PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, November 14, 2011

டயர்வண்டி -சிறுகதை



ஒரு சைக்கிளோட்டி ஓடும் பஸ் முன் திடீரென புகுந்ததுதான் பிரச்சினை.  80 கி.மீ வேகத்தில் ஓட்டி வந்த அந்த பேருந்தின் ட்ரைவர் இதை கொஞ்சமும் எதிர்பார்க்காததால் அனிச்சையாய் திடீரென ப்ரேக்கை மிதித்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத பயணிகள் நிலை தடுமாறினார்கள். நான்காம் வரிசையின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணுச்சாமியும் நிலை தடுமாறி பின்னிருக்கை கம்பியில் தலை நங் என்று இடித்ததுக் கொண்டான்.  தலை விண்ணென்று வலித்தது.  தலையை தடவிப் பார்த்துக்கொண்டான்.  காயம் எதுவும் ஆகியிருக்கவில்லை.

“அறிவு கெட்ட நாயே….”

ட்ரைவர் சைக்கிள்காரனை திட்டிக் கொண்டிருந்தார்.  ஆனால் அவனோ கொஞ்சமும் கவலைப்படாமல் ‘என் உச்சி மண்டைல சுர்ருங்குது…..சுர்ர்ர்ர்ர்’ என்று பாடியபடி லாவகமாக சைக்கிளை வளைத்து வளைத்து ஓட்டிப் போனான்.

கண்ணுச்சாமிக்கு கண் இருள் கட்டியது. வயிற்றுக்குள் போயிருந்த பிராந்தி மூளையில் கலந்திருந்தது.  அது வலியை மறக்கச் செய்தது.   கொஞ்ச நேரத்தில் சுதாரிப்பு வந்தது. 

கண்ணுச்சாமி குன்னத்தூரைச் சேர்ந்தவன்.  ஊரை ஒட்டிய ஒதுக்குப்புறத்தில் இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்தில் அப்பாவும் அம்மாவும் விவசாயம் பார்த்துக்கொள்ள இவன் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கிறான். 

முதலில் குன்னத்தூரில் உள்ள கடையில்தான் வேலை செய்தான்.  அங்கு சரியானபடி வருமானம் இல்லாததால் ஒரு லட்சம் செலவு பண்ணி திருப்பூர் கடைக்கு மாற்றல் வாங்கி வந்திருந்தான்.
 இங்கு வந்த பிறகு வருமானம் பரவாயில்லை.  பனியன் கம்பெனியில் உழைத்து வாங்கும் காசு அத்தனையையும் மக்கள் டாஸ்மாக் கடைக்கே கொண்டுவந்து கொடுத்தார்கள்.  பெரும்பாலான தொழிலாளிகள் டீ-க்கு பதிலாக சரக்கையே குடித்தார்கள்.  அவர்களின் உடம்பில் ஊசியால் குத்தினால் ரத்தத்திற்குப் பதிலாக சாராயமே வரும். 

கண்ணுச்சாமிக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.  மனைவி கயல்விழி ஒரு பக்காவான கிராமத்துப் பெண்.  வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளித்து சனி, திங்கள் கிழமைகளில் புருசனின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருப்பவள்.  அவர்களுக்கு நான்கு வயதில் விசு எனும் பையனும் மூன்று வயதில் ரிதன்யா எனும் பெண்ணும் இருக்கின்றனர். 

இவன் இரவு வீட்டுக்கு கிளம்பும்போது ஒரு குவாட்டர் பிராந்தியை விழுங்கிவிட்டுத்தான் கிளம்புவான்.  போய்ச் சேர இரவு மணி பத்தாகிவிடும்.  அதுவரை குழந்தைகள் இருவரும் விழித்துக் கொண்டுதான் இருப்பர்.  இவன் வாங்கிக்கொண்டு போகும் முறுக்கை பாதித் தூக்கமென்றாலும் தின்றுவிட்டுத்தான் தூங்குவார்கள்.  வார லீவு நாட்களில் குழந்தைகளை முன்னும் பின்னும் டிவிஎஸ் வண்டியில் உட்கார வைத்து ஊரை சுற்றி வருவான்.  அப்போது அந்த குழந்தைகளின் முகத்தில் தெரியும் சந்தோசத்தை பார்க்கும்போது கண்ணுச்சாமிக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கும்.

