியால்.. உன்னால் வாங்க முடியாது போ என கடைக்காரர் விரட்டுகிறார்.

அவளுக்கு அந்த சைக்கிளை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று அவளது அம்மாவிடம் கெஞ்சுகிறாள்.  அம்மா பெண்கள் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மறுத்து விடுகிறாள்.  ஆகையால் தானே காசு சேர்த்து வாங்கிவிடுவது என்று முடிவு செய்கிறாள்.  அதற்காக வீட்டிலேயே கையில் கட்டும் கலர் கயிறுகள் செய்து பள்ளியில் விற்கிறாள்,  பள்ளியில் படிக்கும் சீனியர்க்கு காசு வாங்கிக்கொண்டு  கடிதப் பரிமாற்றம் செய்கிறாள்.  பாடல் கேசட் விற்கிறாள்.

அப்போது பள்ளியில் குரான் ஒப்புவித்தல் போட்டி அறிவிக்கப் படுகிறது. அதில் ஜெயித்தால் ஆயிரம் ரியால் பரிசாக கிடைக்கும் என அறிவிக்கப்படுகிறது.  அந்தப் பரிசை வெல்ல திட்டம் போடுகிறாள்.  குரான் கேம் CD வாங்கி விளையாட்டாக கற்கிறாள்.   குரான் பாடல்களை மனப்பாடம் செய்கிறாள்.  போட்டி நடைபெறுகிறது.  அதில் வெல்கிறாள்.

பரிசு தரும்போது இந்த பணத்தை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கும்போது நான் சைக்கிள் வாங்குவேன் என்று சொல்கிறாள்.   அதிர்ச்சி அடையும் ஆசிரியை சைக்கிள் ஓட்டுவது தவறு என்று சொல்லி பரிசுப் பணத்தை அவள் சார்பாக பாலஸ்தீனத்துக்கு கொடுத்துவிடுகிறாள்.

பிறகு அவள் சைக்கிள் வாங்கினாளா?  அப்துல்லாவோடு சைக்கிள் பந்தயத்தில் வென்றாளா? என்பதே கதை.

மிகவும் சிம்பிளான கதை.. ஆனால் அதை சொன்ன விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் Haifaa al-Mansour.  இவர் சவூதி அரேபியாவின் முதல் பெண் இயக்குனர். சவுதியில் படமாகிய முதல் முழநீள திரைப்படமும் இதுதான்.  இக்கதையே தனது சொந்த வாழ்வின் பிரதிபலிப்புதான் என்று சொல்லும் இயக்குனர் இந்தப் படத்தின் மூலம் அரேபியப் பெண்களின் வாழ்வு முறை தெளிவாகக் காண்பிக்கிறார்.

தலைக்கு முக்காடு போடாமல் வெளியே வரக்கூடாது.   முகத்தைக் கூட மூடிக்கொண்டுதான்  வரவேண்டும்.  பள்ளியில் யாரும் நகங்களுக்கு  பாலீஸ் போட்டு வரக்கூடாது.  டாட்டூ வரைந்துகொள்ளும் பெண்கள் தண்டிக்கப் படுகிறார்கள்.  பள்ளியில் படிக்கும் சக தோழி 11 வயதுப் பெண் தனது இருபது வயதுக் கணவன் என்று போட்டோ காட்டுகிறாள்.   போட்டோக்கள் கூட பள்ளிக்கு கொண்டுவரக் கூடாது என்று ஆசிரியை சொல்கிறாள்.

வாட்ஜ்டாவின் அம்மாவின் வாழ்க்கை அங்கு வாழும் பெண்களின் ஒரு சோறு பதம்.  அழகான பெண் எனினும் ஆண் வாரிசை கொடுக்க முடியாதலால் குடும்ப வாழ்வில் இருந்து நிராகரிக்கப் படுகிறாள்.  வீட்டில் வரைந்திருக்கும் 'குடும்ப மரம்' வரைபடத்தில் எல்லாமே ஆண்கள் பெயர்கள்தான்..  பெண்கள் பெயர்கள் வரக்கூடாதாம்.   அதில் வாட்ஜ்டா தனது பெயரை எழுதி ஒட்டி வைப்பதும், அடுத்த நாள் அது உதிர்ந்து கிடப்பதும் நல்ல டச்.

வாட்ஜ்டாவின் ஆசை நிறைவேறாதபோது தன்னைவிட சிறிய வயதான பக்கத்து வீட்டுத் தோழன் சொல்வது, 'கவலைப்படாதே... நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்.  அதன் பிறகு நான் உனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தால் யாரும் கேட்கப்போவதில்லை'.  சின்னப் பையனல்லாம் பேசற அளவுக்குத்தான் அரேபிய பெண்கள் நிலைமை இருக்கிறது.

வாட்ஜ்டாவாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அபாரம்.  முகத்தில் குடிகொண்டிருக்கும் மெல்லிய சோகம், வாயாடல் இல்லை, சிரித்தால் மனதை  அள்ளிக்கொள்ளும் வடிவான முகம்.  நடக்கையில் ப்ரெயரில் நிற்கையில் என ஒரு வித அலட்சிய உடல்மொழி, அழும்போது கூட அளவான வெளிப்பாடு என நடிப்பின் சில பரிமாணங்களை அழகாக வெளிப்படுத்துகிறாள்.

தன் தோழனோடு சண்டை நடந்து பேசாமல் அமர்ந்திருக்க இரண்டு ரியால் தருகிறேன் என்று சொன்னதும் புன்சிரிப்பது,  சைக்கிள் கடையில் சைக்கிளை வேறொருவர் பேரம் பேசியதைப் பார்த்த வாட்ஜ்டா கடைக்காரரை கேசட் கொடுத்து சரிகட்டுவது, தோழனின் மாமாவின் மீசையைப் பார்த்து கேலி செய்வது, அம்மாவைத் திட்டிய டிரைவரை தன் தோழனோடு  போய்  மிரட்டுவது,  இறுதிக்காட்சியில் சைக்கிளை  பார்த்தவுடன் முகத்தில் ஒரு பாவம், அப்பாவுக்கு கல்யாணம் என்று அம்மா சொன்னவுடன் அப்பாவுக்கு பிடித்த சிவப்பு டிரஸ்-ஐ போட்டுப் போய் அப்பாவை அழைத்து வந்துவிடலாம் என்று வெள்ளந்தியாய் சொல்வது என நடிப்பில் பொளந்து கட்டுகிறது சின்னப் பெண்.

