PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, August 27, 2011

நட்பில் தோல்வியுண்டா நண்பா?



நாம் ஒன்றாய்ச்
சாப்பிட்ட எச்சில் தட்டும்,

எப்போதாவது
ஒவ்வொன்றாய் இழுத்த
ஒரே தம்மும்....,

ஒவ்வொரு சிப்பாய்
மாற்றி மாற்றிக் குடித்த
ஒரே எச்சில் தம்ளரும்,

நேரம் போனதே  தெரியாமல்
விடிய விடிய நாம்
பேசிய பேச்சை
ஒட்டுக்கேட்ட
அதே ஒற்றை நிலவும்,

எதிர்காலக் கனவை
பல இரவுகள் திட்டமிட்டதை
பக்கத்தில் இருந்து பார்த்த
இரட்டை தண்டவாளங்களும்,

எப்போதும் நீயே
ஜெயிக்கும் ரகசியம்
தெரிந்த
ஜோக்கர் சீட்டும்,

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
விட்டுக் கொடுத்த
பல்வேறு தருணங்களும்,

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
அடுத்தவர்களிடம்
விட்டுக் கொடுக்காத
பாசமிகு  தருணங்களும்,

உன்னுடையதை
எனக்காகவும்
என்னுடையதை
உனக்காகவும்
செலவழிந்த
ரூபாய் நோட்டுகளும்,

பல வேளை
என் பசியை ஆற்றிய
உன் தாயின்
அன்பு கலந்த
அரிசியும் பருப்புச் சோறும்,

சோர்ந்த போதெல்லாம்
தோளோடு அணைத்து
ஆறுதல் தந்த
நம் தந்தையின்
நம்பிக்கை வார்த்தைகளும்,

என்னைப் பார்த்து
பரிகசிக்கின்றன....

"காதல் தோல்வி
கேட்டதுண்டு ....

 நட்பு தோல்வியை 

இப்போதுதான்
பார்க்கிறேன்"-என்று!


  

Wednesday, August 24, 2011

படிப்பைத் தந்த காமராஜரின் மதிய உணவுத் திட்டம்(1)

 நேற்று சட்டமன்றத்தில் காமராஜரா? எம்.ஜி.ஆரா? என்று பட்டிமன்றம் நடந்தது.  உண்மையை என்போன்ற சிலரால் மட்டுமே உணரமுடியும்...


நான் என்னுடைய படிப்பை படித்தது ஒரு மிகப் பெரிய போராட்டத்துக்கு இடையில்தான்.  அந்தக் கதையைச் சொல்றேன் கேளுங்க...


நான் எனது வீட்டில் இரண்டாவது பையன்.  எனது அண்ணன் என்னிலிருந்து நான்கு வயது வித்தியாசம். எனக்குப் பிறகு இரண்டு வயது வித்தியாசத்தில் எனது தம்பி.  எனது அப்பா ஒரு சுகவாசி.  இன்ன வேலை என்று கிடையாது.  எல்லா வேலையும் செய்வார். ஆனால் செய்யமாட்டார். 


 அவருக்கென்று பத்து பனிரெண்டு ஆடுகள் உண்டு.  அதை அவிழ்த்து காட்டுக்குள் விட்டுவிட்டு ஜாலியாக சுற்றுவார்.  மாலை ஆனதும் ஆடுகளை தேடிப் பிடித்து ஒட்டிவந்து கொட்டிலில் அடைப்பார். சில சமயங்களில்  எதாவொரு தோட்டக்காரன் தோட்டத்தில் பயிரை மெய்ந்துவிட்டது என்று ஆட்டைப் பிடித்து  பிடித்து கட்டிவிடுவான்.  பிறகு பஞ்சாயத்து பண்ணி ஆட்டை ஒட்டிவருவார். 

இதுதான் அவருடைய தொழில்.  நிரந்தர வருமானம் கிடையாது.  ஆகையால் எனது அம்மா கட்டாயம் வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயம்.  எனது அம்மா அதற்கெல்லாம் பயப்படுகிற ஆள் இல்லை. 


 பிறந்தது முதலே எதாவொரு வேலைக்குச் சென்றுதான் வயிற்றை கழுவிப் பழக்கப்பட்டவர்கள்.   ஆனால் என்ன அப்போது எழுபதுகளில் உடல் உழைப்புக்கு கிடைத்ததோ சொற்ப்பக்கூலிதான்.  அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் காட்டுக்கு போய்விட்டால் வீடு வர மதியம் மணி இரண்டு மூன்று ஆகி விடும்.  கூலி இரண்டு ரூபாய்.  கடுமையான உழைப்பு. இந்த பணம்தான் ஒரு குடும்பைத்தையே ஓட்டவேண்டும்.


எனது தம்பி பிறந்த பிறகு அவனை பார்த்து வளர்க்கவேண்டிய பொறுப்பு எனது அண்ணன் தலையில் விழுந்தது.  அம்மா வேலைக்கு போக அண்ணன் தம்பியை வளர்க்க நான் பள்ளிக்கூடம் போனேன்.  அப்போது காமராஜ் மதிய உணவுத்திட்டம் இருந்த காலம்.  நானெல்லாம் சாப்பிடுவதற்க்காகவே பள்ளிக்கூடம் போகவேண்டியதாக இருந்தது.  ஆனால் சும்மா சொல்லக் கூடாது.  ஒரு நேரம் சாப்பிட்டாலும் நன்றாக வயிறார சாப்பிட முடிந்தது.  