திருப்பூரில் புதிதாக வந்திருக்கும் சர்க்கஸ் பார்க்க கயலையும் குழந்தைகளையும் வரும் ஞாயிற்றுக்கிழமை கூட்டிப் போகவெண்டும்.  குழந்தைகள் மிகவும் சந்தோசப்படும்.  கயலையும் வெளியே கூட்டிப் போய் எத்தனை நாட்களாகி விட்டது.  ஆறு மாதம் முன்பு பெருமாநல்லூர் கொண்டாத்தா கொவிலுக்கு திருவிழாவின் போது கூட்டிப் போனதுதான்.  அதன்பிறகு எங்கேயும் கூட்டிப் போனதில்லை.  பாவம் அவளும் ஒன்றும் இதுவரை கேட்டதில்லை. 

பஸ்ஸை விட்டு இறங்கும்போதும் தலை சற்றே வலித்தது.  வீட்டுக்குப் போனதும் வாசலிலேயே விசுவும் ரிதன்யாவும் உட்கார்ந்து இருந்தார்கள்.  ஓடி வந்து அப்பா என காலைக் கட்டிக்கொண்டார்கள்.  கையிலிருந்த மிக்சர் பாக்கெட்டை பிடுங்கிக் கொண்டான் விசு.  அவனைத் துரத்தியபடி ரிதன்யா ஓடினாள்.

கண்ணுச்சாமி நேராக கை கால்கள் கூட கழுவாமல் கட்டிலில் போய் படுத்துக் கொண்டான்.  கயல் பதறிப் போய் ஓடிவந்தாள்.

“ஏனுங்..மாமா என்னாச்சுங்க….வந்த உடனே படுத்துட்டீங்க….”

”ஏனோ தெரியலைடீ….தல லேசா வலிக்குது….கொஞ்சம் தைலம் இருந்தா போட்டுவிடு”

கயல் ஓடிப்போய் அமிர்தாஞ்சன் எடுத்து வந்து நெற்றியில் தடவி விட்டாள்.  தலையை தடவிக் கொடுத்தாள்.

“இந்த கருமத்தை குடிக்காட்டி என்ன?  கண்டபடி காசை செலவளிக்காதீங்கன்னா கேட்டாத்தானே ஆகும்.  நமக்கும் ரெண்டு புள்ளைக இருக்குதுன்னு ஞாபகம் இருக்கா இல்லையா?”

அப்போது ரிதன்யா அழுதுகொண்டே வந்தாள். 

“அப்பா….எனக்கு மிச்சர் தரவே மாட்டேங்குறான்…”

“ஸ்ஸூ….அப்பாவை தொந்தரவு பண்ணாத….அப்பாவுக்குத் தலை வலிக்குதாம்”

“ஏப்பா தலையை வலிக்குதா?  நான் வேணா மாத்திரை தரட்டுமா?”
ஓடிப்போய் மாத்திரை டப்பாவை தேடினாள்.

கண்ணுச்சாமி அப்படியே தூங்கிப்போனான்.  அவனுடைய மார்பில் தலை வைத்து ரிதன்யாவும் அவனுடைய காலடியில் விசுவும் தூங்கிப் போனார்கள்.

காலையில் விழித்தபோதும் அதே தலைவலி நீடித்தது.  யாரிடம் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.  சொன்னால் வேலைக்குப் போகவிடமாட்டார்கள்.  இன்றைக்கு வேலைக்குப் போயே ஆகவெண்டும்.  இவன் போய்தான் இந்த வாரத்திற்கான சரக்குகளை வாங்க பர்ச்சேஸ் ஆர்டர் போடவெண்டும்.

கடைக்கு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது ஆகி இருந்தது.  பர்ச்சேஸ் ஆர்டர் போட ஸ்டாக் எடுக்க ஆரம்பித்தான்.  அவனது உதவியாளன் முருகன் இன்னும் வந்து சேரவில்லை.  கண்ணுச்சாமியால் நிற்க முடியவில்லை.  அப்படியே உட்கார்ந்து விட்டான்.  முருகன் வந்து இவனைப் பார்த்தபோது அதிர்ச்சியானான்.

“என்னண்ணே…ஒரு மாதிரியா உட்கார்ந்து இருக்கீங்க….?”

”ஒண்ணும் இல்லடா…  சீக்கிரம் ஸ்டாக் எடு.  பர்ச்சேஸ் ஆர்டர் போடணும்”

“அதை விடுங்க….ஒரு நிமிசத்துல எடுத்துடலாம்…  இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு…?”

“தலை வலிக்குதுடா…  வெற ஒண்ணுமில்ல..  நேத்து ராத்திரி டவுன் பஸ்காரன் திடீர்னு பிரேக் போட்டானா..  பின் மண்டையில நல்ல அடி.  ராத்திரி புடிச்சு தல விட்டு விட்டு வலிக்குது.”