 தியேட்டர்கள் இல்லாத கட்டுபெட்டியான அரேபிய மண்ணில் எப்படி இந்த படப்பிடிப்பை நடத்தினாளோ மகராசி.  கேரவுனுக்குள் அமர்ந்துகொண்டு வாக்கி டாக்கி மூலம் கட்டளைகள் பிறப்பித்தே ரியாத் நகர வீதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்.  ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டதற்கு பலனாக பல விருதுகளை அள்ளித் தந்திருக்கிறது இப்படம்.

அவசியம் பார்க்க வேண்டிய படம்.
 

Thursday, February 6, 2014

AMOUR (2012)-அன்பால் என்னைக் கொன்றுவிடு.

ன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் படம் AMOUR.  இதைப் பற்றிய விமர்சனம்..


முதியவர்களின் வாழ்க்கை கல்லும் முள்ளும் நிறைந்ததுதான்.  அதுவும் படுத்த படுக்கையாய் கிடந்து உடனிருந்து கவனிப்போரை பாவமாக்கி இருக்கின்ற சொத்தையும் மருத்துவ செலவுகளுக்காக அழித்து  சிரமப்படும் குடும்பங்களை நிறைய கண்டிருக்கிறேன்.

முதிய தம்பதிகள் தங்கள் அன்பை  ஒருவருக்கொருவர் ஈந்து வாழ்ந்து காட்டியவர்கள்,  ஒருவர் (பெண்) நோயில் வீழ்ந்து கஷ்டப்படும்போது இன்னொருவர் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதை அருமையாகச் சொன்ன பிரெஞ்சு படம்தான் AMOUR  என்கிற இந்தப் படம்.  இந்தப் படத்தின் முடிவு நிச்சயம் எல்லோரையும் உலுக்கிவிடும்.  தன்னுடைய வாழ்க்கையை நினைத்து எல்லோரையும் கலங்கவைத்துவிடும்.

ஜார்ஜ்-அன்னி தம்பதிகள் எண்பதை தொட்டுவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு மகள்- அவள் வெளிநாட்டில் வசிக்கிறாள்.  இவர்கள் இருவரும் ஒய்வு பெற்ற பியானோ கற்றுத் தரும் ஆசிரியர்கள்.  இவர்களிடம் கற்றவர்கள் இப்போது பெரிய ஆளாக இருக்கிறார்கள்.

அப்படியொரு மாணவனின் வெற்றிவிழாவில் கலந்துகொண்டு  வீட்டுக்கு வந்த இருவரில் மனிவிக்கு  ஸ்ட்ரோக் வருகிறது.   அதனால் அவள் ஒரு நிமிடம் அப்படியே நிலையாக அமர்ந்திருக்கிறாள்.  அந்த நேரத்தில் அவளுக்கு எதுவுமே தெரியவில்லை.  ஜார்ஜ் அவள் விளையாடுகிறாள் என்றெண்ணி திட்டுகிறார்.  ஆனால் அவளால் தம்ளரில் தண்ணீர் கூட ஊற்றமுடிவதில்லை. மருத்துவமனை சென்றால் ஆபரேஷன் செய்யவேண்டும் என்கின்றனர்.  ஆனால் சிகிச்சை தப்பாகப் போய் அது பக்கவாதத்தில் முடிகிறது.  மனைவியோ மீண்டும் மருத்துவமனை கொண்டுபோகக்கூடாது என்று ஜார்ஜிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.

பக்கவாதம் வந்த மனைவியை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட மனம் கோணாமல் ஜார்ஜ் பணிவிடை செய்கிறார்.  வாரத்தில் மூன்று நாட்கள் ஹோம் நர்ஸ் வந்து பார்த்துக்கொள்கிறார்.  பத்து நாளைக்கொருமுறை ஹேர் டிரஸ்சர் வந்து பார்த்துக்கொள்கிறார். அது போக பிசியோ தெரபிஸ்ட் என்று ஒரு குறையும் இல்லாமல் கவனித்துக் கொள்கிறார்.

மீண்டும் உடல்நலம் மோசமாக கொஞ்சம் நஞ்சம் பேச்சும் வராமல் போய்விட ஜார்ஜ் ரொம்பவும் சிரமப்படுகிறார். மகளோ மருத்துவமனைக்கு கொண்டுபோகலாம் என்று சண்டை போட ஜார்ஜ் தான் சத்தியத்துக்கு மாறாக நடக்கமாட்டேன் என்று கூறுகிறார்.  தானே எல்லா பணிவிடைகளும் செய்கிறார்.

ஒருநாள் சேவ் செய்துகொண்டிருந்த ஜார்ஜ் மனைவி அழைக்கும் குரல் கேட்டு உள்ளே போகிறார்.  மனைவி ஏதோ சொல்ல வர புரியாமல் அவரை அமைதிப் படுத்துகிறார்.  அப்போது தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை கோர்வையாக சொல்லி கொண்டிருக்கிறார்.   அது அவளை அமைதிப் படுத்துகிறது.  அந்தக் கதையின் முடிவில் அருகில் இருந்த தலையணையை எடுத்து அமுக்கி கொன்றுவிடுகிறார்.

பிறகு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் வெளியே சென்று மலர்கள் வாங்கி வந்து ஒவ்வொன்றாய் வெட்டி அவற்றையெல்லாம் மனைவியின் உடலைச் சுற்றி அலங்காரம் செய்து படுக்கையில் வைத்துவிட்டு போலீசுக்கு ஒரு லெட்டர் எழுதி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் புகுந்த ஒரு புறாவை பிடித்து வெளியே சுதந்திரமாக பறக்க விடுகிறார்.

இதுதான் கதை.  இதை எடுத்த விதம் அருமை.  சட்டென்று கட்டாகாத காட்சிகள்.  பின்னணியில் இசையே இல்லாமல் வெறும் ஒலிகளை மட்டும் வைத்துக்கொண்டு காட்சிகளை நகர்த்துவது.  முக பாவங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பெரிசுகளை நடிக்கவைத்து வேலை வாங்கியது என்று இயக்குனர் Michael Haneke சபாஷ் பெறுகிறார்.  புராவொன்று வீட்டுக்குள் புகுந்து விடும்.  அந்தப் புறாவை பிடிக்க பெட்ஷீட்டோடு அவர் படும் பாடு பிடித்த பிறகு நீவிக்கொடுக்கும் காட்சி என் மனதை என்னவோ பண்ணியது.


