PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, June 27, 2014

KON TIKI (2012) - கடல் பயணங்களில்.


ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும்.  நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூபணம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.

ஒருநாள் இரவில்  எங்கள் வீட்டின் வாசலில் புரோட்டா சால்னா பாக்கேட்டோடு உடைத்து சிதறிக் கிடந்தது.   காலையில் எழுந்து பார்த்த போது வாசலே அசிங்கமாக இருந்தது.  இதை யார் போட்டிருப்பார் என்று எங்களுக்குள் விவாதம் நடந்தது.  எவனாவது தண்ணியைப் போட்டுட்டு தெரு வழியா நடந்து போகும்போது போட்டுவிட்டு போயிருக்கலாம் என்று நம் வீட்டு அறிவு சிகாமணிகள் சொன்னார்கள்.  ஆனால் எனக்கு அதில் சந்தேகம் இருந்தது.  சால்னா பாக்கெட் நன்றாக உடைந்திருக்கிறது.  அப்படியெனில் நன்றாக ஓங்கி வீசியிருக்கவேண்டும்.  சிதறிய திசை வாசலெங்கும் வட தெற்காக இருக்கிறது.  அப்படிப் பார்த்தால்  எங்கள் வீட்டின் எதிரில் இருக்கும் அபார்ட்மென்ட் வீட்டு மாடியில் இருந்துதான் வீசி இருக்கவேண்டும் என்றேன். இதை நான் சொன்னவுடன் எல்லோரும் நம்ப மறுத்தார்கள்.  பிறகு ஒரு சின்ன பாலிபேகில் தண்ணீர் ஊற்றி எடுத்துக்கொண்டு எதிர்வீட்டு மாடியில் ஏறி அங்கிருந்து வீசிக் காட்டினேன்.  நான் வீசியதும்,  சால்னா பாக்கெட்டும் ஒரே மாதிரி சிதறி இருந்தது.  ஆனால் எதிர் வீட்டு மாடியில் நான்கு குடித்தனம் இருக்கிறது.  அதில் யார் வீசியவர்  என்று இன்னும் புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  

இந்த ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு EFFORT போடவேண்டியிருக்கும்போது ஒரு தீவை கண்டுபிடிப்பது போன்ற வரலாறுகளை நிரூபிப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம்.  இதைத்தான் நார்வே படமான KON TIKI (2012) பலப்பல சுவராஸ்யங்களோடு சொல்கிறது.

 Thor Heyerdahl என்னும் ஒரு ETHNOGRAPHER -அதாவது கலாசார ஆராய்ச்சியாளர் ஒருவர் எழுதிய உண்மைக்கதையே இந்தப் படம்.  தோர் 1947-ல் தனது மனைவியோடு POLYNESIA தீவுக்கு ஒரு ADVENTURE பயணம் செல்கிறார்.

இந்த இடத்தில் POLYNESIA  தீவைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.  இந்தத் தீவு பசிபிக் கடலின் நடுவே உள்ளது.  தீவின் மேற்கே ஆசியாவும் கிழக்கே தென்அமெரிக்காவும் உள்ளது.  சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு இந்தத் தீவை ஆசியர்களே கண்டுபிடித்தார்கள் என்று வரலாற்றில் உள்ளது.  இப்போது தோர்-க்கு  அங்கே கிடைக்கும் சில தரவுகளை வைத்து அந்தத் தீவை கண்டுபிடித்தவர்கள் தென் அமெரிக்கர்களே என்று கண்டுபிடிக்கிறார்.

இந்த உண்மையை வெளி உலகத்துக்கு சொல்லும்போது அனைவரும் சிரிக்கின்றனர், நம்ப மறுக்கின்றனர்.  தென் அமெரிக்கர்கள் அங்கே சென்று குடியிருக்க வழியே இல்லை.  ஏனெனில் பசிபிக் கடலின் தண்ணீர் ஓட்டமும், காற்று வீசும் திசையும் தென் அமெரிக்காவுக்கு எதிரேயே உள்ளது.  1500 வருடங்களுக்கு முன்பு மோட்டார் படகு வசதி கிடையாது.  ஆகையால் தோர் சொல்வது சாத்தியமே இல்லை என்று எல்லோரும் மறுக்கின்றனர்.  இல்லை ஒரு பாய் கட்டிய கட்டுமரத்திலேயே சென்றுதான் அந்த தீவை கண்டுபிடித்திருப்பார்கள் என்று தோர் சொல்கிறார்.    அப்படியானால் ஒரு கட்டுமரத்தை எடுத்துக்கொண்டு நீயே அந்தத் தீவு வரை சென்றுவந்துவிடேன், நாங்கள் நம்புகிறோம் என்று கிண்டலாக சொல்கிறார்கள்.

அப்போது தோர் அதைச் செய்ய முடிவு செய்கிறார்.  ஆனால் அந்த முடிவு கொஞ்சம் ஆபத்தானது.  வெறும் கட்டுமரத்தை வைத்துக்கொண்டு சுமார் 4600 கடல் மைல் அளவு பயணம் செய்வது சாதாரண விஷயம் இல்லை.  என்ன செய்வது சில நேரங்களில் நாம் சொல்வதை நிரூபிக்க நாம் அதிக ரிஸ்க் எடுத்துத்தான் ஆகவேண்டும்.  ரிஸ்க் எடுக்கிறார் தோர்.

