PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Sunday, October 30, 2011

ரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)


இது பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி-2011- க்காக  எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்லோரும் ஜெ.வுக்கு குத்தின மாதிரி எனக்கும் கொஞ்சம் குத்திட்டு போங்க... பிடிக்கலைன்னா ஆட்டோ அனுப்பிவிடுங்க, வரேன்.  நேர்ல வச்சு கைப்புள்ளைய கவனிச்ச மாதிரி கவனிச்சி விடுங்க...இதல்லாம் நமக்கு புதுசா அப்பு.



ரங்கு,விஷ்ணு,சாமி,வில்லி எனப்படும் வில்லயம்ஸ் நால்வரும் திருப்பரங்குன்றத்தை நோக்கி அவர்களுக்கு நேரப் போகும் அபாயத்தைப் பற்றி சிறிதும் அறியாமல் கேலியும்-கிண்டலுமாக, தண்ணியும்-மப்புமாக காரில் போய்க் கொண்டிருந்தனர்.

 இவர்கள்...மதுரையில் அரசரடியில்  உள்ள அர்னால்ட் ஜிம் க்ளப்-ல் தினசரி தங்களது உடம்பை கொஞ்சம்....கொஞ்சமாக இறுக்கி பழனிமலைப் படிகளை கட்டிக்கொண்டிருக்கின்றனர்.   ரங்கு ஐந்து, சாமி ஆறு படிகளையும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  வில்லியோ இதிலென்ன வஞ்சனை என்று பத்துப் படிகளுக்கு முயற்சிசெய்து கொண்டிருக்கிறான்.

மாஸ்டர்,  தண்ணீர் கூட அளந்துதான் குடிக்கவேண்டும் என்றதால் பாரில் இருக்கும்போது சின்சியராக அளந்தூ அளந்தூதான்  குடிப்பார்கள். 

விஷ்ணுவுக்கோ இந்த பேராசை எல்லாம் கிடையாது.  இருக்கின்ற ஒரே தொந்தியை எப்படியாவது குறைக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறான்.  ஆனால் எத்தனை அடி அடித்தாலும் அந்த இமயமலை கொஞ்சம் கூட அசையமாட்டேன் என்கிறது.

காலையில் ஜிம், பகலில் நகர்வலம், மாலையில் மீனாட்சிஅம்மன் கொவிலில் ஃபிகராபிஷேக பூஜை, இரவு பாரில் ஜலக்ரீடை.  இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

 இவர்களுக்கு காவல் துறையில் சேர்ந்து நாட்டுக்காக டீ....ஸாரி.....கடமை ஆற்ற வெண்டும் என்பதே வாழ்க்கை லட்சியம்.

இதில் ரங்கு...அவனது முழுப்பெயர் கோகுலரங்கனாதன்.  ரங்கனாதன் என்பது அவனின் அப்பா அவரது அப்பாவை மறக்காமல் இருப்பதற்காக வைத்த பெயர்.  ஆனால் வைத்ததோடு மறந்துவிட்டது வேறு விசயம்.  அவனை கோகுல் என்றுதான் அழைக்கிறார்கள்.  ஆனால் நண்பர்கள் வட்டத்தில் மறக்காமல் ரங்கூ...என்றுதான் ஆசையாக(?) அழைக்கிறார்கள்.  இது அவனுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. தன்னை எஸ்.பி.கோகுல் என்று அழைக்கவே சொல்லுவான். அப்போதுதான் தன்னுடைய லட்சியம் நெஞ்சில் பசுமரத்தாணி போல பதியும் என்பான். விஷ்ணுவோ அதென்ன மரம்......இதுவரை நான் பார்த்ததில்லையே என்பான்.  

விஷ்ணுவுக்கோ தமக்கு தொந்தி இடிப்பதால், 'நீங்கெல்லாம் போலீஸ் ஆகிக்கங்கெடா…நான் உங்களுக்கு இன்ஃபார்மர் ஆகிடறேன்'-என்பான்.   எல்லோரும் அவனை ‘இன்ஃபார்மர் விஷ்ணு’ என்றே அழைத்தார்கள் இதற்காக அவ்வப்போது  'நீ மட்டும் இல்லையென்றால் நான் ஐ.ஜி.  ஆகிவிடுவேன்'-என்று தொந்தியோடு பேரம் பேசுவான்.   ஆனால் தொந்தியோ இதுக்கெல்லாம் மசியாது  நாளொரு கொழுப்பும் பொழுதொரு மடிப்புமாக வளர்ந்துகொண்டுதானிருந்தது.  தொந்தியைக் குறைக்க அவனும் அவனது மாஸ்டரும்-‘மாஸ்டர் ப்ளான்’ போட்டார்கள்.  ப்ளானின் ஆரம்ப கட்டத்திலேயே பிரச்சினை.  முதலில் பீரை தள்ளி வைக்கச் சொன்னார்.  ஆனால் அவனால் மாஸ்டரை மட்டுமே தள்ளி வைக்க முடிந்தது.  இவனை விட்டால் ஜிம்முக்கு வருமானம் போய்விடுமே என்று மாஸ்டரும்-‘மாஸ்டர் ப்ளானை’த் தள்ளி வைத்தார்.

சாமிகூட சொல்வான்…”டே…உன்னோட தொந்திக்கு பேசாம நீ போலீஸ் ஏட்டாகிடு”-என்று.   ஆனால் விஷ்ணுவுக்கு அதில் கொஞ்சம் கூட  சம்மதமில்லை.  'ஆனால் ஐ.ஜி…இல்லையெனில் இன்ஃபார்மரே ' போதும்.

சாமிக்கு எஸ்.ஐ ஆனால் போதும்.  லஞ்சம் வாங்காமல் நேர்ர்ர்ர்ர்ர்மையான எஸ்.ஐ என்று பேர் வாங்கவேண்டும்.  அப்புறம் அப்படியே ப்ரொமோசனில் ஒவ்வொரு படியாக மேலே வந்துவிடவேண்டும்.  சாமி திரைப்படம்  த்ரிஷா மாதிரி எதாவது காலேஜ் பொண்ணை கரெக்ட் செய்து கல்யாணம் பண்ணிக்கொண்டு வில்லன்களை துரத்தி துரத்தி அரிவாளால் (மதுரையாச்சே...) வெட்டவேண்டும். அதற்காகவே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பீரில் முகம் கழுவி ப்ராக்டீஸ் செய்து கொள்வான். அவ்வப்போது வில்லன்களிடம் தொடையைத் தட்டி சவால் போடவேண்டி இருக்கும் என்பதால் மாஸ்டரிடம் சொல்லி தொடைக்கு தனியாக எக்சர்சைஸ் செய்து கொண்டிருக்கிறான்.  எஸ்.எஸ்.ம்யூசிக் சானலில் பூஜாவிடம் ஃபோன் பண்ணும்போதெல்லாம் ‘கல்யாணம்தான் கட்டீக்கிட்டு ஓடிப்போலாமா’-பாட்டையே கேட்பான்.  இதனால் அந்த சானலில் இவனது நம்பரையும், பாட்டையும் ப்ளாக் செய்து வைத்திருக்கிறார்கள்.   

வில்லியம்ஸ்-ஒரு காக்க..காக்க சூர்யா மாதிரி என்கவுன்டர் போலீஸ் ஆகவேண்டும் என்பதே அவனது ஆசை.  அந்தப் படம் பார்த்ததிலிருந்து மதுரையில் இருக்கும் ரவுடிகள் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறான்.  இன்னும் முழுமை பெறவில்லை.  இங்குதான் தினம் ஒரு ரவுடி பிறந்து வளர்கிறானே.  எவனைக் கேட்டாலும் ஆம்வே ஏஜன்ட் மாதிரி நானே ஒரு ரவுடிதானே என்கிறார்கள்.   C.S.I ஸ்கூல் முன்னாடி நின்று நளினி மிஸ்ஸுக்கு ரூட் போட்டுக் கொண்டிருக்கிறான்.  ஆனால் அவளோ இவனை ஒரு மனுசனாகக்கூட வேண்டாம் ஒரு குப்பைத்தொட்டியாகக் கூட மதிக்க மாட்டேன் என்கிறாள்.

இப்போது இவர்கள் போய்க் கொண்டிருப்பது திருப்பரங்குன்றத்திற்குத்தான்.  தினமும் மீனாட்சி ஆத்தாவையே பார்த்து பார்த்து புளித்துப்போனதால் ஒரு மாற்றத்திற்காக முருகப்பெருமானை(?) காண வந்திருந்தார்கள். 

காரை அடிவாரத்தில் பார்க் செய்துவிட்டு நால்வரும் மெதுவாக படியேறினார்கள்.  ரங்குவுக்கு வயிற்றுக்குள் போயிருந்த வ-பிராந்தி அதாங்க குவாட்டர் பிராந்தி தனது கடமையை செய்து கொண்டிருந்தது. காலைப் பின்னி...பின்னி ஃபேசன்டிவி பெண்கள் போல பூனைநடை நடந்தான்.   

வில்லியோ தெருநாய் நடப்பது மாதிரி நான்கு கால்களில் நடந்து கொண்டிருந்தான்.  கொஞ்ச நேரத்தில் படிகளிலேயே குப்புறப்படுத்துவிட்டான்.  விஷ்ணு அவனை எழுப்பி எழுப்பிப் பார்த்தான். அவன் அசைவதாகத் தெரியவில்லை. அவனின் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி வைத்துவிட்டு நெற்றியில் திருநீரைப் பூசிவிட்டான்.  அசலில் பார்ப்பதற்கு பக்திபரவசத்தில் குப்புறவிழுந்து முருகனை சேவிப்பது போலிருந்தது.  வில்லியம்ஸ் எனும் சுத்த கிருஸ்துவனை டாஸ்மாக்  எனும் மந்திரம்  சுத்த சீனிவாசராமானுஜம் ஆக்கியிருந்தது. 