நடித்திருக்கும் Jean-Louis TrintignantEmmanuelle Riva இருவரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.   முகபாவங்கள் காட்டுவதில் இருவருமே போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள்.  இந்தக் குழுவே ஐரோப்பியாவில் உள்ள எல்லா விருதுகளையும் அள்ளிக் குவித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்தபிறகு எனக்கு என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.  எனது பெரியம்மாவென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். பள்ளி விடுமுறைக்கு பொள்ளாச்சிக்கு இவர்கள் வீட்டுக்குத்தான் போவேன்.   சினிமா பார்ப்பதும் விளையாடுவதும் என்று ஜாலிதான்.  பெரியம்மாவின் முதிய காலத்தில் பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகி இரண்டு வருடங்கள் கிடையில் கிடந்தார்கள்.  அவ்வப்போது போய் அருகில் உட்கார்ந்து கைகளை எடுத்து மடிமீது வைத்து சிறிது நேரம் பேசிவிட்டு வருவேன்.

மருமகளின் கவனிப்பு கொஞ்சம் கூட கிடையாது.  மகன் மட்டும் தினமும் காலையில் வந்து  தேவையானவற்றை செய்து வைத்துவிட்டு வேலைக்குப் போய்விடுவான்.  மீண்டும் அடுத்த நாள் காலைதான் வருவான்.  இடையில் அருகில் இருக்கும் மகளும் அவரது மகன்களும் பார்த்துக் கொள்வார்கள்.  இரண்டு வருடம் ஆகிவிட்டதால் எல்லோருக்குமே ஒருவித சலிப்பு வர ஆரம்பித்துவிட்டது.   எல்லோருக்குமே எப்படா போய்சேருமென்று  எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.   நான் கடைசியாக சென்று பார்த்தபோது மிகவும் அதிர்ந்துவிட்டேன்.

முதுகெல்லாம் புண்ணாகி மிகவும் கோர நிலையில் எனது பெரியம்மா இருந்தார்.  கட்டிலின் கால் வழியாக ஒரு எறும்புப் படை மேலேறி கையில் ஓட்டை போட்டு உடம்புக்குள் போய்க்கொண்டு இருந்தது.  இதைக் கண்டதும் என் கண்களில் இருந்து கண்ணீர் தன்னாலே வந்துகொண்டு இருந்தது.  பிறகு நானும் என் மனைவியும் கைத்தாங்கலாக எழுப்பி அமரவைத்து சுத்தம் செய்து எறும்பு மருந்து வாங்கி வந்து அருகில் போட்டுவிட்டு வந்தோம்.

அன்று இரவு மூன்று மணி இருக்கும்.  நன்றாக தூங்கிக் கொண்டிருந்த எனக்கு திடீரென விழிப்பு வந்துவிட்டது. அதன்பின்  எவ்வளவோ முயன்றும் தூக்கம் வர மறுத்தது.  என் நினைவுகள் முழுவதும் அந்த எறும்பு போன பாதையிலேயே இருந்தது.  ஒரு நிமிடம் கண்ணை மூடி எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன்.

"ஏன் பெரீம்மா இப்படி அவஸ்தைப் படற.  உன்னையும் கஷ்டப்படுத்தி மத்தவங்களையும் கஷ்டப்படுதிட்டு இருக்குற.  இனிமேலும் யாருக்கும் சிரமம் வைக்காம அமைதியா போய்ச் சேர்ந்துவிட வேண்டியதுதானே.."

இப்படியெல்லாம் யாருக்கும் நான் வேண்டிக்கொண்டதில்லை.  சாமி பூதம் என்கிற நம்பிக்கை எல்லாம் எனக்கு சுத்தமாக  கிடையாது.   என் இப்படி நினைக்கவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை.  ஏனோ தெரியவில்லை அந்த நள்ளிரவில் அப்படி நினைத்துக்கொண்டேன்.  பிறகு நிம்மதியாக உறங்கினேன்.

அதிகாலை நேரத்தில் போன் வந்தது.
"பெரியம்மா செத்துப் போச்சு" என்று எனது தம்பி  சொன்னான்,  அருகில் இருந்த டாக்டர் உறுதி செய்திருக்கிறார்.
"எத்தனை மணிக்கு உயிர் போனது ?"என்று கேட்டேன்.
 டாக்டர் சொன்ன நேரம் "சரியாக மூன்று மணி" என்றான்.
நான் அதிர்ந்துபோய் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன்.
 

Wednesday, February 5, 2014

அம்பாரம் எனுமொரு நினைவோடை.


ம்பாரம் புத்தகம் லெனின் எனக்கு தந்த போது ஒரு குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தேன்.  இந்த புத்தகத்தை இதுவரை தமிழில் எதுவுமே படித்திராத எட்டாவது படிக்கும் எனது சின்ன மகன் ஒரே மூச்சில் படித்து விட்டு இரண்டு நாளாக இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறான்.  நானும் ஒரே மூச்சில் மீண்டுமொருமுறை படித்து விட்டேன்.முதலிலேயே படித்தவைகள்தான் எனினும் ஒட்டு மொத்தமாக படிக்கும்போது கிடைத்த அனுபவம் இன்னும் வித்தியாசமாக இருந்தது.

ஒவ்வொரு கட்டுரையும் வாழ்க்கைப் பதிவுகள் என்பதால் அதில் நாமும் எதாவொரு இடத்தில் காணக் கிடைப்பதென்பது இதில் இருக்கும் சுவராஸ்யம்.  இது லெனின் என்ற ஒற்றை மனிதர் வாழ்க்கை மட்டுமல்ல. படிக்கும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையுமே இதில் கொட்டிக் கிடக்கிறது.

தனது செல்ல மகள்மேல் அன்பு வைக்காத தந்தை உண்டோ.  அந்த அன்பு மகளிடம் முத்தம் வாங்கும்  தங்கத் தருணங்கள் அமையப் பெறாதவர்கள் உண்டுதானா?

செவளைகளும் மயிலைகளும் தொலைந்துபோன உலகில் நீங்கள் எழுதியிருக்கும் காளைப் பதிவுகள் கல்வெட்டுக்கள்.  ஆறறிவு மக்களிடத்தில் அன்பு மரித்தாலும் ஐந்தறிவு ஜீவன்களிடத்தில் அது  உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை  சொன்ன பதிவு அருமை.  இந்த மாதிரியே எழுதுவீர்களேயானால் நாங்களும் மயிலைக் காலை மாதிரி உங்களையே சுற்றி வருவோம்.