காமராஜரைப் பொருத்தவரையில் எங்களைப் போன்ற ஏராளமானோருக்கு பசிப்பிணியைப் போக்கி படிப்பினை கொடுத்தவர்.  எனது வீட்டிலோ வறுமை தாண்டவமாடியது.  அரிசிச் சோறு என்பது கனவாகவே இருந்தது. ஏதாவது பண்டிகை காலங்களில் மட்டுமே அதை கண்ணில் காண முடிந்தது.  ராகிக் களியும், கம்பஞ்சோறும்,  கேழ்வரகு சோறும் தான் எங்களது அன்றாட மெனு.  


  அப்போதெல்லாம் நான் சாப்பிடும் சாப்பாட்டின் அளவு மிக அதிகமாக இருக்கும்.  அடுத்தவேளை ஒன்றும் கிடைக்காதது போல நிறைய சாப்பிடுவேன். என்னுடைய வயிறு மட்டும் தனியாக முன்னாடி துருத்திக் கொண்டிருக்கும்.
(இப்போ மட்டும் என்ன வாழுதாம்),  கல்யாண வீட்டுக்கெல்லாம் போனால் முதல் பந்தியிலே உட்கார்ந்து கூச்சம் இல்லாமல் கேட்டு வாங்கி வயிறு நிறைந்து, உணவுக்குழாய் நிறைந்து மூக்கு வரை நிறையும் வரை ரெண்டு பந்தியானாலும் சாப்பிடாமல் எழுந்து வரமாட்டேன்.  மற்றபடி இலையில் இருக்கும் மற்ற சைடு டிஸ்களை(போண்ட, இனிப்பு, பழம்) மேல் பாக்கெட்டிலும் கீழ் பாக்கெட்டிலும் பார்சல் பண்ணி எடுத்து வந்து கொஞ்சம் குறைந்ததும்  நிரப்பிக் கொள்வேன்.

கூப்பன் அரிசி சோறுஎன்பது கொஞ்சம் கூடுதல் தகுதியான உணவு.  அதற்கும் ரேசன் கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு கிலோமீட்டருக்கு  லைன் நிக்கும். ரேசன் கடைக்கோ பக்கத்துக்கு ஊருக்குத்தான் போகவேண்டும்.  அந்த அரிசியில் இரண்டு வகை இருக்கும்.  குருணை அரிசியும், முழு அரிசியும் கொடுப்பார்கள்.  குருணை அரிசியில் ஒருவிதமான ஒரு கெட்ட நாத்தம் அடிக்கும்.  அதையும் வாங்கி சாப்பிடுவோம்.  வேறு வழியில்லை.  

அப்போது மழை பொய்த்து பஞ்சம் தலை விரித்தாடியது.  பெரிசுகளைக் கேட்டுப் பாருங்கள்.  கதை கதையாக சொல்லுவார்கள். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எல்லோரையும் எலிக்கறி சாப்பிடச் சொன்னார்.  மக்கள் அதை மனதில் வைத்துதான் எம்ஜியாருக்கு அப்படியொரு அமோக ஆதரவு கொடுத்தனர். அதற்குப் பிறகு அவர் சாகும் வரை கருணாநிதியால் அந்த அரியணையை அடைய முடியாமல் போனதுக்கு காரண வறுமையை எள்ளி நகையாடியதுதான்.  

எதையோ சொல்ல வந்து எங்கெங்கோ சென்று விட்டேன்.  
எப்படியோ தக்கி முக்கி ஐந்தாவது வரை முடித்துவிட்டேன்.  இடையில் என் தம்பி இறந்துவிட எனது அண்ணனை தொழில் பழக திருப்பூரில் சித்தப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.  ஆறாவது படிக்க வேறு பள்ளிக்கூடம் போகவேண்டும்.  ஆனால் மேலே படிக்க வைக்க வீட்டு சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை.  இருக்கிற ஆடுகளை நான் மெயக்கவேண்டும் எனவும் எனது அப்பா வேறு ஏதாவது வேலைக்குப் போகவேண்டும் எனவும் முடிவு ஆகியது.  

அப்போது எனது அம்மாவிடம்  படித்தே ஆகவேண்டும் என்று அழுது அடம் பிடித்து  ஆர்ப்பாட்டம் பண்ணினேன். ஆனால் யாரும் கேட்கவில்லை.  அதனால் நானே ஒரு போஸ்ட் கார்ட் வாங்கி எனது சித்தப்பவிற்க்கு ஒரு கடிதம் எழுதினேன்.  உடனே வந்து என் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேசி பள்ளிக்கு அனுப்புமாறு தாழ்மையுடன் வேண்டி விரும்பிக் கேட்டிருந்தேன்.  

ஆனால் அந்த கடிதத்தை போஸ்ட் செய்யும் முன் அம்மாவின் கையில் கிடைத்துவிட்டது. அதை படிக்கத் தெரியாமல்   அது என்னவோ ஏதோவென்று  நினைத்துக் கொண்டு என்னை விசாரிக்க ஆரம்பித்தனர்.  ஆனால் நான் ஒன்றும் வாயைத் திறக்கவில்லை.  அதில் என்ன எழுதி இருக்கிறது என்று என்னையே படிக்கச் சொன்னார்கள்.  ம்ஹூம் கல்லுளி மங்கனாய் அமர்ந்து இருந்தேன். பிறகு அப்பா அடிக்க  ஆரம்பித்தார். அப்பவும் நான் வாயைத் திறக்கவில்லை. 

 அப்போது ரோட்டில் போய்க்கொண்டிருந்த தங்கபாண்டிய வாத்தியார் வந்து அடிப்பதை தடுத்து நிறுத்தி என்ன ஏதுவென்று
விசாரித்தார்.  அந்த கடிதம் அவரிடம் கொடுக்கப் பட்டது.  அதை படித்துப் பார்த்து என்னை தலை வருடி பயப்படாதே என்பது மாதிரி கண்களைக் காட்டினார். 

