இந்த வருட திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படுகிற பத்து உலக சினிமாக்கள் ஒவ்வொன்றும் ஒரு முத்து என்றே சொல்லலாம். வருகிற சனியன்று திரையிடப்போகும் படம் INVICTUS. இந்தப்படத்தைப் பற்றிய விமர்சனம்தான் இது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
ஒரு விளையாட்டு ஒரு தேசத்தை என்ன செய்துவிடும். அது அரசியலில் என்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று கேள்வி கேட்பவர்களுக்கான பதில்தான் இந்தப்படம்.
படத்தின் முதல் காட்சி ஒரு ரக்பி பயிற்சியில் தொடங்குகிறது. ஒரு பக்கம் அந்த நாட்டின் வெள்ளை இன சிறுவர்கள் ரக்பி விளையாடிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் அந்த நாட்டின் ஏழை கருப்பின சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த வழியாக இருபத்தியேழு வருடங்கள் சிறையில் இருந்த நெல்சன் மண்டேலா விடுதலை ஆகி காரில் வருகிறார். கருப்பின சிறுவர்கள் உற்சாகமாக கத்த வெள்ளையின சிறுவன் தன் பயிற்சியாளரிடம் இது யாரென கேட்கிறான். அவர் சொன்ன பதில். ‘IT IS TERRORIST’. அதுமட்டுமல்ல இன்னும் கொஞ்ச காலத்தில் அந்த நாய்களின் கைகளில் இந்த தேசம் போகப்போகிறது என்கிறார்.
இந்த ஒற்றைக்காட்சியில் சொல்ல வந்ததை இயக்குனர் தெளிவாக சொல்லிவிடுகிறார். இந்தக் காட்சியே இந்தப் படம் எதை நோக்கிப் போகப்போகிறது என்பது தெளிவாக்குகிறது.
கொஞ்ச காலத்தில் தேர்தல் நடக்கிறது. அதில் நெல்சன் வெல்கிறார். வென்று அவர் தன் அலுவலகம் வருகிறபோது அவர் முன் நாட்டின் நிதி நிலை, குற்றச் செயல், என்று பல்வேறு பிரச்சினைகள் பூதாகரமாக நிற்கிறது. அலுவலகத்தில் வேலை செய்யும் வெள்ளை ஊழியர்கள் தங்கள் வேலையை ராஜினாமா செய்யக் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தருகிறார். தனது கருப்பின பாதுகாவலர்களோடு வெள்ளையர்களையும் வேலைக்கு எடுக்கிறார்.
அப்போது ஒரு ரக்பி மேட்ச் நடக்கிறது. சவுத் ஆப்பிரிக்காவுக்கும் இங்கிலாந்து அணிக்கும் போட்டி. சவுத் ஆப்பிரிக்க அணியில் ஒரே ஒருவரைத் தவிர எல்லோருமே வெள்ளையர்கள். ஆகையால் மக்கள் இங்கிலாந்து அணிக்கே ஆதரவாக கத்துகிறார்கள். அதில் நம்ம இந்திய அணி நியுசிலாந்திடம் அடி வாங்குவது போல இங்கிலாந்து அணியிடம் சவுத் ஆப்பிரிக்கா அடி வாங்குகிறது. இதனால் எல்லோருமே ச. ஆ. அணியின் மீது வெறுப்பாக இருக்கிறார்கள். அணியையே கலைத்துவிடலாம் என்று முடிவெடுக்கும்போது மண்டேலா வந்து அணியை கலைக்க வேண்டாம் என்று தடுத்து விடுகிறார்.
அடுத்த வருடம் நடக்கப் போகும் உலககோப்பை போட்டியில் இந்த சோதா அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என நெல்சன் திட்டமிடுகிறார். இதனாலேயே இந்த நிறப் பிரச்சினை தீரும் என நினைக்கிறார்.