ஒவ்வொரு ரோஜாப்பூவிலும் உங்கள் அம்மாவின் முகம் இருப்பதை உங்கள் பதிவு படித்த பிறகு அறியமுடிகிறது.  ரோஜா சிவந்தது இதனால்தானா?.  நாகலட்சுமி பாட்டி ரோஜாசெடிக்கு இன்னும் கூடுதல் உயிர் வந்திருக்கும்.  இன்னும் பல ரோஜாக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

குளம் வெட்டிய கதை எங்கள் கண்களில் குளம் கட்ட வைத்தது.   ஒவ்வொரு விவசாயியும் தன்னிடத்தில் ஆயிரம் கதை கொண்டிருப்பான்.  காது கொடுத்து கேட்டால் போதும்.... கண்ணீர் பெருக கதை சொல்வான்.  நம்மையும் கண்ணீர் சிந்த வைத்துவிடுவான். குளக்கரையில் உறங்கும் அம்மா இருக்கும் திசை பார்த்து ஒரு கும்பிடு வைக்கிறோம்.

வெங்காயம் விளைவிக்கும் விவசாயி தன் அத்தனை கண்ணீரையும் அந்த வெங்காயத்தில் புதைத்து வைப்பதால்தானோ அதனை உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வருகிறது என்று நான் நினைப்பதுண்டு.
உங்கள் புத்தகம் படித்தபின் அது உறுதியானது.

தீக்கதிர் நாளிதழுக்கும் உங்கள் தாத்தாவுக்கும் இருக்கும் உறவும் அவரின் சவமேட்டில் நீங்கள் வாசித்த அஞ்சலிக் கட்டுரையும் அதை அவர் எப்போதும் கேட்பதுபோல் உம் கொட்டாமல் கேட்டது என்ற வரியில் நாங்கள் நெகிழ்ந்து போனோம்.

தயிர் விற்ற தாத்தாவும், லெனினும், மிர்னியும் கடைந்தெடுத்த வெண்ணையாய் இந்த புத்தகத்தை தந்திருக்கிறார்கள்.

அம்மாவின் இறப்பன்று கேட்ட பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடித் பார்த்தேன்... பாடல் இன்னும் அர்த்தம் கூடுகிறது. உங்களுக்கும் அம்மாவுக்குமான கடித உறவு உண்மையில் நிகில வைக்கிறது.   ஒவ்வொரு நாளின் அதிகாலை விடிவெள்ளி உங்கள் அம்மாதான் என்கிற ரகசியம் நாங்கள் பார்க்கும்போது எங்களுக்கும் தெரிந்தது.

சரளைக்காடு, செவளைக்களை, மயிலக்காலை, சோளக்காடு, குருவி விரட்டல், தயிர்க்காரி, கரும்புக்காடு, நெல் வயலுக்கு தாம்படித்தல், தோட்டத்து சாலை, கட்டை வண்டி என்று ஒரு பட்டிக்காட்டை ஊர் சுற்றி காட்டியிருகிரீர்கள்.. நன்றி லெனின்.   இந்த புத்தகத்திற்கு தலைப்பு என் தேர்வு என்பதில் ஒரு சின்ன சந்தோசம் மற்றும்  கர்வமும் பொங்குகிறது.

 

Tuesday, February 4, 2014

FLY AWAY HOME(1996)-தாயை இழந்தவள் தாயான கதை.

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் நாளை திரையிடப்படும் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்...

ஒரு மழை நாளிரவு.  நியுசிலாந்த் நாட்டின் ஒரு நகரம். வழியும் நீரை ஒதுக்கி ஒதுக்கி வழிகாட்டும் காரின் வைப்பர்.  காரினுள் மனதுக்கு பிடித்த சங்கீதம் கேட்டபடி உரையாடிக்கொண்டிருக்கும் தாயும் மகளும்.  கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்படும் விபத்து.  தாய் இறந்து பதிமூன்று வயது மகள் மருத்துவ மனையில் இருக்கிறாள்.  நல்லவேளை பிழைத்துக்கொள்ள கண்விழித்துப் பார்க்கும்போது நீண்ட தலைமுடியும் தாடியும் கொண்ட ஒருவர் ‘நான்தான் உன் அப்பா.. உன்னை அழைத்துச் செல்ல வந்துள்ளேன்’ என்கிறார்.

அந்த விபத்து காட்சி படமாக்கிய விதம் மிகவும் அருமை.  ரத்தம்-சத்தம் எதுவில்லாமல் காருக்குள்ளிருக்கும் காமிரா எட்டிப்பார்த்தபடியே அறுந்து விடாத சங்கீதத்தோடு முடித்திருப்பது அழகு.

ஒருமாதம் கழித்து அப்பாவும் பெண்ணும் கனடாவுக்கு அப்பாவின் பார்முக்கு செல்கிறார்கள்.  இருவருக்கும் வேதியியல் ஒத்துப்போகவில்லை.  போதாதுக்கு அம்மாவின் இடத்தில் வேறொரு பெண் இருக்கிறாள்.  ஆகையால் எமி (ஆம் இதுதான் அவள் பெயர்) எதிலுமே ஒட்டாமல் இருக்கிறாள். அப்போது ஒரு கட்டிடம் கட்ட காட்டில் இருந்த மரத்தை பிடுங்கும்போது அதன் மீதிருந்த ஒரு வாத்துக் கூடு கீழே விழ நேர்கிறது.  தாய்ப்பறவை இறந்துவிட எமி பொரிக்காமல் விட்ட முட்டைகளை எடுத்துப்போகிறாள்.  அப்பாவின் பழைய டேபிள் டிராயரில் துணிகளை அடுக்கி ஒவ்வொரு முட்டையையும் அதன் மீது வைத்து அதற்கு நூறு வாட்ஸ் பல்பை எரியவிட்டு அடை காக்கிறாள்.


அடுத்த நாள் பள்ளிவிட்டு வந்து பார்க்கும்போது இரண்டு மூன்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளியே வருகின்றது.  சில நாட்களில் எல்லா முட்டையும் குஞ்சுகளாகி ஒரு தாயாய் இருந்து எமி அதை பாதுகாக்கிறாள்.

இங்கே அவரது அப்பாவைப் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.  எமியின் அம்மாவை ஏதோ காரணங்களால் பிரிந்து கனடாவில் வசிக்கும் தாமஸ்க்கு வேலை அலங்கார உருவங்களை இரும்பில் வடிப்பதே.  அவ்வப்போது தானே செய்த ஏர்க்ராப்ட் விமானத்தில் தன் நண்பர்களோடு ஓட்டிப் பார்ப்பதே அவரது பொழுதுபோக்கு. தன்னிடம் ஒட்டாத மகளை வாத்துக்களை வைத்துத்தான் கவரவேண்டும் என்று முடிவுக்கு வருகிறார். எப்படி வளர்ப்பது என தெரிந்த உள்ளூர் வார்டனிடம் கேட்கிறார்.  அவர் இறகுகளை வெட்டிவிட வர எமி அவரைத் திட்டி அனுப்பிவிட வார்டன் வில்லனாகிறார். 

