PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Monday, June 16, 2014

முண்டாசுப்பட்டி - மற்றும் ஒரு பரிமாணம்

முண்டாசுப்பட்டி படம் அதன் விளம்பரத்தால் பல விதங்களில் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டிவிட சனி இரவு படம் பார்த்துவிட்டேன்.  இந்தப் படத்தைப் பற்றி, படம் வருவதற்கு முன்னும்,  வந்த பின்னும் எல்லோரும் படத்தின்  முழுக்கதையையுமே இயக்குனர் ராம்குமாரை விட பிரமாதமாக திரைக்கதை எழுதிவிட்டதால் கதையைச் சொல்லப்போவது இல்லை.

வெறும்  பதினைந்து  நிமிடமே ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை 2:30 மணி நேரமாக ஓடக்கூடிய திரைப்படமாக எடுப்பதற்கென ஒரு தனிப்பட்ட திறமை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.   அந்த வகையில் குறும்படத்தில் இருந்த கதையை வெகு அழகாக வேறொரு பரிமாணத்தில் கொடுத்த இயக்குனர் ராம்குமாருக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனம் திறந்த பாராட்டுக்கள்.

ஒரு கிராமத்து கதைக்குள் வெள்ளைக்காரன் வந்து போவதையும்,  விண்கல் ஒன்று விழுந்து அது சாமி ஆனதையும் அந்தக் கல்லை திருட ஒரு பூனை சூப் குடிக்கும் ஜமீன்தார் முயல்வதையும்,  அந்தக் கல் திருட்டு கதாநாயகனுக்கு அவன் காதலிக்கும் பெண்ணின் கல்யாணத்தை நிறுத்த  ஒரு பொருத்தமான இடத்தில் உதவியதையும் கற்பனை செய்த குழுவினரை எப்படி பாராட்டாமல் இருக்கமுடியும்.    இதுவெல்லாம் சும்மா காமா சோமாவென்று சொல்லாமல் சரியான டீடைலிங்குடன்  சொல்லி இருப்பதில்தான் இங்கு இயக்குனர் தனித்து தெரிகிறார்.  அது என்ன டீடைலிங் என்பதை விரிவாக பார்ப்போம்.

ஒரு  பாத்திரத்தை படைக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் வடிவமைப்பு கதைக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பது முக்கியம். ஆண்மை விருத்திக்காக அடிக்கடி பூனை சூப் குடிக்கும் ஜமீன்தார், கதாநாயகன் போட்டோ  பிடிக்கப் போகும் போது அவனுக்கும் வழங்கப் படுகிறது.  இந்த பழக்கமே இறுதிக் காட்சியில் காணாமல் போன வானமுனி சிலை எங்கே இருக்கிறது என்பதற்கான க்ளுவாகிறது.  அதுமட்டுமில்லாமல் தன் இனத்தை அழித்தவனை பழிவாங்கவே பூனைகள் எல்லாம் சேர்ந்து கிளைமாக்சில் ஜமீந்தாரை பிராண்டி எடுக்கிறது.   இது ஒரு சிறந்த கற்பனை.

அதே மாதிரி சுடுகாட்டில் தங்கி இருக்கும் முற்போக்குவாதம் பேசும் தலித் இன கதாபாத்திரமும் அதன் வடிவமைப்பும்.  கதையின் போக்கில் கதாநாயகனுக்கு அந்த பாத்திரம் நன்கு உதவுகிறது. ஏறக்குறைய பாக்கியராஜின்  ஒரு கை ஓசையில் வருகிற சங்கிலி கதாபாத்திரம்தான் இது.ஆனால் இந்தக் கதாபாத்திரத்தை அப்படியே அம்போவென்று விட்டதுதான் ஏனென்று தெரியவில்லை.