சாமியும் ரங்குவும் அங்கிருந்த குரங்குகளோடு பேசிக்கொண்டிருந்தனர்.  அவைகள் இவர்களிடம் குடிக்க-கடிக்க ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்தன.  சாமி குரங்குக்கு தன்னால் இதுதான் தரமுடியும் என்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். குவாட்டருக்கே தாங்காதவனெல்லாமா நமது எதிரியா-என  அவை அவனை ஒரு குரங்காகக்கூட மதிக்கவில்லை.  பின்னே மனுசனுக்குத்தான்-’மனுசன்’-என்கிற மரியாதை.  குரங்குகளுக்கு-’குரங்கு’-என்றால்தான் நல்லமரியாதை. 

நாலைந்து குரங்குகள் ரங்குவின் கையிலிருந்த சைட்-டிஸ் சிப்ஸ் பாக்கெட்டுக்காக அவனை ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தன. விட்டால் அந்தக் குரங்குகள் மெயின் டிஸ்ஸே கேட்கும் போலிருந்தது.   
அவனும் குரங்குகளுக்கு நல்ல கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்தான். 

“டே..சாமி இதுகதாய்ண்டா..நமக்கெல்லாம் தாத்தாடா…இதுகளுக்கு நாம ஏதாவது செய்திருக்கோமாடா…? நாம நன்றி கெட்ட நாய்ங்கடா…இல்லல்ல…நன்றி கெட்ட குரங்குடா.  ஏதாவது செய்யணும்டா…..”-என்று அவனும் ப்ளாஸ்டிக் டம்ளர் ஒன்றை  பாறை மீது வைத்து இடுப்பிலிருந்த ஒல்ட்மன்க்-லிருந்து கொஞ்சமாக ஊற்றினான்.  ஒரு பெரிய கருங்குரங்கு மற்ற குரங்குகளை தள்ளி விட்டுக் கொண்டு முன்னால்வந்து ரங்குவைப் பார்த்து ஃப்ளைட்டிலிருந்து இறங்கிய தல போல தலையை லெஃப்ட்டும் ரைட்டும் ஸ்டைலாக ஆட்டியது.  ஓல்ட்மன்க்கோடு கலக்க தண்ணீர் தேடினான் ரங்கு. 
சாமி வாந்தி எடுப்பதில்தான் மும்முரமாக இருந்தான். 

விஷ்ணு வில்லியோடு கபடி விளையாடிக் கொண்டிருந்தான்.  அவனுக்கு ஒரு பிச்சைக்காரன் உதவிக்கொண்டிருந்தான்.  இருவரும் வில்லியைத் தூக்கி ஓரமாக கிடத்திக் கொண்டிருந்தார்கள்.  


தண்ணீர் ஊற்றும் வரை பொறுமை இல்லாத அந்த ’தல’குரங்கு சடாரென தாவியது.  தாவிய வேகத்தில் டம்ளரில் இருந்த திரவத்தை சிந்தியபடி வாய்க்குள் கவிழ்த்தது.  அதன் கசப்பு சுவை உணர்ந்திருக்கவேண்டும்.  ’ப்ர்ர்ர்ர்’-என பல்லைக் காட்டியது.  குரங்கு மொழியில் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.  அனேகமாக ‘தண்ணி வெச்சியே தலைவா…ஊறுகா வெச்சியா?’ என்பதாகத்தான் இருக்கும்.  ஆல்கஹால் அதன் மூளையைத்  தாக்கியிருக்கவெண்டும் இப்போது தலைகால் தெரியாமல் குதித்தது.  மரத்தின் மேலே ஏறி அங்கேயிருந்து அடுத்த மரத்துக்குத் தாவியது.

“டே…மாப்ளை…இங்க பார்டா….தாத்தாவுக்கு மப்பு ஏறிப்போய் மரம்,மரமா தாவுறாரு….”
ரங்கு சந்தோஷமாகக் கூவினான்.  வாந்தியெடுத்து டய்ர்டாகிப் போன சாமி இப்போது அடுத்த ரவுண்டுக்கு தயாரானான். ரங்கு தனது கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைத் தூக்கி குரங்குக் கூட்டத்திடம் எறிந்தான். அதற்க்கு குரங்குகள் பங்காளிச்சண்டை போட்டுக்கொண்டன.  

இங்கு சாமியும் ரங்குவும் பாட்டிலுக்காக சண்டை போட்டுக்கொண்டனர். 

ருசி கண்ட கருங்குரங்கு இவர்கள் சண்டையின் இடையே பாய்ந்து தனக்கும் பங்கு கேட்டது.  ஆனால் சாமியும் ரங்குவும் கொஞசம்கூட மதிக்காததால் அவமானப்பட்ட கருங்குரங்கு ரங்குவின் தொடையில் தனது பற்களில் நான்கை ராஜராஜசோழன் கல்வெட்டு போல பதித்தது.  அய்யோவென அலறி ரங்கு அப்படியே உட்கார்ந்துவிட்டான். 


சத்தம் கேட்டு விஷ்ணுவும் பிச்சைக்காரனும் வில்லியை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார்கள். ரங்குவின் தொடையிலிருந்து ஆஃப்சீசனில் குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுவது போல ரத்தம் கொஞ்சமாக வழிந்து கொண்டிருந்தது.
விஷ்ணு தனது கர்சீப்பால் காயத்தை சுற்றி கட்டுப்போட்டு ரத்தம் வழிவதை தடுத்தான்.  பிச்சைக்காரனை வில்லியைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சாமியும் விஷ்ணுவும் ரங்குவை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். 


ஆஸ்பத்திரி மலை அடிவாரத்தில் தேரடிக்கு அருகில் இருந்தது.  உள்ளே போனபோது நான்கு பேர் வரிசையில் இருந்தனர்...கம்பவுன்டர் போல இருந்தவன் காதுகளைக் குடைந்து கொண்டே ‘என்ன நாய் கடிச்சிடுச்சா?’-என்றான்.

”இல்லை குரங்கு கடிச்சிடுச்சு….”

கேட்டவுடதும் இரண்டடி பின்வாங்கினான்
  
“என்ன குரங்கா….?...அதுகிட்ட ஏன்யா...வெச்சுக்கிட்ட?”

 “ம்ம்ம்ம்….நேர்த்திக்கடன்”-என்றான் விஷ்ணு.

 “இப்படி இருந்தா…குரங்கு மட்டுமில்ல குதிரை,பன்னி,மாடுன்னு எல்லா ஜீவராசியும் கடிக்கத்தான் செய்யும்…..சரி..சரி அப்படி...உட்காரு”-என்று பெஞ்ச்சை காட்டினார் கம்பவுண்டர்.

 பெஞ்ச்சின்  ஓரத்தில் ரங்கு அமரவைக்கப்பட்டான்.  பெஞ்ச்சில் அமர்ந்திருந்த வேறு இருவர் ரங்குவை வேற்று கிரகத்து ஆசாமி போல பார்த்துவிட்டு பக்கத்தில்  அமர்ந்திருந்தால் ஆபத்து என்று எழுந்து நின்றுகொண்டார்கள்.

 ஒருவன் “கொரங்குக்கு என்ன ஆச்சு…இருக்கா…செத்துப் போச்சா?...கூட்டிட்டு வந்திருக்கலாமே”-என்றான்.

 விஷ்ணு,“ம்ம்ம்…கொரங்கு பிரசவத்துக்கு அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கு..”-என்றான்.

 உனக்கு இதுவும் வேண்டும்......இன்னமும் வேண்டும் என.....மேலும் நான்கடி தள்ளி நின்றுகொண்டான்.

 அப்போது அவர்கள் டாக்டரால் அழைக்கப்பட,  ரங்குவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றனர் விஷ்ணுவும் சாமியும்.

 டாக்டர்....பாலுமகேந்திரா மாதிரி தொப்பி போட்டிருந்தார்.  சோடாப் புட்டிக் கண்ணாடியோடு ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் பாம்பு மாதிரி சுற்றியிருந்தார்.  Dr.M.A.தர்மராஜ்M.B.B.S.....என்று பலகை சொன்னது.

 ரங்குவுக்கு அந்த போர்டைப்  பார்த்தால்  எமதர்மராஜா என்பது மாதிரியே தெரிந்தது. கையில் பாசக்கயிறும் எருமையும்தான் மிஸ்ஸிங்.

 “சொல்லுங்கோ…என்ன ஆச்சு…?”

 “ஸார் குரங்கு...கடிச்சிடுச்சு…”

 கேட்டதும்....அதிர்ந்தார்.  கையில் க்ளவுஸ் எடுத்து மாட்டிக்கொண்டார்.   வீல் சேரில் கொஞ்சம் ரிவர்ஸ் எடுத்துக்கொண்டார். ஜூவில் மிருகத்தைப் பார்ப்பது போல ரங்குவையே.....பார்த்தார்.   நாக்கை நீட்டச் சொல்லி டார்ச் அடித்துப் பார்த்தார்.

“வயசு என்ன இருக்கும்?” 

“25 ஆச்சு”-ரங்கு. 

“அட உனக்கில்லையா….குரங்குக்கு....என்ன வயசு இருக்கும்?”

 “என்ன வயசுன்னு.....கேட்டுக்கலை”-சாமி சொன்னதும்....டாக்டர் அவனை முறைத்தார்.

 ‘ஏன் மாடசாமி, நமக்கு இதுவரைக்கும் இந்த மாதிரி கேஸ் வந்திருக்கா..?”

 ”இல்லை..ஸார்…பாம்பு பார்த்திருக்கோம்..நாய் பார்த்திருகோம், கரப்பாம்பூச்சி,எலி கூட வந்திருக்கு….கொரங்கு இதான் பர்ஸ்ட்…”-என்றான் சித்திரகுப்தன் மாடசாமி.

“ஏம்பா…குன்றத்துக் குரங்கெல்லாம்  சாதுவாச்சே…?”-என்ற டாக்டர்  ஒரு டி.டி இஞ்ஜெக்சனும் ஆண்டிபயாடிக் மாத்திரைகளும் எழுதிக் கொடுத்தார்.  நான்கு நாள் கழித்து வரச்சொன்னார்.  காயத்திற்கு ட்ரெஸ்ஸிங்க் பண்ணிவிடச் சொன்னார்.   குரங்கு செத்துவிட்டால் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

 ரங்குவை காரில் உட்காரவைத்துவிட்டு விஷ்ணு மலைமேலே போய் பிச்சைக்காரனைப் பார்த்து நூறு ரூபாயும் தனது செல் நம்பரையும் கொடுத்துவிட்டு குரங்குக்கு எதாவது ஆனால் தனக்கு தகவல் தரச் சொன்னான்.  கொஞ்சம் தெளிந்திருந்த வில்லியை கீழே கூட்டிவந்து கிளம்பினார்கள்.