”சரி…  வாங்கண்ணே.  ஆஸ்பத்திரி போய்ட்டு வந்துடலாம்…”

“இல்லடா ஒண்ணும் இல்லடா…  இப்பல்லாம் ஆஸ்பத்திரியில ஒண்ணும் இல்லாததற்கெல்லாம் மூட்டை மூட்டையா பணம் பிடுங்கறான்.  கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாப் போய்விடும்”

முருகன் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தான்.  நேரம் செல்ல செல்ல கண்ணுச்சாமியின் முகம் மிகவும் வாடத்துவங்கியது.  உடனே ஒரு ஆட்டோ பிடித்து அருகில் இருக்கும் ரேவதி மெடிக்கல் செண்டருக்கு கூட்டிச்சென்றான்.

டாக்டர் அவனைப் பார்த்ததும் விவரங்களைக் கேட்ட பிறகு தலைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார்.  ஸ்கேன் எடுத்து வரும்போதே கண்ணுச்சாமி மயங்கி விழுந்தான்.  உடனே அட்மிட் செய்யப்பட்டான்.  ஸ்கேன் ரிசல்ட் ப்ள்ட் க்ளாட்டிங் இன் ப்ரெய்ன் என்று சொன்னது.  மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கட்டியாக நின்றுவிட்டது.  ஆபரேசன் அவசியம் என்றார்கள். 

கண்ணுச்சாமியின் அப்பாவும் கயல்விழியும் வரவழைக்கப்பட்டார்கள்.  கையெழுத்து வாங்கப்பட்டு ஆபரேசன் செய்யப்பட்டது.  விசுவும் ரிதன்யாவும் வீட்டில் பாட்டியின் பராமரிப்பில் இருந்தார்கள்.
அடுத்த நாள் காலை பணம் செலவ்வாகிவிடுமே என்று பயந்த மிடில்க்ளாஸ் மனிதன், இரண்டு இளம் பிஞ்சுகளின் தகப்பன் கண்ணுச்சாமி செத்துப்போனான். 

 வீட்டில் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தார்கள்.  விசுவுக்கும் ரிதன்யாவுக்கும் ஆச்சர்யமாக இருந்தது.  தனக்கு மிகவும் பிடித்த மாமாவும் அத்தையும் வந்திருந்தார்கள்.  ஆனால் எப்போதும் தன்னைப் பார்த்து சிரிக்கும் அத்தை ஏன் அழுகிறாள் என்பதுதான் அவர்களுக்கு புரியவில்லை.  பெரியப்பாவின் பையன் ரகு அண்ணா கூட வந்திருக்கிறான்.  ஆனால் அவன் விசுவோடு விளையாட வரமாட்டேன் என்கிறான். 

“பாடி எப்ப வருமாமா….?” என்று பக்கத்து வீட்டுத் தாத்தா கேட்டார். 

“போஸ்ட் மார்ட்டமெல்லாம் பண்ணி வந்து சேர பதினோரு மணியாய்டும்…”-என்று பதில் சொன்னார் பெரியப்பா.

“ஏப்பா பாடிய அறுக்காம தர மாட்டாங்குளா?”

“பொதுவா அறுக்க மாட்டாங்க. ஆக்சிடெண்ட் கேஸ்னா அறுக்காம கொடுக்க மாட்டாங்க….”

“என்ன சொல்றது.  நேத்து நல்லாதானய்யா இருந்தான்.   இன்னெக்கி இப்படிப் போய்ச்சேருவான்னு யாரு நெனைச்சாங்க.  இந்த பிஞ்சுகளைக் கண்டாதான் மனசு அறுக்குதுப்பா…”

“என்ன பண்றது பெருசு.  கடவுள் வெளையாடுற வெளையாட்டு இது”

விசு அழுது கொண்டிருந்தான்.  ரிதன்யாவின் முகம் இன்னும் சிறிது நேரத்தில் அழுதுவிடுவாள் போலிருந்தது.  எளவுக்கு வந்திருந்தவர்கள் அவர்களைப் பார்த்து இச் கொட்டிக் கொண்டிருந்தனர்.

கூட்டத்தில் இருந்த செந்தில், கண்ணுச்சாமியின் பங்காளி  விசுவை தூக்கிக் கொண்டு கூட்டத்தை விட்டு விலகிச் சென்றார்.  ரிதன்யா அவர் பின்னாடியே ஓடினாள்.

“ஏண்டா தம்பி அழுவுறே….  அப்பா வெணுமா?”.

“இல்ல”

அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“வேற என்னடா?”

“எங்கூட யாரும் வெளையாட வரவே மாட்டேஙுறாங்க.  ரகு அண்ணா, சுந்தர், ராசு யாரும் வர மாட்டேங்குறாங்க……”

இப்போது ரிதன்யாவும் அழ ஆரம்பித்தாள்.

