ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உண்டியல் இருக்கும். அதில் சிறுகச் சிறுகச் சேமித்து திருப்பதிக்கோ, பழனிக்கோ, வேளாங்கன்னிக்கோ சென்று வருவார்கள். ஒவ்வொரு உண்டியலிலும் சுவராஸ்யம் குன்றாத ஒரு கதை இருக்கும்.
அப்படியான கதைதான் இதுவும்.
அபு(சலீம் குமார்)- தள்ளாத வயதிலும் அத்தர் விற்று பிழைக்கும் உண்மையான முஸ்லிம். இவரது இன்ப துன்பங்களில் பங்கேற்கும் இவரது மனைவி ஆயிஷு (ஜரினா வஹாப்). இவரது மகன் இவர்களை அம்போ என்று விட்டுவிட்டு அரேபியாவில் வசிக்கிறான்.
இவர்களின் வீடு ஒரு கவிதை. அழகிய பசுமை நிறைந்த வீடு. ருசியான பழங்களைத் தரும் பலா மரம். பசுவும் கன்றும், நாயும் சில கோழிகளும் விளையாடும் அங்கே. பக்கத்துக்கு வீட்டு எல்லைத் தகறாரோடு விளங்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரர். வேற்று மதமானாலும் நன்றாகப் பழகும் இந்து வாத்தியார்(நெடுமுடி வேணு).
இவர்களின் ஒரே வாழ்க்கை லட்சியம் ஹஜ் யாத்திரை செல்லவேண்டும் என்பதே. அதற்காக ஒரு பெரிய உண்டியலில் காசு சேர்த்து வைத்திருக்கிறார்கள். அந்த ஊர் பெரியவர் அடிக்கடி ஹஜ் செல்லக்கூடியவர். அவரின் அறிவுறுத்தலின்படி அக்பர் ட்ராவல்ஸ் மூலம் ஹஜ் பயணம் செல்ல முடிவெடுக்கிறார். அவர்கள் முதலில் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும் எனவும் அதற்கான வழிகளை சொல்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஒருநாள் அபு வீட்டுக்கு வரும்போது ஆயிஷு அழுதுகொண்டு நிற்கிறாள். போலிஸ் வந்து விசாரித்துப் போனதாகவும் வந்தால் உடனே ஸ்டேசனுக்கு வரச்சொல்லி இருப்பதாகவும் சொல்கிறாள். என்னவோ ஏதோவென்று பயந்து போன அபு தனது வாத்தியார் நண்பரை அழைத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு போகிறார். அவர்கள் இவரைப் பற்றி சீரியசாக விசாரித்துவிட்டு இது பாஸ்போர்ட்டுக்கான விசாரணைதான் என்று சொல்கிறார்கள்.
மகிழ்ந்துபோன அபு பாஸ்போர்ட் வருகைக்காக காத்திருக்கிறார். இன்னொரு நண்பர் போலீசுக்கு லஞ்சம கொடுத்தால்தான் சீக்கிரம் வரும் என்று சொல்ல, அந்த போலீஸ்காரரை அவருடைய வீட்டுக்கருகில் பார்த்து வலியப் போய் லஞ்சம கொடுக்கிறார். அடுத்த சில நாட்களில் போஸ்ட் ஆபீஸ் சென்று நெடுநேரம் காத்திருந்து பாஸ்போர்ட் வாங்கி வருகிறார்கள். இரவினில் அந்த பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் அவரவர் போட்டோக்களைப் பார்த்து பரிகாசம் செய்து கொள்கிறார்கள்.
சந்தோசம்-வெட்கம் |
அடுத்து ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். உண்டியலை உடைத்து பணம் எண்ணப் படுகின்றன. அதை அட்வான்சாக தந்துவிட்டு மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். தனது மகனைப் போல வளர்த்த பலா மரத்தை மர வியாபாரி ஜான்சனிடம் (கலாபவன் மணி) நல்ல விலைக்கு பேசுகிறார்கள். அது போக பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பசுமாட்டையும் விற்கிறார்கள். தன்னிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று காசாக்குகிறார்கள்.
