PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, April 20, 2012

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்!

நண்பர் பரிசல் போல் அவியல் என்று கலவையாய் எழுத ஒரு தலைப்பு வேண்டும் என தோன்ற உடனே தோன்றியது இதுதான். தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். இந்த தலைப்பில் வேறு யாராவது எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது எழுதினால் தயவு செய்து கோர்ட்டுக்கேல்லாம் போகாமல் என்னிடம் ஒரு sms மூலம் தெரிவித்தால் போதும்.தொல்காப்பியர் மேல் சத்தியம்,உங்கள் தலைப்பை உங்களுக்கே திருப்பித் தந்துவிடுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவர் குடும்பத்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சென்ட்டர் மீடியானில் இருந்து திடீர் என்று குதித்த ஒருவரால் வண்டி, பொண்டாட்டி, பிள்ளையோடு தார் ரோட்டில் விழ நல்ல காயம். ஆஸ்பத்திரியில் அவரைச் சேர்த்துவிட்டு இலவசமாய் வண்டி எப்படி ஓட்டுவது என கொஞ்சம் அட்வைசும் பண்ணிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு நானும் என் தங்கமணியும் கிளம்பினோம்.

ஆஸ்பத்திரி முக்குத் தாண்டியதும் மண்ரோட்டில் இருந்து தார் ரோடு ஏறும்போது வண்டி டயருக்கும் தார் ரோட்டுக்கும் ஏதோ தகராறு போலிருக்கிறது. சட்டென்று கவிழ்த்துவிட்டது. நான் சுதாரித்துக்கொள்ள தங்கமணி அப்படியே பின்புறமாய் விழுந்து பின்தலையில் அடி. பெருத்த சேதம் எதுவும் இல்லையென்றாலும் பொண்டாட்டியின் பூரிக்கட்டையில் அடிவாங்கினால் தலையில் கோலிக்குண்டு அளவுக்கு வீங்கிக்கொள்ளுமே அது மாதிரி தலையில் சின்னக் கொம்பு முளைத்திருந்தது.

எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற எரிச்சலில்
"இதற்குத்தான் ஓவரா அட்வைஸ் பண்ணக்கூடதுங்க்றது" -என்று அர்ச்சனை விழுந்தது.

உடனே அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரி போக டாக்டர் இதற்காகத்தான் காத்திருந்தது போல சி.டி.ஸ்கேன் எடுக்கச் சொல்லிவிட்டார். நான் அவசியம் எடுக்கனுமா என்றேன். 'தலையில்லையா?பாத்துக்கறது பெட்டர். அசால்ட்டா இருக்காதீங்க' என்றார்.

உடனே ஸ்கேன் எடுக்கப்பட்டு சுடச்சுட தர அதை நான் பார்த்தபோது மூளையின் பல பரிமாணங்கள் அதில் தெரிந்தது. அட நம்ம தங்கமணிக்கு இவ்வளவு மூளையா என்று ஆச்சர்யப்பட்டேன். ஏதாவது பிரச்சினை இருக்கா என்று ஸ்கேன் எடுத்தவரிடம் கேட்டேன். அவர் ஒரு முறை ஸ்கேன் ரிப்போர்ட்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தங்கமணியை ஒரு தடவை பார்த்தார். மீண்டும் ஒருமுறை ரிபோர்ட்டைப் பார்த்துவிட்டு 'எதுவா இருந்தாலும் நாங்க ஒண்ணும் சொல்லக்கூடாது சார். நீங்க டாக்டரையே பாருங்க' என்று பில்டப் கொடுத்தார்.

எங்களுக்கு வயிற்றைக் கலக்கியது. தங்கமணி, "ஏங்க ஏதாவது ஆப்பரேசன் பண்ணச் சொல்லுவாங்களோ?" என்று கேட்டாள்.
"ஆமா உடனே கூட்டிட்டுப் போயி படுக்க வெச்சு சுத்தியலால் மண்டையை பிளந்து ஆப்பரேசன் செய்யப் போறாங்க" -என்றேன்.

தங்கமணிக்கு முகம் வெளுத்துவிட்டது. வாய் கந்தசஷ்டி கவசம் முணுமுணுத்தது.

சிறிது நேரத்தில் டாக்டரிடம் இருந்து அழைப்பு வர எங்களை உட்கார வைத்து ரிப்போர்ட்டைப் பார்த்தார். முதலில் சாதாரண கண்களில் பார்த்தார். பிறகு கண்ணாடி போட்டுகொண்டு பார்த்தார். திடுக்கிட்டார். பிறகு அருகில் சுவற்றில் இருந்த லைட்டில் மாட்டிப் பார்த்தார். பிறகு என்னை ஒரு முறை பார்த்தார், என் தங்கமணியை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தார்.