“நீ ஏம்மா அழுவுறே?”

“ம்ம்ம்…எனக்கு லாலிபாப் வேணும்.”

இருவரையும் கடைக்குக் கூட்டிப்போனான்.  இருவருக்கும் லாலிபாப் வாங்கிக் கொடுத்தான்.  விசு அதை வாங்க மறுத்துவிட்டான்.

“வேற என்னடா வேணும்?”

“எனக்கு வெளையாட டயர்வண்டி வேணும்…”

“அதுக்கு இப்ப எங்கடா போறது?”

“எங்க வீட்டு ஓட்டுமேல இருக்கு… எடுத்துக் கொடுங்க.  நான் வெளையாடனும்”

“சரி வா…எடுத்து தாரேன்”

அவர்கள் இருவரோடு வீட்டுக்கு வரும்போது ஆஸ்பத்திரியில் இருந்து பாடி வந்திருந்தது.  வண்டியில் இருந்து பிணத்தை இறக்கி கீழே வைத்து சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள்.

யாரோ ‘மகனையும் மகளையும் கொண்டு வாங்கோ” என்று அழைத்தார்கள்.  செந்தில் இருவரையும் கூட்டத்தின் இடையே கூட்டிப் போனான். 

விசுவின் அழுகை வலுத்தது.  ரிதன்யாவோ லாலிபாப் சாப்பிடுவதிலேயே மும்முரமாக இருந்தாள்.

“வா பாப்பா.  அப்பாவைப் பாத்துட்டு வந்துடலாம்”

“இல்ல.  கொஞ்சம் இருங்க நான் இதை சாப்பிட்டுட்டு வந்துடறேனே..” என்று சொல்லியபடி லாலிபாப்பை சுவைத்துக் கொண்டிருந்தாள்.

“சரி.. நீயாவது வாடா…”-என்று விசுவை கூப்பிட்டான்.

“ம்ம்ஹூம்..  நான் வரமாட்டேன்… எனக்கு டயர் வண்டியை எடுத்துக் கொடுங்க. நான் வெளையாடனும்….”

இடது கையில் விசுவையும் வலது கையில் ரிதன்யாவையும் தூக்கிக்கொண்டு செந்தில் பாடியை நோக்கிப் போக யத்தனித்தான்.  ஆனால் இருவரும் கத்தி அழ ஆரம்பித்தார்கள்.  இருவரும் அழுத அழுகையைப் பார்த்து கூட்டமே கதறி அழுதது. 

செந்தில் கூட்டத்தின் அருகிலேயே செல்ல முடியவில்லை.  இருவரும் துள்ளியபடியே கத்தியதால் கையில் இருந்து நழுவினார்கள். செந்திலால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. ஆகையால் செந்தில் ஓட்டின் மீது தேடிப்பார்த்து டயர்வண்டியை எடுத்து விசுவின் கையில் கொடுத்தான்.  ஸ்விட்ச் போட்டது போல அழுகை உடனே நின்றது. 

“குச்சி?”

குச்சியைத் செந்தில் தேடுமுன் விசு 'குச்சி வேணாம்' என்று சொல்லியபடி  
விசு டயர்வண்டியை கையாலேயே  தட்டியபடி மெதுவாக ஓடினான்.  அவன் பின்னால் ஒரு கையால் லாலிபாப்பை சூப்பியபடி இன்னொரு கையில் கண்களைத் துடைத்தபடி  ரிதன்யா ஓடினாள்.  அதே நேரத்தில் பிணத்தை சுமந்தபடி பிணவண்டி அவர்கள் பின்னால் சென்றது.   பிணவண்டியின் பின்னால் சாவுக்கு வந்திருந்த மக்கள் மெதுநடையாய் சென்றனர். 


அப்போது டயர்வண்டியின் குறுக்கே ஒரு சின்னப் பையன் விழுந்தபோது 


"அறிவு கெட்ட நாயே.... ரோட்டைப் பாத்துப் போகமாட்டியா?"-என திட்டிக் கொண்டிருந்தான்.



Friday, November 11, 2011

இதுவும் ஒரு மழைக் கவிதைதான்.

இது கடந்த திங்கள் (07.11.11)அதிகாலை திருப்பூரில் வந்த வெள்ளத்தைப் பற்றியது...



ஒரு மழைநாளின்
நள்ளிரவில்
எங்கள் நொய்யல் நதிக்கு
கோபம் வந்தது.

அழையா
விருந்தாளியாய்
அடியெடுத்து வைத்தது!

உறங்கிக்
கொண்டிருந்தவர்களைத்
தட்டி எழுப்பி
சுகமா என்று கேட்டது.