சோகம் |
கடனோடு ஹஜ் செல்லாக்கூடாது என்பதற்காக தனது சிறு சிறு கடன்களை அடைக்கிறார்கள். தான் தவறி செய்து விட்ட தவறுகளுக்காக அதற்குரியவர்களிடம் சென்று மன்னிப்பு கோருகிறார்கள். ஒரு கடனாளியாகவோ குற்றங்கள் இழைத்தவராகவோ ஹஜ் பயணம் செல்லக்கூடாது என்ற முஸ்லிம் கோட்பாடுகளுக்கு ஏற்ப எல்லா கடமைகளையும் முடிக்கிறார்கள்.
மரவியாபாரியிடம் சென்று பணம் வாங்கும்போது மரம் வெட்டப் பட்டதாகவும் அது ஒரு பொல்லையாகப் (மரத்தின் நடுவில் நெட்டுவாக்கில் ஓட்டை விழுந்த மரம்- இது விறகுக்காக மட்டுமே பயன்படும்) போனதென கூறுகிறான். ஆனாலும் கூட கிருஸ்துவனான மர வியாபாரி ஒரு முஸ்லிமின் பயணம் தடைப்படக் கூடாது என்பதற்காக முழு பணத்தையும் தர முன்வருகிறான்.
ஆனால் முஸ்லிம் கோட்பாடுகளின்படி ஒருவரை ஏமாற்றிய காசில் ஹஜ் செல்லாக்கூடாது என்று சொல்லி மறுத்துவிட்டு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருகிறார். அங்கே மரம் வீழ்ந்து கிடக்கிறது. தனது மகனைப் போல நினைத்து வளர்த்த மரம் அவனைப் போலவே அவருக்கு உதவாமல் போய்விட்டதை எண்ணி தம்பதியர் இருவரும் உருகி உருகி அழுகிறார்கள்.
இதைக் கேள்விப்பட்ட இந்து வாத்தியார் நண்பர் பணம் எடுத்துக்கொண்டு அபுவின் வீட்டுக்கு வருகிறார். தன்னால் முடிந்த ஒரு சிறிய உதவி என்று பணம் கொடுக்க அதை வாங்க மறுக்கிறார். முஸ்லிம் கோட்பாடுகளின்படி ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரிடம் இருந்து எந்த வித உதவிகளும் பெற்று ஹஜ் செல்லக் கூடாது என்கிறார்.
ட்ராவல்ஸ் அதிபர் (முகேஷ்) தான் பணம் கொடுத்து உதவுவதாக சொல்கிறார். அப்படி கடன் வாங்கி ஒரு ஹஜ் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்கிறார். எனது பெற்றோர் ஹஜ் பயணம் செல்ல ஆசைப் பட்டபோது என்னிடம் பணமில்லை. இப்போது பணம் இருக்கிறது ஆனால் அவர்கள் இல்லை. உங்களை எனது பெற்றோராக நினைத்து அந்த உதவியை செய்வதாக முகேஷ் சொல்கிறார். அப்படி செல்கிற பயணத்தின் புண்ணியம் உனது பெற்றோர்களுக்கே போய்ச சேரும் என்று சொல்லி அதையும் மறுத்து விடுகிறார்.
அப்போது அவர் காட்டுகிற எக்ஸ்ப்ரசன் ..'நடிகன்டா' என்று சொல்ல வைக்கிறது.
பிறகென்ன அவர் ஹஜ் போனாரா இல்லையா.....படம் பாருங்கள் தெரியும்.
படத்தில் எல்லோரைம் நல்லவராக காட்டி இருப்பது இதன் சிறப்பு.
படத்தின் கதா நாயகன் சலீம் குமார் மலையாள படவுலகின் காமெடி ஆர்டிஸ்ட். அவருடைய வயதான தோற்றமும் அதற்கேற்ப தளர்ந்த நடையும் நடிப்பு அருமை. பேசும் கண்கள், வறுமை கண்ட ஒடுக்கு விழுந்த முகம், வெளிறிப்போன தாடி (மேக்கப் மேனின்(பட்டணம் ரஷீத்) சொந்தக் காசில் மும்பையில் இருந்து தருவிக்கப் பட்டவை) மூப்பு கண்ட வசன உச்சரிப்பு என்று அனைத்து விதத்திலும் சலீம் குமார் தனது பங்கை நிலை நாட்டியிருக்கிறார்.