தாமஸ் வாத்து வளர்ப்புத் தகவல்களைத் தேட சில விவரங்கள் கிடைக்கிறது.  அந்தக் குஞ்சுகளுக்கு தாயாய் இருந்து வழிகாட்டவேண்டும், அவற்றுக்கு பறக்கப் பழக்கவேண்டும்,  குளிர்காலத்துக்கு நீண்ட தூரம் பறந்து சென்று ஓரிடத்தில் தங்கி குளிர்காலம் முடிந்தபிறகு திரும்பவேண்டும். இதை மைக்ரேசன் என்கிறார்கள். நம்ம ஊர் பெரியபாளையம் குளத்துக்கு ரஷ்யாவிலிருந்து இமய மழை தாண்டி நிற்காமல் பறந்து வரும் பட்டை தலை வாத்துக்களை பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் யார் பழக்குவது?.


அந்த கேள்விக்கே இடம் வைக்காமல் குஞ்சுகள் எமியிடம் பழகுகின்றன.  அவளது கட்டளைகளை ஏற்று அவள் பின்னால் ஓடுகின்றன,  அவள் கையை விரித்து ஓடினால் அவைகள் இறக்கை விரித்து ஓடுகின்றன. 

தாமஸ் தனது சிறு விமானத்தில் பறந்து தன்னை பின்தொடர பணித்தால்  பறவைகள் வர மறுக்கின்றன.  செய்வதறியாத நிலையில் இருக்க எமி அப்பாவுக்கு தெரியாமல் விமானத்தை ஸ்டார்ட் செய்து பறந்து அதை இறக்க தெரியாமல் கீழே விழுகிறாள்.  நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

தாமஸ் அவளுக்கு பறக்கச் சொல்லித் தர முயற்சி செய்து அதில் வெற்றி பெற்று,  எமி பறவைகளையும் அவளது விமானத்தின் பின்னே பறக்க கற்றுக் கொடுக்கிறாள்.  ஜோராக பறக்கின்றன,  ஆனால் ஒரே ஒரு வாத்து (அதன் பெயர் இகோர்- அது ஒரு சோதா வாத்து) விமானத்தின் இறக்கையில் அடிபட்டுவிடுகிறது.  அதை இவர்கள் காட்டுக்குள் தேடிக்கொண்டிருக்கையில், பறவைகள் பறக்கப் பழகியதை அறிந்த வில்லன் வார்டன் இரவோடிரவாக பார்முக்குள் புகுந்து எல்லா பறவைகளையும் எடுத்துக் கொண்டுபோய் வைத்துக் கொள்கிறான்.

திரும்பி வந்த எமி குழு அதிர்ச்சியடைந்து பிறகு பக்காவாக திட்டம்போட்டு பறவைகளை மீட்டு அப்படியே அவற்றை நார்த் கரோலினாவில் இருக்கும் பறவைகள் சரணாலயத்துக்கு மைக்ரேசனுக்காக எமியும் தாமசும் அழைத்துச் செல்கிறார்கள்.

அந்த சரணாலயம் தாமஸின் நண்பருக்குச் சொந்தமானது.  அங்கு எந்த பறவைகளும் வருவதில்லையாதலால் நவம்பர் ஒன்றாம் தேதி வரை காத்திருப்போம் இல்லையெனில் சரணாலயத்தை அபார்ட்மென்ட் கட்ட அழித்துவிடுவோம் என்கின்றனர். ஆதலால் அந்த குறிப்பிட்ட தேதிக்குள் சென்றாகவேண்டிய நிலையில் அப்பா தனி விமானத்திலும் எமி தனி விமானத்திலும் பறவைகள் பின் தொடர பறக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவம் தனது ராடாரில் இதை மோப்பம் பிடித்துவிடுகிறது.  அதன் ராடார் ஏதோ பத்து பதினைந்து போர் விமானங்கள் அவர்களை நோக்கி பறந்து வருவதாக காட்டுவதால் மிரண்டு சுட்டுத்தள்ள துப்பாக்கியோடு காத்திருக்கிறார்கள்.  ஆனால் இவர்களைக் கண்டதும் சப்பென்று ஆகிவிட இவர்களை கைது செய்து விசாரிக்கிறார்கள்.  இவர்கள் கதையை கேட்டதும் சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறார்கள்.

அங்கிருந்து போகும்போது மீண்டும் பிரச்சினை,  தாமஸின் விமானம் பழுதடைய எமி மட்டும் தனியாக பறவைகளோடு போக நேர்கிறது.  இடையில் வேட்டைக்காரர்கள் வேறு.  இப்பிடி பல தடைகளை கடந்து சரணாலயம் அடைந்தார்களா என்பதே மீதிக் கதை. 

முடிவில் ஒரு பரபரப்பான ஆக்சன் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது.  இது ஒரு உண்மைக் கதை என்று நாம் அறியும்போது பிரமிப்பு கூடுகிறது.

வாத்துகளின் சில்மிஷங்கள் - ஆரம்ப காட்சியில் ஒரு வாத்து தன் தலையை 360 டிகிரியிலும் திருப்புவது அழகோ அழகு.  இறுதியில் வாத்துக்கள் அனைத்தும் ஏறி நீரில் பயணக் களைப்பை போக்க குளிப்பது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.  அதேபோல் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளி வரும் காட்சியும் குஞ்சுகள் எமியின் பின்னால் கும்பலாக ஓடிவரும் காட்சியும் பறக்கப் பழகும்போது எமியின் விமானத்தின் பின்னால் பறவைகள் அணிவகுக்கும் காட்சியும் மனதை அள்ளிச் செல்லும்.


ஒளிப்பதிவுக்கும் இசையமைப்பாளருக்கும் எழுந்து நின்று ஒரு சல்யூட் அடிக்கவேண்டும்.  அற்புதம்.

எமியாக நடித்த  Anna Paquin, அப்பாவாக நடித்த Jeff Daniels இருவரும் அருமையாக நடித்து இறுதிக் காட்சியில் நம்மை கண்ணீர் சிந்த வைத்திருப்பார்கள்.


இந்தப் படம் நம்ம ராமநாராயணன் கையில் கிடைத்திருப்பின் வாத்துக்களை கதாநாயகிக்கு லவ் லெட்டர் கொடுக்க வைத்திருப்பார்.  குரங்குகளோடும் வில்லன்களோடும் சண்டையிட வைத்து சுவராசியம் பண்ணியிருப்பார். அந்த மாதிரி படம் பார்த்து பழகிய நமக்கு இது நிச்சயம் அதிர்ச்சி தரும் அனுபவமாக அமையும்.  அதற்காகவேனும் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இது.