பதில்
சொல்லாதவர்களை
மென்று விழுங்கி
ஏப்பம் விட்டது...,

பதில்
சொன்னவர்களோடு
பல்லாங்குழி
விளையாடியது.

குழிக்குள் காய்கள்
விழுவதும்,
பிறகு
மீண்டும் எழுந்து
வேறு குழிகளில்
விழுவதும்
விளையாட்டாயிற்று!

யானை வழியை
மறித்த மனிதன்
யானைக்கு
எதிரியானதைப் போல்,

நதியின் பாதையை
மறித்து நின்ற
வீடுகளை
தின்று செரித்தது நதி!

சாயத் தண்ணீரை
கலந்து கலந்து
நதியின் கோபத்தை
இருபது வருடங்களில்
கொஞ்சம் கொஞ்சமாக
ஏற்றி வைத்து
இருந்தோம் நாங்கள்.

சமயம் பார்த்து
தனது கோபத்தைத்
தீர்த்துக்கொண்டது
நொய்யல் நதி.

தன்மீது படிந்த
அத்தனை சாயங்களையும்
தனக்குத் தானே
கழுவிக் கொண்டது.

கையில் அரிவாளோடு
வில்லனின் ஆட்கள்
வலம்
வந்ததைப் போல்
ஆக்ரோசத்தொடு
வீதி வலம் வந்தது.

அலட்சியமாய்
போடப்பட்ட
பாலங்களையும்
தார் ரோடுகளையும்
சாயம் வெளுக்கச்
செய்தது!

10 x 10 தான்
அந்த அறை,
ராசிப்படி
கிழக்கு வாசல்,
அக்னி மூலையில்தான்
அடுப்பு,
கன்னிமூலையில்தான்
சாமி படம் இருக்கு,
குபேரன் மூலையில்
இருக்குது
ட்ரங்குப் பெட்டி,
அதில் பழனிமலை
பாதயாத்திரைக்கு
சேர்த்து வைத்த
அறுபத்து மூணு ரூபாய் இருபத்தைந்து காசு,
ஜல மூலையில்
பிளாஸ்டிக் குடத்தில்
நாலு நாட்களுக்கு முன்
பிடித்து வைத்த
லாரித் தண்ணி,
இப்படி நூறு சதம்
வாஸ்து கொண்ட
வீட்டையும் கூட
விட்டுவைக்கவில்லை
சினம் கொண்ட
நொய்யல் நதி!

இன்று தெரு நாயோடு...
தெருவில் அவர்களும்!

Monday, October 31, 2011

பொம்பள மனசு (வம்சி சிறுகதைப் போட்டி-2011)




படம் உரியவருக்கு நன்றி....