"எப்ப இந்த வயசுல எவனுக்கு லெட்டர் எழுதத் தெரியுது.  இவ்வளவு அழகா எழுதி இருக்கான்.  பையனை படிக்க வையுங்கப்பா... பெரிய ஆளா வருவான்..."


எனக்கு ஏதோ வானத்தில் மிதப்பது மாதிரி இருந்தது.  
அதற்குப் பிறகு இரண்டு ஆடுகள் விற்கப் பட்டது.  நான் புதுச் சட்டை அணிந்து ஹைஸ்கூல் போனேன்.  அங்கு எனக்கு வாத்தியாராக வந்தது அதே தங்கபாண்டிய வாத்தியார்தான்.  அவர் எல்லோருக்கும் கண்டிப்பான வாத்தியார். ஆனால் நான் அவருக்கு செல்லப் பிள்ளை.  அவருக்கும் அவரது வீட்டுக்கும் தேவையான எடுபிடி வேலைகளை செய்து  கொடுத்து  நல்ல பேர் வாங்கிவிட்டேன். 

அப்போது மதிய உணவுப் பிரச்சினை வந்தது.  ஆரம்பப் பள்ளிக்கு மட்டுமே இருந்த மதிய உணவுத் திட்டம் உயர்நிலைப் பள்ளிக்கு இல்லை.  எனது வீட்டின் வறுமையை புரிந்து கொண்ட தங்கபாண்டிய வாத்தியார் அதற்கும் ஒரு திட்டம் கொண்டு வந்தார்.  கைப்பிடி உணவுத் திட்டம்.

மதிய உணவு கொண்டு வரும் மாணவர்கள் அவரவர் உணவில் இருந்து ஒரு கைப்பிடி உணவை வழங்க வேண்டும் என உத்தரவு போட்டார்.  மதிய பெல் அடித்ததும் தயாராக நான் கொண்டு வந்திருக்கும் இலையுடன் வகுப்பில் கீழே அமர்ந்து கொள்வேன்.  எல்லோரும் வரிசையாக வந்து எனது இலையில் பரிமாறிச் செல்வர்.  என்னோடு வீரமுத்து எனும் இன்னொரு மாணவனும் அதை சாப்பிட்டான். 

அப்போது எனது அப்பா கொஞ்சம் திருந்தி வேலைக்குப் போகிறேன் என்று  திருப்பூர்(இதுதான் அவருடைய சொந்த ஊர்) வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.  எனது அண்ணனும் அப்பாவும் ஒன்று சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து வேலைக்குப் போய் வந்தார்கள். எனது அண்ணன் சாக்கு தைக்கவும் எனது அப்பா கடலை மில்லில் மூட்டை தூக்கவும் போனார். 

எப்படியோ எட்டாம் வகுப்பை  முடித்துவிட்டேன்.  கோடை விடுமுறைக்கு  திருப்பூர் வந்தவன் என்னையும் சாக்கு தைக்க வேலைக்கு அனுப்பினார்கள்.  அதற்குப் பிறகு குடும்பமே திருப்பூருக்கு குடி பெயர்ந்தது.  எனது அம்மா பருத்தி மில்லுக்கு வேலைக்குப் போக ஒரு வழியாய் குடும்பம் செட்டில் ஆனது. என்னால் குடும்பத்துக்கு வருமானம் வரவும் எனது படிப்பை டீலில் விட்டார்கள்....   அது அடுத்த பதிவில்....


Saturday, August 6, 2011

தமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்.....முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு, முதல் உதை... இப்படி அவரவர் வாழ்க்கையில்(சேரன்னு நினைப்பு) ஆயிரம் முதல்கள் இருக்கும்.
அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும்.
அதைப்பற்றி நான் எழுதலாம் என்று இருக்கிறேன்....கொஞ்சம் சுய சொறிதல்தான் ...இருந்தாலும் நம்ம வரலாறு முக்கியமில்லையா, கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.. வேறு வழியில்லை.

அதற்குமுன் எனது வரலாறு..(புவியியல், இரசாயனம்,பௌதீகம்)!

எனது சொந்த ஊர் திருப்பூர் என்றாலும் நான் எனது 13 வயது  வரையில்  வளர்ந்தது பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் என்ற அழகான கிராமத்தில்தான்.உங்களில் சில பேருக்கு தெரிந்திருக்கலாம்... இங்கு ஒரு ஜமீன்தார் அரண்மனை இருக்கிறது..இது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்,

இளையராஜா அடிக்கடி வந்துபோகும் கோடீஸ்வர சுவாமிகள் நினைவாலயம் உள்ள இடம். நாங்கள் கோடீஸ்வர சுவாமிகளின்  செல்லப் பிள்ளைகளாக வலம் வந்த காலம்.  அது ஒரு தனிக் கதை.

நான் அரசுப் பள்ளியில் நான்காவது படித்துக்கொண்டிருந்த சமயம். எனக்கு சினிமா என்றாலே என்னவென்று தெரியாது.  அப்போது பக்கத்துக்கு ஊரில் தமிழ்நாடு (அநேகமாக எல்லா ஊர் டெண்டு தியேட்டர் பெயரும் இதுவேதான்) என்றொரு டூரிங் டாக்கீஸ் இருந்தது.  என்னோடு படிக்கும் நண்பனின் உறவினர்தான் அதில் ஆபரேட்டர் .  அந்த செல்வாக்கில் அவன் எல்லாப் படங்களையும் பார்த்து விடுவான். அது மட்டும் இல்லாமல் அடுத்தநாள் பள்ளிகூடத்தில் கூட்டம் போட்டு அந்த படத்தை டைட்டிலில் இருந்து சுபம் கார்ட் போடும் வரை விலா வாரியாக விவரிப்பான். எம்ஜியார் நம்பியார் சண்டையை அப்படியே நடித்து காட்டிவிடுவான்.  அதை நாங்கள் எல்லோரும் வாயைப் பிளந்தபடி (கொசு போய் குடும்பம் நடத்திவிட்டு வெளியே வரும்) கேட்டுக்கொண்டு இருப்போம்.
எம்.ஜி.ஆர். அணி , சிவாஜி அணி என்று பிரிந்து சண்டை போட்டுகொண்டிருப்போம்.