 ஓடும்போது மட்டுமல்ல நிற்கும்போதே பெட்ரோல் குடிக்கும்,  எப்போதுமே மெதுவாகச் செல்லும் புல்லட் பைக் ஒரு பாத்திரமாகவே உலவுகிறது.  அதுவே இடைவேளை போடுவதற்கும், சுபம் போடுவதற்கும் அற்புதமாக உதவுகிறது.   அந்த வாகனத்தை கொசு மருந்து அடிப்பது போல புகையை கக்கிச் செல்லவும்,  சின்னப் பையன்கள் கூட ஓட்டிப் பழகவும்,  டயரைக் கழட்டி விளையாடவும் விட்டு அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல பிணத்துக்கு டூப்பாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் பாத்திரத்தை செதுக்கியதும் நன்றாகவே வந்துள்ளது.  சினிமாவில் நடிக்கும் ஆசையோடு வருகிறவரை பிணம் வேஷமிட்டு போட்டோ புடிக்கும் காட்சி வயிற்றை பதம் பார்க்கிறது.  தான் ஏமாந்துவிட்டோம் என்று உணர்ந்தபின் இவர்களை பழிவாங்க அந்த பாத்திரம் எடுக்கும் இன்னொரு அவதாரம்தான்  படத்தின் அச்சாணியாக மாறுகிறது.  அந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ராம்தாஸ் - அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.  அவரின் உடல்மொழியும், டயலாக் டெலிவரியும் அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் ஒருபடி மேலே ஏற்றுகிறது.  மிகச் சிறந்த ஒரு எதிர்காலம் அவருக்கு காத்திருக்கிறது.  வாழ்த்துக்கள் ராம்தாஸ்.

இதேபோல அழகுமணியாக வரும் கதாநாயகனின் துணைப் பாத்திரம்  அழகுற வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  எல்லாப் படத்தில் வருவது மாதிரியான பாத்திரமே என்றாலும் கத்தி கத்தி வசனம் பேசாமல் அடக்கமாக செய்த விதத்தில் வித்தியாசம் காட்டி நடித்த காளிக்கே பெருமை சேரும்.  கொங்கு மொழியை கையாண்ட விதத்தில் தனித்து தெரிகிறார்.    போகிற போக்கில் அவர் போடுகிற காமெடி வெடி நன்றாக எடுபடுகிறது.  (துருபிடிச்ச துப்பாக்கிக்கு தொட்ட எதற்கு?)

கிராமத்து பெண்ணாக வரும் கலைவாணி பாத்திரமும் அழகுதான்.  கொங்கு கிராமத்தின் பெண் என்பதால் அடுத்த ஆடவனோடு சுலபமாக பெசிவிடாத குணம் இதன் சிறப்பு.  இதைச் செய்திருக்கும் நந்திதா அழகாக பொருந்தி நடித்திருக்கிறார்.  ஆனால் இவருடைய போர்ஷனை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கி இவருடைய காதலை வலுவாகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.  கதையில் இது ஒரு பலவீனமாக அமைந்துவிட்டது நேரப்பற்றாக்குறையா  என்பது தெரியவில்லை.   தனக்கு பிடிக்கதவனோடு கல்யாணம் என்பதால் எப்போதும் சோகமுகமாவே காட்சியளிப்பதுதான் கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது.

மற்றபடி வருகிற கிராமத்துப் பெரிசும் அவரது மனைவிக்கு இருக்கிற கள்ளத்தொடர்பும் அதைச் சுற்றி நடக்கிற நகைச்சுவைகளும் ரசிக்கக் கூடியதே.  இந்த மாதிரி எத்தனை எத்தனை பாத்திரங்களை கிராமத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.  ஆனால் நடித்தவர்களின் முக பாவங்கள்தான் ரொம்பப் பாவமாக இருந்தது.

அதே போல சாமியார் பாத்திரம் நன்றாகவே இருந்தது.  பகலில் சாமியாராகவும் இரவில் திருடனாகவும் கடைசியில் பொட்டிக்கடைக்கரனின் மனைவியின் வலையில் வீழ்ந்த பலியாடாகவும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.  விஷ்ணுவிற்கும் சாமியாருக்கும் இடையில் ஓடும புரிதல்கள் சிரிப்புவெடி.