“ஏங்க இந்த பீரோவுல வெச்சிருந்த வளையலும் மோதிரத்தையும் பார்த்தீங்களா ?”-என்று ஜானகி கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
       “ஏன் காணாம போச்சா?”-என்று கேட்டேன்.  இப்படித்தான் எதையாவது எங்காவது வைத்துவிட்டு வீட்டையே இரண்டு படுத்தி விடுவாள்.
       கடந்த ஒரு வாரமாக என்னுடைய அக்கா தனது இரண்டு பெண்களுடன் வந்து தங்கியிருந்தாள்.
இப்போதான் கொஞ்ச நேரம் முன்பு அவள் தன பிறந்த வீடு விஜயத்தை முடித்துவிட்டு கிளம்பிப்போயிருந்தாள்.
       இன்று காலை ஜானகியின் தங்கை சுசீலாவையும்  தனது இரண்டு வாண்டுகளோடு ஈரோடு பஸ் ஏற்றிவிட்டு வந்திருந்தேன்.   கடந்த வாரம் முழுவதும் ஒரே கலவர வாரம்தான். எனது இரண்டு மகன்களும் இன்று காலையிலிருந்து எதையோ பறிகொடுத்தது போல உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். விளையாட ஆள் இல்லாமல் டி.வி.யை நோண்டியபடி சுவராஸ்யமில்லாமல் இருக்கிறார்கள்.
       இப்போதுதான் ‘காணவில்லை’ பிரச்சினை பரபரப்பை பற்றிவிட்டது.
       “எங்கயாவது கை மறதியா வெச்சிருப்பே....  நல்லா தேடித் பாரு.”- என்று அதட்டினேன்.
       “இல்லீங்க இங்கதான் வெச்சேன்..... காலையில கூட பார்த்தேனே...”
       அவள் உறுதியாக சொன்னபோது நிஜமாகவே அதிர்ந்தேன். நானும் அவளோடு சேர்ந்து பீரோவில் உள்ளதை  வெளியே இழுத்துப்போட்டு தேடினேன்.  ஆனால் அந்த வளையலும் மோதிரமும் மட்டும் அகப்படவேயில்லை. வேறு எங்காவது வைதிருக்க்கலாமென்று அலமாரி,ஜன்னல், டி பாய், ட்ரெஸ்ஸிங் டேபிள் என்று இரண்டு மணி நேரம் வீடு இரண்டு பட்டது. ஆனால் தேடியது மட்டும் கிடைக்கவில்லை.
       சில நேரங்களில் காணாமல் போவது பாத்ரூமில் கிடைக்கும். குளிக்கும்போது கழற்றி வைத்துவிட்டு வீடெல்லாம் தேடுவாள். அங்கும் இல்லை என்றதும் ஜானகி ஒரு முடிவுக்கு வந்தவளாய் என் முகத்தை பார்த்தாள்....
       நான்,”இத பாரு  நல்லா தேடிப் பார்த்துட்டு எதா இருந்தாலும் ஒரு முடிவுக்கு வா..”-என்றேன்.  ராமனைப் பார்த்து சீதை சந்தேகப் படுவதாவது....
       “எனக்கென்னவோ இதை யாரோ திருடிட்டு போன மாதிரித்தான் தெரியுது. காலைல நான் பீரோவை திறந்தபோது இருந்தது...  ரெண்டு மணி நேரத்தில யாரு திருடியிருக்கப் போறா....?”
       முதல் கட்ட விசாரணை  தொடங்கினாள்......  பசங்க கொஞ்சம் சுவாரஸ்யம் வந்தவர்களாய் டி. வி –யை அணைத்துவிட்டு வேடிக்கை பார்த்தார்கள்.
       நான் கற்ப்பூரம் அடித்து சத்தியம் பண்ணாத குறையாய் மன்றாடி என் மீதிருந்த சந்தேக நிழலைப் போக்கினேன். 
       அடுத்த அம்பு அக்காவின் மேல் பாய்ந்தது...
       “காலையில் அடிக்கடி பேட்ரூமுக்குள்ள உங்க அக்கா வந்துட்டு போயிட்டு இருந்தாங்க....”
       எனது ஒரே ரத்தம் (சேம் ப்ளட்) என்னை அறியாமலே கொதித்து எழுந்தது..  தானாட விட்டாலும் தன் சதை, எலும்பு, நரம்பு எல்லாம் ஆடுமல்லவா?  ஆடியது...
       அக்காவுக்கு கஷ்ட ஜீவன்ம்தான், புருசன் ஒரு தண்ணி மாஸ்டர்தான். பனியன் கம்பெனியில் கட்டிங் மாஸ்டர் வேலை.  நல்ல வருமானம்.. இருந்தபோதிலும் முக்கால்வாசி டாஸ்மாக் எனும் முதல் மனைவிக்கே போனது போக மிச்சம் மீதி இருந்தால் மட்டுமே வீடு வந்து சேரும். அக்காதான் சுயமாக மாவு ஆட்டி திருப்பூர் அவசரத்தை பயன்படுத்தி விற்று தனது இரண்டு பெண்களையும் படிக்கவைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள். பெரியவள் பிளஸ் டூ போகிறாள்.  சின்னவள் ஒன்பதாவது போகிறாள்.என்னதான் வறுமை இருந்தாலும் திருடும் அளவுக்கு போகிற குணம் இருப்பவளில்லை. எனவே எனது கோபம் எகிறியது.
       “வார்த்தைய சிந்தினா அள்ள முடியாது.. பல்லு மேல நாக்க போட்டு பேசாத....”  - பதட்டத்தில் வாய் குழறியது...  என் குடும்பத்தின் மீது மாபெரும் கறை விழுந்து விடாமல் இருக்க மகாபாரதப் போரே நடத்த வேண்டி இருக்கும் போலிருந்தது.