எப்படியாவது ஒரு சினிமாவாவது பார்த்துவிடவேண்டும் என்று அம்மன் கோவிலில் காசு வெட்டி  சபதம் எடுத்துக்கொண்டேன்.   அம்மாவிடம் கேட்டால் உனக்கெல்லாம் எதுக்குடா சினிமா என்று புறந்தள்ளினார்கள்.  அதற்காக இரண்டு நாள் பாபா ராம்தேவ் கணக்காக உண்ணாவிரதம், தூங்காவிரதம், எடுபிடி வேலை செய்யா விரதம் என பல வி(ர)தங்களில் போராட்டம் செய்து கடைசியில் படிந்தார்கள்.   உடனே கை கால் முகம் கழுவி நெற்றி நிறைய விபூதியிட்டு அண்ணனோடு வெற்றிப் பெருமிதத்துடன்  'உலகம் சுற்றும் வாலிபன்' படம் பார்க்க போனேன்.

தியேட்டருக்கு போனபிறகுதான் அது வேறு உலகம் என்று புரிந்தது.  கொடிகளும், தோரணங்களும் கூட்டமும் மிரள வைத்தன. இருபத்தைந்து பைசா கொடுத்து தரை டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே போனோம்.  முன்னாடி போய் மணலை குவித்து அதன் மீது உட்கார்ந்து கொண்டோம்.  பீடி வாசனை தியேட்டர் முழுவதும் நிறைந்திருந்தது.
படம் போட்டு எம்ஜியார் வந்ததும் விசில் சத்தம் தியேட்டரின் கூரையைப் பிய்த்தது. அதுவே தனி உற்சாகமாக இருந்தது.

அடுத்த நாள் நான் எம்ஜியார் ரசிகனாக பதவியேற்றுக் கொண்டு தனியாக ஒரு கூட்டம் சேர்த்து கதை அளக்க ஆரம்பித்தேன்.  அப்போது தீப்பெட்டி பண்டல்களில் விதவிதமாக  எம்ஜியார் படம்  வரும்.  மாமாவின் மளிகைக்  கடையில் கெஞ்சி வாங்கி வந்து எனது வீட்டின் ஒரே ஒரு தட்டிக் கதவில் ஒட்டி வைப்பேன்.

அதற்குப் பிறகு எனக்கு கொடுக்கப்படும் ஐந்து பைசா, பத்துப் பைசா காசுகளை சேர்த்து நாலணா ஆனபிறகு யாராவது சினிமாவுக்குப் போனால் அவர்களோடு ஒட்டிக்கொண்டு போக ஆரம்பித்தேன்.  அடிக்கும் மேற்க்கத்திக் காற்றில்  மருத மலை மாமணியே முருகையா என்ற பாட்டை  கேட்டால் தியேட்டர் திறந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.  அந்த பாட்டைக் கேட்டவுடன் நமநமவென்று அரிக்க ஆரம்பித்துவிடும்.

அப்போது எனக்கு அந்த வயதிலேயே  பார்ட் டைம் வேலையொன்று  கிடைத்தது.   அந்த ஊரில் புதிதாக வந்த பேச்சிலர் குடும்ப கட்டுப்பாடு அலுவலர் ஒருவருக்கு காலையில் குளிப்பதற்காக தண்ணீர் காயவைத்துக் கொடுக்கும் வேலை.  மாதம் இரண்டு ரூபாய் கொடுப்பார்.  இடையில் அவருக்கு ஏதாவது எடுபிடி வேலை செய்து கொடுத்தால் ஐந்து பைசா பத்து பைசா கொடுப்பார்.  அவருடைய ரூம் அந்த ஊரின் கேளிக்கை கிளப்-ஆக உருவெடுத்தது.  அந்த ஊரின் வாத்தியார்கள், படித்த பெரிசுகள் எல்லாம் பொழுதைக் கழிக்கும் இடமாக அது இருந்ததால் எனக்கு வேலை அதிகமானது.  சீட்டாட்டம் ஆடினால் எனக்கு டீ வாங்கி வரும் வேலை.  எப்படியும் அந்த மாதிரி நாட்களில்   இருபத்தைந்து பைசா கொடுப்பார்கள்.   எங்களது வீட்டின் வறுமையை ஓரளவு இது விரட்டியது.  மிஞ்சிய காசுகளில் எப்படியும் படம் பார்த்துவிடுவேன்.

படத்துக்கு தனியாக போக ஆரம்பித்தேன்.  போவது ஒன்றும் பிரச்சினையில்லை  படம் விட்டு வரும்போதுதான் பிரச்சினை.  தியேட்டருக்கும் எனது வீட்டுக்கும் நாலு மைல் நடக்க வேண்டும். ஊரே அடங்கி இருக்கும் அந்த ஒன்பது மணி இருட்டில் எப்படியும் மெயின் ரோடு வரை யாராவது துணை இருப்பார்.  மெயின் ரோட்டில் இருந்து வீடு வரை யாரும் இருக்க மாட்டார்கள்.  மூன்று புளிய மரம்தான் எனக்கு இருக்கும் ஒரே பயம்.  புளிய மரத்தில் பேய் எனக்காக உட்கார்ந்து காத்திருப்பதாக எனது கற்பனை. கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவந்து வீட்டிற்குள் புகுந்துவிடுவேன். நெஞ்சம் பட படவென்று அடித்துக்கொள்ளும்.