 

Sunday, February 2, 2014

PURSUIT OF HAPPYNESS (2006)- அமெரிக்க வாழ்வியலின் மறுபக்கம்.

திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திங்களன்று திரையிடப்படும் திரைப்படம் PURSUIT OF HAPPYNESS.   

வில் ஸ்மித் தனது மகனோடு நடித்த இந்தப் படம் எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
க்ரிஸ் கார்ட்னர் என்கிற ஒருதொழிலதிபர் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவமே இந்தக் கதை.
ஸ்கேனிங் மெசின் விற்கும் தொழில் செய்யும் ஸ்மித்துக்கு அந்தத் தொழில் அப்படியொன்றும் வருமானம் தருவதில்லை.  மனைவியும் வேலைக்குப் போய் சம்பாதித்து வருவதால் வண்டி ஓடுகிறது.  பள்ளிக்கு போகும் ஒரு பையன் வேறு. ஆனால் மனைவியின் சம்பாத்தியம் வந்தும் கூட அடிச்சுக்கோ பிடிச்சுக்கோ என்றுதான் இருக்கிறது.  வீட்டு வாடகை கூட கொடுக்க முடிவதில்லை. 


வேறு வேலை தேடும் ஸ்மித்துக்கோ அது குதிரைக்கொம்பாய் இருக்கிறது. ஒரு ஸ்டாக் கம்பெனியில் அப்படி இப்படி காக்கா பிடித்து இன்டர்வ்யுக்கு அழைக்கப்படுகிறான். இதற்கிடையில் இவன் மீது நம்பிக்கையிழந்த மனைவி பையனை விட்டுவிட்டு லெட்டர் (பையனை நீ நல்லா பாத்துக்குவேனு தெரியும்) எழுதிவைத்து விட்டு தன் வழியைத் தேடி போய்விடுகிறாள். வீட்டு ஒனரோ வாடகை தராட்டியும் பரவாயில்லை வீட்டுக்கு பெயிண்ட்டாவது அடி என்று உத்தரவிட்டுப் போகிறார்.

பெயிண்ட் அடிக்கும்போது போலீஸ் வந்து நோ பார்க்கிங்க்ல காரை நிறுத்தியதுக்கு  அரஸ்ட் பண்ணி ஜெயிலில் வைத்துவிட பையனை தனியே விட்டுவிட்டு சிறையில் ஒரு நைட் இருக்க நேர்கிறது. அபராதம் கட்டிவிடுகிறேன்,காலையில் இன்டர்வ்யுவுக்கு செல்லவேண்டும் என எவ்வளவோ கெஞ்சியும் காவலர்கள் விட மறுக்கிறார்கள்.  காலையில் அவன் வெளியே வரும்போது இன்டர்வ்யுக்கு நேரம் ஆகிவிட்டது.  அப்படியே சாயம் தெறித்த சட்டையோடு முகம் கூட கழுவாமல் அப்படியே இன்டர்வ்யு போகிறான்.


இன்டர்வ்யுவில் இவன் கோலத்தைப் பார்த்து ‘நீங்கள் முதலாளியாக இருந்தால் அழுக்குச் சட்டையோடு இன்டர்வ்யுவுக்கு வருபவரை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று அதிகாரி சாமர்த்தியமாக கேள்வி கேட்க,“பேன்ட் நல்லா இருக்கே” என்று சாமர்த்தியமாக பதில் சொல்ல வேலை கிடைத்துவிடுகிறது.  ஆனால் ஒரு கண்டிஷன் ஆறு மாதம் சம்பளமில்லாமல் வேலை செய்யவேண்டும், அதன் பிறகு வேலைத் திறனைப் பொறுத்து வேலையும் சம்பளமும் கிடைக்கும் என சொல்கின்றனர்.  வேறு வழியில்லாமல் சரி என்று தலையாட்டிவிட்டு வீட்டுக்கு வருகிறான்.

கையில் இருக்கும் மூன்று பாடாவதி மெசினை நம்பி ஆறு மாசம் ஒட்டவேண்டும்.  இதில் ஒரு மெசினை ஒரு பிச்சைக்காரி திருடிவிடுகிறாள்.  இன்னொரு மெசின் ஒரு பைத்தியகாரன் எடுத்துப்போய் டைம் மிசின் விளையாட்டு விளையாட வைத்துக்கொள்கிறான்.

வீட்டு ஓனர் வீட்டை காலி செய்யச் சொல்ல வேறு வழியில்லாமல் ஒரு விடுதியில் தங்குகிறான்.  பையனையும் தன்னோடு வைத்துக்கொண்டு அவன் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. வாடகை தரமுடியாதலால் இரவு நேரத்தில் சாமானைத் தூக்கி வெளியே வைத்து அறையை பூட்டிவிடுகிறார்கள்.  பாங்கில் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் வருமான வரிக்காக (வருமானமே இல்லாதவனுக்கு வருமான வரி) அரசாங்கம் எடுத்துக்கொள்ள எதுவுமில்லாமல் நடுத்த தெருவில் நிற்கிறான்.

பையனோடு ரயில்வே ஸ்டேசன் கழிவறையில் படுத்துக்கொல்வதும் டைம் மெசின் விளையாட்டு விளையாடுவதும்  பார்ப்பவர் நெஞ்சை பிசையும் காட்சிகள். 

இப்படியாக ஒவ்வொரு துன்பம் மேல் துன்பம் பெரும் அவன் வாழ்வில் விடிவெள்ளி முளைத்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.

நண்பர்களே அமேரிக்கா ஒரு பணக்கார நாடு அங்கு ஏழைகளே இல்லை எனும் ஒரு மாயையை கிழித்து தொரனமிடுகிறது இப்படம்.  அமெரிக்க வாழ்வியல் முறையை அட்டகாசமாய் காட்சிபடுத்துகிறது இப்படம்.  எல்லாத் திறமைகளும் கொண்ட ஒருவன் அமெரிக்க சமுதாயத்தில் ஜெயிக்க என்னென்ன கஷ்டப்படவேண்டும் என்பதை அழகாக சொல்லும் படமிது.