அவ்வளவுதான் எங்களுக்கு வேர்த்தது. தங்கமணியின் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

டாக்டர் தன கண்ணாடியை சரி செய்துகொண்டு, ஒருமுறை செருமிக்கொண்டு தங்கமணியை நேராகப் பார்த்து, "ஒண்ணுமில்லை" என்று ஒத்தை வார்த்தையாக சிரித்துக்கொண்டே சொன்னார். தங்கமணி நம்பாமல் "ஒண்ணுமில்லையா சார்" என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டாள்.

"ஒண்ணுமே இல்லம்மா. பயப்படாம போங்க"

அவரின் டைமிங் காமெடி நன்றாகத்தான் இருந்தது. நாம யாரு...விடுவோமா?

"என்ன சார் ஒண்ணுமே இல்லையா?"-என்றேன்.

அவர் சீரியஸாக, "டோன்ட் அப்ரைட்.. நத்திங் சீரியஸ்"-என்றார்.

நான் "என்ன சார் நான் கொஞ்சம் மூளையாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன்?" -என்றேன்.

அவர் 'ங்கே' என்று விழித்தபடி இருக்க, நாங்கள் பழி வாங்கிய சந்தோஷத்தில் வெளியே வந்தோம்.

பிறகு நேற்று எனக்காக பல் டாக்டரிடம் போயிருந்தேன். பற்கள் தேய்ந்து கடைவாய்ப் பல்லில் குழி விழுந்து முதலிலேயே கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து அடைத்திருந்தேன். அந்த சிமென்ட் பூச்சு இரண்டு வருடம் கழித்து விழுந்துவிட பல் மிகவும் கூசியது. சரி மீண்டும் சிமெண்ட் வைத்துவிடலாம் என்று நல்ல மேஸ்திரியை ஸாரி நல்ல டாக்டரைப் பார்க்கலாம் என்று வந்திருந்தேன். அங்கிருந்த பெண் அநியாயத்திற்கு சிடுசிடுவென இருந்தது. எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தது. தங்கமணி வேறு உங்க வேலையை இங்க காட்டிராதீங்க என்று முதலிலேயே வானிலை எச்சரிக்கை கொடுத்துவிட்டாள்.

டாக்டரைப் பார்த்த பிறகு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்தார். வேறொன்றுமில்லை பல் கூசாமலிருக்க பேஸ்ட், பிரஸ், மவுத்வாஸ்தான். பல் கூச்சம் போனபிறகு டிங்கரிங் பண்ணிக்கலாம் என்றார். பிறகு அந்தப் பெண் எங்களை தனியாக அழைத்துவந்து கம்ப்யூட்டரில் பல் விளக்குவது எப்படி என்று டெமோ காட்டினார்.

பிறகு 'உங்களுக்கு வேற ஏதாவது தொந்தரவு இருக்கா?" என்று கேட்டது அந்த சிடுசிடு.

தங்கமணி, 'ஒன்றுமில்லை' என்று சொல்ல நான் இடைமறித்து, "இந்தப் பொண்டாட்டிதான் பெரிய தொந்தரவா இருக்கு!"-என்றேன்.

சட்டென பல்ப் எரிந்தது அந்தப் பெண்ணின் முகத்தில். அது வரை அசிங்கமாக இருந்த அந்தப் பெண்ணின் முகம் அழகாகத் தெரிந்தது.

அருகில் தங்கமணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி இருந்தது. அந்தப் பக்கம் நான் திரும்பவே இல்லையே!!!!!

டிஸ்கி: இந்தப் பெயரில் (தே.மா.ப.சு) அவ்வப்போது உங்களை தொந்தரவு பண்ணிக்கொண்டே இருப்பேன்.

 

5 comments :

  1. நல்ல சுவையுடன் இருக்கு தே.மா.ப.சு.

    ReplyDelete
  2. இத வீட்ல படிக்கிறாங்களா? இல்லையா? உண்மைய சொல்லுங்க. இல்லன்னா எனக்கு வீடு பக்கம்தான், வந்து இங்க நாலு பிட்டு அங்க நாலு பிட்டுன்னு பிட்டு பிட்டா போட்டு உடறேன்....:-)

    ReplyDelete
  3. நன்றி @கோவை நேரம்.

    ReplyDelete
  4. @முரளிகுமார்

    வாங்க முரளி.. பிட்டு பிட்டா போடுங்க. நானும் வேட்டி வேட்டியாப் போடுறேன்.

    ReplyDelete
  5. எப்டி சார் இவ்ளோ காஷுவலா .. இத்தனை சீரியஸ் மேட்டரை .. ஜோக் பண்ணி எழுதி இருக்கீங்க?. மூளை ல ஒன்னும் இல்லைன்னு டாக்டர் சொன்னதும் ரொம்ப ஜாலியா யோசிக்க ஆரம்பிச்சுட்டிங்களோ??

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......