அவரது மனைவியாக வரும் ஜரீனா அருமையாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். பஸ்சில் போகும்போது வாந்தி வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொள்வதாகட்டும், போலீஸ் வந்து மிரட்டியவுடன் பயந்து போவதாகட்டும், பாஸ்போர்ட் போட்டோ பார்த்து வெட்கப்படுவதாகட்டும் என ஜமாய்க்கிறார். ஒரு உண்மையான முஸ்லிம் பெண்மணியாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் மது அம்பாட் சொல்லவே வேண்டியதில்லை. படத்தின் ஆரம்ப இருபது நிமிடங்கள் ஒவ்வொரு ஷாட்டும் கண்களில் இன்னும் நிற்கிறது. டிஜிட்டலில் புகுந்து விளையாடி இருக்கிறார். உஸ்தாத் காட்டும்போது காட்டபடுகின்ற ஒற்றை மரமும் சுற்றி இருக்கும் புல்வெளியும் நம்மை அடித்து போடுகிறது. அவர் இல்லாதபோது அவரிடம் அனுமதி வாங்குகிற காட்சியில் புல்வெளி தலை அசைத்து விடை கொடுக்கிறதே ....அருமை. அருமை.
லாங் ஷாட் காட்சிகள் அப்படியே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.
சவுண்ட் எபக்ட்..சந்தீப்... இதை சொல்லாமல் விட்டால் இந்த விமர்சனம் வேஸ்ட். பாங்கு ஒலிப்பது, மழைச் சத்தம், கோழிகளின் சத்தம், நகரத்தின் இரைச்சல், பஸ் செல்லும்போது இரைச்சல், யதார்த்தமாக இருக்கிறது.
இசை - ஐசக் தாமஸ்.... உருக்கும் பின்னணி இசை இவருக்கு அவார்ட் வாங்கி தந்திருக்கிறது. சில இடங்களில் மனசை பிசைய வைக்கிறது.
இயக்கம்-சலீம் அஹமது. இதுதான் இவரது முதல் படம். ஆனால் சொல்லவே முடியாது. ஒரு ட்ராவல்ஸ் கம்பனியில் வேலை செய்திருந்ததால் கேட்ட கதையை அனுபவ பூர்வமாக உணர்ந்து செய்திருக்கிறார். இவரே தயாரித்தும் இருக்கிறார். ஒரு காமெடியனை வைத்து நல்ல ரிஸ்க் எடுத்திருக்கிறார். படம் முடிக்க நிறைய சிரமப்பட்டிருக்கிறார். கதாநாயகன் சலீம் குமார் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவரே விநியோகமும் செய்திருக்கிறார். இந்த பட ரிலீஸின்பொது மம்மூட்டி தனது படமான '1993 பாம்பே' படத்தின் ரிலீசை இந்த படத்திற்காக தள்ளிப் போட்டாராம்.
மரத்தை வெட்டியதால்தான் பயணம் தடைபட்டது என்று எண்ணி ஒரு மரக்கன்றை நடுவதன் மூலம் காட்டும் காட்சி டைரக்டோரியல் டச்.
இந்தப் படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை என்று தேசிய விருதுகளை குவித்தது. மாநில அரசின் பல விருதுகளை வென்றெடுத்தது. ஆஸ்கார் விருதுக்கும் சென்றிருக்கிறது.
இன்னும் பல தளங்களுக்கு இந்தப் படம் கொண்டு செல்லும் என்பது உண்மை.
வெல்டன் சலீம் அண்ட் சலீம்.
யதார்த்த வாழ்வை படம் பிடிக்கும் போது அது நம் மனதில் நிலைத்து நின்று விடுகிறது. அற்புதமான மனிதர்கள். நல்ல சினிமா. அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. கண்டிப்பாக பார்க்கிறேன்.
ReplyDelete