       “ நாங்கெல்லாம் அப்படி வளர்க்கப்படலை.....எங்கம்மா சோத்துக்கு இல்லாட்டியும் திருடக்கூடாது அப்படின்னு சொல்லித்தான் வளர்த்தாங்க...””
       கடந்த கால வரலாறுகளை சாண்டில்யன் கணக்காக சொல்ல வேண்டியிருந்தது.
       “ஒரு வார்த்தை சொன்னதுக்காக ஏன் டிங்கு டிங்குனு ஆடறீங்க....”
       மீண்டும் தூங்கிட்டிருந்த என் தன்மானத்தை தட்டி அல்ல உதைத்து எழுப்பினாள்.... நான் நிலை குலைந்து ஒருமாதிரி எழுந்து நின்று எனது அம்பை விட்டேன்.
       “எதுக்கும் உன் தங்கச்சி சுசிலாவை கேட்டுப்பாரேன், கை மறதியா எடுத்திருக்கலாமில்ல.... “
                        அவ்வளவுதான் ஜானகி – பத்ரகாளி அவதாரம் எடுத்து ஒரு ஆட்டம் ஆடினாளே பார்க்கனும். மானாட மயிலாட கலாக்கா மட்டும் பார்த்திருந்தால் பத்துக்கு பத்து மார்க் போட்டிருப்பார்கள்.
       “ம்ம்ம் ....என் குடும்பத்தைப் பற்றி தப்பா சொல்லிட்டிங்களா?  எங்க அப்பா கேட்டிருக்கனும் இதை.. நாண்டுகிட்டு செய்திருப்பார்... “”
       “அம்மா விடுங்கம்மா... அப்பா கை மறதியா எடுத்திருக்கலாமில்லன்னுதானே சொன்னாரு...”-என்று பெரியவன் வெள்ளை கொடி ஏந்தி சமாதானம் பேச வந்தான்.  
       நான் எரியும் தீயில் எண்ணை விடுவது போல மேலும்....
       “பையனுக்கு ஸ்கூலுக்கு பீஸ் கட்ட வேணும்னு கேட்டா, நான்தான் இப்ப இல்லை-னு சொல்லிட்டேன்... அந்த கோபத்துல ஏதாவது எடுத்துட்டு போயிட்டாளோ என்னவோ? ”-என்றேன்.
       கேட்டதும் முகமெல்லாம் சிவந்தன... நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் போல உதடுகள் துடித்தன....ஒரு முடிவுக்கு வந்தவளாய்...
       “ஸ்கூலுக்கு பீஸ் கட்டனும்னா அவ புருசனைக் கேட்க வேண்டியதுதானே ... ஏன் என் புருசனைக் கேக்கணும்? என் போன் எங்கடா... எடு அதை....”.”-என்றாள்....
 எதையுமே சிரமப்பட்டு தேடியும் எடுக்காத சின்னவன் ஓடிப்போய் தேடாமலே செல் போனை எடுத்து டயல் செய்து, ஸ்பீக்கரையும்  ஆன் செய்து கொடுத்தான்.  அவனது “குறிப்பறிந்து நடக்கும்” குணத்தை” நினைத்து புல்லரித்தது.  எதையும் ஊதி பெரிசாக்குவதில் எங்க குடும்பத்தில் ஆர்வம அதிகம்.
       சுசீலா தன் பயண விபரத்தைதான் விசாரிக்கிறாள் என்று நினைத்தபடி-“ அக்கா சொல்லுக்கா.. இப்பதான் பஸ் ஈரோடு பஸ்ஸ்டான்ட் வந்து சேர்ந்திருக்கு...ரொம்ப ஸ்லோவா ஒட்டறாங்க...” ” என்றாள்.
       “நல்லா ஒட்டுனாங்க போ... ஏண்டி பணம் வேணும்னா எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே...எதுக்கு பீரோவுல ......””
       அவள் பேசி முடிக்குமுன் நான் போனை பிடுங்கி அணைத்தேன்.
       ‘ஏன் இப்படி சீன் போடறே... நல்ல தேடி பார்த்துட்டு அப்புறமா ஒரு முடிவுக்கு வா.... எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவுபண்ணாத ......””-  விடாமல் மேலும் ....
       “எங்க அக்காவெல்லாம் எடுத்திருக்க மாட்டா... திருட்டு புத்தி எல்லாம் அவளுக்கு கெடையாது. எதா இருந்தாலும் கேட்டு வாங்கிக்குவா. இல்லைன்னாலும் கோச்சுக்கமாட்டா. என்ன வறுமைதான்... புருசன் சரியில்லைதான்... அதுக்காக திருடற அளவுக்கெல்லாம் இறங்கமாட்டா..” “ என்று உறுதியோடு சொன்னேன்.
       “பின்ன... சுசீலா மட்டும் எடுத்திருப்பாளா என்ன? அவளும் நல்லாதானே இருந்தா... புருசன் தொழில் கடன் ஆகிப்போச்சு... என்ன பண்ணுவா... அதுக்காக அவளைப் போயி திருடின்னு சொல்லிட்டீங்களே...””
       ஜானகி புலம்பல் ஆரம்பித்தது... இனி இது எப்போது நிற்கும் என்று வானிலை நிலவரம் எல்லாம்  சொல்ல முடியாது. ஆனால் ஒரு வாரத்துக்கு இதே புலம்பலாக இருந்தது. அந்த மோதிரமும் கிடைக்கவில்லை... வளையலும் கிடைக்கவில்லை. அவளது புலம்பலும் நின்றபாடில்லை. அவள் சாப்பாடு போடும்போதும், காப்பி டம்ளரை வைக்கும்போதும், ‘ணங்’’-என்பதில்  அது நன்றாகவே தெரிந்தது.

