இதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.
'பீ'ட்சா- சிறுகதை.
இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒருநாள் நான் என் மகன்களோடு பீட்சா கடைக்கு சென்றிருந்தோம். அப்போது பேசிக்கொண்டிருக்கும்போது சாதாராணமாகச் சொன்னேன்.
"இந்தக் கடைக்கு யாராவது சேரிப்பையன் வந்தான்னா உள்ளே விடுவாங்களா?"
இந்த ஒன்லைனைப் பிடித்துக்கொண்டு ஒரு வாரம் கழித்து இந்தக் கதையை எழுதிக்கொண்டு வந்து காட்டினான். நன்றாகவே இருந்தது. முடிவு மட்டும் வேறு மாதிரி எழுதி இருந்தான். நான் சிற்சில மாற்றங்கள் சொன்னதும் ஒரு மாதம் கழித்து மாற்றி எழுதிக் கொண்டுவந்து காட்டினான்.
இதை குறும்படமாக எடுக்கப்போவதாக சொன்னான்.
"இந்த மாதிரி கதைக்கு பீசா கடையில் படம் பிடிக்க நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள். எதற்கும் கேட்டுப் பார்" என்றேன்,
மற்றொருமுறை அந்தக் கடைக்குப் போயிருந்தபோது படம் பிடிக்க அனுமதி கேட்டேன்.
அவர்களோ "நிறைய பார்மாலிடீஸ் இருக்கு சார். அதுவுமில்லாம ஒருநாளைக்கு வாடகையா இருபத்தஞ்சாயிரம் ரூபா கறந்துடுவாங்க.." என்றார்.
இருபத்தஞ்சாயிரமா.... சரி இது வேலைக்காகாது என்று என்று கதையை ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு வேறு வேலைய பாக்க போயிட்டோம். சரி எழுதியது வீணாப் போகக்கூடாது என்று எண்ணியும் பையனோட முயற்சியை ஊக்குவிக்கும் விதமாகவும் அவனோட முதல் கதையை என்னோட பிளாக்கில் போட்டுவிட்டேன்.
அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. அவனுக்கும் ரொம்ப திருப்தியாக இருந்தது.
ஒரு மாதம் முன்பு காக்கா முட்டை படத்தின் ட்ரைலர் பார்த்தபோது டக்கென்று மண்டையில் இடித்தது. அப்போதே என் முகநூலில் போட்டிருந்தேன்.
நேற்று படம் பார்த்தபோது என்னோட அனுபவம் வேறு மாதிரி இருந்தது. இந்தப் படத்தை 'பீ'ட்சா கதையின் காப்பி என்று சொல்ல என் மனம் ஒப்பவில்லை. பல விஷயங்கள் ஒத்துப்போன போதும் காப்பி என்று சொல்வது சற்று அபத்தமாகவே பட்டது.
இனி படத்தைப் பற்றி..
படம் ஓப்பன் பண்ண உடனே.. இரவு... தூங்கும் சிறுவன் .. அவனது டிராயரில் இருந்து கொப்பளிக்கும் மூத்திரம். விழித்து எழும் சிறுவன்.... மூத்திரம் மெல்ல மெல்ல ஊர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவை அடையப்போகிறது. சட்டென்று தன் சட்டையைக் கழட்டி அணை போடும் சிறுவன். எக்சலேன்ட்.
இந்தமாதிரி ஒரு {மூத்திர) ஒப்பனிங் சீன் இதுவரை எந்தப் படத்திலேயும் வந்ததில்லை என்றே நினைக்கிறேன். இந்த சீனை வைக்க ஒரு ரசனையுள்ள இயக்குனரும் அதை ஒத்துக்கொள்ளும் தயாரிப்பாளரும் கிடைக்கவேண்டும்.
சிறுவர்களின் அம்மா... அவளுக்கொரு பிரச்சினை.. சிறையில் இருக்கும் கணவனை பெயிலில் எடுக்கவேண்டும். கணவனின் தாயார்... பையன் மேல் அன்பு இருப்பினும் அவனைப் பார்க்க ஜெயிலுக்கு போக மறுக்கும் எதார்த்தம்.