துணைக்கு பிரிட்ஜ் ரிப்பேர் செய்யும் ஒரு என்ஜினீயர்,  சாகசங்களை விரும்பும் போர் வீரர்கள் இருவர், அதில் ஒருவர் ரேடியோவை கையாள்வதில் வல்லவர்.  ஒரு காமிராவை கையாளும் சாகச விரும்பி என்று எல்லோரும் இணைகிறார்கள். இவர்களோடு லோரிட்டாவும் இணைகிறார்.  லோரிட்டா என்பது ஒரு பஞ்சவர்ணக்கிளி.  

பால்சா மரத்துண்டுகளில் வெறும் கயிறைக்கொண்டு கட்டி மூங்கில் குடிசையோடு ஒரு மரப்படகை செய்கிறார்கள்.   ஒரு மிகப் பழமையான ரேடியோ ஒன்றை பிடிக்கிறார்கள்.  பழைய கத்திகபடாக்களோடு தென் அமெரிக்காவின் பெருவிலிருந்து பயணம் ஆரம்பிக்கிறார்கள். இத்தனைக்கும் தோர் எனும் அந்த ஆராய்ச்சியாளனுக்கு நீச்சல் தெரியாது.  சிறுவயதில் ஒரு பனிக்கட்டி மிதக்கும் ஒரு ஏரிக்குள் விழுந்ததனால் நீச்சல் பழகும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவே இல்லை.  அந்தப்பயணத்தில் இவர்கள் இல்லாது இன்னொருவரும் இருக்கிறார்.  அதுதான் KON TIKI எனப்படும் பொலினேசியக் கடவுள்.

மூன்று மாதம் பயணம் செய்த அந்த கடல் பயணத்தில் எத்தனை எத்தனை சோதனைகள்.  கிடைத்த அற்புத காட்சிகள் என படம் விரிகிறது.  நம்மையும் அவர்களோடு ஒருவராக உள்ளிழுத்து அழைத்துச் செல்கிறார்கள்.


படகை சிதைக்கும் புயல், ஆளைத் தின்னும் சுறாமீன்கள், கட்டுமரத்தின் அடிப்பகுதியை தின்னும் பாசி, ஐவருக்குள்ளும் ஏற்படும் புரிதலின்மைகள் என நிறைய பிரச்சினைகள் வருகிறது, என இவற்றை தாண்டி அந்தத் தீவை அடைந்தார்களா?  தோர்-ன் சித்தாந்தம் வென்றதா என்பதே படம்.

பால்சா மரத்தின் கட்டைகள் நெடுநாட்கள் தண்ணீரில் ஊறுவதால் அதன் அடிப்பாகங்கள் இற்றுப்போக ஆரம்பிக்கும்.  ஆகையால் இரும்புக்கம்பிகொண்டு கட்டிவிடலாம் என்று கம்பியை காட்டி சொல்வார் என்ஜினீயர்.  கம்பியை பிடுங்கி கடலில் எறிந்துவிட்டு எந்த சூழ்நிலையிலும் 1500 வருடத்திற்கு முன்பு எப்படி பயணம் செய்தனரோ அப்படித்தான் செய்யவேண்டும் என்று திட்டிவிடுவார் தோர். அப்போது இவர்கள் வளர்க்கும் லோரிட்டா என்கிற கிளி கடல் மீது பறக்கும்போது ஒரு சுறாமீன் லபக்கிவிடும், இதனால் எல்லோருமே அதிர்ச்சியாக அதில் ஒருவர் அந்த மீனை பிடித்து படகின் மீது போட்டு வயிற்றை அறுத்துவிடுவார்,  அந்த ரத்தம் என்ஜினீயர் உடல் முழுவதும் பீச்சி அடிக்க.  பெருகிவரும் ரத்த வாடைக்கு நிறைய சுறாமீன்கள் படகை சூழ்ந்துகொள்ளும்.  மனச்சங்கடம் அடைந்த என்ஜினீயர் தள்ளாடி நடக்கும்போது கால்தவறி கடலுக்குள் விழுந்துவிடுவார்.  அத்தனை சுறாமீன்களுக்கிடையில் அவரை காப்பாற்றி படகில் சேர்ப்பார் ஒருவர்.

டைடானிக், லைப் ஆப் பை போன்ற கடல் படங்களைப் போல்  இந்தப் படமும்  ஒரு வகையில் நமக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது. படத்தின் காமிரா சோகத்தையும் அலுப்பையும் அழகையும் அப்படியே படமாக நம்மிடம் கொண்டு சேர்க்கிறது.

இப்படத்தின் இயக்குனர் இருவர் -    Joachim Rønning and Espen Sandberg . அருமையான இயக்கம்.  தோர் எழுதிவைத்திருக்கும் இந்த உண்மையான பயணசரித்திரத்தை அப்படியே படமாக்கி கொடுத்த விதத்தில் இவர்களை பாராட்டலாம். 
படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் Pål Sverre Valheim Hagen  நடிப்பு அபாரம்.  அந்த பாத்திரமாகவே மாறி அற்புதமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்ற படங்களைப் போல கடல் மாதிரி செட் போட்டு எடுக்காமல் பெரும்பான்மையான காட்சிகளை உண்மையான கடலிலேயே பல்வேறுவித சவால்களுக்கிடையில் படம் பிடித்திருப்பது படத்திற்கு பலம் சேர்க்கிறது.  

இந்தப்படம் நார்வேயில் 2012-ம் ஆண்டின் சிறந்த வசூலைப் பெற்றிருக்கிறது.     அகாடமி விருது, கோல்டன் க்ளோப் விருது ஆகியவைகளுக்காக பரிந்துரைக்கப்பட்டு சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கு விருது வாங்கி இருக்கிறது.

இது கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.  தவறவிடாதீர்கள்.

 
 

No comments :

Post a Comment

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......