       அடுத்த வாரத்தில் ஒருநாள் நான் ஆபீஸ்-ல் இருந்தபோது ஜானகியிடமிருந்து போன்.
       “எங்க நான் உங்க அக்கா வீட்லயிருந்து பேசறேன் ..” –என்றாள்.  எனக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது.
       “எப்ப போனே... எதுக்கு போனே...?”
       “எங்க சித்தப்பா வந்திருந்தாரு.. பையனுக்கு கல்யாணமாம். பத்திரிக்கை வச்சாங்க.  அப்புறம் அக்காவுக்கும் வைக்கனும் வா, அட்ரெஸ் தெரியதுன்னாங்க. அதன் நானும் கூட வந்தேன்..இப்ப அக்கா வீட்லதான் இருக்கேன்....””-என்றவள் அடுத்து சொன்னதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது...மெலிசான குரலில் “ஏங்க.. அன்னிக்கு காணாம போன வளையல் உங்க அக்கா கையில போட்டிருக்கா...”-என்றாள்.
       ஜானகி சொன்னதும் எனக்கு திக்கென்று இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை.
       “நல்லா பாரு... அது உன்னோடதுதானா.....?”
       “அது என்னோடதேதானுங்க... லேசா வளைஞ்சு நெளிஞ்சு இருக்கும்..இத்தனை நாளா போட்டிருந்த எனக்கு தெரியாதா?””
       உறுதியாய் இருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.  என் நம்பிக்கையின் மீது இது பேரிடியாய் இருந்தது.
       “சரி நான் வெச்சிடரனுங்க... வீட்டுக்கு வாங்க பேசிக்கிடலாம்....”
       ஆபீஸ் முடியும் வரை மனசு சரியில்லாமலே இருந்தது. ஜானகி வேறு ஏதாவது குதர்க்கமாய் பேசி பிரச்சினை பண்ணிவிடுவாளோ என்று பயமாய் இருந்தது.  என்ன இருந்தாலும் அக்கா  இப்படி செய்யக்கூடாது, என்னிடம் கேட்டிருந்தால் எதுவும் செய்திருக்கலாமே என்று தோன்றியது.
       சுசீலாவின் மேல் சந்தேகப்பட்டது எவ்வளவு தவறு.  ரெண்டு பையன்களை வைத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறாள். 
சுசீலாவின்  பெயருக்கு ரூபாய் ரெண்டாயிரம் மணி ஆர்டர் பண்ணிவிட்டு நேரே வீட்டுக்கு போனேன்.
       ஜானகி எல்லா வேலையையும் முடித்துவிட்டு ஹாலில் உட்கார்ந்து இருந்தாள்.  அவள் முகத்தைப் பார்க்கவே கூச்சமாக இருந்தது.  அவள் உள்ளே எழுந்து சென்று டீ போட்டு வந்தாள்.  சிறிது நேரம் கழித்து மௌனத்தை உடைக்கும் விதமாக...
       “ஏங்க.... அக்காதான் மோதிரமும் வளையலும் எடுத்திருக்கு.  கைல போட்டிருந்துச்சு... ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்துச்சு.. கைய கைய முந்தானைக்குள்ள மறைச்சு வெச்சுகிச்சு....”
       “நீ என்ன பண்ணினே..?”
       “நான் ஒன்னும் கேக்கலை... “
எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...
“ஏண்டி ஒண்ணும் கேட்கலை..?”
“ஏங்க.. அது வெறும் கவரிங் நகைதான்....போனா போயிட்டு போகுது விடுங்க....”    
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் இருந்தது.....
“அடிப்பாவி.. இதுக்குதான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுனியா...?”
“அக்காவ பார்த்ததும் மனசுக்கு சங்கடமா போயிட்டுது.. பெரியவ வேலைக்கு போறாளாம்..ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லைன்னு சொல்லி பனியன் கம்பெனிக்கு அனுப்பீட்டாங்களாம்....நானும் பணம் ஒண்ணும் கொண்டு போகலை.. கைல இருந்த வளையல கழட்டி கொடுத்துட்டு வந்தேன்.. முதல்ல புள்ளைய ஸ்கூலுக்கு அனுப்புங்கன்னு சொல்லிட்டு வந்தேன்.  ஏங்க நான் பண்ணுனது தப்புங்களா?..” அவள் சாவகாசமாய் கேட்டபோது... நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை......