PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, November 29, 2013

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-4. கறுப்புப் பக்கங்கள்.

மீபத்தில் ஆரம்பித்த புதுயுகம் தொலைக்காட்சி விஜய் டிவியை மிஞ்சிவிடும் போலிருக்கிறது.  அவ்வப்போது சுவராஸ்யம் நிறைந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.  உதாரணம் என்ன இங்கு இல்லை,  மனம் திரும்புதே, கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு, திரைக்கு அப்பால்,  குறு சிஷ்யன், நடிகை சங்கீதா நடத்தும் நட்சத்திர ஜன்னல் போன்ற நிகழ்ச்சிகள்.

நடிகை சங்கீதா எடுக்கும் பேட்டிகள் இயல்பாக இருந்தது. சென்ற வாரம் பாலாவுடன் எடுத்த பேட்டியில் சங்கீதா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை வார்த்தையில் தட்டையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார் பாலா.  இவரும் எவ்வளவோ முயன்றும் அவரை விஸ்தாரமாக பேச வைக்க முடியவில்லை.  ஒரு கட்டத்தில் சங்கீதாவே கேட்டுவிட்டார்.  "இப்படியே தட்டையா பதில் சொல்லிட்டு உம்ம்னு முகத்தை வெச்சிட்டிருந்தா  நான் எப்படித்தான் உங்களை இன்டர்வ்யு பண்றது?".  அதன் பிறகு கொஞ்சம் இளகி வந்தார் பாலா.

அடுத்து  நம்ம விருமாண்டி அபிராமி நடத்தும் விவாத நிகழ்ச்சிகள் கோபிநாத் அளவுக்கு சூடாக இல்லையெனினும் பரவாயில்லைரகம்தான்.  அதுவும் பாவாடை ஜாக்கெட்டில் இந்த வாரம் வந்து கருப்பா சிவப்பா என்று விவாதம் நடத்தினார்.  சும்மா சொல்லக் கூடாது.. சும்மா நச்சென்று இருந்தது.  நான் நிகழ்ச்சியை சொல்லவில்லை.

நான் சொல்ல வந்த விஷயம்.. அங்கு நடந்த விவாதத்தை பற்றி..பெண்களுக்கு பிடித்தது கருப்பா சிவப்பா என்பதே விவாதம்.  ஒரு கருப்பான பெண், "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல விஜய் சேதுபதி பக்கத்துல நிக்கிற ஒரு சிவப்பான பொண்ணைப் பாத்துத்தான்... பப்பா.. யாருடா இவ இப்படி இருக்கிறா என்று கேட்பார்.  சிவப்பு அப்படியான கலர்" -என்றார்.

உடனே எதிர்புறத்திலிருந்து ஒரு சிவப்பான ஆசாமி, "அந்த படத்துல அவர் ஒரு அரை லூசா இருப்பாரு.  அதனாலதான்  அவர் அப்படி சொல்லி இருக்காரு.."-என்று ஒரு கவுண்டர் கொடுத்தார்.

உடனே அந்த கருப்பு பெண் எழுந்து, "அவர் அரை லூஸ் நிலையிலேயே அப்படி சொல்லி இருந்தார்னா,  நல்லா இருக்கும்போது எப்படி சொல்லி இருப்பாருன்னு பாத்துக்கோங்க.." என்று அதிரடியாக எதிரடி கொடுத்தார். கருப்பு பெண்களுக்கே கொஞ்சம் அறிவு அதிகம்தானோ..?

அதை விடுங்கள்.. எங்கள் வீட்டில் நடந்த கதையை கேளுங்கள்.  எங்கள் வீட்டில் எங்களது சின்ன மகனுக்கு தோசை சுட்டு போடுவதென்பது ஒரு பெரிய மகாகலை.  ஏனென்றால் தோசை கொஞ்சம் கூட கருகாமல் இருக்கவேண்டும் என்பான்.  இல்லாவிட்டால் அதகளம்தான்.  கருப்பான பக்கங்களை பிய்த்து அப்படியே ஓரமாக வைத்துவிடுவான்.