கொஞ்ச நேரத்தில் சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்து ரங்குவை கலாய்க்க ஆர்ம்பித்திருந்தனர்.

 “என்னதான் இருந்தாலும்.....உங்க தாத்தா இப்படி பண்ணியிருக்கக் கூடாது”

 “உங்க தாத்தாவுக்கு.....சரியா சோறு வெச்சிருக்க மாட்ட….அதனாலதான் கோவத்துல தொடைக்கறியை டேஸ்ட் பார்த்துட்டாரு”

 ”சோறு வெச்சயே….தண்ணி வெச்சியா…..அதனாலதான் ஓல்ட்மன்க் பார்த்ததும் குஷியாய்டுச்சு….”

 “ஓல்ட் மன்க்....என்பது ஒல்ட் மங்கி.....எல்லாம் ஒண்ணுதானே…தன்னோட சொந்த ப்ராண்ட் அப்படிங்கிறதாலே  குரங்கு ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுடுச்சு”

 இதையெல்லாம் கேட்ட ரங்கு ரொம்பவும் டென்சனாகிப் போனான். காருக்குள்ளேயே அவர்களைப் அடிக்க ஆரம்பித்தான். ஒரிஜினல் குரங்கு மாதிரி காச்மூச் என்று கத்தினான்.  அடிக்கடி இடுப்பில வேறு் சொறிந்துகொண்டான். 

“டேய்…அமைதியா இருங்கடா….நம்மை கடிச்சுவெச்சிட்டான்னா....அப்புறம் நமக்கும் இந்த கதிதான்…”என்று விஷ்ணு தாழ்ந்த குரலில் சொன்னான். 

அதன்பிறகு அனைவரும் அமைதியானார்கள்.  அப்படியே ரங்குவை வீட்டில் இறக்கிவிட்டு எல்லோரும் கிளம்பிப்போனார்கள். 


இரண்டு நாள் யாரும் ரங்குவைப் பார்க்க வரவில்லை.  இப்படி இது வரை இருந்ததில்லை.  ஃபோனிலாவது பேசிக்கொள்வார்கள்.  எதுவோ, என்னவோ நடக்கிறது?  ரங்குவுக்கோ இருப்புக் கொள்ளவில்லை, நண்பர்களுக்கு ஃபோனினான்.  யாரும் எடுக்கவில்லை.  சரி விஷ்ணு வீடு பக்கத்தில்தான் இருக்கிறது.  போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.  

விஷ்ணு வீடு பூட்டி இருந்தது.  ரங்கு காம்பவுண்ட் சுவரேறி உள்ளே குதித்தான்.  விஷ்ணுவின் ரூம் மாடியில் இருந்தது.  அருகில் இருந்த அசோக மரத்தில் சரசரவென ஏறி மாடிக்குப் போனான்.  ஜன்னல் சட்டத்தை கழட்டி கிடைத்த சந்தில் உள்ளே புகுந்தான்.  எத்தனை முறை  நைட் லேட்டாக வந்த போது விஷ்ணு இதுமாதிரி ஏறியிருப்பான்.

 அறையின் உள்ளே ஒரு ஆஃபீஸ் டேபிள் இருந்தது.  அதன்மீது இரண்டு துண்டுச் சீட்டுகளும் ஒரு இரும்பு ஸ்கேலும் இருந்தது.

“Mr.கோகுல்...
S W H2 6F இதுதான் குறியீடு….கவனம்-விஷ்ணு”

இன்னொன்றில்,

“Sir,எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்–விஷ்ணு”
என ப்ரிண்ட் ஆகி இருந்தது.  ரங்குவுக்கு தலை சுற்றியது.  ஒரு எளவும் புரியவில்லை.  ரங்கு என்று சொல்லாமல் எதோ S.P.கோகுல் என்றாவது சொல்லி இருக்கிறானே என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 


அதே சமயத்தில் விஷ்ணு கட்டபொம்மன்சிலை சிக்னலில் நின்றிருந்தபோது  பிச்சைக்காரனிடம் இருந்து ஃபோன் வந்தது.  அந்த கருங்குரங்கு செத்துவிட்டதாம்.  விஷ்ணுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வில்லி ஊரில் இல்லை.   சாமியைக் கூப்பிட்டான்.  
அவன் கால நேரம் தெரியாமல் -
“சரிடா…என்ன செய்யலாம்….ஒரு மாலைய வாங்கீட்டு சாவுக்குப் போய்ட்டு வந்துடலாம்”-என்றான். 

“டேய்….கொஞ்சம் சீரியஸா....பேசடா….” 

“மாப்ள…என்னதான் இருந்தாலும் நம்ம ரங்குவோட தாத்தா....இல்லையா?” 

”இல்லடா....ரங்குவை வேறு .நல்ல டாக்டரா பார்த்து கூட்டீட்டு போவோம்டா....எனக்கென்னவோ பயமாஇருக்குடா”  

 “ஓ.கே.கவலைப்படாதே.....உடனே அவனை அழைச்சிட்டுப் போய் டாக்டர் மங்களேஸ்வரனை பார்த்துட்டு வந்துடலாம்…நீ ரங்குவைக் கூட்டீட்டு நேரா ஆஸ்பத்திரி வந்துரு.  நான் முன்னாடியே....போயிடறேன்.  ஆஸ்பத்திரி அட்ரஸ் தெரியும்தானே?”

 ”தெரியும்....நான் ரங்குவோட வந்துடறேன்...”

 ரங்குவை ஃபோனில் அழைத்தான்.


இங்கே…..ரங்கு சேரில் அமர்ந்து துண்டுச் சீட்டுக்களொடு மல்லுக் கட்டிகொண்டிருந்தான். அப்போதுதான்…ரங்குவின் ஃபோன் ஒலித்தது.  அவன்தான்….விஷ்ணு….இன்ஃபார்மர் விஷ்ணு. 

"சொல்லுடா..." 

"டே..மாப்ள....இப்போ நான் வீட்டுக்கு வரேன்.  ரெடியா இரு...டாக்டரை பார்த்துட்டு வந்துரலாம்..." 

"ரெண்டு நாளா எங்கடா போயிருந்தீங்க எல்லோரும்...." 

“அதெல்லாம் வந்து பேசிக்கலாம்டா..."

 "நான் இப்போ உன் வீட்டுல.... உன் ரூமுலதான் இருக்கேன்...."

 "என் வீட்டுலயா....டே..அங்க யாரும் இருக்க மாட்டாங்களே...எல்லோரும் திண்டுக்கல் வரைக்கும் போயிருக்காங்கடா...." 

"உன் டேபிள் மேல இருந்த message எல்லாம் பார்த்துட்டேன்....."  

"டே...டே....மாப்ள....அதெல்லாம் ஒண்ணும் இல்லடா...நீ அங்கேயே இரு....இப்போ வந்துடறேன்...." 

போன் துண்டிக்கப்பட்டது.  வாடா வா..வந்து என்ன சமாதானம் சொல்லப் போகிறாய் என்று பார்க்கிறேன்.
  
சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான் விஷ்ணு.  

"ஏண்டா இப்படி மரமெல்லாம் ஏறி...கஷ்டப் படற.  ஒரு போன் பண்ணியிருந்தா....உடனே வந்திருக்க மாட்டேனா.."

"போன் பண்ணாதான்...எடுக்கவே மாடேங்கறிங்களே...?  அதனாலதான் இப்படி வந்தேன். சரி அதெல்லாம் கெடக்கட்டும்....இதென்ன குறியீடு..அது இதுன்னுட்டு.  எனக்கு தெரியாம.....என்னவோ நடக்குது போலிருக்கு....?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.  இத பார்....கொஞ்சம் உட்காரு...இந்தா தண்ணி குடி.  ரிலாக்ஸ் பண்ணிக்க.  இப்ப நான் சொல்லப்போறதை கேட்டுக்க.  குரங்கு கடிச்சதால.....கொஞ்சம் டென்சன் ஆயிட்டியா...நாங்க உன் கூட இருந்தா உன்னை அந்த குரங்கு மேட்டர வச்சே கலாய்ச்சிட்டு இருப்போம்.  அதனால உனக்கும் மெண்டல் பிரசர்  ஆயிடுது.  அதனாலதான் உன்னை ரெண்டு நாளைக்கு தனியா விட்டுடரதுன்னு  பிளான் பண்ணுனோம்.  அதை தவிர வேற ஒண்ணும் இல்லடா மாப்ள." 

"அப்புறம் இந்த துண்டுச்சீட்டுக்கெல்லாம்.....என்ன அர்த்தம்... சொல்லு" 

 “இதெல்லாம் நான் இன்பார்மர் ஆனா எப்படி ஷார்ட்டா உங்களுக்கு  message அனுப்பறதுன்னு ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேண்டா" 

"சரி இதுக்கு என்ன அர்த்தம்...S W  H2 6F" 

"இதுவா...இதுகூட உனக்கு புரியலையா...நீ எல்லாம் எஸ்.பி.ஆகி பாழாப்போச்சு போ....  S-south,W-way,6F-6figure,H2-2figurehot... மீனாட்சிஅம்மன்கோவில் தெற்குவாசல்ல ஆறுபொண்ணுக இருக்காங்க.....அதுல ரெண்டு பொண்ணுக சூப்பரு...ன்னு அர்த்தம்.  இதுகூட புரியலையா...நீ எல்லாம் சைட் அடிச்சு கிழிச்சபோ?"

"அது ஏன்.....எனக்கு தப்பான குறியீடு..?" 