"அத்த வரன்னுதான் சொல்லிச்சு... நான்தான் வேணாம்னுட்டேன்.." என்று சமாளிக்கும் பையனின் அம்மா. எதார்த்தம் சொட்டுகிறது. ஏரியாவுக்குள் திருடும் திருடர்கள், பீட்சாக்கடை முதலாளி, குப்பத்துப் பசங்க. பணக்கார வீட்டுப் பையன், பழைய இரும்புக்கடை முதலாளி, அவரின் மனைவி என்று எதார்த்தத்துக்கு நெருக்கமாய் பாத்திரங்கள்.
பொம்மைக் கடிகாரத்தை ரிப்பேர் செய்யக்கொடுப்பது, நாட்டு நாயை இருபத்தஞ்சாயிரம் விலை சொல்வது, 'எச்சிப் பீசாவையா தின்னப் போற" என்று விடுவிடுவென நடப்பது, 'அம்மா இன்னைக்கு இவன் படுக்கையில மூத்திரமே போகல... பெரியவன் ஆயிட்டான் போல இருக்கு..' என்று சொன்னதும் அந்தச் சிறுவனின் எக்ஸ்ப்ரஷனும் அதற்கு அவனின் அம்மா கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனும் அள்ளுகிறது.
பாட்டி செய்கிற தோசைப் பீட்சாவும், அதை அந்த பசங்க தின்ன மறுத்து கிண்டல் செய்வதும் இறுதியில் ஆயா சுட்ட தோசையே நல்லா இருந்துச்சு என்று சொல்வதும் கிளாசிக்.
பீட்சாக்கடையில் அசோக் அடி வாங்குவது, அப்பப்ப கிருஷ்ணமூர்த்தி முதலாளியை கலாய்ப்பது..சிறுவர்கள் தண்ணி அடித்து மட்டை ஆகும் டாஸ்மாக் ஆசாமிகளை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்று இடையிடையே காமெடி சிரிக்க வைக்கிறது.
பசங்களோட நடிப்பு சான்சே இல்ல. கொஞ்சம்கூட ஓவர் ஆக்டிங் இல்லாம சரியா பண்ணி இருக்காங்க. என்ன அடி வாங்கும்போது கொஞ்சம்கூட எதுத்துப் பேசாம வர்றதுதான் உறுத்துது.
அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம்தான். வளர்ந்து வரும் நடிகை இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடிக்க தில் வேண்டும். அவருடைய அழகே இந்த பாத்திரத்துக்கு கொஞ்சம் நெகடிவாக இருப்பதை மறுக்க முடியாது.
கிஷோரின் எடிட்டிங் சூப்பர். ஆயா இறந்து கிடக்கும்போது நாய்க்குட்டி சுகமாக தூங்கும் ஒரு ஷாட்டை இணைத்திருக்கும் நேர்த்தியில் தெரிகிறது கிஷோரின் இழப்பு.
இடையில் கொஞ்சம் மெதுவான ஓட்டமும்... படத்துடன் ஒட்டாத பின்னணி இசையுமே இந்தப் படத்தின் பலவீனங்கள். மற்றபடி படம் அருமை!
இந்தமாதிரி நிறைய படங்கள் வரவேண்டும்.. தமிழ் சினிமா உலக சினிமாவுக்கு பக்கத்தில் பார்க்க அழகாகவும் கௌரவமாகவும் இருக்கிறது. வெல்டன் மணிகண்டன். தமிழ் சினிமா வரலாற்றில் உங்கள் பெயரை அழுத்தமாக பதித்திருக்கிறீர்கள். அதை அழியாமல் பார்த்துக்கொள்ள இன்னும் நல்ல படங்களை கொடுக்கவும்.
பெங்களூரில் காலேஜ் படிக்கப் போயிருக்கும் என் பையனுக்கு போன் பண்ணிச் சொன்னேன்...
"படத்தோட கதை உன் கதை மாறியே இருந்தாலும் always geniuses thinks same. இருந்தாலும் ஒரு ஒன்லைனை எப்படி ஒரு திரைக்கதையாக மாற்றும் வித்தையை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவே இதை எடுத்துக்கோ".