இப்படித்தான் வீட்டில் அனுமதியின்றி பத்ரகாளி படம் பார்த்துவிட்டு வந்தேன்.  படமே ஒரு டெரர்- ஆகத்தான்  இருக்கும்.  படத்தின் கதாநாயகி வேறு தலையை விரித்துப்போட்டு பேயாட்டம் ஆடியிருப்பார்.  மெயின் ரோடு வரை ஒரு துணை இருந்தது.  அதற்கு மேல் வழக்கம் போல் புளியமரத்து நண்பனிடம் இருந்து தப்பிக்க கூடுதல் பயத்துடன் கண்ணை மூடி ஓடிப் போய் கதவை திறந்து நின்றால் தலையை விரித்துப் போட்டு கையில் பிரம்புடன் அம்மா... அவ்வளவுதான் படத்தில் பார்த்த பத்ரகாளி ஆட்டம் நிஜத்தில் நடந்தது.
புண்ணிய பூமி என்றொரு சிவாஜி படம்.  அங்குதான் சூட்டிங் நடந்தது.  சிவாஜியை அப்போதுதான் முதன் முதலில் நேரில் பார்த்தது.  தொந்தியை இறுக்கிக் கட்டி பெல்ட் போட்டு மிலிடரி ட்ரெஸ்-ல் ஒரு தீவிரவாதி போல் நடித்திருப்பார்.  வாணிஸ்ரீ ஓல்ட் கெட்டப்-ல் நடித்திருப்பார். நம்பியார்தான் வில்லன்.


அரண்மனை திண்ணையில் நம்பியார் v.k. ராமசாமியுடன் ரொம்ப சிம்பிளாக பேசிக்கொண்டிருந்தார்.  அவர் அருகில் போகவே எங்களுக்கெல்லாம் பயம்.  தூரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தோம்.  அப்போது என்னை தம்பி இங்கே வா என்று  அருகில் அழைத்தார்.    அவ்வளவுதான் பின்னங்கால் பிடரியில் பட ஓடிப்போய் வீட்டுக்குள் புகுந்துகொண்டேன்.  பிறகு இரண்டு நாள் சூட்டிங் பார்க்க போகவேயில்லை.  நம்பியார் என்னை தேடிக் கொண்டிருப்பதாக நண்பர்கள் என்னை கலாய்த்தார்கள்.

கரையெல்லாம் செண்பகப் பூ படம்.  சுஜாதா அவர்கள் வர்ணித்திருந்த ஜமீன் பங்களாவும் கிராமும் எங்களது கிராமம்தான்.  பிரதாப் போத்தன் கித்தாரோடு ஒரு நாட்டுப் புறப்பாடலுக்கு அங்கு சூட்டிங் நடந்தது.  அன்று நான் சூட்டிங் பார்க்க போகவில்லை.  பிரதாப் போத்தனோடு ஆட அந்த ஊர் சிறுவர்கள் சிலரை தேர்வு செய்து காஜா செரீப்போடு ஆட வைத்திருக்கிறார்கள்.


 கசாப்பு கடைகாரர் பையன் மாரியப்பனும் அதில் ஒருவன். அதன் பின் அவன் செய்த அளப்பரைகள் இருக்கிறதே..... அப்பப்பா அவனே ஹீரோவாக நடித்த மாதிரி அலட்டிக் கொள்வான்.
அன்று மட்டும் நான் சூட்டிங் பார்க்கப் போயிருந்தால் இன்று தமிழ் சினிமா உலகில் ஒரு ஸ்டார் உருவாகி இருப்பேன்.   தமிழ்நாடு செய்த புண்ணியம் அவ்வளவுதான். 




Tuesday, July 26, 2011

திருப்பூர் பெட்ரோல் பங்கில் கலப்படம்

அன்பு நண்பர்களே வணக்கம். 
பார்த்து பல நாட்களாகி விட்டது.   மன்னிக்கவும். ப்ளாக் வாசிப்பது மட்டுமே  ஒரே தகுதியாகி விட்டது.  ப்ளாக் ஏன் எழுதுவது இல்லை என்றால்.....நேரம் கிடைக்கவில்லை என்றெல்லாம் நொண்டியடிக்க விரும்பவில்லை... ஒரே காரணம், மிகப்பெரிய சோம்பேறித்தனம்..என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை
ஓகே ...எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் என்னுடைய staff  பெட்ரோல் அடித்தார்.  அடித்து ஒரு கிலோ மீட்டர்தான் ஓடியிருக்கும், வண்டி தகராறு பண்ணியது..

அப்படியே ஓரங்கட்டி ஒரு மெக்கானிக்கை அழைத்து பார்த்தபோது பிரச்சினையை புட்டு புட்டு வைத்தார்.
பிரச்சினை என்னவென்றால் அடித்த பெட்ரோலில் கலப்படம் இருந்திருக்கிறது.  பெட்ரோலை கையில் பிடித்து பார்த்தல் கெரசின் வாசனை அடித்தது.  எல்லாவற்றையும் கழற்றி கிளீன் பண்ணவேண்டும்.  எப்படியும் சுமார் 1500 ரூபாய் செலவு ஆகிவிடும் என்று மெக்கானிக் சொல்லவும் செலவானாலும் பரவாயில்லை சரி பண்ணச் சொல்லிவிட்டார்.



 காலையில் பில் என்னிடம் வந்தது.  விசயத்தைச் சொன்னார்.
நான் "இதற்கு என்ன செலவு ஆகிறதோ அதை பெட்ரோல் பங்க்தானே தரவேண்டும்.  போய்  கேட்டு வாங்கி வாருங்கள்"- என்றேன்.