"உனக்குத்தான்....உடம்பு சரி இல்லையா...அதனாலதான்...தப்பான குறியீடு.  இருந்தாலும் நான் யாருக்கும் அனுப்பலை.  இதுதான் மேட்டரா..ஓகே இப்ப கோவம் தணிஞ்சுதா.  வா டாக்டரைப் பார்க்கலாம்.  இன்பார்மரா ப்ராக்டீஸ் பண்ணவே விடமாட்டீங்கப்பா.  உங்களுக்கு ஸார், மோர்னு மரியாதை வேற.... பொறம்போக்கு பசங்க." 

'த்தூ'-வென காறித்துப்பிவிட்டு அவனோடு ஆஸ்பத்திரி கிளம்பினான் ரங்கு.  


டாக்டரின் ரூம் இரண்டாம் மாடியில் இருந்தது.  

அங்கே சாமி ரெடியாக இருந்தான்.  இவன்தான் கடைசி பேஷன்ட்....கொஞ்ச நேரத்தில்  உள்ளே அழைக்கப் பட்டான். 

டாக்டர்.மங்களேஸ்வரன்...அதற்குப் பிறகு என்னென்னவோ ஏ,பி,சி,டி-என..எழுதி இருந்தது.

 டாக்டர்....கண்ணாடியை இறக்கிவிட்டு சரித்திரம் பூகோளம் கேட்டார்.

"இப்ப அந்த குரங்கு செத்துப் போய் விட்டது..."-என்கிற செய்தியையும் அடிசனலாக சொல்லப்பட்டது.
இதை கேட்டதும் ரங்கு அதிர்ச்சியாக...விஷ்ணுவைப் பார்த்தான். 

"டோன்ட்வொர்ரி...குரங்கு ஒண்ணும் விசஜந்து கிடையாது.  அதுவும் நம்மைப்போல ஒரு உயிர்தான்.  ரேபிஸ் என்கிற நோய் நாய்,வவ்வால் போன்ற மிருகங்களுக்குத்தான் வரும்.  குரங்குக்கு வர சான்சே இல்ல.  அதனாலே பயப்படாதீங்கோ.  இங்க பாருங்கோ ..."-என்று தனது  முழுக்கை சட்டையை முழங்கை வரை உயர்த்தினார். 

அங்கே ஒரு இரண்டு இன்ச்சுக்கு வெட்டுக் காயம் ஆகி,  ஆறி தழும்புபோல இருந்தது.  

"இது பத்து வருடங்களுக்கு முன்னால என்னை ஒரு குரங்கு கடிச்ச தழும்பு.  இதுவரை எனக்கு ஒண்ணும் ஆகலையே?  இப்பக் கூட பாருங்க நல்லாத்தானே இருக்கேன்.  ஸோ பயப்படாதிங்க.  நார்மல் டிடியும் ஆண்டிபயாடிக்கும் போதும்...ஒண்ணும்....பிரச்சினையில்லை..." 

அவ்வப்போது.....இடுப்புக்கு கீழே சொறிந்து...கொண்டார். 

மருந்து சீட்டை வாங்கிக்கொண்டு மூவரும் கீழே இறங்கி வர லிப்ட் இருக்கிறதா என்று பார்த்தனர்.  இல்லை.   படியிலேயே மூவரும் இறங்கி வந்தனர்.
 போர்டிகோவைத் தாண்டும்போது,  அருகில் இருந்த அசோக மரத்திலிருந்து யாரோ இறங்குவது மாதிரி தெரிந்தது.  இறங்கியவர் சாவகாசமாக சென்று தனது ஸ்கூட்டரை ஒரே உதையில் உதைத்து ஸ்டார்ட் செய்து வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.....டாக்டர்....மங்கி எனப்படும் மங்களேஸ்வரன். 




டிஸ்கி:  இந்தக் கதை பதிவுலகில் எழுதப்பட்ட 78 கதைகளில் பெஸ்ட் 15 க்குள் தேர்வாகி ஆறுதல் பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  பரிசுப்போட்டி முடிவுகள் இதோ இங்கே சுட்டிப் பாருங்கள்.


ஆதரவளித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றி.

Friday, October 28, 2011

ஏழாம் அறிவு-தமிழனின் சரித்திரம்.


தமிழகத்தில் இருந்து களவு போன சமாச்சாரங்கள் ஏராளம் உண்டு. மஞ்சள் போன்ற நாம் விட்டுக்கொடுத்த பாரம்பரியம் மிக்க அரிய செல்வங்களை நமக்கே வியாபாரம் செய்யும் கார்பரேட் கம்பனிகள் இன்று நம்மிடையே உலா வந்து கொண்டிருக்கின்றன.



நமது முன்னோர்களின் வரலாற்றுக்குள் புதைந்து போயிருக்கும், மறைக்கப் பட்ட செய்திகள் ஏராளம். சீனா என்றால் குங்பூ கலைதான் நினைவுக்கு வரும். அதனாலேயே சீனா செய்யும் அலப்பரைகள் அளவிடமுடியாதவை. ஆனால் அந்தக் கலை இந்தியாவிலிருந்து அதுவும் தமிழகத்தின் காஞ்சிபுரம் நகரத்திலிருந்து பொனது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?

இந்த நூலைப் பிடித்துக்கொண்டு இடைஇடையே நோக்கு வர்மம், மரபியல் ஆராய்ச்சி என மசலா தூவி ஒரு விருந்தை படைத்திருக்கிறார் முருகதாஸ்.




போதி தர்மர்-1600 வருடங்களுக்கு முன்பு பல்லவர் குலத்தில் தோன்றிய, மருத்துவம், களரி, வர்மக்கலை கற்று தேர்ந்த அரசிளங்குமரன். புத்த மதத்தை தழுவி சீனா சென்று அங்கு கொள்ளை நோய் கொன்று அந்த மக்களுக்கு தற்காப்பு கலை கற்றுக் கொடுத்து மருத்துவமும் கற்றுத் தந்து உலகப் புகழ் பெற்ற ஷாலின் டெம்பிளை நிறுவினார் போதி தர்மர் எனும் டேமூ எனும் பல்லவ மன்னன்.

தாயகம் திரும்பும் சமயத்தில் சீனர்கள் சுயநலம் நோக்கம் கொண்டு நஞ்சு கலந்த உணவை கொடுத்தனர். அதில் விசம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டே(????) அவர்களின் விருப்பத்தை உணர்ந்து அதை நிறைவேற்றி தெய்வமானார். அன்று தான் கற்றுக் கொடுத்த கலை இன்று உலகம் முழுவதும் பரவி நின்றாலும் அந்த உண்மையான மூலம் இன்று மறைக்கப் பட்டு தமிழனுக்குச் சேர வேண்டிய க்ரிடிட் வராமலே போய்விட்டது.

இப்போது கதை தற்காலத்தில் பயணிக்கிறது. சுபா (ஸ்ருதி) எனும் இளம் ஜெனட்டிக் இஞ்சினீயர் தனது ஆராய்ச்சியில் மூதாதையர்களின் D.N.Aவோடு அவரது வம்சாவழியின் D.N.Aவை கலக்கும்போது மூதாதையரின் அத்தனை திறமைகளையும் திரும்பக் கொண்டுவரமுடியும் என்பதை கண்டுபிடிக்கிறார். அந்த ஆராய்ச்சிகளை சீனா, ஜெர்மன், கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்.


இதைக்கண்ட சீனா இது தனக்கு இடையூறாக இருக்கும் என்று சுபாவைக் கொல்ல முடிவு செய்து டாங்லீ எனும் ஷாலின் டெம்ப்ளினின் சிறந்த மாணவனை அனுப்பி வைக்கிறது. அது போக ‘ஆபரேசன் ரெட்’ எனும் கொடிய கொள்ளை நோயை இந்தியாவில் பரப்பும் திட்டத்தையும் செயல்படுத்தும் பொறுப்பையும் தருகிறது. அவனுக்கு நோக்கு வர்மம் எனும் ‘மைண்ட் கன்ட்ரோல்’ கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். அந்தக் கலையின் மூலம் யாரொருவரையும் அவன் வசம் கொண்டு வந்து தனது வெலைக்காக உபயோகித்துக் கொள்ள முடியும். இதுவும் போதி தர்மரின் சொத்தே.

இந்தியாவுக்கு வரும் டாங்லீ சுபாவை கொல்ல துடிக்கிறான். சுபாவோ தனது ஆரய்ச்சிக்காக போதிதர்மரின் வம்சாவழி சர்க்கஸ் கலைஞன் அரவிந்த்(சூர்யா)தை துரத்துகிறார். சுபாவைக் காதலிக்கும் சூர்யா ஆராய்ச்சிக்காகத்தான் தன்னை துரத்துகிறாள் என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான். 

டாங்லீயின் நோக்கம் நிறைவேறியதா?? சுபாவின் ஆராய்ச்சி நிரைவுற்றதா?? அது போக ‘ஆபரேசன் ரெட்’ என்ன ஆயிற்று?? சூர்யாவின் காதல் நிறைவேறியதா??
 இந்த கேள்விக்குறிகளே மீதி சுவாராஸ்யக் கதையாகும்…………………………….அதை கொஞ்சமும் தொய்வில்லாமல் டெம்ப்ளேட் காட்சிகளோடு  செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.அர்.முருகதாஸ்…

 இப்படத்தை தாங்கி நிற்கும் பாத்திரங்கள் டாங்லீ, சுபா, பீட்டர் ஹெய்ன் மட்டுமே…

 சூர்யா---நடிக்க அதிக சான்ஸ் இல்லை. போதிதர்மராகட்டும் சர்க்கஸ் கலைஞனாகட்டும் இரண்டையும் அல்வா மாதிரி சுலபமாக செய்திருக்கிரார்…….

 பல்லவன், போதிதர்மர், டேமோ ஆன போதிதர்மர் என மேக்கப் மற்றும் உடல் மொழி பரவாயில்லை.

 குரங்கு கேட்கவரும் ஸ்ருதியிடம் வழிவது  யானையில் லிஃப்ட் கொடுப்பது காதலி ஏமாற்றினாள் என எண்ணிப் பாடும் ‘யம்மா யம்மா’ பாடலில் காட்டும் முக பாவனைகள் என சில இடங்களில் சூர்யா  இருக்கிறார், ஸ்ருதியை பார்க்க சூர்யா செய்யும் ஃபோன் சேட்டை ரசிக்க வைக்கின்றன. சூர்யாவின் சிக்ஸ் பேக் அதிரடி!!!!

 ஸ்ருதியின் முதல் படம் அட்டகாசமாக அமைந்தது அவருடைய அதிர்ஸ்டமே! கஜினியின் கல்பனாவைப்போல இந்தப் படத்தின் சுபாவும் அனைவரையும் வசீகரிப்பாள். சுபாவின்
project meetingல் தமிழில் பேசப்போய் எல்லோரும் இளக்காரமாகப் பார்க்க கொச்சைத் தமிழில் வக்காலத்து வாங்கிப் பேசும் போது ஒட்டுமொத்த தமிழர்களிடம் கைதட்டல் மூலம் நல்ல வரவேற்பைப் பெறுகிறார்…..டூயட் காட்சிகளில் க்யூட்டான ஸ்ருதியைக் காண முடிகிறது. ஜானியை எதிர்க்கும் காட்சிகளில் பயத்தையும் வீரத்தையும் ஒருங்கே காட்ட அவருடைய கண்கள் நன்றாக அவருக்கு உதவுகின்றன.  வட நாட்டு வாசனை வீசாத தமிழ் உச்சரிப்பை சரி செய்தால் போதும்.


ஜானி—பாத்திரத்திற்கேற்ப அருமையான தேர்வு. பேசவேண்டிய வசனங்களை

1 செ.மீ கண்களாலேயே பேசிச் செல்கிறார்…..சண்டைக் காட்சிகளில் spider man அனுபவத்தை உபயோகித்து அதிரடிக்கிறார்! Climax சண்டைக்காட்சியில் ஆணி அடித்ததைப்போல் உட்கார வைக்கிறார்.



Peter hein—சண்டைகாட்சிகளை ஹாலிவுட் தரத்தில் தர மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். போலீஸ் ஸ்டேசன் ஃபைட், மருத்துவமனை ஃபைட், மவுண்ட்ரோட் ஃபைட், இறுதி ஃபைட் என ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும் கலக்கி எடுத்திருக்கிறார். மைண்ட் கண்ட்ரோல் மூலம் மாற்றப்பட்ட சாக்கடைத் தொழிலாளியும், ஒரு பெண்ணும் குஃங்பூ முத்திரை காட்டி சண்டை பொடுவது நல்ல டெக்னிக். இறுதிச் சண்டையில்  இவரே பெரும்பாலும் இப்படத்தை கடத்திச் செல்கிறார்.


ஹாரிஸ் இசையில் யம்மா யம்மாவும், முன்னந்தியும் முணுமுணுக்க வைக்கும். சண்டைக் காட்சியில் இவர் கொடுக்கும் உச்ச பீட்டொன்று தியேட்டரை விட்டு வெலியே வந்த பிறகும் மண்டையைக் குடைகிறது. யாரோ நல்லா இருக்கு என்று சொல்லி இருப்பார்கள் போலிருக்கு.  புண்யவான்.

ரவி கே.சந்திரன்- போதி தர்மர் காலத்திலும்- பாடல் காட்சியிலும் நானும் இருக்கிறேன் என்று தலையைக் காட்டுகிறார்.


முருகதாஸ் மீண்டும் ஒரு கஜினியைப் பொன்றதொரு அனைத்து மொழிக்குமான ஒரு கதையை கொடுக்க முனைந்திருக்கிறார். இது ஒரு இந்தி படத்துக்கான பார்முலாதான். ஒரு மூன்று வருடத்திற்கு இனி கவலை இல்லை. கன்னடம், தெலுங்கு, இந்தி என்று ஒரு ரவுண்டு வந்துவிடுவார். 


பல்லவனையும் சர்க்கஸ்காரானையும் லிங்க் கொடுப்பதுதான் சுவராஸ்யம். நோக்கு வர்மம் என ஒரு சின்ன நாட்டை வைத்து சண்டை காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார்.  ஆனால் நம்ப முடியவில்லை.

டைரக்டரை ஞாபகப் படுத்தும் சில வசனங்கள்….



’மருந்து கண்டுபிடிக்க வெண்டிய விஞ்ஞானிகள் இன்று நோய் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்’


’ஐ லவ் யூ-ங்கிறதை ஏதொ இன்னைக்கு இன்னொரு புதன்கிழமை என்கிற மாதிரி சொல்லீட்டுப் போறாடா’


‘கொரங்கு, யானை, சிங்கம்னு பழகிப் பழகி உன்னொட மனசும் மிருகமாகிப் போனது’


‘நல்ல விசயம்னா புக்ல தேடு…கெட்ட விசயத்தை குப்பைத் தொட்டியல தெடு’

கடலை சாப்பிட்டுக் கொண்டே அலட்சியமாக பதில் சொல்லும் ஃபாஸ்ட்ரேக் ஊழியரை கொன்றது பின் அதே கடலையை இவர் சாப்பிட்டுக் கொண்டுவருவதும்…ஃபோன் ஒலித்துக் கொண்டிருப்பதும் ரசிக்கலாம்.

படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கிறது.  அனால் பொதுவாக எப்போதும் நான் பார்ப்பதில்லை. 
 

தீபாவளியன்று அதிகாலை கண்விழித்து எழுந்துவிட்டோம். பகலெல்லாம் ஆட்டம்…மாலையில் படத்துக்கு போகலாம் என்றால் இரவு பதினோறு மணிக் காட்சிக்குத் தான் டிக்கெட் கிடைத்தது. எனக்கோ பயம். படம் விட எப்படியும் இரவு மணி மூன்றாகி விடும் அதுவரை கண்விழிக்க முடியுமா என்று பயம்தான். ஆனால் படம் முடியும் வரை தூக்கம் வராமல் எல்லோரும் படம் பார்க்கவைத்ததே …..இந்தப் படத்தின் வெற்றிதான்.

ஏழாம் அறிவு- பார்க்கலாம்,  பாதகமில்லை .  எதிர்பார்க்க வைத்தது  கொஞ்சம் ஏமாற்றம்தான்.


 



Wednesday, October 19, 2011

ஆதாமிண்ட மகன் அபு-ஒரு யாத்திரையின் கதை.



ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உண்டியல் இருக்கும்.  அதில் சிறுகச் சிறுகச் சேமித்து திருப்பதிக்கோ, பழனிக்கோ, வேளாங்கன்னிக்கோ சென்று வருவார்கள்.  ஒவ்வொரு உண்டியலிலும் சுவராஸ்யம் குன்றாத ஒரு கதை இருக்கும்.
அப்படியான கதைதான் இதுவும்.

அபு(சலீம் குமார்)- தள்ளாத வயதிலும் அத்தர் விற்று பிழைக்கும் உண்மையான முஸ்லிம். இவரது இன்ப துன்பங்களில் பங்கேற்கும் இவரது மனைவி ஆயிஷு (ஜரினா வஹாப்).  இவரது மகன் இவர்களை அம்போ என்று விட்டுவிட்டு அரேபியாவில் வசிக்கிறான்.

இவர்களின் வீடு ஒரு கவிதை.  அழகிய பசுமை நிறைந்த வீடு.  ருசியான பழங்களைத் தரும் பலா மரம்.  பசுவும் கன்றும், நாயும் சில கோழிகளும் விளையாடும் அங்கே.  பக்கத்துக்கு வீட்டு எல்லைத் தகறாரோடு விளங்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரர்.  வேற்று மதமானாலும் நன்றாகப் பழகும் இந்து வாத்தியார்(நெடுமுடி வேணு).

 இவர்களின் ஒரே வாழ்க்கை லட்சியம் ஹஜ் யாத்திரை செல்லவேண்டும் என்பதே.  அதற்காக ஒரு பெரிய உண்டியலில் காசு சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  அந்த ஊர் பெரியவர் அடிக்கடி ஹஜ் செல்லக்கூடியவர்.  அவரின் அறிவுறுத்தலின்படி அக்பர் ட்ராவல்ஸ் மூலம் ஹஜ் பயணம் செல்ல முடிவெடுக்கிறார்.  அவர்கள் முதலில் பாஸ்போர்ட் எடுக்கவேண்டும் எனவும் அதற்கான வழிகளை சொல்கிறார்கள்.  அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஒருநாள் அபு வீட்டுக்கு வரும்போது ஆயிஷு அழுதுகொண்டு நிற்கிறாள்.   போலிஸ் வந்து விசாரித்துப் போனதாகவும் வந்தால் உடனே ஸ்டேசனுக்கு வரச்சொல்லி இருப்பதாகவும் சொல்கிறாள்.  என்னவோ ஏதோவென்று பயந்து போன அபு தனது வாத்தியார் நண்பரை அழைத்துக் கொண்டு ஸ்டேசனுக்கு போகிறார்.  அவர்கள் இவரைப் பற்றி சீரியசாக விசாரித்துவிட்டு இது பாஸ்போர்ட்டுக்கான விசாரணைதான் என்று சொல்கிறார்கள்.

மகிழ்ந்துபோன அபு பாஸ்போர்ட் வருகைக்காக காத்திருக்கிறார்.  இன்னொரு நண்பர் போலீசுக்கு லஞ்சம கொடுத்தால்தான் சீக்கிரம் வரும் என்று சொல்ல, அந்த போலீஸ்காரரை அவருடைய வீட்டுக்கருகில் பார்த்து வலியப் போய் லஞ்சம கொடுக்கிறார்.  அடுத்த சில நாட்களில் போஸ்ட் ஆபீஸ் சென்று நெடுநேரம் காத்திருந்து பாஸ்போர்ட் வாங்கி வருகிறார்கள்.  இரவினில் அந்த பாஸ்போர்ட்டில் ஒட்டப்பட்டிருக்கும் அவரவர் போட்டோக்களைப் பார்த்து பரிகாசம் செய்து கொள்கிறார்கள்.
சந்தோசம்-வெட்கம்

அடுத்து ஹஜ் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.  உண்டியலை உடைத்து பணம் எண்ணப் படுகின்றன.  அதை அட்வான்சாக தந்துவிட்டு மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.  தனது மகனைப் போல வளர்த்த பலா மரத்தை மர வியாபாரி ஜான்சனிடம் (கலாபவன் மணி)   நல்ல விலைக்கு பேசுகிறார்கள்.   அது போக பால் கொடுத்துக்கொண்டிருக்கும் பசுமாட்டையும் விற்கிறார்கள்.  தன்னிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நகைகளையும் விற்று காசாக்குகிறார்கள்.

சோகம்
அடுத்து பயணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.  ட்ராவல்ஸ் நடத்தும் ஹஜ் வகுப்பிற்கு சென்று வருகிறார்கள்.  பயணத்திற்காக புது துணிகள் வாங்குகிறார்கள். இஹ்ரம் எனும் வெள்ளைத் துணியும் வாங்கிக்கொள்கிறார்கள்.  பயணத்தில் இறந்துவிட்டால் உடலை மூட தேவைப் படுமாம்.

கடனோடு ஹஜ் செல்லாக்கூடாது என்பதற்காக தனது சிறு சிறு கடன்களை அடைக்கிறார்கள்.  தான் தவறி செய்து விட்ட தவறுகளுக்காக அதற்குரியவர்களிடம் சென்று மன்னிப்பு கோருகிறார்கள்.  ஒரு கடனாளியாகவோ குற்றங்கள் இழைத்தவராகவோ ஹஜ் பயணம் செல்லக்கூடாது என்ற முஸ்லிம் கோட்பாடுகளுக்கு ஏற்ப எல்லா கடமைகளையும் முடிக்கிறார்கள்.

மரவியாபாரியிடம் சென்று பணம் வாங்கும்போது மரம் வெட்டப் பட்டதாகவும் அது ஒரு பொல்லையாகப் (மரத்தின் நடுவில் நெட்டுவாக்கில் ஓட்டை விழுந்த மரம்- இது விறகுக்காக மட்டுமே பயன்படும்)  போனதென கூறுகிறான்.  ஆனாலும் கூட கிருஸ்துவனான மர வியாபாரி ஒரு முஸ்லிமின் பயணம் தடைப்படக் கூடாது என்பதற்காக முழு பணத்தையும் தர முன்வருகிறான்.

ஆனால் முஸ்லிம் கோட்பாடுகளின்படி ஒருவரை ஏமாற்றிய காசில் ஹஜ் செல்லாக்கூடாது என்று சொல்லி மறுத்துவிட்டு பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்.  அங்கே மரம் வீழ்ந்து கிடக்கிறது.    தனது மகனைப் போல நினைத்து வளர்த்த மரம் அவனைப் போலவே அவருக்கு உதவாமல் போய்விட்டதை எண்ணி தம்பதியர் இருவரும் உருகி உருகி அழுகிறார்கள்.

இதைக் கேள்விப்பட்ட இந்து வாத்தியார் நண்பர் பணம் எடுத்துக்கொண்டு அபுவின் வீட்டுக்கு வருகிறார்.  தன்னால் முடிந்த ஒரு சிறிய உதவி என்று பணம் கொடுக்க அதை வாங்க மறுக்கிறார்.  முஸ்லிம் கோட்பாடுகளின்படி  ரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரிடம் இருந்து எந்த வித உதவிகளும் பெற்று ஹஜ் செல்லக் கூடாது என்கிறார்.

ட்ராவல்ஸ் அதிபர் (முகேஷ்) தான் பணம் கொடுத்து உதவுவதாக சொல்கிறார்.  அப்படி கடன்  வாங்கி ஒரு ஹஜ் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்கிறார்.   எனது பெற்றோர் ஹஜ் பயணம் செல்ல ஆசைப் பட்டபோது என்னிடம் பணமில்லை.  இப்போது பணம் இருக்கிறது ஆனால் அவர்கள் இல்லை. உங்களை எனது பெற்றோராக நினைத்து அந்த உதவியை செய்வதாக முகேஷ் சொல்கிறார்.   அப்படி செல்கிற பயணத்தின் புண்ணியம் உனது பெற்றோர்களுக்கே போய்ச சேரும் என்று சொல்லி அதையும் மறுத்து விடுகிறார்.
அப்போது அவர் காட்டுகிற எக்ஸ்ப்ரசன் ..'நடிகன்டா' என்று சொல்ல வைக்கிறது.

பிறகென்ன அவர் ஹஜ் போனாரா இல்லையா.....படம் பாருங்கள் தெரியும்.

படத்தில் எல்லோரைம் நல்லவராக காட்டி இருப்பது இதன் சிறப்பு.

படத்தின் கதா நாயகன் சலீம் குமார் மலையாள படவுலகின் காமெடி ஆர்டிஸ்ட்.   அவருடைய வயதான தோற்றமும் அதற்கேற்ப தளர்ந்த நடையும் நடிப்பு அருமை.  பேசும் கண்கள்,  வறுமை கண்ட ஒடுக்கு விழுந்த முகம்,  வெளிறிப்போன தாடி (மேக்கப் மேனின்(பட்டணம் ரஷீத்) சொந்தக் காசில் மும்பையில் இருந்து தருவிக்கப் பட்டவை) மூப்பு கண்ட வசன உச்சரிப்பு என்று அனைத்து விதத்திலும் சலீம் குமார் தனது பங்கை நிலை நாட்டியிருக்கிறார்.

அவரது மனைவியாக வரும் ஜரீனா அருமையாக ஈடு கொடுத்து நடித்திருக்கிறார்.  பஸ்சில் போகும்போது வாந்தி வராமல் இருக்க எலுமிச்சை பழத்தை முகர்ந்து கொள்வதாகட்டும், போலீஸ் வந்து மிரட்டியவுடன் பயந்து போவதாகட்டும்,   பாஸ்போர்ட் போட்டோ பார்த்து வெட்கப்படுவதாகட்டும் என ஜமாய்க்கிறார். ஒரு உண்மையான முஸ்லிம் பெண்மணியாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவு செய்திருக்கும் மது அம்பாட் சொல்லவே வேண்டியதில்லை.  படத்தின் ஆரம்ப இருபது நிமிடங்கள் ஒவ்வொரு ஷாட்டும் கண்களில் இன்னும் நிற்கிறது. டிஜிட்டலில் புகுந்து விளையாடி இருக்கிறார். உஸ்தாத் காட்டும்போது காட்டபடுகின்ற ஒற்றை மரமும் சுற்றி இருக்கும் புல்வெளியும் நம்மை அடித்து போடுகிறது.   அவர் இல்லாதபோது அவரிடம் அனுமதி வாங்குகிற காட்சியில் புல்வெளி தலை அசைத்து விடை கொடுக்கிறதே ....அருமை. அருமை.
லாங் ஷாட் காட்சிகள் அப்படியே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.

சவுண்ட் எபக்ட்..சந்தீப்... இதை சொல்லாமல் விட்டால் இந்த விமர்சனம் வேஸ்ட்.  பாங்கு ஒலிப்பது, மழைச் சத்தம், கோழிகளின் சத்தம், நகரத்தின் இரைச்சல், பஸ் செல்லும்போது இரைச்சல்,  யதார்த்தமாக இருக்கிறது.

இசை - ஐசக் தாமஸ்.... உருக்கும் பின்னணி இசை இவருக்கு அவார்ட் வாங்கி தந்திருக்கிறது.  சில இடங்களில் மனசை பிசைய வைக்கிறது.

 இயக்கம்-சலீம் அஹமது.   இதுதான் இவரது முதல் படம்.  ஆனால் சொல்லவே முடியாது. ஒரு ட்ராவல்ஸ் கம்பனியில் வேலை செய்திருந்ததால் கேட்ட கதையை அனுபவ பூர்வமாக உணர்ந்து செய்திருக்கிறார்.   இவரே தயாரித்தும் இருக்கிறார்.  ஒரு காமெடியனை வைத்து நல்ல ரிஸ்க் எடுத்திருக்கிறார்.  படம் முடிக்க நிறைய சிரமப்பட்டிருக்கிறார்.  கதாநாயகன் சலீம் குமார் தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் அவரே விநியோகமும் செய்திருக்கிறார்.  இந்த பட ரிலீஸின்பொது   மம்மூட்டி தனது படமான  '1993 பாம்பே' படத்தின் ரிலீசை இந்த படத்திற்காக தள்ளிப் போட்டாராம்.

 மரத்தை வெட்டியதால்தான் பயணம் தடைபட்டது என்று எண்ணி ஒரு மரக்கன்றை நடுவதன் மூலம் காட்டும் காட்சி டைரக்டோரியல் டச்.


இந்தப் படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை என்று தேசிய விருதுகளை குவித்தது.  மாநில அரசின் பல விருதுகளை வென்றெடுத்தது.  ஆஸ்கார் விருதுக்கும் சென்றிருக்கிறது.


 இன்னும் பல தளங்களுக்கு இந்தப் படம் கொண்டு செல்லும் என்பது உண்மை.

வெல்டன் சலீம் அண்ட் சலீம்.

  

Wednesday, October 12, 2011

வாகை சூட வா -தமிழ்ப் படவுலகம் வாகை சூடும்..

கொஞ்சம் காலம் கடந்துதான்  வாகை சூட வா காண வாய்ப்பு கிடைத்தது.
 ஆனால் படத்தைப் பற்றி நாலு வார்த்தையாவது எழுதவேணும் என்று தோன்றியது.

முழுக்க முழுக்க  செங்கல் சூளைதான் களம்.  செங்கல் சூளையில்  வேலை செய்யும் சிறுவர்கள்தான் ஹீரோக்கள்.
என்னமா நடித்திருக்கிறார்கள்.  ஒவ்வொரு சிறுவனிடமும் இருக்கும் நேட்டிவிட்டி, பாடி லாங்வேஜ், விமலை கலாய்ப்பது, என ஒவ்வொரு காட்சியிலும் எனது இளமைப் பருவத்தை பார்த்தேன்.

முதல் காட்சி.... கை ஒன்று திரையில் தெரிகிறது.  கையில் முருங்கைக் காய்கள் கொண்ட ஒரு பை.  கைக்கு சொந்தக்காரர்.  பார்த்தால்...பாக்கியராஜ்.  டைரக்டரின் ரசனை அலாதியாய் இருக்கிறது.

