நேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.
பின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது. இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.
முதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார். கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார். அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது. அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.
ஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது. ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது. எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது. பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது. ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது. நடந்ததைக் கேட்ட பசு "பால் தருகிறேன். ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது. நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா" என்கிறது.
எலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது. புற்கள் எல்லாம் வறண்டு கிடக்கிறது. இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது. அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் "நான் புல் தருகிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது. எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது. அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது. ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி "தண்ணீர் தருகிறேன். ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன். ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்"- என்றது. எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது. அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது. கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது. (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே). கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது. பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது. ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது. கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.
அடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார். அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.
"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம். காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார். அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன். தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது. (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார். இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார். அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள். இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது. நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை. இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள். நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்"
இப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.
அடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார். இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர். எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும். மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார். மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார். நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார். எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார். நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.
தமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார். ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார். இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது.
சிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.
இதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும். நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று. நீங்கள்?
நல்ல பதிவு...நெக்ஸ்ட் டைம் இப்டி ப்ரோக்ராம் எதனாச்சும் இருந்தா சொல்லுங்க பாஸ்...
ReplyDeletearumaiyana pathivu...
ReplyDelete