அவர் "ஞே" என்று விழித்தார்.   "ஸார் அவங்க பெரிய ஆளுங்க... நாம எப்படி அவங்க கூட மோதறது..?" என்று கையைப் பிசைந்தார்.

"போய்  கேட்டு பாருங்க... என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்"-என்று நான் சொல்லவும்.. அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
"நமக்கு எதற்கு ரிஸ்க் ..."-என்ற பாவனையில் இருந்தார்.
 நான் விடாமல் பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டேன்.
பிறகு தொகையை அவர் கணக்கில் எழுதச் சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க போய் விட்டார்.

நான் விடாமல் அவரை கொஞ்ச நேரம் கழித்து அவரை அழைத்து பெட்ரோல் பங்கின் நம்பரைப் பிடித்து டயல் செய்து கொடுத்து பேசச் செய்தேன்.

அவரும்" நேற்று உங்கள் பங்கில் பெட்ரோல் அடித்தேன்.  அதற்குப் பிறகு வண்டி ரிப்பேர் ஆகி வொர்க் ஷாப்பில் நிக்கிறது... செலவு 2500 ரூபாய் ஆகும் என்கிறார்கள்.  என்ன செய்ய?"-என்று கேட்டார்.

உடனே மறு முனையில் எதுவும் பேசாமல் "பில்லை கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் செல்லுங்கள்"-என்றனர்.

"ரூபாய் 2500 கொடுக்கவேண்டும்..  "-என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

"அட அதுதான் வந்து வாங்கிச் செல்லுங்கள்.  தெரியாமல் நடந்துவிட்டது என்ன பண்ணச் சொல்றீங்க..."

அடுத்த நாள் போய் பணத்தை வாங்கி வந்தார்.  பிறகு விசாரித்தபோதுதான் தெரிந்தது...அவர்களுக்கு இது வாடிக்கையானதுதான்... ஏனெனில் அவர்கள்தான் கேரசினுக்கும்  மொத்த டீலாராம்....

எப்படி இருக்குது பார்த்தீர்களா?

பெட்ரோல் அடிக்கும் போது முகர்ந்து பார்த்து வாங்குங்க மக்களா?




Tuesday, February 22, 2011

காகிதத் தமிழன்!








 ஒரு முற்றுப் பெறாத இங்கே கவிதையைப் பார்த்தேன்.....
முடிக்கச் சொல்லி இருந்தார்கள்...
முயற்சி செய்திருக்கிறேன்.....


ஒரு மிகப்பெரிய
யுத்தத்திற்கான
ஆயத்தங்கள்
உன்னிடம் தெரிந்தது.

மெல்லியதாய்
துவங்கிய
உன் வார்த்தைகள்
ஐப்பசி அடைமழையாய்
வலுக்கிறது.

நான் நிராயுதபாணியாய்
மௌனம் காக்கிறேன்.
தற்காப்பு வார்த்தைகள்
மட்டுமே
மனதில் கோர்க்கிறேன்.

என் மௌன நீட்டிப்பு
உன்னை
மேலும்
ஆவேசமடையச்செய்கிறது.

உன் கண்களும்
சுவாசமும்
நிலைக்கொள்ளாது
அலைகின்றன.

வார்த்தைகள்
மேலும் தடிக்கின்றன.
கேடயம் தாண்டி
சில
என் இதயம்
துளைக்கின்றன.

நீ
எல்லை தாண்டிய
போதும்
மேலும்
மௌனம் காக்கிறேன்.
எதையும் பொருட்படுத்தாத
பாவனையில்

ஏனெனில்...

நான்
உந்தன் ரத்தத்தில்
நனைத்த பேனாவில்
கடிதம் மட்டுமே
எழுதத் தெரிந்த
காகிதத் தமிழன்!

நடைப்பயிற்சியின் போது
'ஒரு மணி நேர
உண்ணாவிரதம்'  மட்டுமே
இருக்கத்தெரிந்த
உன்னதத் தமிழன்!

மரணங்கள் மன்னிக்கப்படலாம்....
கொலைகள் மன்னிக்கப்படமாட்டாது.....?

Saturday, November 13, 2010

விதவை இலை சுமங்கலி இலை



தீபாவளிக்கு  வீட்டில் விருந்தினர்கள் வருகை...
என்னதான் இருந்தாலும் ஒரு பண்டிகையை உற்றாரும் சுற்றாரும் கூடி கொண்டாடினால் அதில் இருக்கும் சந்தோசமே தனிதான்.

நம்மைவிட பொடிசுகளுக்கு ஜாலியோ ஜாலிதான்.

நான் வாழை இலை வாங்க கடைக்கு போய் இருந்தேன்.

சாப்பாட்டு இலை 10ம் டிபன் இலை 10ம் வாங்கி வருமாறு தங்கமணியால் ஆணை ஸாரி அன்புக் கட்டளையிடப் பட்டிருந்தேன். (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு பாருங்க..)

கடைக்காரரிடம் அப்படியே கேட்டேன் .....அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தார்..

கடையில் டிபன் இலை இல்லை.
கடைக்காரர்,"டிபன் இலையில் சாப்பிடக் கூடாது தம்பி... சாப்பாட்டு இலையே வாங்கிக்குங்க.."-என்றார்.

நாம் எதை வாங்குவது என்று இவர் எப்படி தீர்மானிக்கலாம்.  அதுமட்டும் இல்லாமல் தங்கமணியிடம போய் யார் வாங்கிக் கட்டிக்கொள்வது .....

நான் ஒரு ஐடியா சிகாமணி,
"தலைவாழை இலையை பிளந்து டிபன் இலை ஆக்கிடுங்க..." -என்றேன்.