 கதையின் காலகட்டம் 1960 என்பதால் நிறைய மெனக் கெட்டிருக்கின்றனர்-டைரக்டரும், ஆர்ட் டைரக்டரும்.  சவாரி வண்டி, துணி ஏலம்(சீலை எடுத்து ரெண்டு வருசந்தான் ஆகுது..அதுக்குள்ளே கிழிஞ்சுபோச்சு),பனை மரமேறும் மீன், தோல் கவர் லேடியோ,
மண் பானைகள், ஈய டம்ளர்,   நத்தை சூப்,    ரிப்பன் வைத்த ரெட்டை ஜடை,  கனகாம்பரப் பூ, கழுத்து கருப்பு கயிறு, கூரை வீட்டில் காடா விளக்கு, சைக்கிளில் லாந்தர் விளக்கு,   கழுதை உப்பு வியாபாரம், கோபால் பல்பொடி விளம்பரம், பித்தளை சொம்பு அயரன் பாக்ஸ், ட்ரங்கு பெட்டி, மூக்கு நீண்ட லாரி,  பஸ் என அவர்களின் உழைப்பு ஒவ்வொரு பொருளிலும் தெரிகிறது.  இவையெல்லாம் காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போனவைகள். இவைகளை மீண்டும் காணும்போது மனதினில் ஒரு இனம் தெரியாத பரவசம்.

ஆடு முட்ட வருவதும், சிறுவர்கள் அதை சமாளிப்பதும், அதை அரைகுறையாய் வாத்தியாருக்கு சொல்லிக் கொடுப்பதும் அதன் பின்..ஸாரி.. முன்விளைவுகளும் ரசிக்கலாம்.

சவாரி வண்டியில் முதலாளி போகும்போது எல்லோரும் எழுந்து நின்று மரியாதை தருவது.. இன்னும் கூட சில கிராமங்களில் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

இறந்தவர்களுக்கு எருக்க மாலை போடுவது,  அந்த ஒப்பாரிப் பாட்டில் இருக்கும் எதார்த்தம் அருமை.  ரெட்டை மூக்கு வெத்தலையின் மூலம் தன காதலை தெரிவிப்பதும், அதற்கு பதிலாய் புது துணி எடுத்துக் கொடுத்தாகணும் என்பதும் நல்ல டெக்னிக்.

இசை-ஜிப்ரான். பாட்டுகளில் சரசர சாரக் காத்தும், போறாளே போறாளே, ஒப்பாரி பாட்டும் அருமை.  'சூளையில கல்லு வேகையில சின்னப் புள்ளையும் வேகுதம்மா... 'அட்டகாசமான நெஞ்சைத் தொட்ட வரிகள்.   யாரு எழுதுனது?  வைரமுத்துவா? பின்னீட்டீங்க போங்க.

விமலைப் பொறுத்த வரையில் இயக்குனர்களின் நடிகராகி வருகிறார்.  அப்பாவித்தனம், விடுகதைக்கு விடை கேட்டு அப்பாவுக்கு கடிதம்,  ஹீரோ அடி வாங்குவதும், விமல் அப்படியே பொருந்துகிறார். ஊர் மக்கள் செங்கல்லையே ஆயுதமாக்கி ஆட்களை விரட்டுவதும்.. டச்சிங்.
அலங்காரமில்லா அழகிய முகம்

இனியா... மேக்கப் இல்லாத முகம், அப்படியே கிராமத்துப் பொண்ணாக மிளிர்கிறார்.  காதல் ஜெயித்துவிட்டதில் ஒரு ஆடுகளம் லுங்கி டான்ஸ் மாதிரி ஒரு ஆட்டம் போடுகிறாரே அருமை.
கடைசியில் ஒலிக்கும் நான் பேச நினைப்பதெல்லாம்..பாடல் இன்னொரு டச்சிங்.
அலங்காரத்தோடு இனியா...

கணக்குப் போடும் ராமையா...பிறகு அவரே மாட்டிக்கொள்வதும், அதை அவர் சமாளிப்பதும்.. ரசிக்கலாம்.  நகைச்சுவையில் வடிவேலுவின் இடம் காலியாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.  இந்த மாதிரியான பாத்திரங்கள் அவர் செய்தால் தூக்கிச் சாப்பிட்டிருப்பார்.  அவர் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இறுதிக் காட்சியில் செங்கல் லோடு ஏற்றிவிட்டு சிறுவர்கள் கணக்கு போட்டு காசு கேட்கும் காட்சி -நச் என்று முடித்திருக்கிறார் டைரக்டர். hats off you sarkunam sir.
உழைப்பவர் தோற்ப்பதில்லை


இடையில் தொய்வான திரைக்கதையை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.  இன்னும் கொஞ்சம் சுவராஸ்யம் சேர்த்திருக்கலாம்.  பையன்கள் ஒவ்வொருவராய் மனம் மாறி வருவது போலவும், இருவர் மட்டும் கடைசியில் வருவது போலவும் கதை அமைத்திருந்தால் படம் தொய்விருந்திருக்காது.  ஏதோ சொல்லணும்னு தோணிச்சு.. சொல்லிட்டேன்.

இந்த மாதிரியான படங்களை வரவேற்க வேண்டும்-குறைகள் அதிகம் சொல்லாமல்.

யாரிடம் குறைகள் இல்லை- எதில் குறைகள் இல்லை.  அதெல்லாம் கண்டுக்காம போயிட்டே இருக்கணும்.

 வாகை சூட வா- வெற்றி நிச்சயம்.
 

Monday, October 3, 2011

Gaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு


வெளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு குடும்பமே சொகுசாக வாழும்.  ஆனால் அந்த காசை சம்பாரிக்க அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.  அந்த காசில் எவ்வளவு வலிகளும் வேதனைகளும் இருக்கிறது என்பதை இதுவரை எந்தப் படமும் சொன்னதாகத தெரியவில்லை.

கட்டம்ம- இதுமாதிரி வெளிநாட்டில் வேலைக்குப் போய் கஷ்டப்படும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை.   அதை எவ்வளவு சுவராஸ்யமாக சொல்லமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் டைரக்டர் கமல்.

அஸ்வதி-(காவ்யா மாதவன்)கேரளாவின் ஒரு கிராமத்தில் மசாலா கம்பெனியில் வேலை செய்யும் ஒரு நடுத்தர குடும்பத்து பெண்.  அவளுக்கு கல்யாணம் ஆகிறது.  ஆனால் கணவன் அல்பாயுசில் ஆற்றோடு போய்விட நிர்கதியாய் நிற்கிறார்.  ஏழை அப்பாவுக்கு பாரமாக இருக்க விரும்பாமல் சவுதிக்கு வீட்டுவேலை செய்யும் வேலைக்கு ஆள் தேவைப்பட விமானம் ஏறுகிறார்.


விமான நிலையத்திலேயே நெற்றியில் அணிந்திருக்கும் பொட்டு, சந்தனம் எல்லாவற்றையும் அழித்து பர்தா அணிந்தபிறகே விமானம் ஏற்றப்படுகிறாள்.  அவளை மாதிரியே இப்படி வேஷம் மாற்றப்பட்டு நிறைய பேர் இருக்கிறார்கள்.(இது உண்மைதானா?  நான் நிறையப் பேரை சாதாரண உடைகளில்தான் விமான நிலையத்தில் கண்டிருக்கிறேன்)

வேலைக்கு போகும் இடத்தில் அந்த அரபு ஷேக்கின் வீட்டுக்குள் புகும் முன்னரே வாசலில் வைத்து முதல் வேலையாக அவளது பாஸ்போர்ட்டை வாங்கிக் கொள்கிறார்கள்.  இவளை அழைத்துவந்த உஸ்மான் என்பவன் அந்த வீட்டில் டிரைவராக வேலை செய்வதுதான் ஒரே ஆறுதல்.  அவன் மட்டுமே மலையாளம் பேசக்கூடியவன்.  அப்புறம் இன்னொரு வேலைக்காரியான இந்தோனீசிய இளம்  பெண்ணொருத்தி .

அந்த வீட்டில் எப்போதும் தின்றபடியே இருக்கும் ஆஜானுபாகுவான ஒரு பையன்.  அவனுடைய பொழுதுபோக்கு தின்பது, கையில் பிளேடு வைத்து வேலைக்காரிகளை  விளையாட்டுக்காக  கீறுவது.  இன்னொரு பொடியன் இருக்கிறான், அவன் ஒரு செமி. அவனையும் அந்த வீட்டு வேலைகளை பார்த்துக் கொள்வதுதான் வேலை.

உஸ்மானுக்கும் இந்தோனீசிய  பெண்மணிக்கும் காதல்.  இது இவளுக்கு தெரியவர கண்டிக்கிறாள்.  இங்கெல்லாம் இது சகஜம் என்கிறான் அவன்.  ஊரில் உனக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்களே என்கிறாள் இவள்.  அது அங்கு-இது இங்கு என்கிறான் அவன்.  இதை அஸ்வதியால் ஜீரணிக்க முடியவில்லை.  உஸ்மானின் காதல் விஷயம் ஷேக்குக்கு தெரிய இந்தோனீசிய பெண்ணுக்கு பயங்கர அடி, சித்திரவதை.  டிரைவரை உடனே வேலையை விட்டு துரத்துகிறார்கள்.  அன்று இரவு உஸ்மான் அஸ்வதியை மொபைலில் அழைத்து இந்தோனீசியப் பெண்ணை தப்பிக்க உதவுமாறு கேட்கிறான்.  அவளும் அந்தப் பெண் படும் பாட்டைக் கண்டு இரக்கப்பட்டு அந்த அறையின் ஏ.சி. ஓட்டை வழியாக தப்புவிக்கிறாள்.

இந்த விஷயம் ஷேக்-க்கு தெரியவர மொபைலை வாங்கி உடைத்துவிட்டு இவளுக்கு சித்திரவதை ஆரம்பமாகிறது.  பெல்ட்டால் அடி பின்னி எடுக்கிறார்கள்.  அப்படியே கொண்டு வந்து அறையில் அவளை போட்டுவிடுகிறார்கள்.  அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.  சிறிது நேரம் கழித்து கதவை திறந்து அந்த வீட்டின்    ஆஜானுபாகுவான பையன் வருகிறான்.  அவளை நெருங்கி வந்து சாப்பிட ஒரு ரொட்டித் துண்டை கொடுத்துவிட்டு போகிறான்.