அதற்காக அந்த அணியை பல விதங்களில் தயார்படுத்துகிறார். காப்டன் FRANCOIS –சந்திக்க விரும்புகிறார். போகும்போதே காப்டனிடம் ‘பாத்துப்பா கை குலுக்குவதுக்கு முன்னாடி விரலை எண்ணி வெச்சுக்கோ’ என்று சொல்லித்தான் அனுப்புகிறார்கள். இருவரும் சந்திக்கும் அந்த காட்சிதான் இந்தப் படத்தின் ஆன்மா என்று சொல்வேன். தான் சிறையில் இருந்தபோது கஷ்டம் வரும்போதெல்லாம் தான் படித்த இன்விக்டஸ் எனும் கவிதையே தனக்கு உந்து சக்தியாக இருந்தது என்கிறார். இதனால் அவநம்பிக்கையாக இருந்த காப்டன் ஒரு புதிய ஊக்கம் பெறுகிறார்.
அதையே தனது அணி வீரர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடுகிறார். உலகக்கோப்பை நெருங்குகிறது. மெது மெதுவாக மாற்றங்கள் தெரிகிறது. முதலில் தனது பாதுகாவலர்கள் ஈகோ மறைந்து வேலை செய்கிறார்கள்.
அணி வீரர்கள் மண்டேலா சிறை இருந்த செல்லை பார்க்கிறார்கள். அது மிகச் சிறிய அறை. இரு கை கை நீட்டும் அளவுக்கே இருக்கிறது. இவ்வளவு சிறிய அறையில் தன்னை சித்திரவதை செய்த வெள்ளையர்களை மன்னித்து கருப்பர்களோடு ஒன்றிணைக்க பாடுபடும் மண்டேலாவின் மனசு அங்கே காப்டனுக்கு புரிகிறது.
அதன் பிறகு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பச்சையும் தங்க நிறமும் அணிந்த ஆபிரிக்காவின் ஸ்ப்ரிங் காக் அணி வென்றார்களா, அதனால் நெல்சன் மண்டேலா நினைத்த மாற்றம் நிகழ்ந்ததா என்பதை நாளை திருப்பூர் புத்தகத் திருவிழாவின் வெண் திரையில் காணவும்.
நண்பர்களே இது தவறவிடக்கூடாத படம். பலவித உணர்ச்சிகளையும் தரும்.
மண்டேலாவாக நடித்திருக்கும் மார்கன் நடிப்பில் அவருடைய நேர் சிந்தனைச் சித்தாந்தம் நம்மிடமும் கொஞ்சமாவது உருவாகும் என்பது உறுதி.
இயக்கம் கிளின்ட் ஈஸ்ட் உட் என்கிற பழம்பெரும் நடிகன்.
இறுதிப் போட்டி நடக்கும்போது ஒரு விமானம் அரங்கத்தின் மேல் பறக்கும். நாம் குண்டு போடத்தான் வருகிறதோ என்று பதபதைக்க அதன் இறக்கைகள் குட் லக் என்று வாழ்த்துச் செய்தியை காட்டிப்போகும் காட்சியும், போலீஸ் வாகனத்தில் போலீசோடு வர்ணனை கேட்கும் குப்பை பொறுக்கும் சிறுவன் காட்சியும் இயக்கத்துக்கு உதாரணம் சொல்லும்.
ஒரு விளையாட்டு, ஒரு வெற்றி, ஒரு நாட்டின் அத்தனை வெறுப்புகளையும் கழுவி விடும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம்.
ஒரு கவிதை, தோற்றுப்போய் இருக்கும் மனதுக்கு ஆறுதல் தருவதோடு வெற்றியும் தேடித் தரும் என்பதை நிரூபிக்கும் படம். இந்த படத்தை இந்த புத்தகத் திருவிழாவில் காண்பிக்கப் படுவது இந்த வகையில் மிகவும் பொருத்தமாகிறது.
I AM MASTER OF MY FATE.
I AM CAPTAIN OF MY SOUL.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
No comments :
Post a Comment
குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......