இன்னொரு விஷயத்தை குறிப்பிட்டே ஆகவேண்டும்.  இதுவரை எத்தனையோ பேர் கொங்கு வட்டாரவழக்கில் படம் எடுத்திருக்கின்றனர்.  அதில் எல்லாம் கொங்குமொழியை துல்லியமாக கையாண்டு இருக்கமாட்டார்கள்.  கோவை சரளா, சத்யராஜ், மணிவண்ணன், இன்னும் சிலருக்கு மட்டுமே மிகச் சரியாக கைவந்திருக்கும்.  ஏன் கமல் கூட ஐம்பது பர்சன்ட்தான் அருகில் வந்திருப்பார்.  படத்தில் நடித்த எல்லோருமே அழகான கொங்குமொழி பேசி நடித்திருக்கும் படம் இதுதான் என்பதை திட்டவட்டமாக கூறலாம்.  விஷ்ணு மட்டுமே இந்த மொழியை பேச திணறி இருப்பார்.  மற்றபடி எல்லோருமே சரியாக உச்சரித்திருப்பர்.  அதற்காக இயக்குனர் ராம்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஷேன் ரோல்டானின் பாடல்கள் பிரமாதம்.  ராசா மகராசா இன்னும் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.  பின்னணி இசையில் நிறைய புது முயற்சிகள் எடுத்திருக்கிறார்.  சில ஈடுபடுகின்றன.  சில எரிச்சலூட்டுகின்றன.  இருந்தபோதும் திரை இசையில், ரஜினி  கோடம்பாக்கம் கேட்டினை உதைத்துக்கொண்டு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தோன்றி இருப்பது தெரிகிறது.

பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு நன்றாகவே இருந்தது.  கிராமத்துக் கதையில் நன்றாக ஸ்கோர் பண்ணவேண்டியது,  பீரியட் கதை என்பதாலும், பட்ஜெட் காரணத்தாலும்  காமிராவை அதிகமாக வெளியே கொண்டுவராதது தெரிகிறது.  இருந்தாலும் கொடுத்த களத்தில் நின்று விளையாடும் முரட்டுக்காளையைப் போல நின்று விளையாடி இருக்கிறார்.

படத்தில் மைனஸ்சே இல்லையா?... நிறைய இருக்கிறது.  அது இல்லாமல் எடுக்கவும் முடியாது.  மெதுவாக நகரும் கதை,    அதிகமாக ஆக்சன் காமெடியாக இல்லாமல் டயலாக் காமெடியாக இருப்பது,  நீட்டி முழக்கும் இறுதி சேஸ் காட்சிகள்,  சில இடங்களின் லாஜிக்குகள் என்று இருந்தாலும் படம் சிரிக்க வைத்துவிடுவதால் எல்லாவற்றையும் மறந்துவிடுகிறோம்.

விஷ்ணுவின் நடிப்பு சுமாராக இருப்பது படத்தின் பலவீனம்.  நகைச்சுவை கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடல்மொழி சுத்தமாக வரவில்லை.  முகத்தில் எக்ஸ்ப்ரசன் என்ன விலை என்று கேட்கிறார்.

அதே போல படத்தின் ஏனைய துணை கதாபாத்திரங்களுக்கும் தேர்ந்த நடிகர்களை போட்டிருந்தால் படம் அடுத்த லெவலுக்கு கொண்டுபோயிருப்பார்கள்.  ஊர்த்தலைவர் பாத்திரத்துக்கு நாசரை நினைத்துப் பாருங்கள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.  அதேபோல இருக்கும் எல்லோருமே புதுமுகமாக இருப்பதால் முகத்தை  இறுக்கமாகவே வைத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்கள்.  அங்கே கொஞ்சம் சுதாரிச்சிருக்கலாம்.

மற்றபடி படம் அருமையாக இருக்கிறது.  இயக்குனர் ராம்குமாருக்கும் அவருக்கு துணையாக நின்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.  இவர்களின் அடுத்த படம் பார்க்க ஆவலாக உள்ளேன்.

 

No comments :

Post a Comment

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......