அவர் இதைக் கேட்டதும் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டார்....

"தம்பி அப்படியெல்லாம் கொடுக்கக் கூடாது....ஏனா  தலைவாழை இலைங்கறது  சுமங்கலி இலை.  டிபன் இலைங்கறது விதவை இலை.  குடும்பம் வாழ்ற வீட்டுல விதவை இலை போட்டு சாப்பிடக்கூடாது.  நீங்க என்ன கேட்டாலும் நான் தரமுடியாது.  அது மாதிரி நான் ஏவாரம் பண்றதில்லை...தலைவாழை இலையே வாங்கிட்டு போங்க.."

தீர்மானமாக இருபது இலைகள் கட்டிக் கொடுத்தார்.

நானும் வேறு வழியில்லாமல் வாங்கி வந்தேன்.

வீட்டில் வந்து இதே கதையை சொன்னேன்.
 தங்கமணி என்னை ஏற இறங்கப் பார்த்தார்...
"நாங்களும் அதே கடையில எத்தனையோ தடவை இலை வாங்கி இருக்கோம்.  அதெப்படி உங்க கிட்ட மட்டும் ஏதாவொரு கதை சொல்றாங்க..."

நான் அப்படியே விலகிப் போய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்துக்கொண்டேன்.

ஒரு டன் அசடு வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.......




Wednesday, November 10, 2010

இதுவும் திருப்பூர்தான்....


 இதுதான் திருப்பூர் என்று அண்ணன் நிகழ் காலத்தில் எழுதி இருந்ததை படித்தபோது அன்று நடந்த இன்னொரு சம்பவத்தைப் பற்றி சொல்லலாம் என்று இதை எழுதிகிறேன்....

தீபாவளிக்கு ஒரு தினம் முந்திய நாள்....
நான் எனது பார்ட்டிக்கு ஒரு நேம் செக் ரூபாய் 1907/= க்கு கொடுத்திருந்தேன்.
அவர் பேங்க்குக்கு சென்று பணம் எடுத்துக் கொண்டார்.  எனக்கு இரவு எட்டு மணிக்கு பேங்கிலிருந்து போன்.
"சார் உங்க பார்ட்டிக்கு  ரூபாய் 1907 க்கு பதிலாக  ரூபாய் 19007 கொடுத்துவிட்டோம்...."
பதட்டமாக மேனேஜர் கூப்பிட்டார்.

"அதெப்படி சார் அவ்வளவு கரெக்டா நம்ம பார்ட்டி தான் வாங்குனாங்கனு சொல்ல்றீங்க...?" என்று கேட்டேன்.

"சார் நம்ம கேஷியர் செக்குக்கு பின்னாடி டினாமிநேசன் கரெக்டா எழுதி இருக்கார்.  நாங்க 3
மணி நேரமா மண்டையை போட்டு உடைச்சு இதை கண்டுபிடிசிருக்கோம் சார்.  நீங்க வேணா வந்து பாருங்க ஒரு தடவை...."

நான் உடனே பார்ட்டிக்கு போன் செய்து கேட்டேன்.

அவர் தெளிவாக மறுத்தார்.

"சார் அதெப்படி கொடுத்திருக்க முடியும்.  நான் மூணு ஐநூறு ரூபாய் நோட்டும், நான்கு நூறு ரூபாய் நோட்டும் சில்லறையும்தான் வாங்கினேன்..."

"சரி.. உடனே நீங்க ஆபீஸ் வாங்க.."

"இல்ல சார் ... நான் காலையில் வர்றேன்...."

எனக்கு இப்போது கொஞ்சம் சந்தேகம் வந்தது.

"இத பாருங்க ..இப்ப நீங்க வந்தீங்கன்னா சரி... இல்லையின்னா உங்க மேல தப்பிருக்குன்னு அர்த்தம்.."-என்றேன்.

உடனே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவரும் அவரது மனைவியும்  எனது ஆபீசில் இருந்தார்கள்.

"சார் இப்போ நான் தண்ணி அடிச்சிருந்ததால்தான்  நான் வர முடியாதுன்னு சொன்னேன்.
 இப்ப நான் என்ன செய்ய?"

"நீங்க அதிகமாக பணம் வாங்குனீங்களா?"

"கிடையவே கிடையாது சார்... மூணு ஐநூறு நாலு நூறு ஏழு ரூபாய் சில்லரையும்தான் சார் நான் வாங்குனது..."

"சரி இப்பவே பேங்க் போயி சொல்லீட்டு வந்துருங்க..."-என்றேன்.

உடனே அவர் கிளம்பி சென்றார்.  எனக்கு அப்போது வேலை இருந்ததால்  நான் எனது ஸ்டாப் ஒருவரையும் கூட அனுப்பி வைத்தேன்.

பாங்கில் இவர் வந்த கோலத்தை பார்த்து அடுத்த நாள் காலையில் வரும்படி  சொல்லிவிட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் நானும் அவரை அழைத்தபடி சென்று இருந்தேன்.

பேங்க் மேனேஜர் அந்த செக்கை காட்டினார். அதன் பின்னாடி 190 x 100 தெளிவாக  டினாமிநேசன் எழுதி இருந்தது... அதே மாதிரி எல்லா செக்குக்களையும் காட்டினார். அதிலேயும் தெளிவாக டினாமிநேசன் போட்டிருந்தார்கள்.

"எப்போதுமே எந்த காஷியரும் செக்குக்கு பின்னாடி இந்த மாதிரி டினாமிநேசன் எழுத மாட்டார்கள்.   நல்லவேளை இவருக்கு இந்த பழக்கம் இருக்கு. அதனால கண்டுபிடிக்க முடிஞ்சது.....எங்களோட டோட்டல் சார்டேஜ் 17100 ரூபாய்.  இவருக்குதான் அவ்வளவு ரூபாய் கரெக்டா அதிகமா கொடுத்திருக்கோம்"

ஆனால் நம்ம பார்ட்டியோ ஒத்துக்கவே மாட்டேன்கிறார்.