இவனுக்கு தோசை சுட்டு போடறதுக்கு பதிலா சார்க்கஸ்ல பார் விளையாட போகலாம் என தங்கமணி நொந்து கொள்வாள்.  கொஞ்சம் கொஞ்சமாக தோசையை வெந்தும் வேகாமல் எடுத்து போட பழகிவிட்டாள்.  அப்பவும் தோசை கொஞ்சம் கூட கருப்பாக அல்ல சிவந்தும் கூட இருக்கக்கூடாது.  சிவந்த பக்கங்களை கிள்ளி ஓரமாக வைத்துவிடுவான் நம்ம கில்லி.

ஒருநாள் அவனை அழைத்து பக்கத்தில் உட்காரவைத்து அறிவுரை சொன்னேன்.  அதை அப்படியே சொன்னால்தான் இன்றைய இளைய சமுதாயம்  ஏற்றுக்கொள்ள மாட்டார்களே.  ஆகையால் கதையாக சொன்னேன்.

"அந்தக்காலத்துல நம்ம முதல் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஒருமுறை இங்கிலாந்து போயிருந்தார்.  அப்போ ஒரு கூட்டத்துல இவருக்கு முன்னாடி பேசிய ஒரு ஆங்கிலேயர் வெள்ளை நிறத்தைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசினார்.  அவர்களே அறிவு மிக்கவர் என்பது மாதிரி பேசி அமர்ந்து விட்டார். அடுத்து வந்த நம்ம ஜனாதிபதி, " எங்களூரில் தோசை என்று ஒரு பதார்த்தம் செய்வார்கள். அதை வெள்ளையாக எடுத்தால் வேகாதது மாதிரி இருக்கும்.  நன்றாக வேக வைத்து எடுத்தால் கொஞ்சம் சிவந்து இருக்கும்.  ஆகையால் வெந்தும் வேகாததுகள்தான் இந்த வெள்ளைக்காரர்கள்" என்று அந்த மேடையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்."

பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மகனிடம்  இதிலிருந்து என்ன தெரிகிறது? என்று கேட்டேன்.
உங்களுக்கு நல்லா கதை சொல்ல தெரிகிறது என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டு உடனே அகன்றான்.

இப்போது எங்கள் வீட்டில் ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து வருகிறோம். அதற்கு முதலில் பால் ஊற்றி வந்தோம். கொஞ்ச நாளில் பால் கசந்துவிட்டது. பிறகு இட்லி கொடுத்தோம். சமர்த்தாக சாப்பிட்டது.  கொஞ்சநாளில் அதுவும் கசந்தது.  பிறகு தயிர் சாதம் கொடுத்து வந்தோம்.  அதுவும் ஒரு நாளில் கசந்தது.  பெடிகரி வாங்கி தயிர்சாதத்தில் கலந்து வைத்தால் அன்னப்பறவையைப் போல  பெடிகரியைமட்டும்  தின்றுவிட்டு தயிர்சாதத்தை அப்படியே வைத்தது.  சரி என்று தங்கமணி ஒரு நாள் சின்சியராய் இரண்டு தோசைகள் வார்த்து அதனுடைய தட்டில் பிய்த்து போட்டுவிட்டு வந்தாள்.  கொஞ்ச நேரம் கழித்து தோசையை சாப்பிட்டுவிட்டதா என்று போய் பார்த்தால்... தோசையின் கருப்புப்பக்கம் கொண்ட ஒரு துண்டை மட்டும் சாப்பிடாமல் வைத்திருந்தது.  நான் எனது சின்ன மகனைப் பார்த்தேன்..

அவன் "ஹே ஹே ஹே .." என்று சிரித்துக்கொண்டிருந்தான்.

அதற்கு அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா?  எனக்குப் புரிந்தது...இப்போ ஜனாதிபதி  ராதாகிருஷ்ணன் கதையை நாயிடம் சொல்லு பார்க்கலாம் என்பதே அது.



 

6 comments :

  1. சிவந்த பக்கங்களை கிள்ளி ஓரமாக வைத்துவிடுவான் நம்ம கில்லி.

    ரசிக்கவைத்த பகிர்வுகள்..!

    ReplyDelete
  2. தொழில் நேரம் இலக்கிய ஆர்வத்தை தின்றுவிட்டதால் அதிலிருந்து மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்

    முற்றிலும் உண்மையும் கூட.

    ReplyDelete
  3. நல்லது... உண்மை..........!

    உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
  4. நல்லாருக்குண்ணா!

    ReplyDelete
  5. ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் தத்துவ மேதை !அவரே உங்கள் தத்துவத்தால் நொந்து போவார் போலிருக்கே !வெல்டன்!

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......