பையனை அழைத்துக்கொண்டு வீதி வீதியாக சுற்றும்போது ஒரு குருவி தன் குஞ்சைக் காப்பாற்ற என்னவெல்லாம் போராட்டம் நடத்துகிறது என்பது நினைவுக்கு வருகிறது.
இளமையில் வறுமை என்பது கொடுமையில் மிகக்கொடுமை.
என் சிறுவயதுக் காலத்தில் எங்கள் வீட்டில் மிகவும் வறுமை.  ஆனாலும் என் அன்னை ஒருபோதும் எங்களை பட்டினி போட்டதில்லை.  காட்டு வேலை செய்தாவது அல்லது தானியங்கள் கடன் வாங்கியாவது சட்டியில் கஞ்சியோ கூழோ ஏதாவதொன்று சாப்பிட இருக்கும்படி பார்த்துக்கொள்வாள்.  இன்று வரை என் அன்னை யார் வீட்டுக்கு வந்தாலும் முதலில் சொல்லும் வார்த்தை ‘ சாப்புடு சாமி” என்றுதான்.

இந்தப் படத்தைப் பார்க்கும் போது என் இளமைக்கால ஞாபகங்கள் அடுக்கடுக்காக கிளர்ந்தெழுகின்றன.  நிச்சயம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கும்.

பையன் படிக்கும் பள்ளியில் HAPPYNESS என்று எழுதி இருப்பதை HAPPINESS என்று திருத்தச் சொல்ல அதனால் பள்ளியில் ஏற்படும் வன்மமும்,  அந்த வாத்திச்சி இவனை பாக்கும்போதெல்லாம் முறைப்பதும்,  சர்ச் விடுதியில் தங்க க்யூவில் நிற்பதும் இடையில் ஒருவன் புகுந்து தகராறு செய்வதும்,  தனது சீனியர் முன்பு க்யூப் சால்வ் செய்வதும், அவர் கார் வாடகை தராமல் போய்விட தன்னிடமும் பணம் இல்லாமல் கார் வாடகை தர முடியாதலால் ஓடுவதும், அந்த ஓட்டத்தில் தன்னிடம் இருக்கும் ஒரு ஸ்கேன் மிஷினை இழப்பதும்,, அவரிடமே வேலைக்குச் சேர்ந்த பிறகு தன்னிடம் பணம் இல்லையெனினும்  கார் வாடகைக்காக கடன்  தருவதும்,  ஒரு பென்சன் பிளான் போடவைக்க ஒரு பணக்காரனோடு ரக்பி மேட்ச் பார்க்க தனது மகனோடு போவதும் அங்கே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவன்  பணக்காரனோடு படும் அவஸ்தையும் என படம் நெடுக வாழ்ந்து காட்டி இருக்கிறார் வில் ஸ்மித்.

இறுதிக் காட்சியில் ஒரு வெற்றுப் பார்வையோடு ஒரு துளி கண்ணீரும் சிந்தும் வில் ஸ்மித் நம்மையும் கண்ணீர் சிந்த வைக்கிறார்.  இறுதிக்காட்சியில் ஜனங்கள் நிறைந்த அந்தத் தெருவில் தானும் ஒரு ஜெயித்த மனிதனாய் தனக்குத் தானே பாராட்டி கையை தட்டிக்கொண்டு போகும் காட்சி இயக்குனர் பெயர் சொல்லும்- Gabriele Muccino.
இறுதி காட்சியில் அப்பாவும் மகனும் பேசிக்கொண்டே தெருவைக் கடக்கும் போது இவர்களை கடந்து போவார் நிஜ க்ரிஸ் கார்ட்னர்.


எதுவும் கடந்து போகும்தான்.....
வலிகளையும்
வடுக்களையும் ஏற்படுத்தி 
இதுவும் கடந்து போகுமே....!!!
 

Saturday, February 1, 2014

Into the Wild(2007)-தொலையும் அனுபவம்.

02.02.2014-ஞாயிறு அன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் INTO THE WILD எனும் திரைப்படத்தைப் பற்றி ஓர் சிறிய அறிமுகம்.

நான் எப்போதாவது நினைப்பதுண்டு.... ‘சகலத்தையும் விட்டுவிட்டு எந்த ஒரு அடையாளமுமின்றி கால் போன போக்கில் மனம் போன போக்கில் இந்த பரந்த வெளியில் காணாமல் போய்விட்டால் என்ன?’

நினைப்பதெல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?  பயணங்கள் எப்போதும் அழகானவை.  ஒவ்வொரு முறையும் ஒரு புது அனுபவத்தையே கொடுக்கின்றன.  அதுவும் இலக்கின்றி பயணம் செய்வது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தையே கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நாவலாசிரியர் எஸ்.ரா. ஒரு நாள் காலை அவரது  மனைவி கையில் ஐம்பது ரூபாய் கொடுத்து மார்க்கெட் போய்வரச் சொன்னாராம்.  அப்போது புறப்பட்டவர் ஒரு மாதம் கழிந்தே திரும்பி வந்தாராம்-கையில் காய்கறி இல்லாமல்.  மார்க்கெட் போகும் வழியில் ஒரு பஸ் வர அதில் ஏறி அமர்ந்து ஐம்பது ரூபாய்க்கு எங்கு கொண்டு விடுமோ அதுவரை சென்றுவிட்டு அப்படியே கால்நடை.  லிப்ட் கேட்டு என்று தேசாந்திரியாய் மாறி சுற்றி வந்தாராம்.  அதன் பிறகே அற்புதமான தேசாந்திரி என்கிற புதினம் நமக்கு கிடைத்தது.

In To The Wild இந்த திரைப்படமும் இது மாதிரியான கிறிஸ்டோபர் என்கிற தேசாந்திரியின் உண்மைக்கதைதான். 1990-ல் வட அமெரிக்காவிலிருந்து அலாஸ்கா வரையான க்ரிஸ்-ன் இரண்டு வருட பயணத்தை சுவைபட கூறி இருக்கிறார் இயக்குனர் Sean Penn.

படத்தின் ஆரம்பக்காட்சியில் பனிபடர்ந்த அலாஸ்கா முனையின் ஒரு பகுதியிலிருந்து நடக்க ஆரம்பிப்பான் க்ரிஸ்.  அவனை ஏற்றிவந்த வாடகை வாகன ஓட்டுனர் சொல்லுவார்..”உயிரோடு திரும்பி வந்தால் என்னைக் கூப்பிடு”.


இங்கு பற்றிக்கொள்ளும் கேள்விகளும் அதற்கான விடைகளுமே கதை.
கொஞ்ச தூரம் கடந்த பிறகு யாரோ விட்டுப்போன பஸ் ஒன்றை கண்டுபிடிக்கிறான்.  அதிலேயே தங்கிவிடுகிறார்.  அழகான பனிமலை, சுற்றிலும் ஆனந்தமயமான சூழல்.  படிக்க புத்தகம், தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் தனக்கு தேவையானதை சுட்டுத் தின்ன பறவைகளும், விலங்குகளும் என அமைந்த சூழ்நிலையில் வாழ்கிறான்..  எல்லாவற்றியும் தனது டைரியில் பதிவு செய்கிறான்.
இங்கு வர இரண்டு வருடம் ஆகியிருக்கிறது....

