PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Wednesday, February 5, 2014

அம்பாரம் எனுமொரு நினைவோடை.


ம்பாரம் புத்தகம் லெனின் எனக்கு தந்த போது ஒரு குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தேன்.  இந்த புத்தகத்தை இதுவரை தமிழில் எதுவுமே படித்திராத எட்டாவது படிக்கும் எனது சின்ன மகன் ஒரே மூச்சில் படித்து விட்டு இரண்டு நாளாக இதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறான்.  நானும் ஒரே மூச்சில் மீண்டுமொருமுறை படித்து விட்டேன்.



முதலிலேயே படித்தவைகள்தான் எனினும் ஒட்டு மொத்தமாக படிக்கும்போது கிடைத்த அனுபவம் இன்னும் வித்தியாசமாக இருந்தது.

ஒவ்வொரு கட்டுரையும் வாழ்க்கைப் பதிவுகள் என்பதால் அதில் நாமும் எதாவொரு இடத்தில் காணக் கிடைப்பதென்பது இதில் இருக்கும் சுவராஸ்யம்.  இது லெனின் என்ற ஒற்றை மனிதர் வாழ்க்கை மட்டுமல்ல. படிக்கும் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையுமே இதில் கொட்டிக் கிடக்கிறது.

தனது செல்ல மகள்மேல் அன்பு வைக்காத தந்தை உண்டோ.  அந்த அன்பு மகளிடம் முத்தம் வாங்கும்  தங்கத் தருணங்கள் அமையப் பெறாதவர்கள் உண்டுதானா?

செவளைகளும் மயிலைகளும் தொலைந்துபோன உலகில் நீங்கள் எழுதியிருக்கும் காளைப் பதிவுகள் கல்வெட்டுக்கள்.  ஆறறிவு மக்களிடத்தில் அன்பு மரித்தாலும் ஐந்தறிவு ஜீவன்களிடத்தில் அது  உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை  சொன்ன பதிவு அருமை.  இந்த மாதிரியே எழுதுவீர்களேயானால் நாங்களும் மயிலைக் காலை மாதிரி உங்களையே சுற்றி வருவோம்.

ஒவ்வொரு ரோஜாப்பூவிலும் உங்கள் அம்மாவின் முகம் இருப்பதை உங்கள் பதிவு படித்த பிறகு அறியமுடிகிறது.  ரோஜா சிவந்தது இதனால்தானா?.  நாகலட்சுமி பாட்டி ரோஜாசெடிக்கு இன்னும் கூடுதல் உயிர் வந்திருக்கும்.  இன்னும் பல ரோஜாக்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

குளம் வெட்டிய கதை எங்கள் கண்களில் குளம் கட்ட வைத்தது.   ஒவ்வொரு விவசாயியும் தன்னிடத்தில் ஆயிரம் கதை கொண்டிருப்பான்.  காது கொடுத்து கேட்டால் போதும்.... கண்ணீர் பெருக கதை சொல்வான்.  நம்மையும் கண்ணீர் சிந்த வைத்துவிடுவான். குளக்கரையில் உறங்கும் அம்மா இருக்கும் திசை பார்த்து ஒரு கும்பிடு வைக்கிறோம்.

வெங்காயம் விளைவிக்கும் விவசாயி தன் அத்தனை கண்ணீரையும் அந்த வெங்காயத்தில் புதைத்து வைப்பதால்தானோ அதனை உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வருகிறது என்று நான் நினைப்பதுண்டு.
உங்கள் புத்தகம் படித்தபின் அது உறுதியானது.

தீக்கதிர் நாளிதழுக்கும் உங்கள் தாத்தாவுக்கும் இருக்கும் உறவும் அவரின் சவமேட்டில் நீங்கள் வாசித்த அஞ்சலிக் கட்டுரையும் அதை அவர் எப்போதும் கேட்பதுபோல் உம் கொட்டாமல் கேட்டது என்ற வரியில் நாங்கள் நெகிழ்ந்து போனோம்.

தயிர் விற்ற தாத்தாவும், லெனினும், மிர்னியும் கடைந்தெடுத்த வெண்ணையாய் இந்த புத்தகத்தை தந்திருக்கிறார்கள்.

அம்மாவின் இறப்பன்று கேட்ட பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாக தேடித் பார்த்தேன்... பாடல் இன்னும் அர்த்தம் கூடுகிறது. உங்களுக்கும் அம்மாவுக்குமான கடித உறவு உண்மையில் நிகில வைக்கிறது.   ஒவ்வொரு நாளின் அதிகாலை விடிவெள்ளி உங்கள் அம்மாதான் என்கிற ரகசியம் நாங்கள் பார்க்கும்போது எங்களுக்கும் தெரிந்தது.

சரளைக்காடு, செவளைக்களை, மயிலக்காலை, சோளக்காடு, குருவி விரட்டல், தயிர்க்காரி, கரும்புக்காடு, நெல் வயலுக்கு தாம்படித்தல், தோட்டத்து சாலை, கட்டை வண்டி என்று ஒரு பட்டிக்காட்டை ஊர் சுற்றி காட்டியிருகிரீர்கள்.. நன்றி லெனின்.   இந்த புத்தகத்திற்கு தலைப்பு என் தேர்வு என்பதில் ஒரு சின்ன சந்தோசம் மற்றும்  கர்வமும் பொங்குகிறது.

 

2 comments :

  1. என்னவொரு ரசனை... உடனே வாங்கிப் படிக்கத் தூண்டும் விமர்சனம்... உங்களின் பங்களிப்பிற்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. congrats aruna, about your soulful reviews..

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......