அடுத்த நாள் அந்த வீட்டை சுத்தம் செய்யும்படியும், துவைக்க வேலை கொடுத்தபிறகு  எல்லோரும் வெளியே சென்று விடுகின்றனர்.  இதுதான் சமயம் என்று அந்த வீட்டின் லேண்ட்லைனில் உஸ்மானை அழைத்து எப்படியாவது தன்னையும் காப்பாற்றும்படி வேண்டுகிறாள்.  அவனும் அதே ஏ.சி. ஓட்டை வழியாக தப்பித்து அருகில் இருக்கும் அபுக்கா எனும் நண்பனின் மளிகை  கடைக்கு வந்து விடும்படியும் அவன் தான் இருக்கும் ரியாத் எனும் நகரத்துக்கு அவளை சேர்த்துவிடுவான் எனவும் கூறுகிறான்.

மாலை நேரத்தில் அவளும் தப்பிக்க ஏ.சி. ஓட்டையை நாடி போகிறாள்,  ஆனால் அதை அடைத்துவிட்டார்கள்.  சுற்றியிருக்கும் காம்பவுண்ட் சுவர்களோ பின்லேடன் வீட்டைப் போன்று மிகவும் உயாரமானவை.  அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய ஏணி கிடைக்கிறது.  தன்னுடைய துணிமணிகளை எடுத்துக்கொண்டு அந்த ஏணி வழியாக ஏறி சுவரின் அந்தப்பக்கம் குதித்துவிடுகிறாள். காலில் கண்ணாடிச் சில் ஏறி காயம் ஆகிறது. அதே வேளையில் அந்த வீட்டினில் வெளியே போனவர்கள் உள்ளே வந்து விடுகிறார்கள்.   ஒரு குப்பைத் தொட்டியின் மறைவில் மறைந்துகொள்கிறாள்.  வீட்டுக்குள் போனவர்கள் அதே வேகத்தில் திரும்பி வந்து காவலரை கேள்வி கேட்கிறார்கள்.  பிறகு பரபரப்பாக அவளை தேடி காரில் பறக்கிறார்கள்.  சிறிது நேரத்தில் அவள் எங்கேயும் கிடைக்காமல் திரும்பி வருகிறார்கள். அதுவரை அவள் அங்கேயே இருக்கிறாள்.  சிறிது நேரம் கழித்து காவலர் அசந்த சமயத்தில் அங்கிருந்து ஓடிவிடுகிறாள்.

நேராக உஸ்மான் சொன்ன கடைக்கு போய் பார்க்கிறாள்.  பூட்டியிருக்கிறது. பூட்டிய ஷட்டரை தட்டுகிறாள்.  யாரும் வருவாரில்லை.  அருகினில் ஒரு பொதுத் தொலைபேசியைக் கண்டாள்.  போன் செய்ய பையில் காசை தேடுகிறாள்.  ஆனால் அவளிடம் இருப்பதெல்லாம் இந்திய ரூபாய்களும் சில்லரைகளும்தான்.  சோர்ந்து போய் அந்த நீண்ட நெடுஞ்சாலையில்    தன்னந்தனியாய்  ரியாத்தை நோக்கிச் செல்கிறாள்.  இருபுறமும் அடர்ந்த பாலைவன மணல்வெளி.  வீசியடிக்கும் காற்றில் மணல் கண்ணை மறைக்கிறது.  போட்டிருக்கும் பர்தாவோடு  சொர்ந்தபடி மெதுவாக நடக்கிறாள்.  விடிந்தும் நடக்கிறாள்.  பகல் பொழுது கடுமையாக இருக்கிறது.  விரைந்து செல்லும் வாகனங்கள் எதுவும் இவள் கைகாட்டலுக்கு நிற்கவில்லை.

ஒரே ஒரு ட்ரக் மட்டும் நிற்கிறது.  அவர்களிடம் தண்ணீர் கேட்க அவளது கைகளில் ஊற்றுகிறார்கள்.  ரியாத் போகுமா என்று கேட்க பின்னால் ஏற்றிவிடுகிறார்கள். அது ஆடுகளை ஏற்றிச் செல்லும் வண்டி.  ஆடுகளோடு ஆடுகளாக ஏறி அமர்ந்து கொள்கிறாள்.  கொஞ்ச தூரம் போனபிறகு அந்த ஆடுகளோடு இன்னொருவனும் கலைந்த தலையோடு உறுத்தும் விழிகளோடு ஒருவன் இருக்கிறான்.  வண்டி நெடுஞ்சாலையிலிருந்து பாதை மாறி செல்கிறது.  இவள் தான் ஏமாற்றப் படுகிறோம் என்பதை உணர்ந்து கத்துகிறாள். ஆனால் கேட்க  யார் இருக்கிறார்கள்...

சிறிது நேரத்தில் பாலைவனத்துக்கு இடையில் உள்ள ஒரு ஆட்டுப் பட்டியில் வண்டி நிற்கிறது.  இவளை இறக்கி அவளுக்கு சாப்பிடக் கொடுக்கிறார்கள்.  குடிக்க தண்ணீர் இல்லை. ஆடுகளுக்கு வைத்திருந்த தண்ணீரை அள்ளுகிறாள். அது மணலும் எறும்புகளும் நிறைந்ததாக இருக்கிறது.  அப்போது   அந்த கலைந்த தலையோடு இருந்தவன் தண்ணீர் தருகிறான்.  மாலை நேரத்தில் எல்லோரும்
 தொழுகையில் உட்கார்ந்த சமயத்தில் அந்த கலைந்த தலையோடு இருந்தவன் இவளின் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறான்.  நடு பாலைவனத்தில் அவளை விட்டு 'ஓடிவிடு.. இங்கிருந்தால் உன்னை சின்னாபின்னப் படுத்திவிடுவார்கள்.  எங்கேயும் நிற்காமல் ஓடிவிடு'- என்கிறான்.  அவளும் தலை தெறிக்க திசை தெரியாமல் ஓடுகிறாள்.  அவன் திரும்பிவந்து தொழுகையில் கலந்துகொள்கிறான்.

தொழுகை முடிந்ததும் இவனை அடித்துபோட்டுவிட்டு அவளை  மூவரும் காரில் பாலைவனமெங்கும் தேடுகிறார்கள்.

இதற்கிடையில் ஆட்டுப்பட்டியில் டிரைவர் வேலை செய்யும் பரதன் என்பவன் அடிபட்ட  அவனது நண்பனை(பசீர்) பார்க்கிறான். அவன் மூலமாக விசயத்தை அறிந்துகொண்டு இருவரும் அவளை தேடி காரில் செல்கிறார்கள். இரவெல்லாம் தேடி கிடைக்காமல் சலித்து போய் திரும்பும் சமயத்தில் நடு பாலைவனத்தில் அஸ்வதி மயங்கி விழுந்து கிடப்பதை பார்க்கிறார்கள்.    அவளை வண்டியில் ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலைக்கு வருகிறார்கள்.  பஷீர் அவளை எப்படியாவது ரியாத்தில் சேர்த்துவிடுமாறு பரதனிடம் சொல்லிவிட்டு ஆட்டுப்பட்டிக்கு போகிறான்.  அங்கே காத்திருந்த அரபியர்கள் இவனை கொன்றுவிடுகிறார்கள்.

வேண்டாவெறுப்பாக நண்பன் சொல்லிவிட்டானே என்று அவளை கூட்டிகொண்டு ரியாத் செல்கிறான் பரதன்.  ரியாத்தில் உஸ்மானை பார்க்கிறார்கள்.  ஆனால் உஸ்மான் அவளை யாரென்றே தெரியாதென்கிறான் . ....  நிற்க..என்ன நான் இவ்வளவு விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அதன்பிறகு அவள் என்னவானாள்... தப்பித்தாளா.. இல்லையா? என்பதை வெள்ளித் திரையில் அல்லது கணினித் திரையில் காணுங்கள்.

 படத்தில் சுவாரஸ்யங்கள் சில...

காவ்யா மாதவன் அந்த வீட்டில் பெல்டில் அடி வாங்கும்போது,,,,இவளால் ட்யுஷன் சொல்லிகொடுக்கப் பட்ட பெண் யானை உருவத்தை அழகாக வரைவது,  சிந்திச் சாப்பிட்ட செமியான பையன் அழகாக சாப்பிடுவது போன்ற காட்சிகள்.

காவ்யா மாதவனின் அந்த குண்டு விழிகள்... அப்பப்பா எத்தனை பாவம்.  உடல் முழுவதும் மறைக்கப் பட்டு, முகமும் கூட மறைக்கப்பட்டு வெறும் விழிகளில் மட்டுமே மிரட்சியையும், அழுகையையும் காட்டிய விதம் அருமை.

படம் முழுக்க த்ரில்லாக கொண்டு சென்ற டைரக்டர் கமல் அருமையாக செய்திருக்கிறார்.  இடையில் சமூக சேவகராக வரும் சீனிவாசனின் போர்ஷனை இன்னும் நன்றாக எடிட் செய்திருந்தால் விறுவிறுப்புக்கு குறை இருந்திருக்காது.

கதை-கே.யு.இக்பால்.  இசை-Bennett-Veetrag, ஒளிப்பதிவு-மனோஜ் பிள்ளை -சில இடங்களில் அசத்துகிறார்.

நாம் படம் பார்க்கும்போது எப்படியாவது அவள் தப்பித்து ஊர் சேரவேண்டும் என நாம் அடித்துக்கொள்வது இந்தப் படத்தின் வெற்றி.  வெளிநாட்டில் இந்தமாதிரி வேலை செய்யும் நண்பர்களுக்காக ஒரு நிமிடம் நினைக்க வைத்த டைரக்டர் கமலுக்கு நன்றி.

நல்ல படம்- பார்த்தே தீரவேண்டிய படம்.