"சார் இவுங்க எங்கோயோ விட்டுட்டு என்னை பிடிச்சு தொந்தரவு பண்ணறாங்க...இதுக்கு மேல பேசுனாங்கன்னா நான் மனித உரிமை கமிசன் தான் போகவேண்டி இருக்கும்...."

கேஷியர் புலம்போ புலம்பென்று புலம்புகிறார்.

"சார் நான் கை காசுதான் போட்டு கட்டனும்... இது எனக்கு ஒரு ப்ளாக் மார்க் ஆகிடும்.  என்னோட ப்ரோமொசன் எல்லாம் பாதிக்கும்.....இன்னும் என் குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் கூட எடுக்கலை.... ."

இவரோ..."சார் நான் அப்படி பண்ற ஆளா....உங்க கூட இதனை நாளா பிசினஸ் பண்றேன்.  எம்மேல ஏதாவது சின்ன ரீமார்க் உண்டா?   நீங்களே என்னை சந்தேகப் படலாமா? "-என்கிறார்.

நான் இருவருக்கும் இடையில் சிக்கி படாத பாடு பட்டேன்.

"நீங்க வேணா வாங்க... மூணு ஐநூறு ரூபாயில் ஒரு ஐநூறு நோட்டை டீக்கடையில் கொடுத்தேன்.  இன்னொன்றை வீட்டுல கொடுத்தேன்.  இன்னொன்று என்னோட பாக்கட்ல வச்சு இருக்கேன்"

ஐநூறு ரூபாயை எடுத்துக் காட்டினார்.

பேங்க் மேனேஜர் என்னை தனியாக அழைத்தார்.

"சார் பார்ட்டியைப் பற்றி உங்க ஒப்பினியன்  எப்படி நல்லவரா?"-என்று கேட்டார்.

"சார் நல்ல பார்ட்டிதான்.  ஒரு வருசமா வரவு செலவு வச்சிருக்கேன்.  இதுவரை ஒண்ணும் பிரச்சினையும் இல்லை"

"சரி விடுங்க...எனக்கு உங்க ஒபினியன்தான்  வேணும்.  இன்னொருமுறை கேட்டுப் பாருங்க...மனசாட்சிப் பிரகாரம் வாங்கிருந்தா கொடுத்துடச் சொல்லுங்க...இல்லையினா நாங்க எல்லோரும் சேர்ந்து ஷேர் பண்ணி பணத்தை கட்டிடறோம்..."

அவரோ ஒத்துக்கொள்வதாக இல்லை. அவரது மனைவியும்  அதையே வழிமொழிந்தார்.

ஒருவழியாக தீபாவளி முடிந்தது....
இன்று பாங்கிலிருந்து வரச்சொல்லி போன் வந்தது.
போனபோது...மேனேஜர் சிரித்தபடியே வரவேற்றார்.
"சார்.. பாங்க்ல கேமரா இருக்கிறதையே மறந்துட்டோம்.   நேற்றுதான் நினைவு வந்து ஆட்களை வெச்சு பழைய பதிவுகளை பார்த்தோம்.  நீங்களும் பாருங்க.."

கம்ப்யூட்டர் ஆன் பண்ணி காமெராவை ஓட விட்டார்கள்.

கேஷியர் இவரை அழைக்கிறார்....வலது புற டிராவில் இருந்து முதலில் ஏழு ரூபாயை கொடுக்கிறார்....  பிறகு மூணு ஐநூறு ரூபாயை எடுக்கிறார் ... இவர் ஏதோ சொல்கிறார்....உடனே எடுத்த பணத்தை அதிலேயே போட்டுவிட்டு  இடது புற டிராவில் இருந்து இரண்டு நூறு ரூபாய் கட்டுகளை எடுத்து ஒரு கட்டிலிருந்து பத்து நூறு ரூபாயை எடுத்துவிட்டு செக்குக்கு பின்னாடி டினாமிநேசன்
 எழுதி விட்டு அப்படியே கொடுக்கிறார்....அதை எந்தவித கூச்சமும் இல்லாமல் வாங்கி செல்கிறார் நமது பார்ட்டி.

நான் பார்த்ததும் அதிர்ந்தேன்.  என்ன மனுசனையா இவர்...என்று திட்டியபடி அவரை போனில் அழைத்தேன்.   உடனே பேங்குக்கு வந்தார்.

வந்தவர் "என்ன சும்மா சும்மா கூப்பிட்டு தொந்தரவு பண்றீங்க... நான் மேயரைக் கூப்பிடறேன்.  இல்லாட்டி போலிசுக்கு பொய் பேங்க் மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன்... "-என்று தாம் தூம் என்று குதித்தார்.

அவரை அமைதி பண்ணி வீடியோவை போட்டு காட்டினோம்.

வீடியோவை பார்த்துவிட்டு ஆள் பேயடித்தது போல உட்கார்ந்துவிட்டார்.  அப்போதும்கூட சமாளிக்கப் பார்த்தார்.

நான் அவரது மனைவியை அழைத்து வீடியோவை போட்டுக் காட்டச் சொன்னேன்.  உடனே ஆள் சரண்டர் ஆனார்.

அடுத்த ஒருமணி நேரத்தில் பணத்தை கொண்டு வந்து கட்டியதாக பாங்கில் சொன்னார்கள்.

பணம் என்னென்ன மாயங்களை செய்கிறது...எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று பாருங்கள்.