இரண்டு வருடம் முன்பு படித்து பட்டம் வாங்கியபின் அவனது அப்பா அம்மா தங்கை எல்லோரையும் விட்டுவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒருநாள் தன் காரில் பயணத்தை ஆரம்பிக்கிறான்.  தன்னிடம் இருந்த சேமிப்பை எல்லாம் தானம் செய்துவிட்டு தனது அடையாளங்கள் எல்லாவற்றையும் எரித்துவிட்டு அலெக்ஸ் என்கிற புதுப் பெயரோடு பயணம் ஆரம்பமாகிறது.

ஒரு நாளிரவு வந்த வெள்ளத்தில் கார் பழுதாகிவிட அதை அப்படியே விட்டு விட்டு கால்நடையாக கிளம்பிவிடுகிறான்.  அங்கங்கே லிப்ட் கேட்டு கிடைக்கிற வண்டியில் பயணம் அமைகிறது.  ஒரு தம்பதியை சந்திக்கிறான்.  அவர்களோடு கொஞ்ச நாள், பிறகு ஒரு அறுவடை மிஷின் வைத்திருக்கும் wayne  என்பவரோடு வேலை செய்கிறான்.  அவரிடம் சில வேலைகளை கற்றுக்கொள்கிறான்.  பார் ஒன்றில் இருவருக்கும் நடக்கும் உரையாடல் சுவையானது.
“நான் அலாஸ்கா போகிறேன்”
“அங்கு எதற்கு...  மார்க்கட்டிங்கா?
“பெரிய மலைகள், ஆறுகள், நீல வானம், மற்றும் ஆயுதங்கள் இல்லை,  மேப்  இல்லை...எதுவுமே இல்லை..”
“அங்கு நீ என்ன செய்வாய்”
“எனக்கான வாழ்க்கை வாழ்வேன்,  இந்த வீணாப் போன சமூகத்திலிருந்து விலகி...”
“யாரந்த வீணாப்போன சமூகம்?’
“பெற்றோர், அரசியல்வாதி, வேஷம்..போடும் எல்லா குமப்லும்..”
“நீ தவறு செய்கிறாய்”
நல்லது சொன்னா யார் கேக்குறா.. அலெக்ஸ் அங்கிருந்து செல்கிறான்.  அடுத்த பயணம், பாயும் காட்டாற்றில் லைசென்ஸ் இல்லாமல் ஒரு சின்ன காயக் எனும் சாகசப் படகில் ஹெல்மெட் கூட இல்லாமல் செல்கிறான்.  அங்கே அடிக்கடி சண்டைபோட்டு அடுத்த நிமிடமே சமாதானம் ஆகிக்கொள்ளும் ஒரு காதல் ஜோடியை சந்திக்கிறான்.    
 
அங்கிருந்து அவர்கள் வழிகாட்டுதல்படி மெக்ஸிகோ செல்கிறான்.  மீண்டும் நகரம்- உயர்ந்த கட்டிடங்கள், முகம் அறியா மனிதர்கள் இங்கிருந்து தப்பி ரயில் பயணம்.  அடையாளம் இல்லாமல் எல்லை கடக்கிறான்.  போலீசிடம் மாட்டி அடி உதை படுகிறான்.
 
மீண்டும் முதலில் சந்தித்த ரேய்னி-ஜான் ஜோடியை சந்திக்கிறான்.  அங்கு ஒரு பணிந்து வயதுப் பெண் இவன் மேல் காதல் கொள்கிறான்..  இதையெல்லாம் மறுதலித்து மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறான். 

வழியில் ஓய்வுபெற்ற ராணுவ கிழவரை சந்திக்கிறான்.  அவரிடம் சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்கிறான்.  இப்படி சந்திக்கிற ஒவ்வொருவரையும் நிராகரித்துவிட்டு பனிபடர்ந்த அலாஸ்கா கானகத்தை நோக்கிய பயணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு பழைய பேருந்தை அடைகிறான்.
 
இங்கு கொஞ்ச நாள் ஜாலியாக இருந்தாலும் பிறகு உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகிறான்.  ஒரு விஷச் செடியின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அவன் படும் கஷ்டங்கள் என செல்கிறது கதை.  அவன் திரும்பி வந்தானா- அந்தப் பயணத்தின் முடிவில் கற்ற பாடம் என்ன என்பதை உருக்கமாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளருக்கு படம் முடிந்த பிறகு எழுந்து நின்று சபாஷ் போடவேண்டும்.  அவ்வளவு அழகாக பதிவு செய்திருக்கிறார்.  கிரீஸ்-ஆக நடித்த எமிலியின் நடிப்பு அட்டகாசம்- உடல் மெலிந்து இறுதிக்காட்சியில் நம் மனதை அள்ளிச் செல்கிறார்.

ஜிப்சி தம்பதிகள்- நாடோடி தம்பதிகள்-திருட்டு cd விபனையாளன்- காம நோக்கில் அணுகும் காதலி- மகனாக வந்து விடுகிறாயா என கேட்கும் வயதானவர்- இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அப்பா-  அப்பாவுடன் சதா சண்டை போட்டுகொண்டிருக்கும் அம்மா- பாசமிகு தங்கை என படம் நெடுக விதைத்திருக்கும் பாத்திரங்கள் நிறைய அன்பு வழிகிறது.

நிற்கக்கூட முடியாமல் இருக்கும்போது ஒரு கரடி வந்து மிரட்டுவது அருமையாக படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

எத்தகைய அனுபவமாய் இருப்பினும் அதை  இன்னொருவரிடம் பகிரும்போதுதான்  முழுமை அடைகிறது என்பதை ஆணித்தரமாக சொல்லும் படம். அதனால்தான் வெளிநாடு சென்றவர் எல்லாம் கொஞ்ச காலத்துக்கு அவர் எதிர்ப்படுபவரிடமெல்லாம் 'நான் அமெரிக்காவில் இருந்தப்ப...' என்று ஆரம்பிப்பது.  நாங்கல்லாம் ஒட்டகப்பாலில் டீ குடிச்சவிங்க... 

HAPPINESS ONLY REAL WHEN SHARED

HAPPINESS ONLY REAL WHEN SHARED

HAPPINESS ONLY REAL WHEN SHARED